தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

11.9.13

சுதேசமித்திரன் இதழில் பாரதிதாசனின் கட்டுரை

பாரதிதாசன் வேண்டிய நிகண்டு
பாவேந்தர் புதுச்சேரியைச் சார்ந்த முத்திரைப் பாளையம் அரசினர் பள்ளியில் பணியாற்றி வந்தார்.  அப்போது ‘தமிழ்பாஷைக்கு ஒரு புதிய நிகண்டு வேண்டும்’ என்ற கட்டுரையை எழுதி சுதேசமித்திரன் இதழில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் மொழி வளம்பெறுமென்றும், தமிழ்மொழிக்குப் புதிய நிகண்டு வேண்டும்  என்ற கட்டுரையை எழுதிஅவ்விதழில் 26-05-1914 ஆம் நாளில் வெளியிட்டார்.  தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பதால் மொழி வளம் பெறுமென்றும், தமிழ்மொழிக்குப் புதிய நிகண்டு வேண்டும் என்றும் இக்கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது.  கட்டுரையின் ஒரு பகுதி இதோ.
“நமக்கு அடுத்த வட பக்கத்தில் உள்ள தெலுங்கர்களோ, தங்கள் பாஷையைச் சீர்திருத்துமாறு போட்டி போட்டியாய்ச் சாலைகளும் சங்கங்களும் ஏற்படுத்திப் பரபரப்புடன் வேலை செய்து வருகிறார்கள்.  அவர்களின் ஊக்கத்தைப் பார்த்தாவது தமிழர்கள் தங்கள் பாஷையின் விஷயத்தில் ஏதாவது கவலை கொள்கிறார்களோ என்றால் அது மாத்திரமில்லை”.

9.8.13

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

தொண்டரடிப் பொடியாழ்வார்


தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு விப்ரநாரணர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.  திருவரங்க நாதனுக்கு தினந்தோறும் மாலை சாத்த, ஆலயத்தில் தோட்டம் அமைத்து மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார்.  அங்கு தேவ தேவி என்ற விலைமாதின் வயப்பட்டுத் தம் வாழ்நாளைக் கழித்தார்.  பின்னர், அக்கள்ளம் கரைய உருகிப் பாடிய பாக்கள் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி நூல்களாகும்.  இவர் இயற்றிய திருப்பள்ளியெழுச்சி நூல் கவிதை நயமும் இயற்கை எழிலும் நிறைந்ததாகும்.  அர்ச்சையில் அரங்கனைத் தவிர வேறு ஒருவரையும் பாடாத அன்பர்.

``பச்சைமா மலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண் என்ற புகழ் மிக்க பக்திப் பாடலைப் பாடிய ஆழ்வார்.  “மெய் எல்லாம் போகவிட்டு விரிகுழலாரிப்பட்டு பொய் எல்லாம் பொதிந்து கொண்ட பொய்யனேன், பொய்யனே? என் மனதின் ஓர் தூய்மை இல்லை.  வாயில் ஓர் இன்சொல் இல்லை, பொழுதெல்லாம் போது கொண்டு உன் பொன்னடி அணைய மாட்டேன்; தீதிலா மொழிகள் கொண்டு உன் திருக்குணம் செப்ப மாட்டேன்; காதலால் நெஞ்சம் அன்பு கலந்திலேன்; ஆகையால் ஏதுமற்றேன்என்கிறார்.

``ஊரிலேன் காணியில்லை உறவும் மற்றொருவர் இல்லை
பாரில் நின்பாத மூலம் பற்றிலேன், ப்ரமமூத்தி
காரொளி வண்ணனே கண்ணனே கதறுகிறேன்
ஆரூர் களைகண் அம்மா அரங்கமா நகருளானே ” 
என்று இறைவனை நோக்கி இறைஞ்சுகிறார்.

31.7.13

காந்திஜியை காந்தியடிகள் என்றாக்கியவர் யார்?

தேசப்பிதா ‘காந்திஜியை’ ‘காந்தியடிகள்’ என்று குறிப்பிட்டு
பத்திரிகைகளில் எழுதியவர் திரு.வி.க அவர்கள் தான்.  சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் பற்றி படித்த போது காந்தியை ‘காந்தியடிகள்’ என்று குறிப்பிட வேண்டும் என்று தனக்குத் தோன்றியதாக திரு.வி.க ‘்நவசக்தி’ பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னிபெசண்ட் அவர்களை ‘அன்னை வசந்தை’ என்றே திரு.வி.க எழுதுவார்.  ‘வல்லரசு’ என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் உருவாக்கியவரும் திரு.வி.க அவர்கள் தான்.  

