தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

10.11.12

திரு.வி.க வும் சைவமும்:

திரு.வி.க வின் அரும்பதவுரை முயற்சி


திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள் சைவத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார்.  மற்ற சமயங்களின் மீதும் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார்.  தன்னுடைய முதல் முயற்சியான பெரியபுராண அரும்பதவுரை எழுதிய போது சைவத்தின் மீது ஆறாக்காதல் உடையவராகக் காணப்பட்டார்.  பெரியபுராணத்திற்கு இவர் எழுதிய செம்பதவுரை இன்றும் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது.

பெரியபுராணத்திற்கு பதவுரை கண்ட பொழுது அனைத்து சமயங்களையும் அவர் ஒருங்கே வைத்து எண்ணும் மனப்பக்குவம் பெற்றிருக்கவில்லை என்பது பலரின் கூற்று.  இக்கூற்று உண்மையே.  

அவர் தன்னுடைய 51ஆம் அகவையில் பெற்றிருந்த சமயப்பக்குவம் 24 ஆம் அகவையில் பெற்றிருக்கவில்லை என்று மா.ரா.போ குருசாமி அவர்கள் தன்னுடைய திரு.வி.க பற்றிய நூலில் குறிப்பிடடுகிறார்.

பெரியபுராணத்திற்கு அவர் எழுதிய அரும்பதவுரை மிகவும் தேற்றத்தோடு காணப்பட்டது.  பலரது அரும்பதவுரைகள் புரிதல் போக்கிலிருந்து மாறுபட்டுக் காணப்பட்ட அக்காலத்தில் பிறரது துணையின்றி அரும்பதவுரையைக் கொண்டே நாயன்மார்களின் திறன் அறியும்படி,  உரை தந்திருந்தார்.

இவ்வுரையைப் படித்தோர் பலரும் மிகவும் எளிய நடையைக் கையாண்டிருக்கும் திறனைக் கண்டு பாராட்டச் செய்தனர்.  பெரியபுராணத்தில்   குறிப்பிடப்படுகின்ற நாயன்மார்களின் வரலாறு குறித்துப் பலர் பல திறனாய்வுகளை வெளிப்படுத்தியிருந்த அக்காலத்தில் நாயன்மார்களின் திறனை சைவநோக்கில் ஆய்ந்து தகுந்த விளக்கங்களைத் திறனாய்வாளர்களுக்குத் தன்னூலில் அளித்திருந்தார்.

கண்ணப்ப நாயனார் அப்பொழுதே கண் தானத்திற்கு வித்திட்ட முறைமையும் இயற்பகை நாயனார்தன் தவத்திற்காக மனைவியைத் தானமாகக் கொடுத்த முறைமையும் பலரால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.  இவற்றைப் பலரும் ஏற்கும் வகையில் தகுந்த அரும்பதவுரை கண்டிருந்தார் திரு.வி.க.

திரு.வி.கவின் இப்பதவுரை முயற்சி இரண்டாம் முறையாகச் செம்பதிப்பைப் பெற்றபோது எண்ணற்ற மாற்றங்களோடு வெளிவந்தது.  காரணம் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களில் தேர்ந்த சமரசக் கொள்கை அறிவைப் பெற்றிருந்தார்.  அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்ற நெறி ஒன்றே எனத் தேர்ந்தார்.  சமரச வழியைக் கைக்கொண்டார்.  

திரு.வி.கவின் முதல் நூல் முயற்சி இது என்பர் சிலர்.  ஆயினும் இம்முயற்சிக்கு முன்பே தன்னாசிரியர் கதிரைவேற்பிள்ளையவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிவெளியிட்டிருந்தார் திரு.வி.க.  இந்நூல் மிகுந்த வரவேற்பைப் பெறவில்லை என்பர் பலர்.

நன்றி:-
` திரு.வி.க’  - மா.ரா.போ.குருசாமி (பார்வை நூல்)


9.11.12

குழந்தைக் கவிஞர்களுக்கு மகுடம் சூட்டுவோம் - 1

தணிகை உலகநாதன்:

குழந்தைகளுக்காக வேண்டி எண்ணற்ற பாடல்கள் பலரால் படைக்கப்பட்டுள்ளன.  இருந்தபோதிலும் இக்குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டவர்களில் மூத்தோராக நம் எட்டயபுரத்துக் கவி பாரதியைக் கொள்ளல் வேண்டும்.  அனைவரும் புரிந்துபடிக்கும் வண்ணம் கவிதை யாத்தது குழந்தைகளையும் ஈர்த்து நின்றது.  
“வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர், பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறமாகும்”என்னும் பாடலின் மூலம் வேற்றுமை மாய்ந்து நாம் ஒன்றுபட வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார்.

