தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

7.9.12

விடுதலைப் போராட்ட வீரர்


தீர்த்தகிரியார்



இவர் டி.என். தீர்த்தகிரியார் ஆவார்.  தர்மபுரியைச் சார்ந்தவர்.  கள்ளுக்கடை மறியல், சட்டமறுப்பு முதலிய போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டவர்.

6.9.12

இலக்கியமும் இலக்கணமும்


இலக்கியம் இலக்கணம் அறிவது மனிதனை பண்படுத்துமா?


     இலக்கியங்கள் என்பவை ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் தெரிவித்து நிற்கின்றன.  எந்த எந்த மொழிகளில் செறிவான இலக்கியங்கள் இல்லையோ அந்த மொழிகள் நன்னிலையை அடைவது சற்று குறைவு தான்.  மொழியானது தன்னை இலக்கியத்தோடு இணைத்துக் கொண்டு புதிய பரிணாமம் எடுக்கும் போது தான் அதன் அடைவு சரியான நோக்கை நோக்கிச் செல்லும்.  மற்றபடி மொழிக்கு ஒரு கட்டுக்கோப்பை ஏற்படுத்தித் தருவது இலக்கணத்தின் பாற்பட்டது.
இலக்கணமும் இலக்கியமும்:
     மொழி தன்னுடைய உன்னத இயல்பை தொன்மையான கட்டுக்கோப்பை இழக்காமல் இருக்க இலக்கண அமைப்பு வேண்டப்படுகிறது.  அதனால் தான் பெரும்பான்மையான தமிழறிஞர்கள் இலக்கணத்தை அதிகம் வலியுறுத்தியிருக்கின்றனர்.  ஆனால் கல்வி என்று வரும் போது மாணாக்கர் இதனை மிகக் கடினமானதென்று கருதுகின்றனர்.  இவ்வெண்ணம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். 
     மொழி இலக்கணம் இலக்கியத்தை அடியொட்டியதாக இருக்கிறது.  ஒவ்வொரு மொழியும் இலக்கண அமைப்பை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும்.  அதோடு நில்லாமல் செம்மையான இலக்கிய வளங்களையும் கொண்டு இலங்க வேண்டும். 
உண்மையில் மனித மனத்தை இவை பண்படுத்துகின்றனவா?
     ஆம் என்று தான் சொல்லத் துணிய வேண்டும்.  இலக்கியங்கள் ஏராளமான விழுமியங்களைக் கொண்டிருக்கின்றன.  நடத்தை முறைமைகள், நாகரிகக் கூறுகள், பண்பாட்டு விளக்கங்கள் போன்ற வாழ்க்கை அத்தியாவசியக் கூறுகள் இலக்கியத்தில் தான் உள்ளன.  பக்தி சார் இலக்கியங்கள் இவற்றுள் சிறப்பான பெயர் பெறுகின்றன.  இறைவனைச் சென்றடையும் வழி இன்னது என்று சொல்லும் முகத்தான் மனிதனை ஆற்றுப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கிறது.  புறப்பொருள் வெண்பாமாலை போன்ற புற நூல்களை ஆயும்போது மனிதனின் வீரம் நிறைந்த வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சுட்டுகிறது.  அன்பையும் அரவணைப்பையும் பல சங்க இலக்கியங்கள் எடுத்துச் சொல்லியிருக்கின்றன.  குறுந்தொகை, நற்றிணை போன்ற சங்க இலக்கியங்கள் காதல் வாழ்வுக்கும் கற்பு வாழ்வுக்கும் எடுத்துக்காட்டுகளை நிர்மாணம் செய்து நிற்கின்றன.  அகத்திணையைப் பற்றிய செய்தியைச் சொல்லும் அகப்பொருள் வெண்பாமாலையை எழுதிய நாற்கவிராச நம்பி களவு கற்பு பற்றி தெற்றென விளக்கிச் செல்கிறார்.  அரிச்சந்திர புராணம் சொல்லும் உண்மையினூடே நிற்றல் என்ற உறுதிப்பாடு மானிட வாழ்வியலின் அடியைத் தொட்டு நிற்கிறது.  இப்படி இலக்கியங்களும் இலக்கணங்களும் மனிதனின் மனதைப் பண்படுத்தி நிற்கும் போது அவற்றை பண்படுத்தும் ஆற்றல் இல்லை என்று ஒதுக்கி வைக்கலாமா.  எவர் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் படிக்க முன்வருகிறார்.  அப்படி முன் வந்தால் மட்டும் தான் மானிட குமுதாயம்(சமுதாயம்) மனிதத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சீர் தூக்கிப் பார்த்து பண்பட்டுச் சிறக்கும்.

5.9.12

கண்டுபிடியுங்கள்

இவர் யார்?



இவர் யார் என்று கண்டுபிடியுங்கள்.....................