21.7.13

திரு.வி.க வின் பொன்மொழிகள் - 1

பொன்மொழிகள்
திரு.வி.க அவர்கள் தன் வாழ்நாளில் உதிர்த்தவை எல்லாமே பொன்னேடுகளில் பொறிக்கத்தக்கவை.  அவைகளுள் முத்தென விளங்கும் பொன்மொழிகள் இங்கு அடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டுமாயின் தமிழ் மக்கள் முதலாவது தங்கள் மொழியினிடத்துப் பற்றுக்கொள்ளல் வேண்டும்.  தமிழ் மக்கள் எம்மதத்தைப் பற்றி ஒழுகினும் ஒழுகுக அவர்கள் மொழிப்பற்றை மட்டும் விடுதலாகாது.
 
பெற்ற தாயின் அன்புக்கும் பிறந்த நாட்டின் பற்றுக்கும் ஊற்றாயிருப்பது பேசும் மொழியே ஆகும்.  பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் , தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்.
 
தமிழ் மகனே! விடுதலை விடுதலை என்று வெறுங் கூச்சலிடுவதால் பயன் என்ன?  விடுதலை முயற்சி விடுதலை தருவதாயிருத்தல் வேண்டும்.  விடுதலை விடுதலை என்று சிறைக்கூடத்தில் நோய்வாய்பட்டுள்ள தமிழ்த் தாயைச் சுற்றிலும் தீயிட்டு எரிப்பது அவர் நோய் போக்கும் மருந்தாகுமா என்பதை கவனிக்க.
 
தமிழ்மக்களே உங்களைத் தமிழ் மக்கள் என்று அழைக்கச் செய்திருப்பது எது?  அதை நினையுங்கள்.  அதை மறந்து ஆற்றப்படுந் தொண்டுகள் கடைக்காலில்லாமல் எழுப்பப்படும் கட்டடம் போன்றவையாகும்.  நீங்கள் எத்தொண்டு செய்யினும் அத்தொண்டின் அடிப்படையில் தமிழ் வேட்கை எழுச்சி இருத்தல் வேண்டும்.  அவ்வேட்கையால் உங்களைப் பலவாறு பிரித்துப் பிளக்க உங்கள் பால் இடைநாளில் தோன்றிய சாதிமதப் பூசல்கள் உங்களை விடுத்து இரிந்து ஓடும் அவ்வாற்றல் அமிழ்தினும் இனிய தமிழ் வேட்கைக்கு உண்டு என்பவை மறவாதேயுங்கள்.

17.7.13

சமச்சீர் கல்வி குறித்து புலவர் பெருந்தேவன் கூறுவது என்ன?

சமச்சீர் கல்வி


புலவர் பெருந்தேவன்
சமச்சீர் கல்வி குறித்து புதுச்சேரி புலவர் திரு.பெருந்தேவன் (இராமலிங்கம்) அவர்கள் நுட்பமான கருத்துக்களைத் தன்னுடைய ‘அரசியல் அறம்’ என்னும் நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.  அவர்தம் ஆழ்ந்த சிந்தனையை இங்குப் படித்து இன்புறுவோம்.

அறிவுக்கே கல்வி அறியார் பொருள்செய்
பெருவிருப்பம் கொள்ளல் பிழை.

கல்வி என்பது அறிவு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு கற்கப்படுவதாகும்.  இதை அறியாதவர்களே பணம் சம்பாதிக்கும் பேராசை கொண்டு கற்று வருகின்றனர்.  இது பிழையானதாகும்.

அனைவர்க்கும் கல்வி அளிக்க; வளமை
தனக்கேற்ப நல்கல் தவிர்.

எவ்வகை வேறுபாடும் கருதாமல் அனைவர்க்கும் தரமான கல்விதருதல் வேண்டும்.  ஒரு சிலரின் வசதிக்கேற்ப உயர்கல்வி தருவதனை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

உரமும் சமநிலையும் உள்ளன்பும் ஊட்டும்
தர்முடைய கல்வியினைத் தா.

குன்றாத வலிமை, சமமான நிலை, ஆழமான அன்பு ஆகியவற்றை நிலைபெறச் செய்யும் தகுதி வாய்ந்த கல்வியை அரசு அனைவர்க்கும் அளித்தல் வேண்டும்.

எந்தமுறை கற்பித்தற்கு ஏற்றமுறை அந்தமுறை
எல்லார்க்கும் ஈதல் இனிது

‘மெட்ரிக்’ முதலான நால்வகைக் கல்வி முறைகளில் இசைவான முறையைக் கண்டறிந்து அந்த முறையிலேயே அனைவர்க்கும் கற்பிக்க வேண்டும்.