அழ.வள்ளியப்பாவின் எழுத்துப் பணி குழந்தைகளை நடுவமாகக் கொண்டிருந்தது.  “கண்ணன் எங்கள் கண்ணனாம், கார்மேக வண்ணனாம், வெண்ணெய் உண்ட கண்ணனாம் மண்ணை உண்ட கண்ணனாம்” என்பனப் போன்ற வரிகள் அவரின் குழந்தை எளிமை வரிகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

இவ்வரிசையில் இப்பதிவில் பதியப்படுகின்ற குழந்தைக் கவிஞர் திரு. தணிகை உலகநாதன் ஆவார். இவர்  வேலூர் மாவட்டத்திலுள்ள  திருவத்திபுரம் என்னும் ஊரில் 01-10-1921 அன்று பிறந்தவர்.  தா.தணிகாசலம், சுந்தரம் அம்மையார் ஆகியோர் இவரின் பெற்றோராவர்.

குழந்தைக் கவிஞர்களின் வரிசையில் ஒருவராக வைத்துப் போற்றப்படுகிறார். `வீரத்துறவி விவேகானந்தர்'  இவர் எழுதிய நூல்களுள் ஒன்று.  பூஞ்சோலை, தேன்சுவைக் கதைகள், பாடும் பாப்பா, மாணவர் தமிழ் விருந்து, சிறுவர் நாடக விருந்து முதலிய பல நூல்களை எழுதியுள்ளார்.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இவர் பல நூல்களுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.  அழ.வள்ளியப்பாவின் பாடல்கள் பல வெளிவருவதற்கு அவருக்கு உற்ற துணையாகத் திகழ்ந்திருக்கிறார்.


``சிறந்த கவிஞர்களில் புலவரும், வானொலி சிறுவர் சங்கப் பேரவையின் தலைவருமாகிய திரு.தணிகை உலகநாதன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். 1954க்குப் பிறகு நான் எழுதிய கவிதை நூல்கள் அனைத்தும் அவர் பார்வையிட்ட பின்னரே வெளிவந்துள்ளன” என்று வள்ளியப்பா அவர்கள் கூறியுள்ளார்.

நம் சிறார்கள் அழகாகப் பாடும் `பொம்மை பொம்மை பொம்மை பார்’ என்னும் பாடலுக்கு ஆசிரியர் இவரே. 


“பொம்மை பொம்மை பொம்மை பார்

“பொம்மை பொம்மை பொம்மை பார்

புதிய புதிய பொம்மை பார்

கையை வீசும் பொம்மை பார்

கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்

தலையை ஆட்டும் பொம்மை பார்

தாளம் போடும் பொம்மை பார்

எனக்கு கிடைத்த பொம்மை போல்

ஏதும் இல்லை உலகிலே”

நமக்கு இவ்வுலகில் எவரும் எதிரிகள் அல்லர் என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டி, 


நான் எல்லோருக்கும் நல்லவனே

எலிக்குப் பகைதான் பூனை என
எவரும் அறிவர் உலகினிலே

பூனைக்குப் பகை நாயாகும்
போடும் சண்டை தெருவினிலே

புலியைக் கண்டால் மான் ஓடிப்
புதரில் புகுந்து மறைந்துவிடுமே

நண்டுக்குப் பகை நரியாகும்
நானும் நீயும் இதையறிவோம்

பழைய நாய்க்குப் புது நாய்தான்
பகையாம் இதனை அறியார் யார்?

பாம்புக்குப் பகை கீரி எனப்
பலரும் அறிவார் பாரினிலே

எனக்குப் பகையே இல்லை, நான்
எல்லோருக்கும் நல்லவனே.

 என்னும் பாடலை யாத்தளித்தார்.  
தமிழ் நாடு முழுவதும் மாணவர்மன்றத் தமிழ்த் தேர்வை நடத்துபவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.




5.11.12

ஆசிரியர்கள் விரும்பும் தளம்

ஆசிரியர்களுக்கென ஒரு தளம்

டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா தளத்தின் தோற்றம்

முகவரி:http://www.teachersofindia.org/ta

`அசிம் பிரேம் ஜி' நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற ‘இந்திய ஆசிரியர்கள்’ என்னும் தளம் பல்வேறு ஆசிரியர்களின் படைப்புகளைக் கொண்டும் மாணாக்கரின்  வகுப்பறைக் கல்வியை மேம்படுத்தும் வழிகளைக் கொண்டும் இயங்கி வருகிறது.

