தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

2.9.18

கோடுகளும் சித்திரங்களே - வைரமுத்து

என்
பாதங்களுக்குக் கீழே
பூக்கள் இல்லை
மொய்த்துக் கிடந்தவை
முட்களே.
எனினும்
ரத்தம் துடைத்து
நடந்து வந்தேன்.


என்னைத்
தடவிச் சென்றது
தெற்கே குளித்து வந்த
தென்றல் அல்ல
நுரையீரல்களை -
கார்பன் தாள்களாய்க்
கறுக்க வைக்கும்
கந்தகக்காற்று
இருந்தும்
சுடச்சுடவே
நான்
சுவாசித்து வந்தேன்

ஆண்டு முழுவதும் இருந்த
அக்கினி நட்சத்திரத்தில்
எரிந்து போயிற்று
எனது குடை
ஆயினும்
என்
நிழலின் நிழலிலேயே
நீண்டதூரம் ஒதுங்கிவந்தேன்


என்
தலைக்கு மேலே
பருந்துகள் எப்போதும்
பறந்துகொண்டிருந்ததால்
நான் இன்னும்
செத்துவிடவில்லை
என்பதை
நித்தம் நித்தம்
நிருபிக்க வேண்டியதாயிற்று

என் நிர்வாணத்தை
ஒரு கையால்
மறைத்துக்கொண்டு
என்
அடுத்த கையால்
ஆடை நெய்து
அணிந்து கொண்டேன்


இன்று-
என்
பிரவாகம் கண்டு கரைகள்
பிரமிக்கலாம்
ஆனால் -
இந்த நதி
பாலைவனப் பாறைகளின்
இடுக்கில் கசிந்துதான்
இறங்கி வந்தது

தனது
சொந்தக் கண்ணீரும்
சுரந்ததால்
இரட்டிப்பானது
இந்த நதி


இந்த விதை
தன்மேல் கிடந்த
பாறைகளை
முட்டி முட்டியே
முளைத்துவிட்டது

இன்று என்
புண்களை மூடும்
பூக்களினால்
நான்
சமாதானம் அடைவது
சாத்தியமில்லை
இந்தச்
சமூக அமைப்பு
எனக்குச்
சம்மதமில்லை


சரிதம் என்பது
தனி ஒரு
மனிதனின்
அறிமுக அட்டையோ...?
அல்ல
அது
முடிவைத்தேடும்
ஒரு சமூகத்தின்
மொத்த விலாசம்

இதுவோ...
ரணத்தோடு வாசித்த
சங்கீதம்...
எனது
ஞாபக நீரோடையின்
சலசலப்பு...
நசுங்கிய
நம்பிக்கைகளுக்கு
என்
பேனாவிலிருந்தொரு
ரத்ததானம்

இதில்
சில நிஜங்களைச்
சொல்லவில்லை என்பது
நிஜம்.
ஆனால் -
சொன்னதெல்லாம் நிஜம்

நான்
வரைய நினைத்தது
சித்திரம்தான்.
வந்திரப்பவை
கோடுகளே
ஆனால் -
கோடுகளும்
சித்திரங்களே!

மனித நேசம்தான்
வாழ்க்கை என்பதை
அறிய வந்தபோது
என்
முதுகில் கனக்கிறது
முப்பது வயது.

கவிஞர் : வைரமுத்து

26.8.18

தமிழ் இலக்கங்கள்

தமிழ் இலக்கங்கள் ஒன்றுக்கும் கீழ்ப்பட்ட பின்னங்களையும் உடையவை.

தமிழர் இவற்றை கீழ்வாய் இலக்கம் என்பர்.  இந்தப் பின்ன அளவைகள் தமிழரது வாணிகச் சிறப்பை விளக்கி நிற்கின்றன.  இப்பின்ன அளவைகள் தமிழைத் தவிரப் பிற திராவிட மொழிகளில் இல்லை என்பதும் இங்கு அறியத்தகும்.  மேலும், எண்களைக் குறிக்கத் தமிழர் தமிழ் எழுத்துகளையே பயன்படுத்தினர் என்பதும் அறியத்தகும்.