 

15.7.13

சட்டசபையில் முதலில் தமிழில் பேசியவர்

சட்டசபையில் தமிழ்
 
சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த சமயத்தில் சேலத்தைச் சேர்ந்த பி.வி. நரசிம்மய்யர் என்பவர்தான் முதன் முதலாக சட்டசபையில் தமிழில் பேசினார்.  அவர் தமிழில் சட்டசபையில் பேசியது பற்றி எந்தப் பத்திரிகையும் குறிப்பு எழுதவில்லை. 
 
திரு.வி.க அவர்கள் மட்டும் தான் நடத்தி வந்த ‘தேசபக்தன்’ என்ற பத்திரிகையில் பி.வி. நரசிம்மய்யர் தமிழ் மொழியில் சட்டசபையில் பேசியதைப் பற்றிபாராட்டி எழுதினார்.

13.7.13

திரு.வி.கவும் மறைமலையடிகளும் வேறுபட்டு நின்ற இடங்கள்

திரு.வி.க - மறைமலையடிகள் கருத்து வேறுபாடுகள்
திரு.வி.க மறைமலையடிகள் பால் ஒரு சிறிது கருத்து வேறுபாடு உடையவராய் இருப்பினும் அதனைப் பெரிதாகக் கருதாமல் சிறந்த தொண்டராகவே அன்புநிலை மாறாமல் இருந்தார்.  ஆயினும் அரசியல் துறையில் அடிகள் போக்கு வேறு திரு.வி.க வின் போக்கு வேறு.

``அடிகள் எழுத்தில் ஆசிரியர்.....
தமிழர் என்ற பிரிவை வளர்க்கும்
கருவிகளிருக்கின்றன, அவை மக்களின்
ஒருமைப்பாட்டையும் வளர்ச்சியையும் குலைக்கும்”
என்பது திரு.வி.கவின் உட்கிடக்கையாக இருந்தது.

மறைமலையடிகள் சமய நூல்களிலும், மெய்யறிவு நூல்களிலும் புகுந்து ஆய்வு செய்து வெளியிடுங் கருத்துகளைத் திரு.வி.க மனம் ஏற்பதில்லை.  ச்மயம், மெய்யறிவு ஆகியவை ஆய்வுக்கு எட்டாதன என்பதும் இவ்வாய்வால் மக்கள் வாழ்க்கை நலம் பெறாது என்பதும், இவை முரட்டுக்கும் மூர்க்கத்துக்கும் இரையாகும் என்பதும் திரு.வி.க வின் எண்ணமாகும்.  திரு.வி.க எம்மதமும் ஒன்றே எனுங் கொள்கையர்.  அடிகளாரோ சைவசமயமே சமயம் எனும் கொள்கையர்.

திரு.வி.க மறைமலையடிகள் ஆகியோரிடை மொழி, சமயம், அரசியல் நிலைகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற அளவில் முன்னேற இருவரும் அயராது பாடுபட்டனர்.  இவ்விருபெரும் அறிஞர்களால் தமிழகத்தில் ஒரு பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதில் யார்க்கும் ஐயமில்லை.  இவ்வறிஞர் வழிநின்று புதியதொரு தமிழுலகைப் படைத்தல் வேண்டும்.

