தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

30.12.12

உத்தமம் அமைப்பிற்கு நெஞ்சார்ந்த நன்றி


உத்தமத்திற்கு நன்றி - சிலம்புகள் வலைப்பூ
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) ஒரு இலாப நோக்கமற்ற அரசு சாராத பன்னாட்டு அமைப்பு.  தமிழ்க்கணிமையை மேம்படுத்த ஏற்படுத்தப்பட்டது.  இரண்டாயிரமாவது ஆண்டில் தன் சேவையைத் துவக்கியது.  கலிபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இவ்வுத்தமம் நிறுவனம் தற்போது பதினொன்றாம் உலகத்தமிழ் இணைய மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.  இதற்காக இந்நிறுவனத்திற்குப் பாராட்டுக்களைத் தெரிவிக்கிறது சிலம்புகள் வலைப்பூ.

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து வருகின்ற இக்காலகட்டத்தில் தமிழையும் அதில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என்று நினைப்பவர்கள் குறைந்த எண்ணிக்கையில் தான் இருக்கின்றனர்.  இவ்வெண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டுமாயின் உத்தமம் போன்ற நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் வரவேற்கத்தக்கது; போற்றுதலுக்குரியது.

உத்தமம் நிறுவனத்தின் தலைவராக திரு.மணி.மணிவண்ணன் அவர்களும் செயல் இயக்குனராக திரு.அ.இளங்கோவன் அவர்களும் செயல்பட்டு வருகின்றனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பலகலையுடன் இணைந்து உத்தமமும் இம்மாநாட்டை நடத்தியுள்ளது.  28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் பல கருத்தரங்குகள், மென்பொருள் கண்காட்சியரங்குகள், கலந்துரையாடல்கள், பொதுமக்களுக்கு இணையத்தை அறிமுகம் செய்தல் எனப் பல நிகழ்வுகள் இம்மாநாட்டில் இடம்பெற்றிருந்தன.

பொதுமக்களுக்குத் தமிழ்க் கணிமை பற்றிப் பயிற்சி தருதல், பரப்புதல், பயிலரங்குகள் மூலம் இளைஞர்களை ஈர்த்தல் ஆண்டுதோறும் நடத்தும் உலகத் தமிழ் இணைய மாநாடுகள், தரப்பாடுகளையும் தொழில்நுட்பங்களையும் விவாதிக்கும் பணிக்குழுக்கள், யூனிகோடு, தமிழ் இணையக் கழகம், மற்றும் பன்னாட்டுத் தரப்பாடு நிறுவனங்கள், அரசு அமைப்புகளோடு ஊடாடுதல் மூலம் தமிழ்க்கணிமைக்கான முக்கியத் தேவைகளை உத்தமம் நிறைவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

திரு.வி.கவின் இளமைத் தொண்டு


திருவிகவும் இளம்பருவத் தொண்டும்

திரு.வி.க என்றால் அன்பென்பர்; தொண்டென்பர்; பெண்ணியவாதியென்பர்; ஆன்மிகர் என்பர்; பண்பாளர் என்பர்; பெருமாள் பக்தர் என்பர்; தொழிற்சங்கவாதி என்பர்.  எவரெவர் எப்படி திரு.வி.க வை நோக்கினரோ அவ்வண்ணமே காணப்படுவார் நம் திருவாரூரார்.  தன்னில் விலங்கியல்பு அதிகமாகக் காணப்பட்டதாக அடிக்கடி கூறி வருந்தும் அவர் ஒரு தருணத்தில் விலங்கியல்பை தெய்வ இயல்பு மறிக்கச் செய்தது என்கிறார்.  தெய்வத்தின்பால் அன்பு எழுந்த போது ஆறாக்காதல் கொண்டவராய் மாறினார்.  நித்தமும் மாலை வேளையில் பார்த்தசாரதியைத் தொழாமல் இல்லமடையமாட்டார்.