1/320 * 1/21   = இம்மி

1/320 * 1/21*1/7= அணு

1/320 * 1/21*1/7*1/11= மும்மி

1/320 * 1/21*1/7*1/11*1/9=குணம்


25.8.18

தமிழ் இலக்கியமும் - அறுவை மருத்துவமும்

அறுவை மருத்துவம் பற்றி அன்றைய தமிழிலக்கியங்கள் கூறியுள்ளன. 

பெரியபுராணத்தில் , “கண்ணிடந்து அப்பிய கண்ணப்பன் வரலாறு ஊனுக்கு ஊன்” என்னும் செய்தியின் வாயிலாக சிவபெருமானுக்குத் தனது கண்களை எடுத்து அப்பிய கண்ணப்பன் வரலாறும்,

“உடம்பிடை தோன்றிற் றொன்றை அறுத்ததன் உதிரம் ஊற்றி அடல் உறச் சுட்டு வேறோர் மருந்தினால் துயரம் தீர்வர்” என்னும் கம்பர் வாக்கும் அறுவை மருத்துவத்தை மெய்ப்பிக்கின்றன.

மணிமேகலையின் தோழி சுதமதியின் தந்தையை மாடுமுட்டியதால், அவர் குடல் சரிந்தது.  சரிந்த குடலைப் புத்தத் துறவியால் சரிசெய்த செய்தியை மணிமேகலை எடுத்துரைக்கிறது.

இவையெல்லாம் தமிழ் இலக்கியத்தில் குறிப்பிடப்படும் பழந்தமிழனின் அறுவை மருத்துவம் குறித்த செய்திகளாகும்.


21.8.18

சாலை.இளந்திரையன் - இன்று இவர்

'இன்று இவர்' பகுதியில் நாம் பார்க்க இருக்கும் ஆளுமை திரு.இளந்திரையன் அவர்களாகும்.

இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள சாலைநயினார் பள்ளிவாசலில் பிறந்தார்.
பெற்றோர் : இராமையா-அன்னலட்சுமி.

தில்லிப் பல்கலைக் கழகத்தில தமிழ்த்துறைத் தலைவராக விளங்கினார்.
உலகத்தமிழ் ஆராய்ச்சிக் கழகம், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், தில்லித் தமிழ் எழுத்தாளர் சங்கம், உலகத் தமிழ்ப்பண்பாட்டு இயக்கம் தோன்றக் காரணமானவர்.

1991 இல் தமிழக அரசின் 'பாவேந்தர்' விருது பெற்றார்.
தமிழின் முன்னேற்றத்திற்கான படைப்புகளை வழங்கி எழுச்சியூட்டினார்.

20.8.18

சி.சு. செல்லப்பா - இன்று இவர்

சி.சு. செல்லப்பா சிறுகதை, விமர்சனம், கவிதை, மொழிபெயர்ப்பு முதலான
இலக்கியத்தின் பல்வேறு தளங்களில் பங்களிப்புச் செய்திருக்கிறார்.

சந்திரோதயம், தினமணி ஆகிய இதழ்களில் உதவி ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்."எழுத்து" இதழினைத் தொடங்க நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.

அவருடைய குறிப்பிடத்தக்க படைப்புகள்: வாடிவாசல், சுதந்திர தாகம், ஜீவனாம்சம், பி.எஸ் ராமையாவின் சிறுகதைப்பாணி, தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது.

இவருடைய ' சுதந்திர தாகம் ' புதினத்திற்கு 2001 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.

திரு.விக. வின் இறுதி ஊர்வலத்தில் பெரியார்

திரு.வி.க இறந்த செய்தி சென்னை நகர் முழுதும் பரவியது.  அன்பர் கூட்டம் கடல் எனத் திரண்டது.  சைவர் வந்தனர்; கிறிஸ்தவ ர் வந்தனர்; ஜைனர் வந்தனர்; பௌத்தர் வந்தனர். அரசியல் கட்சித் தலைவர் பலரும் வந்தனர்.

     அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

1953 செப் 18 காலை திரு.வி.க வின் உடல் பெரம்பூருக்கு எடுத்துச்செல்லப்பட்டது.  சென்னைத் தொழிலாளர் சங்கத்திலே வைக்கப்பட்டது.
     25 ஆண்டுகளுக்கு மேலாகத் தம் இன்பத்திலும் துன்பத்திலும் உற்ற துணையாய் இருந்த ஒப்பற்ற தலைவருக்குத் தொழிலாளர் வணக்கம் செலுத்தினர்.

     திரு.வி.க மறைந்த செய்தி அறிந்த பெரியார் ஈரோட்டிலிருந்து புறப்பட்டுச் சென்னை வந்தார்.  மவுண்ட் ரோட்டில் ஊர்வலத்தில் கலந்தார்.  ஊர்வலம் இராயப்பேட்டையை சேர்ந்தது.  அப்போது பெருமழை பெய்தது.  இரவு 7 மணிக்கு மயிலை மயானத்தில் அவரின் உடலுக்குத் தீ மூட்டப்பட்டது.

திரு.வி.க மறைந்தார்; மங்காத புகழ் பெற்றார்.

19.8.18

திரு.வி.க-வின் இறுதி

     1949 ஆம் ஆண்டு அவரது இடது கண்ணிலே படலம் தோன்றியது.  அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.
 
   திரு.வி. வின் நெருங்கிய நண்பர் கந்தசாமிப்பிள்ளை கண் மருத்துவர்.  அறுவைச் சிகிச்சைச் செய்தார்.  என்ன ஆயிற்று? பார்வை வரவேயில்லை; போயிற்று.

     திரு.வி.க. வெளியே செல்வது விடுத்தார்.  அடுத்த ஆண்டு மற்றொரு கண்ணும் இழந்தார்.  படுக்கையில் கிடக்கலானார். 

     1953 ஆம் ஆண்டு செப் 17 ஆம் தேதி திரு.வி.க கண் இழந்து படுக்கையில் கிடக்கிறார் என்ற செய்தி கேட்டு அவரைப் பார்க்க வந்தார் ஒரு அம்மையார்.

     அப்பெண்மணி நன்கு பாடுதல் வல்லார்.  தேவாரப் பதிகங்களைப் பாடினார்.  திருவருட் பாக்களைப் பாடினார்.  பகல் முதல் மாலை வரை பாடுவார்.

     அப்பாடல்களிலே திரு.வி.க மூழ்கித் திளைத்திருந்தார்.  இரவு 7.30 மணிக்கு மரண வேதனையுற்றார்.  இளமை முதல் அவரின் இணைபிரியா நண்பராக விளங்கிய சச்சிதானந்தம் பிள்ளை அவர்கள் உடன் இருந்தார்கள்.  திரு.வி.க வின் காதில் ஐந்தெழுத்து மந்திரம் ஓதினார்கள்.  அவ்வளவில் திரு.வி.க வின் ஆவி பிரிந்தது.

      இரவு 7.30 மணி இறைவனடி சேர்ந்தார் திரு.வி.க.

29.1.15

குறுந்தொகை கூறும் அரை நாள் வாழ்க்கை

வெகுநாட்களாகக் குறுந்தொகையின் பால் எமக்கு ஈர்ப்புண்டு.  அவ்வீர்ப்பினை `இக்குறுந்தொகைப் பாடலினூடே தீர்த்துக்கொள்கிறேன்.


கேளிர் வாழியோ நாளும் என்
நெஞ்சுபிணிக்கொண்ட அம்சில் ஓதிப்
பெருந்தோட் குறுமகள் சிறுமெல் ஆகம்
ஒரு நாள் புணரப் புணரின்
அரைநாள் வாழ்க்கையும் வேண்டலென் யானே!_----- நக்கீரர்

பாடல் பொருள்;
அவள் அழகிய கூந்தல் உடையவள் பெருத்த தோள் கொண்அவள்.  இளையவள். சிறியதான மெல்லிய மேனி கொண்டவள்.  அது எப்போதுமே என் நெஞ்சைக் கட்டி வைத்துள்ளது,  அவளை ஒருநாள் தழுவிக்கொள்ள வேண்டும்.  அப்படிச் செய்துவிட்டால், அரைநாள் கூட நான் வாழவிரும்பமாடேன்
இப்பாடல் தலைவனனின் தகைமைக் குறைவதைக் கண்ட தோழன் அவனுக்கு உணர்த்துவ தாய் உள்ளது.  தலைவன் தலைவியைச் சந்தித்து தன் பெருந்தகைமைகளை இழந்து வருகிறான் என்பதை உணர்த்துவதாய் உள்ளது.

