தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

31.10.12

என்னை ஈர்த்த முத்துக்கமலம்


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பல்கிப் பெருகி வருபவையே இணைய இதழ்கள்.  இணையப் பரப்பில் பல்சுவை செய்திகளை நமக்கு அளிப்பதற்காக இவை படைக்கப்பட்டுள்ளன.  இணையத்தில் மட்டும் இதழாக மலர்ந்து வெளிவருவனவற்றையே ‘இணைய இதழ்’ எனக் கூறுதல் தகும் என்று பலர் கருத்துரைக்கின்றனர். அவ்வகையில் இணையத்தில் வெளிவந்து,  செம்மையான இலக்கியப் பணியாற்றிவரும் முத்துக்கமலம் இணைய இதழைப் பற்றிய பதிப்பே இஃது.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கும் இணைய இதழ் ‘முத்துக்கமலம்’.  மாதத்தின் முதல் நாளும் பதினைந்தாம் நாளும் புதுப்பிக்கப்படுகிறது.  பல்வேறு எழுத்தாளர்களைத் தன் கைவசம் வைத்துச் செயல்படுகிறது.  தரம் வாய்ந்த படைப்புகளைப் படைக்கும் எவருக்கும் வாய்ப்பை நல்கி வருகிறது.  படைப்புகளைப் படைக்கும் எழுத்தாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் முகமாக அவர்களின் புகைப்படத்துடன் கூடிய முழுவிவரத்தை ஒரு பக்க ஒதுக்கீட்டில் வெளியிடுகிறது.  தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களின் பட்டியல், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் விசித்திர பழக்கவழக்கங்கள், வேதகாலத்தில் சிறந்து விளங்கிய பெண் கவிஞர்கள் முதலியன இவ்விதழைப் பிற இதழ்களினின்று தனித்துக் காட்டும் படைப்புப் புதுமைகள்.

பெரியாரின் சிந்தனைகளையும் அவர் சாடிய மூடநம்பிக்கைகளையும் இதழில் இட்டு பெரியாரின் கொள்கைக்கு வலுச்சேர்த்துக்கொண்டிருக்கின்றனர்.  பெரியார் சொன்ன திராவிடர் திருமணம், எப்போது விழித்துக்கொள்ளப் போகிறார்களோ?,  பெரியார் சொன்ன புதுமொழிகள் எனபனப் போன்ற படைப்புகள் இவ்விதழின் வருகையாளரை அதிகரித்துக் கொடுக்க ஏதுவாகும் என்பதில் திரிபொன்றுமில்லை.

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு - இது தமிழார்வலர்களின் இலக்கியத்துடிப்புஎன்னும் இதழ் விவரிப்பைக் கொண்டுள்ள முத்துக்கமலம், தமிழ் துறைசார் கட்டுரைகள், சிறுகதை, தொடர்கதை முதலியவற்றை வெளியிட்டு வருகிறது.  `அடையாளம் என்ற பகுதியில் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெறுகிறது.

பொன்மொழிகள், குறுந்தகவல்கள், ஆன்மிகம், தன்னம்பிக்கைக் கட்டுரைகள், மகளிர் மட்டும், மருத்துவம் ஆகிய பகுதிகள் பொழுதுபோக்குவோர்க்குக் கிடைக்கக் கூடிய உகந்த செய்திப்பெட்டகங்களாகும்.  வாசகரைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பிறந்தநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து இடம்பெறச் செய்து வாழ்த்துத் தெரிவிக்கிறது.  ‘தினம் ஒரு தளம் - என்னும் பகுதியில் நாள்தோறும் ஒரு இணைய தளத்தைப் பற்றிய அறிமுகமும் அத்தளம் எவ்வகையில் நமக்கும் பயன்படும் என்பதையும் ஆய்ந்து சொல்கிறது.
மொத்தத்தில் முத்துக்கமலம் முத்துக்கு முத்தான இணைய இதழாக நமக்குப் புலப்பட்டு நிற்கிறது.