அறிவோம் நாயன்மாரை



இடங்கழி நாயனார்:
   கோ என்றொரு நாட்டில் உள்ள இடம் தான் கொடும்பாளூர்.  இவ்வூர் அந்நாட்டின் தலைநகரமாகத் திகழ்ந்தது.  இந்நாட்டை ஆண்ட குறுநில மன்னன் இடங்கழியார்.  இவர் மக்கள் மீதும் சிவபெருமான் மீதும் ஏக அன்பு கொண்டு விளங்கினார்.  சிவபெருமானுக்கு நாடுமுழுவதும் பூசைகள் நடைபெற வழிவகுத்தார்.  சிவனின் ஆழ்ந்த தொண்டனாகத் திகழ்ந்தார்.  சைவ சமயம் நன்கு செழிப்புடன் விளங்கக் காரண்மாக விளங்கினார்.
     இவ்வாறு அவர் அரசாட்சி புரிகையில் அவருடைய நாட்டில் சிவனடியார்களுக்கு உணவு படைக்கும் ஒரு தீவிர சிவபக்தன் நாள்தோறும் இதனைச் செய்வது வழக்கம்.  ஒரு நாள் கூட மறந்தும் உணவு கொடுக்காமல் இருந்ததிலன்.  சோதனையாக பண்டங்கள் அவனுக்கு எங்கும் கிடைத்தில.  என்செய்வது என்று திக்காடி நின்றான்.  சிவனடியார்களுக்கு உணவு படைப்பது தான் தன்னுடைய சிவப்பணி என்றே வாழ்ந்து வந்தான்.  இதிலிருந்து எப்படி தன்னுடைய சைவ நெறிக்கொள்கையை மாற்றிக்கொள்வது என்று எண்ணி அரண்மனையிலிருந்த தானியக் கிடங்கில் நெல்லை எடுத்து வந்து சிவனடியார்களுக்கு உணவு சமைக்கத் திட்டமிட்டான்.  இதற்காக அரண்மனைக்குச் சென்று எவரும் அறியாமல் நெல்லை எடுக்க முற்படும் போது இரவு நேரக் காவலாளியிடம் அகப்பட்டுக் கொள்கிறான்.  பின்னர் மன்னர் இடங்கழி நாயனாரிடம் அழைத்துச் செல்லப்படுகிறான்.  திருடியதன் நோக்கம் யாது என அவர் வினவ அவனும் உரிய காரணத்தைக் கூறினான்.  காரணத்தைக் கேட்ட மட்டில் அடடா என்னே உன் சைவப் பற்று என்று புகழ்ந்து சிவனடியார்களுக்கு உணவளிக்க ஏராளமான தானியங்களையும் செல்வங்களையும் வழங்கி சிவத்தொண்டு சிறக்க வாய்ப்பு நல்கினார்.

நூல் அறிமுகம்

திருவள்ளுவர்க்குப் பின் அரசியல் அறம்

நூலின் பெயர்        : திருவள்ளுவருக்குப் பின் அரசியல் அறம்
ஆசிரியர்             : புலவர். சி. பெருந்தேவன் (சி. இராமலிங்கம்)
நூல் வகை           : அற இலக்கியம்
பதிப்பு                : முதற்பதிப்பு 2012; தி.பி. 2043
விலை               : உருபா. 150/-
நூல் வேண்டுவோர்
தொடர்புக்கு          : 0413-2359587 (கம்பன் மறுதோன்றி அச்சகம்)

நூலாசிரியரைப் பற்றி திரு இரா.திருமுருகனாரின் கருத்து:
     சி. இராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இப்புலவர் புகழ்பெற்ற தமிழாசிரியர்.  புதுவைப் பாவலர் பண்ணையில் யாப்பிலக்கணம் பயின்று ‘பைந்தமிழ்ப் பாவலர்என்ற பட்டத்தைப் பெற்றவர்.  சந்தம், வண்ணம், சிந்து, உருப்படி ஆகிய இசைப்பாடல் வகைகளுக்கு இலக்கணந்தெரிந்து படைக்கவல்ல பாவலர்கள் மிகச் சிலரே தமிழ் கூறு நல்லுலகத்தில் இன்று காணப்படுகின்றனர்.  அவர்களில் இவரும் ஒருவர்.  தெளிதமிழ் இதழ் நடத்தும் பாவலர் பரிசுத் திட்டத்தில் பாட்டெழுதி முதற்பரிசு பெற்றவர்.  “சித்தானந்த அடிகள் திருவருட்பனுவல் திரட்டு” , அறிவுலகக் காவலர்கள், ஆசிரியர் அறம் முதலிய நூல்களின் ஆசிரியர்.  புதுவை அரசின் நல்லாசிரியர் எனும் சிறப்புப் பட்டம் பெற்றவர்.  ஆசிரியப் பணி, அரசியற்பணி முதலிய எல்லாத்துறைகளிலும் அறத்தை வற்புறுத்துவதில் அடங்காத வேட்கையுடைய ஆன்றவிந்தடங்கிய சான்றோராய்த் திகழ்பவர்.  அவர்தம் உள்ளத்தில் அவ்வப்போது மண்டியெழும் அறக்கருத்துகளின் வெளிப்பாடாக இந்நூல் அமைந்துள்ளது.
     நம் நாட்டில் இன்று பொதுநலம் என்பது உதட்டளவில் பேசப்படுகின்றது.  தன்னலப் பேய்மை எங்கும் தலைவிரித்தாடுகின்றது.  வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் சார்பாக இருக்க வேண்டிய அன்பு அறிவற்றவர்கள் செய்யும் முறைகேடுகளுக்கும் துணை போய் வன்பாக மாறிக் கொண்டிருக்கின்றது.  என்று தன்னுடைய சமூக நோக்கை படரவிட்டிருக்கிறார் ஆசிரியர் திரு. பெருந்தேவன் அவர்கள்.