மாந்தனானவன் விலங்கியல்புகளை விடுத்து மனித இயல்புகளைக் கைவரப்பெற்றாலே சமுதாயம் நன்னிலையை எய்திவிடும்; சென்னிலையை அடையும் என்ற எண்ணங்கொண்டிருந்தார்.
தெய்வ இயல்பைச் சுட்டும்போது அறச்செயலையும் ஒருங்கே சுட்டுதல் தகும்.  ஏனெனில் தெய்வ இயல்பெல்லாமே அறத்தை அடியொட்டியதே.  திரு.வி.கவும் அறச்செயல்களை சிறு பிராயத்திலிருந்தே செய்யத் தொடங்கியிருக்கிறார்; துணிந்திருக்கிறார்.  மற்றவர் அஞ்சி செய்ய இயலாதவற்றை பிறருக்காக என எண்ணி செய்யத் துணிந்தார்.

தன்னுடைய சிறு அகவையில் அவர் செய்யாத குறும்புகளில்லை; அறமுமில்லை.  பின்னாளில் அவர் உதிர்த்த முத்துக்கள் எல்லாம் சிறுவயதில் அவர் மேற்கொண்ட அறவித்துக்களே!
இராயப்பேட்டையில் வசித்தபோது தன்னுடைய இளம்பட்டாளங்களுடன் செய்யாத குறும்புகளில்லை.  அக்குறும்புகள் அனைத்தும் அவர் செய்த அருஞ்செயல்களால் பிறர் அகங்குளிரச் செய்தன. 

சுந்தரேசர் ஆலயத்திற்கென கொட்டப்பட்டிருந்த கட்டுமானத்திற்குண்டான மணல், கோயிலின் முன் கொட்டப்பட்டிருந்தது.  அம்மணலை எடுத்துவந்து கோயிலில் கொட்டுவார் வரவில்லை.  மன்னாத முதலியார் அவர்கள் தாமே அம்மணலை வாரி கோயிலினுள் கொட்டத் தொடங்கினார்.  இதைக் கண்ணுற்றார் திரு.வி.க தன்னுடைய படைகளுடன் கோயிலின் முன் ஒன்று திரண்டார்.  மணல் முழுவதும் கோயிலினுள் சென்றது.  மன்னாத முதலியார் மனமகிழ்வோடு திரு.வி.க வை வாழ்த்தலானார்.  பிறர் தன்னை இவ்வாறு சொல்ல வேண்டும் இவ்வாறு புகழ வேண்டும் என்னும் எண்ணங்கொண்டிருந்திலர் அவர்.  எளியர்; அன்பர்; நட்பாளர்; சிறந்த தொண்டர்; பிரதிபலன் பாராதவர்.

பகட்டு வாழ்க்கையை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.  நண்பர்களுடன் ஏற்றத்தாழ்வு பார்த்ததில்லை.  பெரிய பாளையத்தம்மன் கோயிலின் முன் எண்ணற்ற பிச்சை ஏற்பவர்கள் இருப்பர்.  அவர்களுள் கூனரும், குருடரும், முடவரும் அடக்கம்.  தம்முடைய அன்றைய நாளை போக்குவதற்காக ஆழ்ந்த அல்லல்களுக்கு ஆட்படும் மானிடராய் வாழ்ந்திருந்தனர்.  இவர்களுக்காகவும் திரு.வி.க தன் தொண்டுள்ளத்தை விரித்துக்காட்டியிருக்கிறார்; அன்பினால் தழுவியிருக்கிறார்; தராதரம் விலக்கியிருக்கிறார்; ஒன்றென்றிரு எனப் புகலச்செய்திருக்கிறார்.