இத்தளமானது ஐந்து மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகியவை இவ்வைந்தில் அடக்கம்.  இம்மொழிகளில் நமக்குத் தேவையான மொழியைத் தேர்வு செய்தால் அத்தளம் அம்மொழியில் நமக்குக் காட்சியளிக்கத் தொடங்கிவிடும்.   சற்றொப்ப கூகிள் மொழிபெயர்ப்பைப் போன்றதே!

வகுப்பறை வளங்கள்:
 
இப்பகுதியில் கட்டுரை, ஒலி, மின்வலை நூல்கள், விளக்கப் பாடங்கள், ஊடக வகை, செய்முறைத்தாள், பாட விளக்க முறை, பாடப் பயிற்சிகள், படம் முதலியன அமையப்பெற்றுள்ளன.  இவற்றில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அது குறித்து ஆசிரியர்கள் பகிர்ந்துள்ள படைப்புகள் காட்டப்படும்.

பாட வகைகளாகக் கலைகள், சுற்றுச்சூழல் அறிவியல், விளையாட்டுகளும் உடற்பயிற்சிகளும், மொழி, கணிதம் அறிவியலும் தொழில்நுட்பமும், சமூகறிவியல், கருத்துக்கள் - பிரதிபலிப்புகள், பிற பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

இதைப் போல வகுப்பும் தர நிலையின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது.  அஃதாவது மழலைக் கல்வி, முதல் இரண்டு வகுப்புகள் (1-2), மூன்று மற்றும் ஐந்தாம் (3-5)வகுப்பு வரை ஒரு பிரிவு, ஆறு மற்றும் எட்டு (6-8) வரை ஒரு பிரிவு, ஒன்பது முதல் பத்தாம் (9-10) வகுப்பு வரை ஒரு பிரிவு, பதினொன்று முதல் பன்னிரண்டு வரை என ஆறு வகையாகத் தர நிலை பிரிக்கப்பட்டு வகுப்பறை வளங்கள் வழங்கப்படுகின்றன.

வகுப்பறை வளங்கள் என்றால் என்ன?  என்பது குறித்து ஐயம் எழுந்து நிற்கிறதா?  இதோ உதாரணம் - புயல் எச்சரிக்கை கூண்டு விவரம், அறிவியல் பாடப்பயிற்சித்தாள் - உடல் உறுப்புகள், மகிழ்ச்சி தரும் கணித அளவுகள், இரண்டாம் கட்ட கூட்டல் பயிற்சி, க்யூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பிய அபூர்வ பாறைப்படம், சென்னை மாணவ மாணவிகள் அணியாக உருவாக்கிய குருவி அமைப்பு முதலியனவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஆசிரியர் மேம்பாடு:

நான் சிறந்த கட்டுரைகளைப் படிக்க விரும்புகிறேன்; நான் புதுமையான கற்பிக்கும் வழிகளைப் பற்றி அறிய விரும்புகிறேன்; நான் எப்படிச் சிறப்பாகக் கற்பிக்க முடியும் என்பதைப் பற்றியும் அறிய விரும்புகிறேன் என்கிற எண்ணங்கள் எழுகின்ற ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே `ஆசிரியர்கள் மேம்பாடு’ என்னும் பகுதி.  மேற்கண்ட எண்ணம் எழுகின்ற ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்துச் செய்திகளும் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.  ஆசிரியரும் தன்னுடையப் பங்களிப்பை வழங்கிச் சிறப்பிக்கலாம்.

சிறப்பியல்பினர்:

சிறப்பியல்பினர் என்ற பகுதியில் ஒவ்வொரு ஆசிரியரைப் பற்றிய முழு செய்தியும் வெளியிடப்படுகிறது.  நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் முழு விவரத்தையும் அவர்கள் பணியாற்றிய திறத்தையும் வெளியிட்டு அவர்களைப் பெருமைப்படுத்துகிறது.

அண்மையில் திரு.செல்வகுமார் என்கிற பனித்திட்டு தொடக்கக் கல்வி ஆசிரியரைப் பற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது  மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

நீங்கள் ஆசிரியராக இருந்தால் இத்தளத்தில் இணைந்து வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் தாங்கள் கண்ட அனுபவங்களைவெளிப்படுத்திகாட்டுங்கள், குழு விவாதத்தில் பங்குகொள்ளுங்கள்.  இவற்றை மேற்கொள்ள இத்தளத்தில் உறுப்பினராதல் இன்றியமையா ஒன்று.