29.10.12

தமிழமல்லனின் அரும்பணி அறிவோம்

 தமிழமல்லன்:

தனித் தமிழுக்காகத் தன்னை நாளும் அற்பணித்துக் கொண்டு தமிழுக்காக வாழ்ந்து வரும் உயர் பண்பாளர் திரு.க. தமிழமல்லன். அவர்தம் தமிழர், தமிழ் குறித்த பதிவே இஃது.

பாவாணரின் திறன் அறிந்து அவர்தம் வாழ்க்கை வரலாற்றை அடிவரை ஆய்ந்து பன்நூல்களை எழுதியவர் தமிழன்பர் தமிழமல்லன்.  தனித்தமிழின் பல்துறை வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பல்லாண்டுகள் அரும்பணி செய்து வருகிறார்.  பல ஆய்வு நூல்களையும், சிறுகதை நூல்களையும் , சிறுவர் இலக்கியங்களையும் படைத்து இலக்கியத் தொண்டாற்றி வரும் பேரறிவாளர் ‘எல்லார்க்கும் தனித்தமிழ்’ என்னும் முழக்கத்தை வலியுறுத்தியவர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூர்த் தமிழ்ச்சங்கம், இலக்கிய அமைப்புகள் போன்றவற்றிலும் வானொலியிலும் ஆய்வுச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

உலகில் முதன் முதலாகத் தனித்தமிழ் இலக்கிய மாநாட்டைப் புதுச்சேரியில் முழுவெற்றியோடு ஆக்க முறையில் 1984 இல் நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர்.

‘வெல்லும் தூயதமிழ்’ என்னும் மாத இதழை நடத்திவருகிறார்.  இவ்விதழ் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  அன்று முதல் இன்று வரை இதன் தரம் குறைந்ததாக எவருஞ் சொல்லார்.

வெல்லும் தூய தமிழ் இதழ்



தனித்தமிழ் கொள்கையே தமிழ் இனத்தின் எல்லா நனமைகளையும் காக்கும் என உறுதியாக வலியுறுத்தி வருகிறார்.

மல்லனும் அவர் இதழும் ஏற்படுத்திய தமிழ்ப்பற்று:


நான் வகுப்பறையிலே பயின்று கொண்டிருக்கும் போது எனக்குத் தமிழ்ப்பாடம் பயிற்றுவித்த ஆசிரியர்கள் இவரின் இதழை வைத்துக் கொண்டு பெருமையோடுப் பேசுவதைக் கேட்டவன்.  அந்நூல் குறித்து வினவியவன் அப்பொழுது எனக்கு அகவையோ சற்றொப்ப 13 இருக்கும்.  எனக்குள் தமிழ்ப் பற்றை ஊட்டிய ஆசிரியை திருமதி. திலகவதி அவர்கள் தனித்தமிழ் குறித்து அடிக்கடி எங்களுக்குச் சொல்லுவார்.  தமிழிலேயே உரையாடுவார்.  ஆங்கிலம் கலவாமல் பேசும் ஆற்றலைக் கண்டு நான் வியந்ததுண்டு.  அம்மாதிரியே யானும் தமிழில் உரையாட வேண்டும் என்றெல்லாம் நினைத்து என் , முன்மாதிரியாகத் தமிழாசிரியையைக் கொண்டேன்.  என் தமிழாசிரியர்கள்  (சிலர்) தனித்தமிழைக் கைக்கொண்டொழுகி நன்னிலை எய்த தமிழமல்லன் போன்றோரின் இதழ்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.

ஓய்வு நேரங்களில் `உரோமண்ட் உரோலண்ட் ’ நூலகத்தை நான் நாடுவதுண்டு.  அவ்வமயங்களில் சிற்றிதழ்களைப் படிக்காமல் நகருவதில்லை எனச்  சபதமேற்றுக் கொண்டு படித்ததுண்டு.  அப்படிப் படித்த இதழ்களில் அதிக தாக்கத்தையும் தமிழுணர்வையும் எனக்கு ஏற்படுத்தியது தமிழமல்லன் அவர்களின் நேர்மையையும் தமிழ்ப்பற்றையும் அச்சிலேற்றிக் கொண்டு வருகை தந்த தனித்தமிழ் இதழே.

