தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

20.12.12

முடியரசன் பார்வையில் உண்மைக் கவிஞன் யார்?

கவிஞர் கவியரசு முடியரசன்
இவரின் பெற்றோர் சுப்பராயலு- சீதாலட்சுமி ஆவர்.  பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் துரைராசு என்பதாகும்.  தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளத்தில் 07-10-1920 அன்று பிறந்தார்.  காரைக்குடியிலுள்ள மீனாட்சிசுந்தரனார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

முடியரசன், பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞர்களுள் மூத்தவர் என அழைக்கப்படுகிறார்.  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலியோரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.

பறம்பு மலையில் நடைபெற்ற விழாவில் ‘கவியரசு’ என்னும் பட்டத்தை, குன்றக்குடி அடிகளார் இவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.  1996 ஆம் ஆண்டு இவரின் பூங்கொடி காவியத்திற்காகத் தமிழக அரசு பரிசு வழங்கிப் பாராட்டியது.

வீரகாவியம், முடியரசன் கவிதைகள், பூங்கொடி முதலிய காவியங்களை இவர் படைத்துள்ளார்.  தமிழ் மொழி வளர தமிழை வாழ்த்தி இவர் பாடும் பாடல் நம்மை தமிழ்ப்பற்றுக்கு இலக்காக்கி ஈர்த்துச் சென்றுவிடும்.

தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே - நீயே
தலைனின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு
இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?

உண்மைக் கவிஞன் யார் என்பதைப் பின்வரும் பாடலில் உறுதி செய்கிறார்.

‘ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
     ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபடுவன் கவிஞன் ஆவன்
    மேலோங்கு கொடுமைகளைக் காணும் போது 
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்
     காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்
    தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்’

அன்புள்ள பாண்டியனுக்கு, நெஞ்சு பொறுக்குவில்லையே, பாடுங்குயில், ஞாயிறும் திங்களும், தமிழ் முழக்கம், வள்ளுவர் கோட்டம், தாய்மொழி காப்போம், எக்கோவின் காதல், எப்படி வளரும் தமிழ், மனிதரைக் கண்டுகொண்டேன், நெஞ்சிற்பூத்தவை, புதியதொரு விதி செய்வோம் முதலிய படைப்புகளோடு காவியப் பாவை, முடியரசன் கவிதைகள், கவியரங்கில் முடியரசன் ஆகிய காவியங்களையும் படைத்துள்ளார்.

முடியரசன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு கலைஞர் விருதும் 1987 ஆம் ஆண்டு பாவேந்தர் விருதும் 1998 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் 1993 இல் அரசர் முத்தையாவேள் அவர்களின் நினைவுப் பரிசும் பெற்றார்.

இவரின் படைப்புகள் சாகித்திய அகாதெமியினால் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவருடைய படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளதோடு படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

திரைப்படங்களுக்குப் பாடல் மற்றும் கதை வசனம் எழுதி திரைத்துறைக்கு அரும்பணியாற்றினார்.  சில காலம் மதுரை காமராசர் பலகலைக்கழகத்தின் தமிழியற் துறையில் பணியாற்றியுள்ளார்.

14.12.12

இணையம் குறித்த பெருந்தேவன் குறட்பாக்கள் - நல்ல சாட்டையடி!

புலவர் பெருந்தேவன் -  புதுச்சேரி
 சி. இராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இப்புலவர் புகழ்பெற்ற தமிழாசிரியர்.  புதுவைப் பாவலர் பண்ணையில் யாப்பிலக்கணம் பயின்று ‘பைந்தமிழ்ப் பாவலர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர்.  சந்தம், வண்ணம், சிந்து, உருப்படி ஆகிய இசைப்பாடல் வகைகளுக்கு இலக்கணந்தெரிந்து படைக்கவல்ல பாவலர்கள் மிகச் சிலரே தமிழ் கூறு நல்லுலகத்தில் இன்று காணப்படுகின்றனர்.  அவர்களில் இவரும் ஒருவர்.  தெளிதமிழ் இதழ் நடத்தும் பாவலர் பரிசுத் திட்டத்தில் பாட்டெழுதி முதற்பரிசு பெற்றவர்.  “சித்தானந்த அடிகள் திருவருட்பனுவல் திரட்டு” , அறிவுலகக் காவலர்கள், ஆசிரியர் அறம் முதலிய நூல்களின் ஆசிரியர்.  புதுவை அரசின் நல்லாசிரியர் எனும் சிறப்புப் பட்டம் பெற்றவர்.  ஆசிரியப் பணி, அரசியற்பணி முதலிய எல்லாத்துறைகளிலும் அறத்தை வற்புறுத்துவதில் அடங்காத வேட்கையுடைய ஆன்றவிந்தடங்கிய சான்றோராய்த் திகழ்பவர்.  அவர்தம் உள்ளத்தில் அவ்வப்போது மண்டியெழும் அறக்கருத்துகளின் வெளிப்பாடாக இந்நூல் அமைந்துள்ளது.

