ஆசிரியர் முத்துக்கருப்பன் |
நாடு கடந்து வாழும் அயலகத் தமிழர்கள் தத்தமது உறவினர்களுடன் உறவாட மொழிக்கருவி (ஆங்கிலம் போன்று) இல்லாதது கண்டு அயர்ந்திருந்தனர். ஒரு சில தொழில்நுட்ப அறிவு வாய்க்கப்பெற்றவர்கள் கணினிசார் கல்வியைப் பயின்றவர்கள் அயல்நாடுகளில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் உறவாட ஏற்ற மொழிக்கருவியை அஃதாவது தமிழ் எழுத்துருவை உருவாக்க எண்ணினர். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரு.கு.கல்யாணசுந்தரம் (நிறுவனர்:மதுரைத் தமிழிலக்கிய மின் தொகுப்புத் திட்டம்). இவரின் மயிலை எழுத்துரு கண்டுபிடிப்பு பலராலும் பாராட்டும் படியாக இருந்தது.
தமிழ் எழுத்துருக்கள் அப்போது ஒருங்குகுறி வடிவத்தில் அமையப்பெற்றவை அல்ல. குறிப்பிட்ட ஒரு கணினியில் மட்டும் செயல்படக் கூடியவையாக மட்டுமே அவை இருந்தன. மற்றொரு கணினியில் எழுத்துருவைக் காண அக்குறிப்பிட்ட எழுத்துருவை ஏற்றம் செய்தல் வேண்டும். அப்பொழுதுதான் எழுத்துக்களைத் தெளிவாகக் காண இயலும். இந்நிலை மாய்ந்து அனைத்துக் கணினியும் எளிதில் எழுத்துருவை அடையாளங் கண்டு தமிழெழுத்தை வெளிப்படுத்திக்காட்ட வந்ததே ஒருங்குறி வடிவம்.
இன்று பெரும்பாலான தமிழன்பர்களால் தமிழ் இணைய விரும்பிகளால் பயன்படுத்தப்படுகிற எழுத்துரு ஒருங்குகுறி எழுத்துருவே. அவ்வகையில் ஒருங்குகுறி எழுத்துருவை உருவாக்கியவர்களுக்கு மகுடம் சூட்டிப் பார்க்க வேண்டுவது நம் கடமையல்லவா?!
புதுச்சேரியை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் அரசு பள்ளி ஆசிரியர் திரு.முத்துக்கருப்பனின் `ஈசி தமிழ்’என்னும் தமிழ் எழுத்துருவைப் பலருக்கு அறிமுகம் செய்வதே இப்பதிவின் இலக்கு.
முத்துக்கருப்பன் அவர்கள் தற்போது புதுச்சேரியிலுள்ள முத்தியாலுப்பேட்டையில் வசித்து வருகிறார். அழகுக் குழந்தை ஒன்றுடனும் ஆருயிர் துணைவியாருடனும் பேணிக்காத்த பெற்றோருடனும் உடன் உறவாடிய உடன்பிறப்புக்களுடனும் தான் செய்த சாதனை தெரியாமல் அமைதியாய் வாழ்ந்து வருகிறார்.
தமிழில் எழுத வேண்டும் தமிழ் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் தமிழில் மின்னஞ்சல் செய்ய வேண்டும் என்னுந்தாகமுடையவர்களுக்குத் தான் முத்துக்கருப்பன் தந்த ஈசி தமிழ் மென்பொருளின் அருமை புரியும்.
இவரின் தந்தை திரு.பரமசிவம், தாயார் திருமதி.சந்திரா அம்மையார். தந்தை நேருவீதியில் இயங்கிவரும் கடையொன்றில் முக்கியப் பொறுப்பில் இருந்துவருகிறார். ஆசிரியர் முத்துக்கருப்பன் சிறுவனாக இருந்தபோதிலே இவர் இப்பொறுப்பில் இருந்திருக்கிறார். தாயார் இல்லத்தைக் கட்டிக் காக்கும் குடும்பத் தலைவியாய் தன்கடன் ஆற்றியவர். இப்பொழுதும் அப்படித்தான்.
ஆசிரியர் முத்துக்கருப்பன் தன்னுடைய மேனிலைக்கல்வியை வ.உ.சி மேனிலைப் பள்ளியில் பெற்றிருக்கிறார். சாதாரண மாணவரோ அல்லது கடைநிலையான மாணவரோ என்று இவரை நினைக்க வேண்டாம். தன்னுடைய பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1039 மதிப்பெண்கள் பெற்றவர். மேனிலையில் (+2) கணினித் துறையை தன்னுடைய விருப்பப்பாடமாகப் பயின்றார். ஆசிரியை திருமதி.அமராவதி அவர்களின் அரும்பெரும் ஊக்கமே இவரை நன்கு சிந்திக்கக் கூடிய மாணவராக ஆக்கியதாகச் சொல்கிறார்.