12.7.13

அறிவோம் நாயன்மாரை: மூர்த்தி நாயனார்

அறிவோம் நாயன்மார்களை
 புகைப்படத்திற்கு நன்றி: சிவம் தளம்

மூர்த்தி நாயனார்
புகழ்பெற்று விளங்கும் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் அவதரித்தவர், மூர்த்தி நாயனார்.  அவர் எப்பொழுதும் சிவபெருமானது திருவடியையே சிந்தித்துக் கொண்டிருப்பார்.   நாள்தோறும் மதுரை சோம சுந்தரப் பெருமானுக்குச் சந்தனக் காப்பு வழங்குவதையே பெருந்தொண்டாகக் கருதி வந்தார்.
அந்நாளில் வடுக சாதியைச் சேர்ந்த கன்னட தேசத்து அரசன் ஒருவன் மதுரை மீது போர் தொடுத்து வெற்றி கொண்டான்.  அவன் சமண சமயத்தை ஆதரித்து வந்ததால் சைவர்களும் சிவனடியார்களும் துன்புற்றனர்.  மேலும் அவன் மூர்த்தி நாயனாருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காமல் இருக்கத் தடை செய்தான்.
இந்நிலையில் ஒரு நாள் சந்தனக் கட்டையை எங்கு தேடியும் கிடைக்காமல் போனதால் வருத்தமுற்ற மூர்த்தியார் இறைவனது திருக்கோயிலை வந்தடைந்தார்.  ஏதேதோ சிந்தித்து இறுதியில் தனது முழங்கையைச் சந்தனக் கல்லில் தேய்த்தார் அதனால் நரம்பும் எலும்பும் தேய்ந்தன.  இரத்தம் பெருகியது.  அதைக் கண்ட சோமசுந்தரக் கடவுள் அசரீரி மூலம் பின்வருமாறு ஆறுதல் கூறினார்.
``அன்பனே! என் மீது கொண்ட பக்தியினால் சந்தனக்கட்டை கிடைக்கவில்லையே என்று ஏங்கி, உன்கையைத் தேய்த்து இரத்தம் பீறிடச் செய்தாய்.  உன் பக்தியை நாம் மெச்சினோம்.  சிவனடியார்களுக்குத் துன்பம் செய்யும் அரசன் இன்றிரவே இறந்துவிடுவான்.  அவன் இறந்தபின் நீரே இந்த நாட்டின் சிம்மாசனத்தில் அமரப் போகிறீர்.  உன்னால் இங்கே சைவ சமயமும், சிவனடியார்களும் சிறப்பு அடையப் போகிறார்கள்!”
இந்த அசரீரி வாக்கைச் சோமசுந்தரரே கூறியபடியால், மூர்த்தி நாயனார் மிகவும் மனமகிழ்ந்து சோமசுந்தரக் கடவுளைப் பக்தியுடன் தோத்திரம் செய்தார்.
சோம சுந்தரக் கடவுளின் அருளால் எழுந்த அசரீரி வாக்கின்படியே அன்று இரவே கருநாடக தேசத்து அரசன் இறந்து நரகத்துக்குச் சென்றான்.  மன்னன் இறந்துவிடவே மதுரை மாநகரே இன்புற்றது.

6.7.13

12 வது தமிழ் இணைய மாநாடு

12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு
 (உத்தமம் தளத்தின் செய்தி)
முழு கட்டுரைகளை அனுப்புதல் கடைசி நள் 10 ஜுலை 2013
முழு கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 10 ஜுலை 2013 ஆகும். மாநாட்டுக் குழு ஆய்வுச் சுருக்கங்களைப் பரிசீலித்து மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும்.
பேரா. மு. அனந்த கிருஷ்ணன் ஆய்வுக் கட்டுரைப் போட்டி:
மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆய்வாளர்களில் நான்கு (4) சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பே.ரா. மு. அனந்த கிருஷ்ணன் விருது வழங்கப்படும்.
கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகளை வரவேற்கிறோம்:
  • செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில் முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
  • மின் நூல்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
  • ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் எச்.டி.எம்.எல் 5 குறுஞ்செயலிகள் (Apps).
  • திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
  • இயன்மொழிப் பகுப்பாய்வு பிழைதிருத்தி,  தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடல்பொறிகள் , இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
  • தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
  • தமிழ் தரவுத்தளங்கள்.
  • கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
  • தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்.
  • கணினி வழி தமிழ்மொழி  பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.
கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் வடிவில், மைக்ரோசாஃப்ட் வேர்ட் அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம். பி.டி.எஃப் அல்லது அதுபோன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம். தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கலாம். பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
மாநாட்டு இதழ் ஒன்று அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு இதழில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகள் அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து கட்டுரைகளைப் படிக்க ஒப்புக்கொள்கிறார் என்று புரிந்துகொள்ளப்படும்.
(ஏ4 அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை நிகழ்ச்சிகள் குழுவுக்கு cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் கட்டுரைச் சுருக்கங்களை ti2013.infitt.org என்ற இணைய தளம் மூலமும் சமர்ப்பிக்கலாம். முழு கட்டுரைகளை  அனுப்பக் கடைசி தேதி ஜுலை 10, 2013 ஆகும்.
ஆய்வு இறுதிக் கட்டுரை திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் வடிவில், மைக்ரோசாஃப்டு வேர்டு அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம்.
பி.டி.எஃப் போன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

15.5.13

திரு.வி.க தேசபக்தனிலிருந்து ஏன் விலகினார்?

வ.வே.சு ஐயர் ஆசிரியரானார்
சுமார் இரண்டாண்டுகளுக்கு மேலாக மிகத் திறம்பட நடத்தி வந்த ‘தேசபக்தனை’ விட்டு வெளியேறும் நிலை திரு.வி.க.விற்கு ஏற்பட்டது.  தேசபக்தனில் காணப்படும் திரு.வி.கவின் எழுத்துக்களில் கொதிப்பு அதிகம் என்றும், அதை குறைத்துக் கொள்ளாவிடில் அரசு நடவடிக்கை எடுக்க நேரும் என்றும் லார்டு வில்லிஸ்டன் திரு.வி.கவை அழைத்துக் கூறினார்.
 
