தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

26.8.18

தமிழ் இலக்கங்கள்

தமிழ் இலக்கங்கள் ஒன்றுக்கும் கீழ்ப்பட்ட பின்னங்களையும் உடையவை.

தமிழர் இவற்றை கீழ்வாய் இலக்கம் என்பர்.  இந்தப் பின்ன அளவைகள் தமிழரது வாணிகச் சிறப்பை விளக்கி நிற்கின்றன.  இப்பின்ன அளவைகள் தமிழைத் தவிரப் பிற திராவிட மொழிகளில் இல்லை என்பதும் இங்கு அறியத்தகும்.  மேலும், எண்களைக் குறிக்கத் தமிழர் தமிழ் எழுத்துகளையே பயன்படுத்தினர் என்பதும் அறியத்தகும்.

1/320 * 1/21   = இம்மி

1/320 * 1/21*1/7= அணு

1/320 * 1/21*1/7*1/11= மும்மி

1/320 * 1/21*1/7*1/11*1/9=குணம்


25.8.18

தமிழ் இலக்கியமும் - அறுவை மருத்துவமும்

அறுவை மருத்துவம் பற்றி அன்றைய தமிழிலக்கியங்கள் கூறியுள்ளன. 

பெரியபுராணத்தில் , “கண்ணிடந்து அப்பிய கண்ணப்பன் வரலாறு ஊனுக்கு ஊன்” என்னும் செய்தியின் வாயிலாக சிவபெருமானுக்குத் தனது கண்களை எடுத்து அப்பிய கண்ணப்பன் வரலாறும்,

“உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” என்னும் கம்பர் வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.

மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடுமுட்டியதால், அவர் குடல் சரிந்தது.  சரிந்த குடலைப் புத்தத் துறவியால் சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது.

இவையெல்லாம் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பழந்தமிழனின் அறுவை மருத்துவம் குறித்த செய்திகளாகும்.


21.8.18

சாலை.இளந்திரையன் - இன்று இவர்

'இன்று இவர்' பகுதியில் நாம் பார்க்க இருக்கும் ஆளுமை திரு.இளந்திரையன் அவர்களாகும்.

இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலைநயினார் பள்ளிவாசலில் பிறந்தார்.
பெற்றோர் : இராமையா-அன்னலட்சுமி.

தில்லிப் பல்கலைக் கழகத்தில தமிழ்த்துறைத் தலைவராக விளங்கினார்.
உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமானவர்.

1991 இல் தமிழக அரசின் 'பாவேந்தர்' விருது பெற்றார்.
தமிழின் முன்னேற்றத்திற்கான படைப்புகளை வழங்கி எழுச்சியூட்டினார்.

20.8.18

சி.சு. செல்லப்பா - இன்று இவர்

சி.சு. செல்லப்பா சிறுகதை, விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு முதலான
இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்புச் செய்திருக்கிறார்.

சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்."எழுத்து" இதழினைத் தொடங்க நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.

அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள்: வாடிவாசல், சுதந்திர தாகம், ஜீவனாம்சம், பி.எஸ் ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது.

இவருடைய ' சுதந்திர தாகம் ' புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

திரு.விக. வின் இறுதி ஊர்வலத்தில் பெரியார்

திரு.வி.க இறந்த செய்தி சென்னை நகர் முழுதும் பரவியது.  அன்பர் கூட்டம் கடல் எனத் திரண்டது.  சைவர் வந்தனர்; கிறிஸ்தவ ர் வந்தனர்; ஜைனர் வந்தனர்; பௌத்தர் வந்தனர். அரசியல் கட்சித் தலைவர் பலரும் வந்தனர்.

     அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

1953 செப் 18 காலை திரு.வி.க வின் உடல் பெரம்பூருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.  சென்னைத் தொழிலாளர் சங்கத்திலே வைக்கப்பட்டது.
     25 ஆண்டுகளுக்கு மேலாகத் தம் இன்பத்திலும் துன்பத்திலும் உற்ற துணையாய் இருந்த ஒப்பற்ற தலைவருக்குத் தொழிலாளர் வணக்கம் செலுத்தினர்.

     திரு.வி.க மறைந்த செய்தி அறிந்த பெரியார் ஈரோட்டிலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்தார்.  மவுண்ட் ரோட்டில் ஊர்வலத்தில் கலந்தார்.  ஊர்வலம் இராயப்பேட்டையை சேர்ந்தது.  அப்போது பெருமழை பெய்தது.  இரவு 7 மணிக்கு மயிலை மயானத்தில் அவரின் உடலுக்குத் தீ மூட்டப்பட்டது.

திரு.வி.க மறைந்தார்; மங்காத புகழ் பெற்றார்.

19.8.18

திரு.வி.க-வின் இறுதி

     1949 ஆம் ஆண்டு அவரது இடது கண்ணிலே படலம் தோன்றியது.  அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.
 
   திரு.வி. வின் நெருங்கிய நண்பர் கந்தசாமிப்பிள்ளை கண் மருத்துவர்.  அறுவைச் சிகிச்சைச் செய்தார்.  என்ன ஆயிற்று? பார்வை வரவேயில்லை; போயிற்று.

     திரு.வி.க. வெளியே செல்வது விடுத்தார்.  அடுத்த ஆண்டு மற்றொரு கண்ணும் இழந்தார்.  படுக்கையில் கிடக்கலானார். 

     1953 ஆம் ஆண்டு செப் 17 ஆம் தேதி திரு.வி.க கண் இழந்து படுக்கையில் கிடக்கிறார் என்ற செய்தி கேட்டு அவரைப் பார்க்க வந்தார் ஒரு அம்மையார்.

     அப்பெண்மணி நன்கு பாடுதல் வல்லார்.  தேவாரப் பதிகங்களைப் பாடினார்.  திருவருட் பாக்களைப் பாடினார்.  பகல் முதல் மாலை வரை பாடுவார்.

     அப்பாடல்களிலே திரு.வி.க மூழ்கித் திளைத்திருந்தார்.  இரவு 7.30 மணிக்கு மரண வேதனையுற்றார்.  இளமை முதல் அவரின் இணைபிரியா நண்பராக விளங்கிய சச்சிதானந்தம் பிள்ளை அவர்கள் உடன் இருந்தார்கள்.  திரு.வி.க வின் காதில் ஐந்தெழுத்து மந்திரம் ஓதினார்கள்.  அவ்வளவில் திரு.வி.க வின் ஆவி பிரிந்தது.

      இரவு 7.30 மணி இறைவனடி சேர்ந்தார் திரு.வி.க.