28.1.15

தில்லையாடி வள்ளியம்மை - வரலாற்றுப் பெண்மணி

.
சிறந்த இந்திய பெண்களுள் ஒருவராக போற்றத்தக்க தில்லையாடி வள்ளியம்மை குறித்த பதிவு.........

9.3.14

பொருள் இலக்கணத்திற்காக எழுந்த நூல்கள்

பொருள் சொல்லிய நூல்கள்
     தமிழ் இலக்கண நூல்கள் பற்றியும் அவற்றின் வரலாறு பற்றியுமே தனி நூல் படைக்கலாம்.  எப்படியாயினும் தொல்காப்பியமே முதனூல் என்னும் பெருமையைப் பெறுகிறது.  எழுத்து, சொல் பற்றிய இலக்கணம் பொதுவான ஒன்றாகக் கருதப்படுகிறது.  பொருளிலக்கணமோ சிறப்பான ஒன்றாகப் போற்றப்படுகிறது.  இத்தகையச் சிறப்புமிக்கப் பொருளிலக்கணஞ்சுட்ட எழுந்த பொருள் நூல்களை இப்பதிவில் பட்டியலிடுகிறேன்.
 
1. இறையனார் களவியல் - இறையனார் - கி.பி.8 ஆம் நூற்றாண்டு - அகப்பொருள் பற்றி கூறுகிறது.
2. பன்னிருபடலம் - கி.பி. 8 ஆம் நூற்றாண்டு - புறப்பொருள் பற்றி கூறுகிறது ( நூல் கிடைக்கவில்லை)
3. புறப்பொருள் வெண்பா மாலை - ஐயனாரிதனார்- கி.பி.10 ஆம் நூற்றாண்டு- புறப்பொருள் பன்னிருபடலம் இதன் முதனூல் என்பர்- புறப்பொருள் பற்றி கூறுகிறது.
4. நம்பியகப்பொருள் - நாற்கவிராச நம்பி - கி.பி.12 ஆம் நூற்றாண்டு - அகப்பொருள் பற்றி கூறுகிறது.
5. தமிழ் நெறிவிளக்கம் - கி.பி.12 ஆம் நூற்றாண்டு - அகப்பொருள் பற்றியது.
6. களவியற் காரிகை - அகப்பொருள் முழுமையாகக் கிடைக்கவில்லை
7. மாறனகப்பொருள் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர் - கி.பி. 17 - அகப்பொருள்
 

8.3.14

மூவண்ணங்கள் - தமிழ் தமிழர் வரலாறு எழுத நெறி வகுக்கிறது.

வண்ணமும் வரலாறும்
வடமொழிக் கலப்பால் தெலுங்கு, கன்னடம், மலையாளம்  ஆகிய மொழிகள் பெரிதும் வேறுபடுத்தப்பட்டன.  தமிழிலிருந்து பிரிந்த சுவடும் தெரியாமல் இடைவெளி பெருகிப் போனது.  ஆனால் தமிழ் ‘உள்ளீடு மாறாத வண்ணப் பூச்சுப் போலவே’ வடமொழியை ஏற்றுள்ளது.  இவ்வடமொழி வண்ணந்தானும் மூவகையாகப் பகுத்துணர்தலுக்குரியது.  மறைக்காட்டை வேதாரண்யம் எனவும் முதுகுன்றத்தை விருத்தாசலம் எனவும் மாற்றியது போல் நேர்ந்த பெயர் மாற்றங்களும் சொற்கலப்புகளும் வெளிவண்ணமென்றே கருதுதற்குரியன.  புராண, இதிகாசங்களை ஏற்றதும் இலக்கிய, கலைக் கலப்புகளும் உள்வண்ணம் என மதித்தற்குரியன.  தமிழிசை மாறிக் கருநாடக இசையாகியதும் பரதக்கலை தென்னகத்திற்கேயுரிய கலையாக இருந்தும் வடநூல் வழிப்பட்டதும் சமயத்துறையில் ஏற்பட்ட கருத்துக் கலப்பும் பிறவும் உட்கலப்பு வண்ணமெனற்கு உரியன.  இவற்றால் எல்லாம் தமிழும் தமிழர் பண்பாடும் பெரிதும் பாதிக்கப்படாமை கருதியே இவை வண்ணம் அல்லது வெளிப்பூச்சு எனப்பட்டன.  தமிழ்மொழியைப் பொறுத்தவரை “வடமொழிக் கலப்பைப் பெரும்பகுதியோ அல்லது முழுவதுமாகவோ தமிழ்மொழி தவிர்த்துவிடுதல் கூடும்.  அங்ஙனம் தவிர்த்தலின் மூலமாக அது தூய, மிகச் சிறந்த நிலையை எய்துகிறது”. என்ற கால்டுவெல் ஐயர் அவர்களின் கருத்து இங்கு நினைத்தற்குரியது.  மேற்சுட்டிய ஏற்புநிலை, எதிர்நிலை, ஆதிக்க நிலை என்பனவும் இங்குச் சுட்டிய மூவண்ணப் பூச்சு நிலைகளும் தமிழர், தமிழ் வரலாறு எழுதக் கைக்கொள்ள வேண்டிய நெறிமுறைகளாகும்.

