திரு.வி.க வின் நூல்கள் எத்திறத்தன?
|
திரு.வி.க அவர்கள் சற்றொப்ப ஐம்பத்து மூன்று நூல்களை எழுதியுள்ளார். அந்நூல்களில் அனைவரும் விரும்பியது பெண்ணியம் சார்ந்த நூல்களையும் ஆன்மீகம் சார்ந்த கருத்துகளைக் கொண்ட நூல்களையும் எனலாம். ஒவ்வொருவரும் திரு.வி.க விடம் ஒவ்வொரு குண இயல்பை விரும்பியதாகச் சொல்கின்றனர். காரணம் அவருடைய நூல்களில் தொய்ந்து எழுந்த வேட்கை மேலீடே. இத்தன்மைத்தான பல் நூல்களை அவர் படைத்திருக்கிறார்.
அவர் முதன் முதலில் எழுதியதாகச் சொல்லப்படுகின்ற பெரியபுராணப் பதவுரை பல்லோராலும் போற்றுதலுக்கு இலக்காகிய நூலாகும். சேக்கீழார் பெரியபுராண நோக்கைத் தன்னுடைய அரும்பதவுரையுள் தெற்றெனக் கொண்டு வந்திருப்பார். பலர் இந்நூலைப் படித்துவிட்டுத் திரு.வி.க.வை தீவிரச் சைவப் பற்றாளர் என்றனர். உண்மையில் இந்நூலைக் கட்டும்போது திரு.வி.க அப்படித்தான் இருந்திருக்கிறார். இந்நூலின் மறுபதிப்பு பல வருடங்களுக்குப் பின் வெளிவரத் தொடங்கியது. அதுவும் அவரால் விரும்பி வெளிவரவில்லை. பலர் அவரை வற்புறுத்தி மறுபதிப்புக்கு வித்திடுமாறு வேண்டி நின்றனர். அப்படி வேண்டி நின்றவர் கருத்துக்குத் தன் செவி சாய்த்துப் பெரியபுராண மறுபதிப்புக்குத் தன்னைத் தயார் செய்தார்.
திரு.வி.க தன்னுடைய பெரியபுராண அரும்பதவுரையுள் எண்ணற்ற செய்திகளை நாயன்மார்களைப் போற்றும் வகையுள் எழுதியிருப்பார். பலரும் தூற்றிச் சொன்ன நாயன்மார் செய்கைகள் சிலவற்றைத் தன்னுடைய எழுத்தின் மூலம் அத்திறத்தை மாற்றி அவர்கள் புகழ் பரவச் செய்தார்.
பெரிய புராணம் குறிப்புரையும் வசனமும் சேர்ந்த ஒரு பதவுரை நூலாகும். பலர் பெரியபுராணம் தான், திரு.வி.க வின் முதனூல் என்று இயம்புவது நாம் அறிந்ததே. ஆயினும் அஃது அவர்தம் முதனூலன்று தன்னுடைய அருமை ஆசிரியர் திரு.கதிரைவேற் பிள்ளை அவர்களைப் பற்றி எழுதிய வாழ்க்கை குறிப்பமைந்த நுலே அவருடைய முதனூலாகும்.
திரு.வி.கவின் ஆசிரியரான கதிரைவேற் பிள்ளை அவர்களைப் பற்றி எழுதியிருந்த அந்நூல் அதிகம் வரவேற்கப்படவில்லை. ஏனெனில் அதில் திரு.வி.க கையாண்ட நடை மிகவும் கடினமான நடையாகும். பிற்றை நாளில் திரு.வி.க. வே அந்நடையைக் கண்டு யான் இவ்வாறு எழுதியிருக்கக் கூடாது என்று கூட எண்ணினார் எனச் சொல்கின்றனர். ஆகையால் தான் பெரியபுராணத்திற்கு அவர் இயற்றிய அரும்பதவுரை முதல் நூலாகக் கொண்டனர்.
திரு.வி.க பல பனுவல்களை எழுதி இருப்பினும் அவருடைய நூல்களில் ஒன்றான `உள்ளொளி’யைப் படித்தாலே அவர்தம் திறனறிந்து கொள்ளலாம். அவரின் ஒட்டுமொத்த நூல்களைப் படித்ததைப் போலாகிவிடும்.
பெரியபுராணத்தின் இரண்டாம் பதிப்பு வெளிவந்த போது அவர் மிகத் தெளிந்த சமரசவாதியாய் இருந்தார். எம்மதமும் ஒரே திறத்தன என்னும் எண்ணங்கொண்டிருந்தார். சமய வாதம் செய்யத் தயாராய் இருந்திலர். இதனால் தான் பெரியபுராணத்தின் மறுபதிப்பு சற்றுத் தொய்வுடன் (கால தாமதத்துடன்) வெளிவந்தது; அவர் எழுதவும் தயங்கி இருந்தார்.
அவர், சைவம் மட்டும் தேர்ந்தது எனத் தேர்ந்து தெளிந்தாரில்லை வைணவமும் சமணமும் பௌத்தமும் இசுலாத்தையும் ஒருங்கே கண்டுணர்ந்து அதிலே நற்சிந்தனை முகிழ்ந்ததைக் கண்டிருக்கிறார். இதனால் தான் பின்னாளில் அனைத்துச் சமயங்களையும் ஒன்றெனக் கண்டார்.
திரு.வி.க இயற்றிய நூல்களில் சிலவற்றை இங்கு அடுக்கலாம்:
|
பெரியபுராணம் (குறிப்புரையும் வசனமும்) மனித வாழ்க்கையும் காந்தியடிகளும் என்கடன் பணி செய்து கிடப்பதே சைவ சமய சாரம் நாயன்மார் திறம் தமிழ்நாடும் நம்மாழ்வாரும் சைவத்தின் சமரசம் இன்ப வாழ்வு முருகன் அல்லது அழகு பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை தமிழ்த் தென்றல் அல்லது தலைமைப் பொழிவு கடவுள் காட்சியும் தாயுமானாரும் தமிழ் நூல்களில் பௌத்தம் சைவத் திறவு இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம் சீர்திருத்தம் அல்லது இளமை விருந்து நினைப்பவர் மனம் இமயமலை அல்லது தியானம் உரிமை வேட்கை அல்லது நாட்டுப்பாடல் முருகன் அருள் வேட்டல் சமரச சன்மார்க்க போதம் சமரச தீபம் சமரச சன்மார்க்கத் திறவு தமிழ்ச்சோலை அல்லது கட்டுரைத் திரட்டு சித்த மார்க்கம் நாயன்மார் வரலாறு முடியா? காதலா? சீர்திருத்தமா? திருமால் அருள் வேட்டல் திருக்குறள் விரிவுரை - பாயிரம் திருக்குறள் விரிவுரை - இல்லறவியல் இந்தியாவும் விடுதலையும் பொதுமை வேட்டல் உள்ளொளி திரு.வி.க வாழ்க்கைக் குறிப்புகள் ஆலமும் அமுதமும் கிறிஸ்துவின் அருள் வேட்டல் புதுமை வேட்டல் சிவனருள் வேட்டல் பரம்பொருள் அல்லது வாழ்க்கை வழி அருகன் அருகே அல்லது விடுதலைவழி பொருளும் அருளும் அல்லது மார்க்சியமும் காந்தியமும் |
No comments:
Post a Comment