கல்லூரியில் பயிலும் காலங்களில் (என்னூர்) - திலசை -  காளிகோயில் தெருவில் அமையப்பெற்றுள்ள ஊர்ப்புற நூலகத்தை நாடியதுண்டு; அப்பொழுதும் இவரின் நூல்களை விட்டு வைக்கமாட்டேன்.  

`பாவாணரின் தமிழ்ப்பணி’ என்னும் தலைப்பில் மல்லன் அவர்கள் எழுதிய நூலானது 1997 ஆம் ஆண்டு வெளிவந்தது.  (அவ்வமயம் நான் 7ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன்) அந்நூலை நான் இளங்கலைத் தமிழ் பயிலும்போது தான் படிக்க நேரிட்டது.  அந்நூலில் பாவாணரைப் பற்றி தமிழமல்லன் குறிப்பிட்டிருக்கும் அத்தனைக் கருத்துக்களும் பாவாணரின் மேல் அவருக்குண்டான ஆறாக் காதலைக் காட்டுவதாய் உள்ளது.  

இதுவரை நேரில் அவருடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு நேரவில்லை.  முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் தமிழ்ப்பணி குறித்து மெய்சிலிர்த்துப் போனதுண்டு.  அவரை நேரில் காண்பதற்கு முன்பு அவரைப் பற்றிய அத்தனைச் செய்திகளையும் விரல்நுனியில் வைத்திருந்தேன்.  இது அவரின் மீது எனக்குண்டான ஆறாக் காதலே.  இப்படியொரு ஆறாக்காதல் தமிழமல்லன் மீது எனக்கு ஏற்பட்டதுண்டு.  இது நிகழ்ந்தது அவர்தம் நூல்களை  ஆய நேர்ந்தபோது.  அப்பொழுது என்னுள் எழுந்த வேட்கை அவரை ஒரு முறை கண்டு பேசிவிட வேண்டும் எனபது.

 இன்று அக்கனவு நிறைவேறியது.


இணைய இணைப்பிற்குண்டான மாதத் தொகையைக் கட்டுவதற்காக அஞ்சல் அலுவலகம் செல்ல நேரிட்டது.  அப்பொழுது அவரின் அறிமுகம் நேர்ந்தது.  ஐந்து நிமிடங்கள் தான் நிகழ்ந்தது அப்படியொருச் சந்திப்பு!  நான்,  என் அறிமுகமுரைத்து உரையாடினேன் உற்றவராய் உறவினர் போல் உரையாடிய அவர்,  தமிழார்வலரை தன்னோடு இரண்டறக் கலந்து கொள்ளும் தகைமையராய் என்னுடன் சொல்லாடல் செய்தார்.  மகிழ்வின் எல்லை வரை சென்றுவிட்டு மீண்டுவந்து இப்பதிவை ஆக்கியுள்ளேன்.  தொடர்க அவரின் (தனித்)தமிழ்ப்பணி.  

28.10.12

மகாயுகம் வரை கண்ட கணிதத் தமிழன்

பெரும்பான்மையான தமிழன்பர்களால் விரும்பிப் படிக்கப்பட்ட பதிவு 

தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி என்றும் அம்மொழி பேசிய இனத்தவர் தான் பழந்தமிழர் என்றும் அவர்களே உலகில் முதலில் தோன்றிய இனத்தவர் என்றும் ஆய்ந்து கூறும் கூற்றை மறுக்கின்ற மொழி ஆய்வுநரும் விழிபிதுங்கிப் போய் நிற்கும் அளவிற்கு நந்தமிழ் மக்கள் கணித அறிவில் சிறந்தோங்கினர் என்பதற்கு ஆதாரம் பகரும் பதிவே இப்பதிவு.  