11.9.13

சுதேசமித்திரன் இதழில் பாரதிதாசனின் கட்டுரை

பாரதிதாசன் வேண்டிய நிகண்டு
பாவேந்தர் புதுச்சேரியைச் சார்ந்த முத்திரைப் பாளையம் அரசினர் பள்ளியில் பணியாற்றி வந்தார்.  அப்போது ‘தமிழ்பாஷைக்கு ஒரு புதிய நிகண்டு வேண்டும்’ என்ற கட்டுரையை எழுதி சுதேசமித்திரன் இதழில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் மொழி வளம்பெறுமென்றும், தமிழ்மொழிக்குப் புதிய நிகண்டு வேண்டும்  என்ற கட்டுரையை எழுதிஅவ்விதழில் 26-05-1914 ஆம் நாளில் வெளியிட்டார்.  தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் மொழி வளம் பெறுமென்றும், தமிழ்மொழிக்குப் புதிய நிகண்டு வேண்டும் என்றும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.  கட்டுரையின் ஒரு பகுதி இதோ.
“நமக்கு அடுத்த வட பக்கத்தில் உள்ள தெலுங்கர்களோ, தங்கள் பாஷையைச் சீர்திருத்துமாறு போட்டி போட்டியாய்ச் சாலைகளும் சங்கங்களும் ஏற்படுத்திப் பரபரப்புடன் வேலை செய்து வருகிறார்கள்.  அவர்களின் ஊக்கத்தைப் பார்த்தாவது தமிழர்கள் தங்கள் பாஷையின் விஷயத்தில் ஏதாவது கவலை கொள்கிறார்களோ என்றால் அது மாத்திரமில்லை”.

9.8.13

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

தொண்டரடிப் பொடியாழ்வார்


தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு விப்ரநாரணர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.  திருவரங்க நாதனுக்கு தினந்தோறும் மாலை சாத்த, ஆலயத்தில் தோட்டம் அமைத்து மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார்.  அங்கு தேவ தேவி என்ற விலைமாதின் வயப்பட்டுத் தம் வாழ்நாளைக் கழித்தார்.  பின்னர், அக்கள்ளம் கரைய உருகிப் பாடிய பாக்கள் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி நூல்களாகும்.  இவர் இயற்றிய திருப்பள்ளியெழுச்சி நூல் கவிதை நயமும் இயற்கை எழிலும் நிறைந்ததாகும்.  அர்ச்சையில் அரங்கனைத் தவிர வேறு ஒருவரையும் பாடாத அன்பர்.

``பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண் என்ற புகழ் மிக்க பக்திப் பாடலைப் பாடிய ஆழ்வார்.  “மெய் எல்லாம் போகவிட்டு விரிகுழலாரிப்பட்டு பொய் எல்லாம் பொதிந்து கொண்ட பொய்யனேன், பொய்யனே? என் மனதின் ஓர் தூய்மை இல்லை.  வாயில் ஓர் இன்சொல் இல்லை, பொழுதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி அணைய மாட்டேன்; தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்; காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்; ஆகையால் ஏதுமற்றேன்என்கிறார்.