பிச்சை ஏற்பவர்களுக்கெனத் தான் பலரிடம் சென்று அறச்சோறு ஏற்றிருக்கிறார்.  தன்னுடைய இளம்பருவத்தோழர்களுடன் பல்வீதிகளில் அறச்சோறு வேண்டி பிச்சை ஏற்றிருக்கிறார்.  பிறரிடம் தர்மம் பெற பலர் அஞ்சும் போக்கு திரு.வி.கவையும் விட்டுவைக்கவில்லை. இச்செயலை  இழுக்காக எண்ணினார்.  தோற்றுவாயில்தான் அவர் எண்ணம் இப்படிச் சுருங்கியிருந்தது.  பின்னர் பிறருக்காக அறச்சோறு பெறுவதில் இழுக்கில்லை எனத் துணியலானார்; சோற்றுப் பிச்சையேற்றார்; அறச்சோறு பெற்றார். குருடு நிரம்பியும் முடம்பட்டும் அல்லல் பட்டிருந்தோருக்கு அறப்பிச்சை எடுத்து வழங்கினார்.  தெய்வ இயல்பை சிறிதுசிறிதாகக் கைவரப்பெற்றார்.  விலங்கியல்பு மாண்டுபோகத் தொடங்கியது.

29.12.12

தமிழ் இணையப் புத்தகங்கள் இல்லையே!


புதுச்சேரி புத்தகக் கண்காட்சி

புதுச்சேரி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி குறித்த பதிவு இது.


கடந்த 24 ஆம் தேதி அன்று தொடங்கப்பெற்ற இக்கண்காட்சி வருகிற 2 ஆம் தேதி சனவரி 2013 வரை நடைபெறவிருக்கிறது.  இக்கண்காட்சியில் 25 விழுக்காடு கழிவு வழங்கப்படுவது மகிழ்தலுக்குரிய செய்தியாகும்.  இந்நல்வாய்ப்பினைப் பலரும் பயன்படுத்திப் பனுவல்கள் வாங்கி வருகின்றனர்.  

புத்தகக் கண்காட்சி குறித்த அறிவிப்பு அவ்வரங்கில் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது அறிவிக்கப்படுகிறது.  நாள்தோறும் அரங்கு தொடங்கும் நேரம் முடியும் நேரம் புத்தகப் பயனர்கள் எவ்வாறு புத்தகம் வாங்குதல் எவ்வழியாக வருதல் என்பனப் போன்ற அறிவிப்புகள் ஏராளமாய் எடுத்தியம்பப்படுகின்றன.

எண்ணற்ற புத்தகப் பதிப்பகங்கள் தத்தமது புத்தகங்களை அடுக்கி வைத்து விற்பனைக்குக் கொடுத்திருக்கின்றன.  பல இலட்சக்கணக்கான பனுவல்கள் விற்பனைக்கு இலக்காகக் காத்திருக்கின்றன.  இன்முகத்துடன் வரவேற்கும் முகமாய் காத்திருக்கின்றனர் அரங்குகளின் பொறுப்பாளர்கள்.  

நூல் வகை

கலை, இலக்கியம், பொருளாதாரம், அழகுக்குறிப்பு, பொது அறிவு, கணினி, ஆன்மிகம், தத்துவம், பொறியியல், வரலாறு, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, சமையல், பிறப்பியம், கவிதை, ஒருவரி செய்திகள், கடந்த நிகழ்வுகள், நகைச்சுவை, சுயசரிதை, நீதிக்கதைகள் போன்ற வகைத்தான புத்தகங்கள் ஒருங்கே அடுக்கப்பட்டுள்ளன.

போட்டித் தேர்வு

அழகுக்குறிப்பும்,  சமையல் குறிப்பும் குறித்த நூல்கள் பயனர்களிடையே முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.  இதனினும் சிறந்த இடத்தை மாணாக்கர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள வினா விடை மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் புத்தகங்கள் பிடித்துள்ளன.  இம்முறை ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகும் புத்தகங்கள் பெரிதும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 

கணினி நூல்கள்

கணிப்பொறி கற்கும் விதமாக கணினியின் அடிப்படை செயல்பாடுகளான எம்.எஸ்.வேர்டு, எம்.எஸ்.எக்சல், இணையம், பேஜ்மேக்கர், ஃபோட்டோசாப் போன்றவற்றின் குறுந்தகடுகள் விற்பனைக்கு உள்ளன.  அரங்கினுள் நுழைந்தாலே இவை குறித்த ஒலியைக் கேட்காமல் இருக்க முடியாது.  பலர் ஐந்து நிமிடங்கள் செலவு செய்து இது குறித்த காணொளியைக் கண்டு செல்கின்றனர்.