குறள் வடிவத்தை அடியொட்டி புலவர் பெருந்தேவன் அவர்கள் `அரசியல் அறம்’ என்கிற நூலை யாத்துள்ளார். இந்நூலில் இணைய மேம்பாடு குறித்து அவர் நுட்பமான கருத்துக்களை முன் வைக்கிறார்.  அக்கருத்துக்களைப் பாடல் வரிகளோடு இங்கே அடுக்கலாம்.

அங்கைக் கனிபோல் அறிதல் எளிதாகும்
இங்கிணையத் தாலுலகம் என்

இணையதள மேம்பாட்டால் இவ்வுலகத்தை உள்ளங்கைக் கனியைப் போல் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

ஆடலாம் பேசி அரட்டை அடிக்கலாம்
தேடலாம் இங்கிணையத் தில்

விளையாடலாம், பேசலாம், அரட்டை அடிக்கலாம், பாடத்திட்டக் கட்டண விவரம், மருத்துவக் குறிப்பு, வேலைக்கான கல்வித் தகுதி, ஆய்வுக் கட்டுரை முதலியவற்றை இருந்த இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம்  தேடிக் கண்டறியலாம்.

இணையத் தொழில்நுட்பம் இல்லாயின் இல்லை
துணைவே றுலகோர்க்குச் சொல்

இணையதளத் தொழில்நுட்பம் இல்லாம்ல் போகுமானால் இவ்வுலகத்தவர்க்கு அவ்விணையத்திற்கிணையான துணை வேறு இல்லையாகும்.

இணையம் கணினி எனுமிவ் விரண்டின்
துணைகொண் டறிவைத் துலக்கு

இணையம், கணினி ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களின் துணையை நன்முறையில் பயன்ப்டுத்திக் கொண்டு அனைவரும் தமது அறிவை விரிவு செய்து கொள்ள வேண்டும்.

இணையம் தீதும் நன்றும்
இணைய வழிப்பயன்கள் எய்தார் எய்தார் 
அணிசேர் அறிவினொளி ஆம்

இணைய தளத்தின் மூலம் சிறந்த பயனை அடையாதவர்கள் அழகு மிகுந்த அறிவின் ஒளியைப் பெறமாட்டாதவராவார்கள்.

இணையிங்கிலாத திணையம் அதனின்
துணையால் பெருகும் தொழில்

ஈடுஇணையற்றது இணையம், அதன் துணையால் உலகில் பலவகத் தொழில்களும் பெருவளர்ச்சி காணமுடியும்.

குமுக வலைத்தளத்தின் கோணல் குறும்பால்
அமிழும் மணங்கள் அறுந்து.

நட்பினைத் தேடுவோர் கூடும் சமூக வலைத்தளத்தில் நம்பகத்தன்மை இருப்பதில்லை.  எச்சரிக்கை உணர்வு இன்மையால் மோசடிகளுக்காளாகித் திருமண உறவே அறுந்து போதலும் உண்டு.

தங்கு தடையின்றித் தகவல் பரிமாற 
இங்குதவும் நல்லிணையம் என்.

இவ்வுலக மக்களின் தங்குதடையற்ற செய்திப் பரிமாற்றத்திற்கு உதவக்கூடியது நலம்சார்ந்த இணையமே ஆகும்.