05-11-2012 வரை இத்தளத்தில் 3456 உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

உரிய கற்றல் அடைவை  முயன்ற அளவில் மாணவர்களுக்குப் பெற்றுத் தந்திட இத்தளத்தின் வழிகாட்டுதல்கள் நமக்குப் பேருதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

3.11.12

வி.கனகசபையாரை அறிவோம்


திரு.வி.கனகசபையார்


தமிழ் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தவர் திரு.வி.கனகசபை ஆவார்.  தமிழ் இலக்கியத்தில் பேரார்வம் மிக்கவராய்த் திகழ்ந்தார்.  பல இலக்கியங்களைப் பயின்றவர்.  அவ்விலக்கியங்களைப் பயின்று பல்லோரும் அவ்வின்பத்தை அடைய ஏதுவாகப் பல கட்டுரைகளை யாத்தளித்தார்.  இவரது தந்தை விசுவநாதம்பிள்ளை.  இவர் இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர்.  கனகசபையாரோ சென்னையில் பிறந்து வளர்ந்தவர்.  பி.ஏ.,பி.எல் பட்டம்பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.  இவரின் இளங்கலைக் கல்வி சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிறைவேறியது. 
தமிழர் வரலாறு குறித்து பல்லாய்வுகளை மேற்கொண்டு அவற்றை கட்டுரைகளாக எழுதினார்.  ‘ஆயிரத்தெண்னூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்என்னும் நூல் தமிழில் வெளிவர இவரே கருத்தாவாக இருந்தார்.  இவர் ஆங்கிலத்தில் அவ்வப்பொழுது தமிழர் வரலாறு குறித்து எழுதிவந்த கட்டுரைகள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து ஆங்கிலத்தில் `The Tamils 1800 Years Ago’  என்னும் நுலாக வெளியிட்டார்.  பின்னர் பன்மொழிப்புலவர் திரு.கா. அப்பாத்துரை, எம்.ஏ., ஏல்.டி அவர்கள் இவ்வாங்கில நூலைத் தமிழில் `ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம் என்னும் நூலாகப் பெயர்த்து வெளியிட்டார்.
இந்நூலில் ஆங்கில நூலாசிரியர் திரு.வி.கனகசபை என்று கனகசபையாரின் பெயரை முதலில் இட்டுப் பின்னரே தன்பெயரை அச்சிட்டார் அப்பாதுரையார்.  திருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1962ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டது. 
இந்நூலில் தமிழகத்தின் நிலஇயல் பிரிவுகள், வெளிநாட்டு வாணிகம், தமிழ்க் கிளை இனங்களும் கிளைகளும், சோழர், பாண்டியர், சேரர், வேளிரும் குடிமன்னரும், சமூக வாழ்வு, திருவள்ளுவர் குறள், சிலப்பதிகாரக் கதை, மணிமேகலைக் கதை, தமிழ்க் கவிஞர்களும் கவிதைகளும், அறுவகை மெய்விளக்கக் கோட்பாடுகள், சமய வாழ்வு ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
திரு.வி.கனகசபை 1855 முதல் 1906 வரை 51 ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்குப் பணி செய்தார்.  இவரின் பதிப்புத் தொகுப்புகள் பலவும் உ.வே.சா அவர்களின் அச்சுப்பணிக்கு உதவியாய் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