தமிழ் நூல்கள்

தமிழிலக்கியங்கள் குறித்த நூல்கள் பல அளவிறந்த எண்ணிக்கையில் காணக் கிடைக்கின்றன.  புகழ்பெற்ற ஆசிரியர்களின் புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் விற்பனைக்குள்ளன.  கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் புதுவரவுக் கவிதைப் புத்தகமாக அரங்குகளில் முளைத்திருக்கிறது.  வைரமுத்துக் கவிதைகளுக்கென ஓரிடம் ஒதுக்கி அவர்தம் கவிதையாக்கங்களைத் தாங்கி நிற்கும் புத்தகங்கள் ஒருங்கே அடுக்கப்பட்டுள்ளன.

புதுவை எழுத்தாளர்கள்

புதுச்சேரி எழுத்தாளர்களுக்கென ஒரு அரங்கத்திற்கு ஏற்பாடாகியுள்ளது.  இவ்வரங்கில் நம் புதுவை எழுத்தாளர்களின் படைப்புகள் விற்பனைக்கு உள்ளன.  புலவர் பெருந்தேவனின் `திருவள்ளுவருக்குப் பின் அரசியல் அறம்’, திரு.உசேன் அவர்களின் எண்ணற்ற புத்தகங்கள், புதுவை சிவத்தின் புத்தகங்கள்,  புலவர் சீனு இராமச்சந்திரனின் நாடகப் படைப்புகள் முதலியன இடம்பெற்றுள்ளன.

பரிசு

பல வியாபார நிறுவனங்கள் புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்கும் முகமாக பரிசுகளை வழங்குகின்றன.  புத்தகம் வாங்கிவிட்டு வெளியே வரும்போது நம் கையில் கொடுக்கப்படும் கூப்பனை நிரப்பி பெட்டியில் போடும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரொக்கமும் புத்தகமும் பரிசாக வழங்கப்படுகிறது.  புதுச்சேரியின் பல முன்னணி நிறுவனங்கள் இப்பரிசினை இலவயமாகப் பயனர்களுக்கு வழங்குகின்றன.

ஏமாற்றம்

தமிழ் இணையம் குறித்த புத்தகங்கள் குறைவாகக் காணப்படுகின்றன.  இணையத்தில் ஏற்றம்பெற்றிருக்கக் கூடிய நம் அருந்தமிழ் இணையத்தில் எவ்வாறு வெற்றிநடை போடுகிறது என்பது குறித்தும் தமிழ் இணையத்தின் எல்லைகள் விரிந்திருப்பது குறித்தும் எண்ணற்ற புத்தகங்கள் பல்லோராலும் படைக்கப்பட்டுள்ளன.  ஆயினும் இது குறித்த புத்தகங்கள் மிக மிகக் குறைவே.  கணிப்பொறியில் தமிழ், கம்ப்யூட்டரில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்கிற இரண்டு நூல்கள் தான் விற்பனைக்கு இருந்தன.  மற்றபடி கணினியைக் கற்றுக்கொள்வது குறித்த புத்தகங்கள் தான் இடம்பெற்றிருந்தன.

எந்த அரங்கில் சென்று தேடினாலும் வினவினாலும் தமிழிணையம் குறித்த புத்தகங்கள் இருப்பதில்லை.  ஒரு சிலர் தாங்கள் நடத்தும் சொந்தக் கடைகளில் இருந்தாலும் வைத்துவிட்டு வந்ததாகச் சொல்கிறார்கள்.  இவ்வளவு தான் தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்வு,  ஆர்வம் என்று எண்ணத் தோன்றுகிறது.  வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியிலும் சரி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியிலும் சரி பெருத்த ஏமாற்றமே!

இணையத்தில் ஆர்வமுடையவர்கள் தமிழில் ஆர்வமுள்ளவர்கள் இனியாவது தமிழ் இணையம் குறித்த புத்தகங்கள் அதிகம் இடம்பெற உரிய முயற்சி எடுக்க வேண்டும்.