கணிதத்தில்,  ஒன்று, பத்து, நூறு ,ஆயிரம் என்று வரும் எண்ணியல் சார் கணிதக் கூறு அன்றே நந்தமிழ் மொழியில் இடம்பெற்றிருந்தது.  சிலர் தற்போதுள்ள கணிதக் கூறிலும் இம்முறை உள்ளதே என்பர்.  இருப்பினும் தற்போதுள்ள முறையைத் தாண்டிய கணிதக் கூறுகள் நம்முடைய மொழியனரால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.  இன்றைய கணிதக் கூறுகள் தமிழர்கள் கண்ட கணித எழுத்து முறைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதை பின்வரும் சான்றைக் கொண்டு நிறுவலாம்.

தமிழர்கள் கண்ட  எண்ணியல் கணித அமைப்பு:

``ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரம், பத்து நூறாயிரம், கோடி, அற்புதம், நிகற்புதம், கும்பம், கணம், கற்பம், நிகற்பம், பதுமம், சங்கம், வெள்ளம், அந்நியம், அற்டம், பறட்டம், பூறியம், முக்கோடி, மகாயுகம்.

வேறுபடும் நிலை:

மேற்கண்ட எண்ணியல் அமைப்புகள் தமிழர்களால் அன்றே பயன்படுத்தப்பட்ட ஒன்று.  இவற்றில் அந்நியம் என்பது தற்போதுள்ள  எண்ணியல் முறைப் படி `நூறு சில்லியன்’ என அழைக்கப்படுகிறது.  ஆனால் அந்நியத்திற்குப் பிறகு இடம்பெற்றுள்ள அற்டம், பறட்டம், பூறியம், முக்கோடி, மகாயுகம் ஆகியவற்றிற்கு இணையான எண்ணியல் அமைப்பு தற்போது நாம் பயன்படுத்தும் கணித அமைப்பில் இல்லை.

இஃதொன்றே தமிழரின் கணித அறிவைப் பற்றி தற்போதையத் தலைமுறையினர் அறிந்துகொள்ளச் சான்று பகர்ந்து நிற்கிறது.

24.10.12

அசலாம்பிகை அம்மையார் வாழ்க்கைக் குறிப்பு


அசலாம்பிகை அம்மையார்:

திண்டிவனத்திற்கு அருகிலுள்ள `இரட்டணை என்னும் ஊரில்1875 ஆம் ஆண்டு தோன்றியவர் அசலாம்பிகை அம்மையார்.  பெருமாள் ஐயர் இவரின் தந்தை ஆவார்.  பத்து வயது நிரம்பிய போதே அசலாம்பிகைக்குத் திருமணம் செய்விக்கப்பட்டது.  சிறு வயதிலேயே தன்னுடைய கணவனை இழந்து விதவை ஆனார். 
தன்னுடைய தந்தையின் உந்துதலால் கல்வி கற்கத் துணிந்தார்.  அக்காலத்தில் கல்வி கற்க பெண்கள் முன்வருவது கிடையாது.  இதனால் தந்தையார் ஆசிரியர் ஒருவரை வீட்டிற்கு வரவழைத்து தன் மகளுக்குக் கற்பித்தார்.  முறையாக அனைத்து இலக்கிய இலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்தார் அசலாம்பிகை அம்மையார்.
தன்னுடைய வாழ்நாளில் பாதியைத் திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்படுகின்ற கடலூரில் கழித்தார்.  பின்னர் சில காலம் வடலூரில் தங்கி இராமலிங்க அடிகளாரைப் பற்றி எழுதத் தொடங்கினார்.  `இராமலிங்க சுவாமிகள் பதிகம்’ என்னும் நூலை இயற்றி ஆன்மீக உலகத்திற்கு வழங்கினார்.  குழந்த சுவாமி பதிகம் என்னும் நூலையும் பின்னாளில் இயற்றினார்.
தேசியத்தில் தன்னை அதிகம் இணைத்துக்கொள்ள விரும்பிய அம்பிகை விடுதலைப் போராட்டத தலைவர்களின் கொள்கைகளைப் பெரிதும் பின்பற்றினார்.  விடுதலை வேட்கையை மக்களிடம் தன்னுடையப் பாடல்கள் மூலம் தெரிவித்து ஏற்ற விடுதலை எழுச்சியை ஊட்டினார்.
தான் இல்லத்தில் கல்வி கற்றது போலவே தன்னைக் காண வரும் பெண்டிருக்கும் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்.  அவ்வாறு கற்பிக்கும் போது சிலபல பாடல்களை எழுதி அப்பெண்களிடம் கொடுப்பார்.  அப்படிக் கொடுத்த அப்பாடல்கள் அனைத்தும் விடுதலைக் கனலை எழுப்பும் முகமாய் இருந்தது.
அம்பிகையின் பாடல்கள் இதழ்களில் இடம்பெறத் தொடங்கியது.  அவரின் ஆற்றல் கண்டு பலரும் வியந்தனர்.  நாட்டுப்பற்று மிக்க இவர் `காந்திபுராணம், `திலகர் புராணம் என்னும் இரு நூல்களை ஆக்கினார்.  காந்திபுராணத்தில் காந்திமகானின் உணர்வை அப்படியே வெளிப்படுத்தியிருப்பார்.
இவ்வுலகில் துயர் களைந்து நன்மை நடக்க வேண்டுமெனில் அறச்செயல் ஓங்க வேண்டும்.  கலிகாலத்தில் தீமையே எங்கும் ஓங்கி நிற்கும் இருப்பினும் அதனைக் களைய அரும்பாடுபட வேண்டும் என்றும் இதற்காக அவதரித்தவர் தான் மகாத்மா காந்தி என்றும் அவரை இந்நாட்டிற்குத் தந்த பாரதத் தாயின் காலில் விழுந்து வணங்குதல் வேண்டும் என்றும் கூறுகின்றார்.
திரு.வி.க அவர்கள் அம்மையின் அரும்பணியை அறிந்து `இக்கால ஔவையார் என்று புகழ்ந்தார்.
எனக்குத் தெரிந்த அசலாம்பிகை அம்மையார் குறிப்புகளை விக்கியில் எழுதியுள்ளேன் அதையும் காண பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.

 விக்கியில் அசலாம்பிகை
அசலாம்பிகை அம்மையாரின் புகைப்படம் கிடைக்கப் பெறவில்லை.  தமிழன்பர்கள் எவரேனும் வைத்திருந்தால் என் முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்.

மின்னஞ்சல் முகவரி: sadishirisappan@gmail.com

23.10.12

செம்மொழி வரிகள்

ஏ.ஆர்.இரகுமான்

செம்மொழி மாநாட்டையொட்டு உருப்பெற்ற செம்மொழிப்பாடல் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.  காரணம் ஏ.ஆர்.இரகுமானின் இசையில் கலைஞர் அவர்களின் வரிகள் நம்மை மெய்மறக்கச் செய்தன.  சிலர் அவ்வரிகள் எழுத்துருவில் கிடைக்கப் பெற்றால் பாடல் இசைக்கும் போது நாமும் சேர்ந்து பாடலாமல்லவா என்று கூட அப்பொழுது ஏங்கச் செய்தனர்.  தமிழார்வலர்களுக்காக அவ்வரிகளைப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

கலைஞர் மு.கருணாநிதி


பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்
பிறந்த பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன்மொழியாம்!
போஐப் புறம் தள்ளிப்
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்புமொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பைப் பகுத்துக் கூறும்
ஒல்காப்புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடும்
ஒலிக்கின்ற மேகலைஉடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
அதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி
ஓதி வளரும் உயிரான உலகமொழி

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் - தரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி!

நம்மொழி-நம்மொழி-அதுவே
செம்மொழி-செம்மொழி-நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
                                                             
                                                                                         - கலைஞர் மு.கருணாநிதி