பழநி என்னும் ஞானியார்
|
ஞானியார் அடிகளார் |
17-05-1873 ஆம் தோன்றியவர் திரு ஞானியார் அடிகள். பழநி என்னும் இயற்பெயரைக் கொண்டவர். திருப்பாதிரிப்புலியூரில் ஞானியார் மடாலயத்து நான்காம் பட்டத்து சிவசண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாச்சாரியார் தமது உறவினரான பழநியின் தந்தையைத் திருப்பாதிரிப்புலியூருக்கு அழைத்துக் கொண்டார். அப்பொழுது பழநிக்கு ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தன.
நான்காம் பட்டத்து சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியார் உடல் தளர்வுறத் தொடங்கியது. அப்போது பழநி பள்ளிப்படிப்புப் படித்துக் கொண்டிருந்தார். பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு துறவு மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது. அதனை பழநி ஏற்றுக்கொண்டார். 20-11-1889 ஆம் ஆண்டு துறவு தந்து ஞானியார் மடத்தின் அருள் தலைவராகப் பட்டம் சூட்டப்பெற்றார்.
நான்காம் சிவாசாரியாரின் மறைவுக்குப் பின் பழநி தன்னுடைய பதினேழாம் வயதில் ஞானியார் மடத்தின் ஐந்தாம் பட்டத்து அடிகளாரானார்.
ஆதீனத் தலைமையை ஏற்றுக்கொண்ட ஞானியார் அடிகள் தன்னுடையக் கல்வியில் முழு ஈடுபாடு காட்டலானார். தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளை ஆசிரியர்களை நியமித்து கற்றறிந்தார். ஆழ்ந்த புலமை எய்தினார்.
நன்கு கற்றுத் தேர்ந்த பின் பெருமழைப் பொழிவது போல சொற்பொழிவாற்றும் தன்மையராய் விளங்கினார். நான்கு ஐந்து மணி நேரங்கள் வரை சொற்பொழிவாற்றும் ஆற்றல் பெற்றிருந்தார். இவ்வகையில் மக்களும் சோர்ந்து போவதில்லை. இவர்தம் பேராற்றல் கண்டு வியப்புற்று அவரையே நோக்கியிருப்பர். தமிழுக்கும் சைவத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது. இவரால் தமிழும் சைவமும் தழைத்தோங்கின.
சொற்பொழிவாற்றும் நேரம் ஒழிந்த பொழுதுகளில் மாணாக்கருக்குப் பாடம் புகட்டும் பணியையும் இடையே மேற்கொள்வார். பல புலவர் பெருமக்களும் வந்து இவரிடம் ஐயம் களைந்து செல்வர். ஞானியாரின் மாணவர்களாய்ப் புகழ் பூத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மு.இராசாக் கண்ணனார், லால்குடி அ.நடேச முதலியார், ந. ஆறுமுக முதலியார் முதலியோராவர்.
தமிழ் வளர்ச்சி பெற தொண்டாற்றியதோடு மதுரைத் தமிழ்ச் சங்கம், சைவசித்தாந்த மகா சமாஜம் முதலியவை உருப்பெறவும் கருத்தாவாக இருந்தார். பல பள்ளிகளையும் நிறுவினார்.
பிறருக்குப் பாடம் புகட்டுவதிலும் சொற்பொழிவிலும் அதிக ஆர்வங்கொண்டிருந்தமையால் பன்னூல்களை எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கப்பெறவில்லை. திலகவதி அம்மை துதி, ஞான தேசிக மாலை என்பன இவர் இயற்றிய நூல்களாகும்.
அடிகளாரின் மாணவரான மு.இராசாக்கண்ணனார் அவர்கள் அடிகளார் நிகழ்த்திய சொற்பொழிவைத் தொகுத்து `கந்தர் சஷ்டி சொற்பொழிவுகள்’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.
ஞானியாரடிகள் தன்னால் இயன்றவற்றையெல்லாம் அருந்தமிழுக்கும் சைவத்திற்கும் செய்துவிட்டு 1-2-1942 இல் காலமானார்.
பகுத்தறிவுப் பகலவன் ஈ.வே.ராமசாமி அவர்கள் தொடங்கிய `குடியரசு இதழ் ’குறித்து நாம் அறிவோம். இவ்விதழின் தொடக்க விழாவிற்கு நம் பெரியார் திரு.ஞானியார் அடிகளாரை அழைத்திருந்தார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
No comments:
Post a Comment