25.12.12

இணைய மாநாடு 2012


உலகத் தமிழ் இணைய மாநாடு - 2012





வரும் 28-12-2012 அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பலகலைக்கழகத்தில் 11 வது இணைய மாநாடு நடைபெற உள்ளது.  மாநாடானது 28, 29, 30 ஆகிய முன்று நாட்களுக்குச் சீர்மையுடன் நடைபெறுகிறது.  தமிழும் இணையமும் குறித்த மைய நோக்குரை பல்லோராலும் அவ்வமயம் தருவிக்கப்படும்.  


உத்தமமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும் ஒன்றிணைந்து இம்மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுச் செயலாக்கத்தில் இறங்கியுள்ளன.  


உத்தமமானது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பதிவு செய்யப்பட்ட தன்னார்வ பன்னாட்டு நிறுவனாமாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.  இதுவரையில் பல நாடுகளின் பேராதரவுடன் ஏழு இணைய மாநாடுகளை நடத்தியிருக்கிறது.  தமிழக அரசு இந்நிறுவனத்திற்கு நல்லாதரவு நல்கி தன்பணியாற்றியிருக்கிறது.  தமிழ்நாட்டில் மட்டும் மூன்று முறை இஃது நடத்தப்பட்டுள்ளது.  



தமிழார்வலர்கள் தமிழ் இணைய விரும்பிகள் முதலானோர்களிடமிருந்து பல் தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்பட்டு தேர்வு செய்து மாநாட்டு நாளன்று படிக்கப்படவுள்ளன.

கருத்தரங்குகள் மற்றும் ஆய்வுக்கட்டுரை தொடர்பான நிகழ்வுகளில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும்.  மற்றபடித்தான கண்காட்சி முதலியவற்றை பொதுமக்கள் அனைவரும் பார்த்துப் பயன்பெறலாம்.

“செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமை” என்ற தலைப்பிலமைந்த கட்டுரைகளை வரவேற்று அது தொடர்பாக ஆய முடிவு செய்யப்பட்டுள்ளது.  இணையத் தமிழில் ஆர்வமுள்ள பலரிடமிருந்து இக்கட்டுரைகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது.  திசம்பர் 20 ஆம் தேதி இக்கட்டுரைகளை ஒப்படைக்க இறுதி நாள் என எல்லையிடப்பட்டுள்ளது.

இணைய மாநாடுகள்,  ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.  சிதம்பரத்தில் இம்மாநாட்டை நடத்துவதால் கண்காட்சி, மற்றும் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகளை சுற்றுப்புற மக்களிடையே எடுத்துச்செல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என ஊகிக்கப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட தலைப்புகளில் மாநாட்டின் அரங்குகள் நடைபெற உள்ளன:

  • செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில், முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
  • மின் புத்தகங்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
  • திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
  • இயன்மொழிப் பகுப்பாய்வு: பிழைதிருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடுபொறிகள், இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
  • தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
  • தமிழ் தரவுத்தளங்கள்.
  • கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
  • தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்
  • கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்

24.12.12

வா.செ.குழந்தைசாமி என்கிற குலோத்துங்கன்




முனைவர் வா.செ.குழந்தைசாமி
கரூர் மாவட்டத்தில் வாங்கலாம்பாளையம் என்ற சிற்றூரில் பிறந்தவர்.  இந்தியா, செர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கல்வி பயின்றவர்.  நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.

முனைவர் வ.செ.குழந்தைசாமி

புகைப்படத்திற்காக நன்றி - விக்கிபீடியா


வகித்த பதவிகள்:

நீர்வளத் துறைப் பேராசிரியராகவும், மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும், யூனெசுகோ ஆலோசகராகவும், இந்திராகாந்தி தேசியத் திறந்த நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநராகவும் பதவி வகித்தவர்.

நீர்வளத்துறை:

நீர்வளத் துறையில் நன்கு தேர்ந்த அறிவைப் பெற்றவர்.  இதனால் எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார்.  பன்னாட்டவரும் புகழும் படியான ஆய்வுகளை இத்துறையில் மேற்கொண்டதனால் பலரின் பாராட்டையும் ஒருங்கே பெற்றவர்.