2.11.12

இரண்டாம் ஆதனும் கபிலரும்


சேர அரசகுடியில் தோன்றியவன் இரண்டாம் ஆதன்.  செல்வக்கடுங்கோ வாழியாதன் என்னும் பட்டப்பெயரைக் கொண்டவன்.  முதலாம் ஆதனையடுத்து அரசிருக்கையை அடைந்தவன்.  இவன் கரிகாலன் மகள் சோணை என்பவளை மணந்தான்.  வலிமை மிக்க பேரரசனின் மருமகன் என்னும் நிலையை எய்தினான்.    இதனால் இவனுடைய ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நாடும் நல்ல வளமுடன் திகழ்ந்ததாக அறியமுடிகிறது.
இரண்டாம் ஆதனின் மேலான நட்புக்குரியவராக விளங்கியவர்தான் கபிலர்.  இவர் பார்ப்பனர்.  ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஆதன்,  கபிலரின் கரம் பற்றி இவ்வளவு மென்மையாக இருக்கிறதே உமது கைகள் என வியந்து கேட்க, கபிலர் அதற்குத் தன் தொழில் பாடல் புனைவது என்றும் தங்கள் போன்றோரின் தொழில் எதிரிகளை வீழ்த்தி வாகை சூடுவதென்றும் கூறி மன்னனைப் பலவாறு புகழ்கிறார்.  புகழ்வதில் மிகவும் வல்லமை பெற்ற கபிலர் மன்னன் கையின் வீர வலிமையைப் புகழ்ந்து, அத்தகைய வீரன் ஆதரவில் வாழும் கவிஞர்களின் கைகள் மெல்லியனவாக இராமல் வேறு எப்படி இருக்க முடியும் என்று கூறினாராம்.
இக்கருத்தை அவர் பாடிய பாடலின் பொருளால் விளங்கிக்கொள்ளலாம்.
“வீரமிக்க அரசனே உன் தடந்தோள்கள் அழகு மிக்க அணங்குகளுக்குக் காதல்நோய் ஊட்டுபவை.  அதே சமயம் அவை உன் எதிரிகளுக்கும் அச்சம் தருபவை.  உன் தடக்கைகளோ, பொன்வேய்ந்த அங்குசத்தால் யானையை ஊக்கி இருப்புத் தாழிட்ட உன் எதிரிகளின் கோட்டை வாயில்கள் மீது அவற்றை ஏவுபவை.  உன் வீரர்களால் சமன் செய்யப்பட்ட கரைகளையுடைய ஆழ்ந்த அகழிகளைத் தாவும்படி வீறுமிக்க உன் போர்க்குதிரையை நாத்திச் செல்லும்வண்ணம் கடிவாளங்களைப் பிடித்திழுப்பவையும் அவையே.  தவிர நீ தேரில் செல்லும்போது உன் தோள் மீதுதொங்கும் அம்புத் தூணிலிருந்து அம்புகளை எடுத்து அவற்றை எய்யும்படி வில்லைவாங்கி விறல்பட வளைப்பவையும் அவையே.  இத்தகைய ஆற்றல் வாய்ந்த செயல்களைச் செய்வதனால், உன் தோள்கள்  நீண்டு திரண்டும், கைகள் துவன்றும் வலிமை பெற்று உள்ளனஎன்று விளங்கிடும்படி பாடினாராம்.
மற்றொரு சமயத்தில்,
கதிரவனையும் இரண்டாம் ஆதனையும் ஒப்பாக வைத்துப் பாடிய கபிலர் கதிரவனைத் தாழ்த்தியும் ஆதனை உயர்த்தியும் புகழ்பாடியிருக்கிறார்.
``வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது
இடஞ்சிறி தென்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத் தோம்பா ஈகைக்
கடந்தடு தானைச் சேரல் ஆதனை
யாங்கனம் ஒத்தியோ, வீங்குசெலல் மண்டிலம்?
பொழுதொடு வரைதி, புறக்கொடுத் திறத்தி;
மாறிவருதி, மலைமறைந் தொளித்தி;
அகலிரு விசும்பினானும்
பகல்விளங் குதியால், பல்கதிர் விரித்தே!
என்ற பாடல் வரிகளில் கட்டாயம் இரண்டாம் ஆதன் புகழ்மயக்கம் எய்தியிருக்க வேண்டும்.  ஏனெனில் இப்பாடல் கேட்ட ஆதன் கபிலருக்கு எண்ணற்ற ஊர்களைப் பரிசாகக் கொடுத்தானாம்.
இரண்டாம் ஆதனின் இரு புதல்வர்களே செங்குட்டுவனும், சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளும் என்பதைக் குறித்தாக வேண்டும். 
அறிவன் ஒருவன் அரசனான இரண்டாம் ஆதன் அரியணையில் வீற்றிருக்கும் போது அவனைக் காண வந்தான் .  அப்போது ஆதனின் அருகே இரு செல்வப்புதல்வர்களும் வீற்றிருந்தனர்.  ஆதனையும் அவன் புதல்வர்களையும் கண்ணுற்ற அவ்வறிவன் இரண்டாம் புதல்வந்தான் (இளங்கோவடிகள்) உமக்குப் பின் இந்நாட்டை ஆளப்போகிறான் என்றுரைத்தான்.  மேலும் நீ விரைவில் மாண்டுவிடுவாய் என்றும் கட்டியம் கூறினான்.  அவன் சொல்லை மறுத்துத் தன் அண்ணன் மேல் ஆறாக்காதல் கொண்ட இளங்கோவடிகள் அரச துறவு பூண்டொழுகினார்.  தன் அண்ணனை தன் தந்தைக்குப் பிறகு அரசு ஆளச்செய்தார்.  அறிவன் கூறியதுபோல் இரண்டாம் ஆதனும் சிக்கற்பள்ளி என்னுமிடத்தில் உயிர்நீத்தான்.   இதனால் சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று அழைக்கப்பட்டான்.