ஆசிரியை அவர்கள் கொடுத்த ஊக்கத்தின் விளைவாக புதுவை உரோமண்ட் உரோலண்ட் நூலகத்தை ஆசிரியர் முத்துக்கருப்பன் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார். `ஜி.டபிள்யூ. பேசிக்' என்னும் நூலை ஆய்ந்திருக்கிறார். அந்நூலே இவருக்கு சுயமாகக் கணினி செயல்பாடுகளை உருவாக்கும் வித்தையை மனதில் விதைத்திருக்கிறது. இதன் விளைவாக மேனிலைக் கல்வி இரண்டாமாண்டில் கணினி அறிவியல் தேர்வில் 200க்கு 196 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.
தன்னுடைய மேனிலைக் கல்வியை முடித்த பின்னர் கணினி குறித்தத் தேடல்களில் ஈடுபடலானார். `தமிழ் கம்ப்யூட்டர்' என்னும் 2 வாரத்திற்கு ஒருமுறை வரும் இதழை வாங்கிப் படிக்கத் தொடங்கியிருக்கிறார். இதன் அப்போதைய விலை பத்து உரூபாய். மாதத்தின் முதல் நாளும் பதினைந்தாம் நாளும் வரும் இவ்விதழ் முற்றிலும் கணினி சார்ந்ததோடல்லாமல் தமிழிலும் அமையப்பெற்றிருக்கும். `டிஜிட்’ என்னும் இதழும் இவரின் தேடலிலிருந்துத் தப்ப முடியவில்லை. இவற்றை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஆசிரியர் முத்துக்கருப்பன் தன்னுடைய கணினி குறித்த அறிவை மேம்படுத்தியிருக்கிறார்.
பல கணினி சார் கட்டளைகள், செயல்பாடுகள் குறித்து அறிவதற்காக பன்முறை பல இணைய வழங்கி நிலையங்களை நாடினார். அப்பொழுது அங்கு ஒரு மணி நேரத்திற்கு முப்பது உரூபாய் வசூலித்திருக்கிறார்கள். இது அப்போதைக்கு அதிக தொகை என்றாலும் இணையம் அதிகம் வலுவடையாத காலம் அது.
இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் நடத்தப்பெறும் பல தேர்வுகளை எழுதி வெற்றியும் கண்டுள்ளார். புதுச்சேரியிலுள்ள ஒரு கணினி பயிற்சி மையத்தில் சில காலம் ‘சி’ , `வன்பொருள் மற்றும் இணையம்' சார்ந்த பயிற்சியையும் ஒருங்கே பயின்றார். இதன் விளைவாகத்தான் மைக்ரோசாப்ட் நிறுவனத் தேர்வை எதிர்கொள்ளத் துணிந்தார். இத்தேர்வு அப்போது புதுச்சேரியில் நடத்தப்பெறவில்லை. சென்னைக்குச் சென்றுதான் எழுதுதல் வேண்டும். சென்னையிலும் இணையத்தின் வழியாகவே எழுதுதல் வேண்டும். இதற்காகச் சென்னை வரை சென்று ஒரு மையத்தைத் தேர்ந்தெடுத்து தனிமைப்படுத்தப்பட்ட (முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டி) அறையில் தேர்வெழுதியிருக்கிறார்.
இதுவரை இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பின்வரும் தேர்வுகளில் தோன்றி வெற்றிக் கனியைப் பறித்துள்ளார். இத்தேர்வுக்கு இவர் ஆயத்தமான செய்திகளை நமக்குச் சொல்லும் போது கேட்க மிகவும் மலைப்பாக உள்ளது.
1.எம்.சி.பி
2.எம்.சி.எஸ்.ஏ (மைக்ரோசாப்ட் சர்டிபைடு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேடர்)
3. 2003 சர்வர் இல் எம்.சி.எஸ்.ஏ
4.எம்.சி.ஐ.டி.பி
5.எம்.சி.எஸ்.இ
என்னும் சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார்.
அடுத்த பதிவில். . . . . . . . . . . . . . .(2)
(இன்னும் வரும்)
அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற்ற திரு.முத்துக்கருப்பன், பின்னாளில் ஈசி தமிழ் என்னும் தமிழ் எழுதியை அறிமுகம் செய்தது எப்படி?