நட்பினைத் தேடுவோர் நாடும் வலைத்தளத்தால்
ஒட்பம் கெடலுண் டுணர்.

தமது நட்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புபவர் சமூக வலைத்தளங்களில் மனந்திறந்து பேசுவதும் புகைப்படம் வெளியிடுவதும் ஆகியவற்றால் நல்லறிவு கெட்டுப்போதலும் உண்டு.

வலைத்தளக் கண்கணிப்பால் வாழ்வை இழந்திங்(கு)
அலைபடுவார் உள்ளார் அறி

மணமகன் மணமகள் இருவரும் சமூக வலைத்தளத்தில் மேற்கொண்டுள்ள நட்புவட்டம் கண்காணிக்கப்படுவதால் அவர் தமக்குள் பிணக்கு ஏற்பட்டுப் பிரிந்து துன்பப்படுபவர்களும் இங்குச் சிலர் உள்ளனர்.

9.12.12

வரலாறு படைக்கும் வரலாறு இணைய இதழ்

வரலாறு இணைய இதழின் தோற்றப் படம்
வரலாற்றுச் செய்திகளுக்குத் தனித்துவம் கொடுத்து வெளிவந்து கொண்டிருக்கும் இணைய இதழே ‘வராலாறு.காம்’.  `இணையம் வழி வளரும் வரலாற்றுப் பயணம்’  என்று இவ்விதழின் போக்கு விளக்கப்பட்டிருக்கிறது.  23.10.2012 வரை 88 இதழ்கள் இணையத்தில் விரிந்துள்ளன. தற்போது  90 ஆவது இதழ் வெளியிடப்பட்டுள்ளது.  இதுவரை படைத்த படைப்புகளின் எண்ணிக்கையும் சொல்லப்பட்டுள்ளது.

ஆகத்து 15, 2004ஆம் ஆண்டு திருவாளர்கள் சீத்தாராமன், இராம், இலாவண்யா, கமல், கிருபா சங்கர், கோகுல் என்பவர்களால் தோற்றுவிக்கப்பட்டது.  பெரிதும் இவர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.  ஆசிரியர் குழுவாக இவர்களே செயல்படுகின்றனர்.  இவ்வாசிரியர் குழுவில் பெரும்பான்மையினர் வரலாறு முடித்துத் தேர்ந்த வல்லாளர்கள்.

தவறாமல் தலையங்கம் ஒன்று இடம்பெற்று சாட்டையடி கொடுக்கிறது.  ‘கதை நேரம்’ என்ற பகுதியில் கதையும் ‘கலையும் ஆய்வும்’ என்ற பகுதியில் தமிழகக் கலைகள் பற்றிய ஆய்வும் இடம்பெற்றுள்ளன.  `இலக்கிய ஆய்வும்’ இலக்கிய விரும்பிகளுக்காகப் படைக்கப்பட்டுப் பரிமாறப்படுகிறது.

இவ்விதழில் கட்டடக்கலை குறித்து கமலக்கண்ணன் என்பவர் தொடர்ந்து எழுதி வருகிறார்.  கதைநேரம் பகுதியை கோகுல் செதுக்கித் தருகிறார்.  கிருபாசங்கர் என்பவர் தளத்தின் வடிவமைப்புப் பணிகளைக் கவனித்துக் கொண்டு புதிய மென்பொருள் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.  இவரின் ‘கடலை மிட்டாய்’ என்கிற மென்பொருள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய தமிழ் எழுத்துக்களாக மாறி ஒருங்குறி வடிவம் கொள்கிறது.  எ.கலப்பை, என்.எச்.எம் எழுதிகளை போன்றது எனலாம்.
மொத்தத்தில் வரலாறு.காம் வாசிக்கத் தகவு பெற்ற வரலாற்றுச் செய்திப் பெட்டகம்.

6.12.12

சிறு பத்திரிகைகள் சந்தித்த சவால்கள்


www.silambukal.blogspot.com
தமிழில் வெளிவந்த சிறுபத்திரிகைகள் பல காலப்போக்கில் மறைந்து போனதன் ஆழ்காரணம் என்னவாக இருக்கும் என்பதே இப்பதிவின் ஆராய்வு.

