அரிய முயற்சி
|
ஞானாலயா
ஆய்வு நூலகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிய பொக்கிஷமாகும். ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும்
அவருடைய மனைவி டோரதி கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் அரிய முயற்சியே இப்புதுக்கோட்டை ஞானாலயா
ஆய்வு நூலகம். டோரதி கிருஷ்ணமூர்த்தி ஓய்வு
பெற்ற கல்லூரி பேராசிரியராவார்.
எதற்கெடுத்தாலும் சென்னைக்குச் செல்லும் போக்கு தவிர்க்கப்பட வேண்டி தமிழகத்தின் மையப்பகுதியில் இப்புத்தக நூலகத்தை நிறுவியுள்ளார் திரு.கிருஷ்ணமூர்த்தி. தன் மனைவி இரு மகள்கள் மருமகன்கள் என குடும்ப அங்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொள்கின்றனர்.
நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய நண்பர்களையும் தன்னைப் போன்றே மாற்றியிருக்கிறார். தன்னால் நூலகத்தில் இருக்க முடியாத சமயங்களில் நண்பர்களை இருத்திச் செல்கிறார். அவ்வளவிற்கு நண்பர்களும் இந்நூலகத்தில் ஈடுபாடுகொண்டிருக்கின்றனர்.
புதுக்கோட்டை தான் புத்தகப் பதிப்பகங்கள் தோன்றிய தாயகம் என்று கூறும் கிருஷ்ணமூர்த்தி சிறப்பாகச் சொல்லப்படுகின்ற பதிப்பகங்கள் பத்து எனில் அவை புதுக்கோட்டையில் தான் தோன்றின என்கிறார்.
சமய நூல்கள், இலக்கிய நூல்கள், நவீன நூல்கல், வரலாற்று நூல்கள், காந்தி இயக்கம், மறுபதிப்பு வராத புத்தகங்கள், சமகால புத்தகங்கள், தமிழ்நாட்டில் வெளியிடப்படும் தனி இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள், மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆராய்ச்சி இதழ்கள், பெரியார், அண்ணா காலத்தில் வந்த பத்திரிகைகள் என பல அரிய தொகுப்புகள் ஞானாலயாவில் உள்ளடங்கியுள்ளன.
நூலகத்திற்காக ஒரு தனி இல்லம் அமைத்திருக்கிறார். தான் வசிக்கும் இல்லத்தின் மாடியிலும் நூலகம் அமைத்திருக்கிறார். பற்றாக் குறைக்காக கட்டிடமும் கட்டிக்கொண்டிருக்கிறார்.
புத்தகங்கள் காந்தி வரிசை, விவேகானந்தர் வரிசை, இராம கிருஷ்ணர் வரிசை என பல வரிசைகளால் ஆக்கப்பட்டுள்ளது. நூலகத்திற்குச் சென்று நூல் பட்டியல் புத்தகத்தைப் பார்த்து நாமே நூலை எடுக்க வேண்டும், அவ்வளவிற்கு நமக்கு வேலை தருவதில்லை ஞானாலயா. வருவோரை வரவேற்று அவர்களுக்குத் தேவையான புத்தகங்களைக் கொடுத்து அப்புத்தகம் தொடர்புடைய பல புத்தகங்களையும் எடுத்துப்படிக்கத் தூண்டுகின்றனர்.
`லாஸ்ட் பேஸ்’ என்னும் புத்தகம் பியாரி லாலால் எழுதப்பட்டது. இதன் மூன்று தொகுதிகளும் ஞானாலயாவில் உள்ளன. ஆய்வு மாணவர்களுக்குத் தேவையான அத்தனைப் புத்தகங்களும் இங்குக் காணப்படுகிடைக்கின்றன. பிரபல அரசியல் பின்னணி உள்ளவர்களும் இந்நூலகத்திற்கு வந்து செல்கின்றனர். அவ்வளவிற்கு இன்றியமையாமையைப் பெற்றிருக்கிறது.
நமக்குத் தேவைப்படும் புத்தகங்களை அங்கேயே நகல் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. பல ஆதரவற்ற பெண்களைக் கொண்டு (மாத சம்பளத்துடன்) இந்நூலகத்தை நடத்தி வருகிறார். நூலகத்தைப் பராமரிக்கவும் நூல்களை வாங்கவும் ஒரு மாதத்திற்கு இலட்சங்களில் செலவு அமைவதாகத் தெரிய வருகிறது. இந்நூலகத்திற்குத் தங்களால் இயன்ற உதவிகளை எப்படியும் வழங்கலாம்.
UCO bank,
Saving Bank A/C No.1017047
Branch: Pudukkotai
IFS Code:UCBA0000112
No comments:
Post a Comment