அறிவியல் தமிழ்:

அறிவியலில் ஆறாத ஆர்வம் கொண்ட வா.செ.கு அவர்கள் அறிவியல் தமிழ் குறித்து  பல நூல்களைப் படைத்துள்ளார்.  பல கல்லூரிகளில் இவரின் நூல்கள் பாடமாக இடம்பெற்றுள்ளன.

பல்கலைக் கழக மானியக் குழு, அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழக, அனைத்திந்தியத் தொழில் பயிற்சிக் கல்விக் குழு, தமிழகத் திட்டக் குழுமம் போன்ற பல நிறுவனங்களில் உறுப்பினராக இருந்தவர்.  சர்வ தேசியத் தொலை நிலைக் கல்விக் கழகத்தில் ஆசியாவின் துணைத் தலைவராகவும், காமன்வெல்த் நாடுகளின் பல்கலைக் கழகக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியவர்.

விருதுகள்:

இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது (1988), மைய வேளாண்மை வாரியத்தின் வைர விழாச் சிறப்பு விருது (1991) மற்றும் இந்திய பொறியியலாளர் நிறுவனம் இவரை இந்தியாவின் சிறந்த பொறியியல் வல்லுநர்களில் ஒருவராக 1991 இல் பெருமைப்படுத்தியது.

இவர் தமிழ் வளர்ச்சி, தமிழிலக்கியம், தமிழ் எழுத்து சீரமைப்பு முதலிய துறைகளில் ஆர்வங்கொண்டவர்.  இவை தொடர்பான நுல்களையும் படைத்துள்ளார்.

தமிழ் எழுத்துச் சீரமைப்பு குறித்த இவரின் நூல் ஒரு பார்வை:

இந்நூலில் இந்நூலின் தேவை குறித்தும் எழுத்துகளைக் குறைப்பதன்று என்பது பற்றியும் புதிய ஒலிகளைப் புகுத்துவது தேவயற்றது என்பனப் போன்ற தலைப்புகளில் கட்டுரைக்கப்பட்டுள்ளது.
 இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பேராசிரியர் தெ.பொ.மீ, பேராசிரியர் மு.வ, தமிழறிஞர் கி.வா.ஜ., பேராசிரியர் வ.சுப.மாணிக்கம், சிலம்புச் செல்வர், டாக்டர் கலைஞர், தமிழகப் புலவர் குழு முதலியோரின் கருத்துக்களை இடம்பெறச் செய்துள்ளார்.

புதிய ஒலிகளைப் புகுத்துவது தேவயற்றது:

``தமிழில் 247 ஒலியெழுத்துகள் உள்ளன.  உலகின் பல மொழிகளிலும் உருவாக்கப்படும் கருத்துகளை, தத்துவங்களை, அவற்றோடு தொடர்புடைய பெயர்களைத் தமிழில் எழுதுவதற்குத் தமிழ் நெடுங்கணக்கில் இருக்கும் ஒலிகள் போதாவென்று வாதிடுவோர் உளர்.  இதனடிப்படையில் தான் கிரந்த எழுத்துகள் நமது முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டன.  இன்றும் பலரால் பயன்படுத்தப்படுகின்றன.  இக்கருத்திலேதான் ‘ஃப்’ என்ற சேர்கை பயன்படுத்தப்படுகிறது.  இவற்றை எதிர்ப்பாரும் உண்டு; ஏற்பாரும் உண்டு.  இதுவும் ஒரு முக்கியமான பிரச்சினையே எனினும் இது நாம் எடுத்துக்கொண்ட சீர்மைப்பினின்றும் வேறுபட்டது; தனிப்பட்டது.  புதிய ஒலிகளின் தேவை பற்றிய வாதம், எதிர்ப்பு ஆகியன எழுத்துச் சீர்திருத்த இயக்கத்தின் ஒரு பகுதியன்று” என்று கூறுகிறார்.