தமிழில் பல பத்திரிகைகள் இன்று நாளேடுகளாக வந்துகொண்டிருக்கின்றன.  இவை பல வாசகர்களைக் கொண்டிருக்கின்றன.  ஊடகங்களின்  வழியாகப் பல நாளிதழ்கள் விளம்பரப்படுத்தப்பட்டும் குறிப்பிட்ட நாளிதழ்கள் தத்தமது இதழிலேயே தம் இதழ் குறித்து விளம்பரப்படுத்தியும் வருகின்றன.

சிறு பத்திரிகைகள் வளர்வதற்கு நிதி ஒரு முக்கியப் பங்காற்றியது.  நிதியுதவி பெற்றே பல சிற்றிதழ்கள் வெளிவந்தன.  பெரும்பணக்காரர்கள் (தமிழார்வம்  கொண்டவர்) என்ற வகையினரும் தமிழுக்காக உதவும் மனப்பான்மை கொண்டோருமே இச்சிறு பத்திரிகைகளுக்கு நிதியளித்து வெளிவர ஏதுவாகினர்.

சில தமிழார்வலர்கள் நான் பத்திரிக்கை தொடங்குகிறேன் பேர்வழி என்று வெகுண்டெழுந்து ஆறு மாதம் கூட தாக்குப்பிடிக்காமல் மூட்டைக்கட்டிய நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கிறது.  பத்திரிக்கை வரலாற்றுலகில் தொடர்ந்து வெளிவந்த சிறுபத்திரிகைகள் மிகவும் சொற்பமே!

திரு.புதுமைப்பித்தன், திரு.கு.ப.ராஜகோபாலன்,திரு.ந.ச்சமூர்த்தி போன்றோர் 1930 வாக்குகளில் சிறு பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தனர்.  சொக்கலிங்கம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு `ஊழியன்’ என்னும் பத்திரிகை வெளிவந்தது.  

இக்காலகட்டத்தில் வெளிவந்த மற்றுமொரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பத்திரிகை மணிக்கொடியாகும்.  இப்பத்திரிகை தான் பலரின் கலை தாகத்தைப் போக்கியது.  இப்பத்திரிகைக்குச் சிறுகதை தான் பிரதானம்.  மக்களிடையே நன் வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும்  மாதம் இரு முறை வெளிவந்த மணிக்கொடியின் பொருளாதார நிலை சொல்லுமளவிற்கு ஏற்றம் பெறவில்லை.  இதனால் நான்கு ஐந்து ஆண்டுகளில் நின்று போய்விட்டது.

கி.ரா, எம்.வி.வெங்கட்ராமன், லா.ச. ராமாமிர்தம், ஆர்.சண்முகசுந்தரம் போன்றோர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது மணிக்கொடியே.

தொடக்க காலத்தில் மணிக்கொடி பல அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளைச் சாடி வெளிவந்தது; பிந்தைய காலத்தில் தான் சிறுகதை வளர்ச்சிக்கு வழிசெய்து நின்றது.

இப்படிப்பட்ட மணிக்கொடியின் ஏடுகள் கூட ஆயிரக்கணக்கிலும் இலட்சக்கணக்கிலும் வெளிவரவில்லை.  ஏனெனில் சில நூறு ஏடுகள் வெளியிட்டாலும் அதை வாங்கிப்படிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவே.  இச்சூழல் தான் பல பத்திரிகைகளை தவிடுபொடியாக்கியது.  நிதியைப் போட்டு பத்திரிகை நடத்துவோர் இலாபத்தை எதிர்பார்க்கவே கூடாது என்னும் நிலை ஏற்பட்டது.  எத்தனை முறை முதலீடு செய்தாலும் பத்திரிகையின் ஓட்டம் முன்பு இருந்த நிலையைவிட குறைந்தேயிருந்தது.  இவ்வாறான பத்திரிகை தொழில் பலரது வாழ்வில் ஏற்றத்தை மிகுவிப்பதற்குப் பதில் தப்பித்தோம் பிழைத்தோம் என்னும் நிலைமையையே ஏற்படுத்தியது.