``ஊரிலேன் காணியில்லை உறவும் மற்றொருவர் இல்லை
பாரில் நின்பாத மூலம் பற்றிலேன், ப்ரமமூத்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகிறேன்
ஆரூர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே ” 
என்று இறைவனை நோக்கி இறைஞ்சுகிறார்.

31.7.13

காந்திஜியை காந்தியடிகள் என்றாக்கியவர் யார்?

தேசப்பிதா ‘காந்திஜியை’ ‘காந்தியடிகள்’ என்று குறிப்பிட்டு
பத்திரிகைகளில் எழுதியவர் திரு.வி.க அவர்கள் தான்.  சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் பற்றி படித்த போது காந்தியை ‘காந்தியடிகள்’ என்று குறிப்பிட வேண்டும் என்று தனக்குத் தோன்றியதாக திரு.வி.க ‘்நவசக்தி’ பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னிபெசண்ட் அவர்களை ‘அன்னை வசந்தை’ என்றே திரு.வி.க எழுதுவார்.  ‘வல்லரசு’ என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் உருவாக்கியவரும் திரு.வி.க அவர்கள் தான்.  

21.7.13

திரு.வி.க வின் பொன்மொழிகள் - 1

பொன்மொழிகள்
திரு.வி.க அவர்கள் தன் வாழ்நாளில் உதிர்த்தவை எல்லாமே பொன்னேடுகளில் பொறிக்கத்தக்கவை.  அவைகளுள் முத்தென விளங்கும் பொன்மொழிகள் இங்கு அடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டுமாயின் தமிழ் மக்கள் முதலாவது தங்கள் மொழியினிடத்துப் பற்றுக்கொள்ளல் வேண்டும்.  தமிழ் மக்கள் எம்மதத்தைப் பற்றி ஒழுகினும் ஒழுகுக அவர்கள் மொழிப்பற்றை மட்டும் விடுதலாகாது.
 
பெற்ற தாயின் அன்புக்கும் பிறந்த நாட்டின் பற்றுக்கும் ஊற்றாயிருப்பது பேசும் மொழியே ஆகும்.  பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் , தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்.
 
தமிழ் மகனே! விடுதலை விடுதலை என்று வெறுங் கூச்சலிடுவதால் பயன் என்ன?  விடுதலை முயற்சி விடுதலை தருவதாயிருத்தல் வேண்டும்.  விடுதலை விடுதலை என்று சிறைக்கூடத்தில் நோய்வாய்பட்டுள்ள தமிழ்த் தாயைச் சுற்றிலும் தீயிட்டு எரிப்பது அவர் நோய் போக்கும் மருந்தாகுமா என்பதை கவனிக்க.
 
தமிழ்மக்களே உங்களைத் தமிழ் மக்கள் என்று அழைக்கச் செய்திருப்பது எது?  அதை நினையுங்கள்.  அதை மறந்து ஆற்றப்படுந் தொண்டுகள் கடைக்காலில்லாமல் எழுப்பப்படும் கட்டடம் போன்றவையாகும்.  நீங்கள் எத்தொண்டு செய்யினும் அத்தொண்டின் அடிப்படையில் தமிழ் வேட்கை எழுச்சி இருத்தல் வேண்டும்.  அவ்வேட்கையால் உங்களைப் பலவாறு பிரித்துப் பிளக்க உங்கள் பால் இடைநாளில் தோன்றிய சாதிமதப் பூசல்கள் உங்களை விடுத்து இரிந்து ஓடும் அவ்வாற்றல் அமிழ்தினும் இனிய தமிழ் வேட்கைக்கு உண்டு என்பவை மறவாதேயுங்கள்.

17.7.13

சமச்சீர் கல்வி குறித்து புலவர் பெருந்தேவன் கூறுவது என்ன?