     திருக்குறளைப் போன்று அமையப்பெற்றுள்ள இப்புத்தகம் படிப்போரின் எண்ணத்தை சற்றே சோதித்துப் பார்க்கச் செய்கிறது.  நாம் ஏன் இவ்வாறு நடக்கிறோம் ஏன் இவ்வாறு நடக்கக்கூடாது என்கிற எண்ணங்களை ஏற்படுத்துகிறது.
  
புத்தகம் படிப்போரை இவ்வாறு சிந்திக்கச் செய்துவிட்டாலே நூலாசிரியன் வெற்றி பெற்றவனாகிறான்.  அவ்வகையில் பெருந்தேவன் பெருவெற்றியை இந்நூலின் மூலம் பெற்றிருக்கிறார் என்று கூறலாம்.

அழிந்து போக வேண்டுமாயின் அறத்தினை கைவிடுக வாழ வேண்டுமெனில் (புகழ் எய்த வேண்டுமெனில்) அறத்தை மேற்கொண்டு வாழ்க என்று வரும் ‘அறத்தின் ஆட்சி’ என்னும் தலைப்பில் அமைந்த பாடல் வரிகள் அறம் இன்று தேய்ந்து போய் கொண்டிருக்கிறது என்பதையும் அதை நிலைநாட்ட நாம் முன்வர வேண்டும் என்பதையும் நினைவூட்டி நிற்கிறது.

``அழிதல் விரும்பின் அறங்கொல்; தொழுதல்
விரும்பின் அதுகாத்தல் மேவ்.”(அறத்தின் அட்சி)

யாம் முன்னம் எண்ணற்ற பெருந்தேவன் நூல்களை அலசி ஆராயப் புகுந்ததுண்டு.  சித்தானந்த ஐயனின் அருள்அமையப் பெற்ற பெருந்தேவனின் எண்ணங்கள் எழுத்துக்களாக உருப்பெற்று எம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கின்றன.

புலவர் பெருந்தேவனின் எழுத்தாட்சியும் சொல்லாட்சியும் சிறக்க சிலம்புகள் தளம் வாழ்த்துகிறது.  அவருடைய தமிழ்ப் பணி மேன்மேலும் இவ்வுலகுக்குத் தேவை.  இதனை அவர் கருத்தில் கொண்டு இன்னும் எண்ணற்ற பனுவல் படைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

ஐயாவுக்குச் சிறப்பு செய்ய வேண்டி அவருடைய அரசியல் அறம் நூலின் ஒவ்வொரு பாடலையும் வலைப்பூவின் தலைப்பில் வெளியிட எண்ணியுள்ளேன்.

புலவர் திரு.பெருந்தேவனின் சொல்திறன் கண்டு யான் வியந்ததை இவ்வுலகும் கண்டு வியக்க வேண்டி என்னுடைய வலைப்பூவில் இவருக்கு பேரணி செய்துள்ளேன்.  புலவர் அவர்கள் விரைவில் என்னை மற்றொரு நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பார் என்ற ஏங்குதலுடன் முடிக்கிறேன்.

புலவர் பெருந்தேவனின் சில கவின்மிகு பாடல்கள்:

`ஒருமைப்பாடு என்பது அருமைப்பாடு உண்டேல்
பெருமைப்பாடு ஓங்கும் பெரிது’(ஒருமைப்பாட்டு உணர்வு)

ஆளும் நிலம் வலியது ஆக்கும் தொழில்முனைவோர்
மூளும் பொருள்வளத்தின் மூச்சு(வலுவான நல்லரசு)

எல்லா நலமும் இருந்தென் அறமுரைக்கும்
வல்லாரை இல்லாத மன்று.(வழக்குரைஞர் அறம்)

ஏடு தருங்கல்வி இல்லான் அரசியலில்
ஈடுபடல் என்றும் இழிவு(கல்வியறிவுடைமை)

காதலைக் காமமாய்க் கண்டு களிப்படைதல்
மோதல்கட் கெல்லாம் முதல்(ஆண் பெண் உறவு)