 "பத்திரிகைகள் நடத்தி இலாபம் கண்டோர்,  பேப்பர் கடை காரரும் பிரஸ் வைத்திருப்போருமே தவிர பத்திரிகை நடத்துவோரல்ல" என்பார் திரு.வல்லிக்கண்ணன்.

முடிப்பாகச் சொல்ல வேண்டுமாயின் நிதி ஒன்று மட்டும் சிறு பத்திரிகைகள் நலிந்து போகக் காரணம் இல்லை.  வாசகர் வட்டம் குறைவாக இருந்ததும் தமிழ் மீது ஆர்வங்கொண்டோர் குறைவாக இருந்ததும் அப்படித் தமிழார்வம் இருந்தாலும் வாங்கும் எண்ணமிலார் இருந்ததும் காரணமாக இருந்துள்ளன.

தொடருவோம் ............. (2)








3.12.12

கா.சு.பிள்ளை

கா.சுப்பிரமணியம் பிள்ளை

நம் சிலம்புகள் வலைப்பூவில் தமிழ் வளர்க்கப் பாடுபட்டவர்களைப் பற்றி பல்தொகுப்புகள் பதிவாக இடம்பெற்றிருக்கின்றன.  பலரும் இம்முயற்சி கண்டு வாழ்த்துத் தெரிவித்து மேலும் முயலுமாறு வேண்டி நின்றனர்.  இவர்களின் ஏகஊக்கங்கண்டு வியந்த நான் மேலும் பலரது வரலாற்றை இவ்வலைப்பூவில் யாக்க முற்பட்டுள்ளேன்.  இத்தொகுப்பில் ஒரு படியாக  நாம் அறிய இருக்கும் தமிழறிஞர் திரு.கா.சுப்பிரமணியப் பிள்ளை ஆவார்.

1888 ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் 5ஆம் நாள் தமிழ்நாட்டிலுள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் காந்திமதிநாத பிள்ளை, மீனாட்சியம்மை தம்பதியினருக்கு மகனாய்த் தோன்றினார். 1906ஆம்  ஆண்டு மெட்ரிகுலேசன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார்.  மதுரைத் தமிழ்ச் சங்கம் நடத்திய புலவர் தேர்வில் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றார். 1910 ஆம் ஆண்டு வரலாறு பாடத்தில் இளங்கலையும் 1913ஆம் ஆண்டு ஆங்கில இலக்கியத்தில் முதுகலையும், 1914 ஆம் ஆண்டு இறுதியில் தமிழிலக்கியத்தில் முதுகலையும் பெற்றார்.  இவர் சட்டம் பயின்று 1917 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றதோடு முதன் முதலில் எம்.எல் பட்டம் பெற்றவர் என்ற சிறப்புக்கும் உரியவர்.


 திரு.சுப்பிரமணியப் பிள்ளைஅவர்களை அனைவரும் கா.சு.பிள்ளை என்றே அழைத்தனர்.  தமிழில் மிகுந்த புலமை பெற்றவராக இருந்ததோடு சட்டப்படிப்பிலும் தன்னுடைய முத்திரையைப் பதித்தவர்.  சட்டத்தில் முதுகலையான எம்.எல் பட்டம் பெற்றதனால் `எம்.எல். பிள்ளை’  என்றும் சிலர் அழைத்தனர்.  

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப்பேராசிரியராகப் பணியாற்றிய இவர் தமிழ் இலக்கிய வரலாறு ஒன்றை மிகத்திருத்தமாய் ஆக்கினார்.  இஃது அனைவராலும் வெகுவாய் பாராட்டப்பட்டது.  

பல ஆய்வுகளை மேற்கொண்டு பல்கருத்துக்களை வழங்கியிருக்கிறார்.  இவரின் கருத்துக்கு மாறுபட்டு நிற்போரும் இருப்பதாகத் தெரிய வருகிறது.  தமிழ் மொழியில் நூல் யாத்ததோடன்றி ஆங்கிலத்திலும் ஏற்ற புலமை பெற்று நூல் சமைத்தார்.  இவர் இயற்றிய நூல்களுள் `தமிழர் சமயம்’ என்பதுவும் ஒன்றாகும்.