சமச்சீர் கல்வி


புலவர் பெருந்தேவன்
சமச்சீர் கல்வி குறித்து புதுச்சேரி புலவர் திரு.பெருந்தேவன் (இராமலிங்கம்) அவர்கள் நுட்பமான கருத்துக்களைத் தன்னுடைய ‘அரசியல் அறம்’ என்னும் நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.  அவர்தம் ஆழ்ந்த சிந்தனையை இங்குப் படித்து இன்புறுவோம்.

அறிவுக்கே கல்வி அறியார் பொருள்செய்
பெருவிருப்பம் கொள்ளல் பிழை.

கல்வி என்பது அறிவு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு கற்கப்படுவதாகும்.  இதை அறியாதவர்களே பணம் சம்பாதிக்கும் பேராசை கொண்டு கற்று வருகின்றனர்.  இது பிழையானதாகும்.

அனைவர்க்கும் கல்வி அளிக்க; வளமை
தனக்கேற்ப நல்கல் தவிர்.

எவ்வகை வேறுபாடும் கருதாமல் அனைவர்க்கும் தரமான கல்விதருதல் வேண்டும்.  ஒரு சிலரின் வசதிக்கேற்ப உயர்கல்வி தருவதனை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

உரமும் சமநிலையும் உள்ளன்பும் ஊட்டும்
தர்முடைய கல்வியினைத் தா.

குன்றாத வலிமை, சமமான நிலை, ஆழமான அன்பு ஆகியவற்றை நிலைபெறச் செய்யும் தகுதி வாய்ந்த கல்வியை அரசு அனைவர்க்கும் அளித்தல் வேண்டும்.

எந்தமுறை கற்பித்தற்கு ஏற்றமுறை அந்தமுறை
எல்லார்க்கும் ஈதல் இனிது

‘மெட்ரிக்’ முதலான நால்வகைக் கல்வி முறைகளில் இசைவான முறையைக் கண்டறிந்து அந்த முறையிலேயே அனைவர்க்கும் கற்பிக்க வேண்டும்.

 

15.7.13

சட்டசபையில் முதலில் தமிழில் பேசியவர்

சட்டசபையில் தமிழ்
 
சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த சமயத்தில் சேலத்தைச் சேர்ந்த பி.வி. நரசிம்மய்யர் என்பவர்தான் முதன் முதலாக சட்டசபையில் தமிழில் பேசினார்.  அவர் தமிழில் சட்டசபையில் பேசியது பற்றி எந்தப் பத்திரிகையும் குறிப்பு எழுதவில்லை. 
 
திரு.வி.க அவர்கள் மட்டும் தான் நடத்தி வந்த ‘தேசபக்தன்’ என்ற பத்திரிகையில் பி.வி. நரசிம்மய்யர் தமிழ் மொழியில் சட்டசபையில் பேசியதைப் பற்றிபாராட்டி எழுதினார்.

13.7.13

திரு.வி.கவும் மறைமலையடிகளும் வேறுபட்டு நின்ற இடங்கள்

திரு.வி.க - மறைமலையடிகள் கருத்து வேறுபாடுகள்
திரு.வி.க மறைமலையடிகள் பால் ஒரு சிறிது கருத்து வேறுபாடு உடையவராய் இருப்பினும் அதனைப் பெரிதாகக் கருதாமல் சிறந்த தொண்டராகவே அன்புநிலை மாறாமல் இருந்தார்.  ஆயினும் அரசியல் துறையில் அடிகள் போக்கு வேறு திரு.வி.க வின் போக்கு வேறு.

``அடிகள் எழுத்தில் ஆசிரியர்.....
தமிழர் என்ற பிரிவை வளர்க்கும்
கருவிகளிருக்கின்றன, அவை மக்களின்
ஒருமைப்பாட்டையும் வளர்ச்சியையும் குலைக்கும்”
என்பது திரு.வி.கவின் உட்கிடக்கையாக இருந்தது.

