மொழியும் இயற்கையும் நம் அரண்
|
நம் உணவுப் பழக்கத்தை மறுசீரமைவு செய்ய வேண்டும் என்னும் நோக்கத்தில் உடலுக்கு வலுசேர்க்கும், நோய் விரட்டும் சத்தான உணவுப் பழக்கத்திற்கு வித்திடும் வகையில் பாவேந்தன் தமிழர் உணவகம் ஒன்று புதுவை அரியாங்குப்பத்தில் தொடங்கப்பெற்றுள்ளது. இக்கடைக்கு விளம்பரம் சேர்க்கும் பதிவாக இஃது அமையப்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். நான் நேரடியாகச் சென்று இவ்வுணவுக் கடையில் விலைக்குள்ள உணவுப் பொருள்களை உண்ட மகிழ்வில் இப்பதிவினைப் படைக்கிறேன்.
தமிழர் உணவகத்தின் விளம்பரப் பதாகை |
நாம் உண்ணும் உணவே நம் உடல் நலத்தை தீர்மானிக்கிறது. அண்மைக் காலமாக நம் மக்களிடம் பெருகிவரும் சர்க்கரை, குருதி அழுத்தம், மூட்டுவலி, இருதய நோய் போன்ற நோய்களுக்கு முதன்மையான காரணம் , நம் உணவு வகைகளில் போதிய ஊட்டங்கள் இல்லாததே ஆகும்.
தமிழர் உணவகத்தில் பாவேந்தரின் புகைப்படமும் பெரியாரின் புகைப்படமும் நம்மை ஈர்க்கின்றன |
நம் முன்னோர்கள் நீண்டகாலமாக உணவில் கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, குதிரை வாலி, சோளம் போன்ற சிறுதானிய வகைகளையே அன்றாடம் உண்டு வந்ததால் உடல் உரம் பெற்று நோய் எதிர்ப்பு ஆற்றலுடன் வாழ்ந்து வந்தனர். ஆனால் இக்காலத்தில் உடல் உழைப்பு குறைந்துவிட்டதாலும் சுற்றுச்சூழல் மாசுபாடுடைய சூழலில் வாழ நேரிடுவதாலும் இன்றைக்கு நாம் மிகவும் ஊட்டமுள்ள உணவைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே, நம்மை நோயின் தொல்லையிலிருந்தும், மருந்து மாத்திரை செலவீனங்களின் பிடியிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.
இக்கடையானது 17, வீராம்பட்டினம் வீதியில் ‘பாவேந்தன் தமிழர் உணவகம்’ என்னும் பெயரில் அமையப்பெற்றுள்ளது.
தானியங்களின் அருமை பெருமைகளை விளக்கும் இவர்கள் இத்தானியங்களாலான உணவுப் பொருள்களை வகைவகையாய் செய்து வைத்துள்ளனர். அனைத்தும் தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்ற இயற்கை உணவுகள் என்பது தான் குறிப்பிட வேண்டிய ஒன்று.
கேழ்வரகு, வரகு, தினை, சாமை, குதிரை வாலி, கொள்ளு, சோளம் ஆகிய சிறு தானியம் மற்றும் கோதுமை, அரிசி வகையிலான உணவுகள் கிடைக்கின்றன.
கூழ், மோதகம் (கொழுக்கட்டை), புட்டு, இட்லி, முடக்கத்தான் கீரை தோசை வகைகளும் நவதானிய சுண்டல், கீரை, காய்கறி சாறுகளும் கிடைக்கின்றன.
தயிர், எலுமிச்சை, புளி சோறு வகைகளும் ஆவாரம் பூ, சுக்குமல்லி, செம்பருத்தி, பனங்கருப்பட்டி தேநீர், பச்சை(தழை) தேநீர், இஞ்சி தேநீர், பனங்கற்கண்டு பால் முதலியனவும் கிடைக்கின்றன.
பள்ளி முடிந்தவுடன் பல ஆசிரியர்கள் இவ்வுணவகத்திற்கு வருகை புரிந்து தங்களுடைய உடலுக்கு உகந்த அல்லது தேவைப்படுகின்ற உணவுகளை வாங்கிச் சுவத்துவிட்டுச் செல்கின்றனர். கூட்டம் நன்றாக வருகிறது. நான் சென்ற அளவில் எண்ணற்றோர் வந்து சுவை நாடினர்.
நம்மால் செய்ய முடியாத உணவுகளை எல்லாம் இங்குச் சென்று உண்டு நம் உடலின் நலம் பேணலாம்.
No comments:
Post a Comment