மறைமலையடிகள் சமய நூல்களிலும், மெய்யறிவு நூல்களிலும் புகுந்து ஆய்வு செய்து வெளியிடுங் கருத்துகளைத் திரு.வி.க மனம் ஏற்பதில்லை.  ச்மயம், மெய்யறிவு ஆகியவை ஆய்வுக்கு எட்டாதன என்பதும் இவ்வாய்வால் மக்கள் வாழ்க்கை நலம் பெறாது என்பதும், இவை முரட்டுக்கும் மூர்க்கத்துக்கும் இரையாகும் என்பதும் திரு.வி.க வின் எண்ணமாகும்.  திரு.வி.க எம்மதமும் ஒன்றே எனுங் கொள்கையர்.  அடிகளாரோ சைவசமயமே சமயம் எனும் கொள்கையர்.

திரு.வி.க மறைமலையடிகள் ஆகியோரிடை மொழி, சமயம், அரசியல் நிலைகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற அளவில் முன்னேற இருவரும் அயராது பாடுபட்டனர்.  இவ்விருபெரும் அறிஞர்களால் தமிழகத்தில் ஒரு பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதில் யார்க்கும் ஐயமில்லை.  இவ்வறிஞர் வழிநின்று புதியதொரு தமிழுலகைப் படைத்தல் வேண்டும்.

12.7.13

அறிவோம் நாயன்மாரை: மூர்த்தி நாயனார்

அறிவோம் நாயன்மார்களை
 புகைப்படத்திற்கு நன்றி: சிவம் தளம்

மூர்த்தி நாயனார்
புகழ்பெற்று விளங்கும் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் அவதரித்தவர், மூர்த்தி நாயனார்.  அவர் எப்பொழுதும் சிவபெருமானது திருவடியையே சிந்தித்துக் கொண்டிருப்பார்.   நாள்தோறும் மதுரை சோம சுந்தரப் பெருமானுக்குச் சந்தனக் காப்பு வழங்குவதையே பெருந்தொண்டாகக் கருதி வந்தார்.
அந்நாளில் வடுக சாதியைச் சேர்ந்த கன்னட தேசத்து அரசன் ஒருவன் மதுரை மீது போர் தொடுத்து வெற்றி கொண்டான்.  அவன் சமண சமயத்தை ஆதரித்து வந்ததால் சைவர்களும் சிவனடியார்களும் துன்புற்றனர்.  மேலும் அவன் மூர்த்தி நாயனாருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காமல் இருக்கத் தடை செய்தான்.
இந்நிலையில் ஒரு நாள் சந்தனக் கட்டையை எங்கு தேடியும் கிடைக்காமல் போனதால் வருத்தமுற்ற மூர்த்தியார் இறைவனது திருக்கோயிலை வந்தடைந்தார்.  ஏதேதோ சிந்தித்து இறுதியில் தனது முழங்கையைச் சந்தனக் கல்லில் தேய்த்தார் அதனால் நரம்பும் எலும்பும் தேய்ந்தன.  இரத்தம் பெருகியது.  அதைக் கண்ட சோமசுந்தரக் கடவுள் அசரீரி மூலம் பின்வருமாறு ஆறுதல் கூறினார்.
``அன்பனே! என் மீது கொண்ட பக்தியினால் சந்தனக்கட்டை கிடைக்கவில்லையே என்று ஏங்கி, உன்கையைத் தேய்த்து இரத்தம் பீறிடச் செய்தாய்.  உன் பக்தியை நாம் மெச்சினோம்.  சிவனடியார்களுக்குத் துன்பம் செய்யும் அரசன் இன்றிரவே இறந்துவிடுவான்.  அவன் இறந்தபின் நீரே இந்த நாட்டின் சிம்மாசனத்தில் அமரப் போகிறீர்.  உன்னால் இங்கே சைவ சமயமும், சிவனடியார்களும் சிறப்பு அடையப் போகிறார்கள்!”
இந்த அசரீரி வாக்கைச் சோமசுந்தரரே கூறியபடியால், மூர்த்தி நாயனார் மிகவும் மனமகிழ்ந்து சோமசுந்தரக் கடவுளைப் பக்தியுடன் தோத்திரம் செய்தார்.
சோம சுந்தரக் கடவுளின் அருளால் எழுந்த அசரீரி வாக்கின்படியே அன்று இரவே கருநாடக தேசத்து அரசன் இறந்து நரகத்துக்குச் சென்றான்.  மன்னன் இறந்துவிடவே மதுரை மாநகரே இன்புற்றது.