மேலும் அப்போது சில விளம்பரங்களை வெளியிடுதல் கூடாது என்று காங்கிரஸ் கட்டளை பிறப்பித்திருந்தது.  சென்னைப் பத்திரிகைகளில் பல அக்கட்டளைகளை மீறி நடந்தன.  ‘தேசபக்தனும்’ அக்கட்டளைகளை மீற வேண்டும் என பலர் திரு.வி.க வை வற்புறுத்தினர்.  ஆனால் திரு.வி.க அதற்கு இணங்கவில்லை.  அதனால் இவரின் பத்திரிக்கைக்குச் சிறிது நட்டம் ஏற்பட்டாலும் செல்வாக்கு அதிகரித்தது.  ‘தேசபக்தன்’ மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்த நிலையில் திரு.வி.கவிற்கு ஒரு தகவல் எட்டியது.  பிரிட்டிஷ் இந்தியா அச்சுக்கூடம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலே அது.
 
திரு.வி.க விடம் அதன் பதிவுப் பொறுப்பு இருந்தும், இவரைக் கேட்காமல் அச்சுக் கூடம் ஒத்திவைக்கப்பட்ட செயலை இவரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.  ஆகவேதான் அதிலிருந்து விலகும் எண்ணத்தை ஒரு தலையங்கத்தில் வெளியிட்டார்.  அதைக் கண்டு காமத் கண் கலங்கினார்.  சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் உள்ளிட்ட பலர் சமாதானம் செய்து பார்த்தும் திரு.வி.க அவர்கள் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.  பின் வ.வே.சு ஐயர் அவரவழைக்கப்பட்டார்.
 
அவர் ‘தேசபக்தன்’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  வ.வே.சு. ஐயர் ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டதும் அவரால் ‘தேசபக்தனில் புதிய ‘பத்திரிகாசிரியன்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரை அவர் திரு.வி.கவிடம் எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பது புலனாகும்.

12.5.13

அறிவோம் கணினி கலைச்சொற்களை

கணினி உலகம்
  1. abacus-மணிச்சட்டம்
  2. abbreviated address-சுருங்கிய முகவரி முறை
  3. abondon-கைவிடு
  4. abort-கைவிடல்
  5. abstract-கருத்தியல்
  6. accelerated graphics port-முடுக்கு வரைகலைத் துறை
  7. access-அணுக்கம்
  8. access code-அணுகுக் குறி
  9. accumulation-திரட்சி
  10. activation-இயக்குவிப்பு
  11. active window-இயங்கும் சாளரம்
  12. adapter-தகவி
  13. adapter cardsதகவி அட்டைகள்
  14. add-in-கூடுதல் இணைப்பு
  15. add-on-திறனேற்றி
  16. address bar-முகவரிப்பட்டை
  17. address book-முகவரிப் புத்தகம்
  18. address buffer-முகவெண் தாங்கி
  19. alert-விழிப்பூட்டு
  20. alert box - எச்சரிக்கும் பெட்டி
     

7.5.13

பிற மொழிகளில் வெளிவந்துள்ள மு.வ வின் நூல்கள்

மு.வ.வின் புகழ்பெற்ற பனுவல்கள்
பல உயிர்ப்புள்ள நூல்கள் தெலுங்கு, கன்னடம், சிங்களம், இந்தி, மலையாளம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
  1. பெற்ற மனம்
  2. அகல் விளக்கு
  3. விடுதலையா?
  4. மனச்சான்று
  5. கயமை
  6. குறட்டை ஒலி
  7. காதல் எங்கே?
  8. அகல் விளக்கு, குறட்டை ஒலி - ரஷ்ய மொழி
  9. கள்ளோ? காவியமோ? - சிங்கள மொழி
  10. கரித்துண்டு - இந்தி மொழி
  11. சிறுகதைகள் சில, மராத்தி, மலையாளம் முதலிய இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
  12. இளங்கோவடிகள்- தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

6.5.13

திரு.வி.க பற்றி மா.பொ.சி

திருவிகவின் பெருவாழ்வு
ம.பொ.சி
அரசியலில் சேர்ந்து நான் திரு.வி.க வுடன் பணியாற்றாவிட்டாலும் அவர் எழுதிய “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்” என்னும் நூல்தான் என்னை காந்தியவாதி ஆக்கியது என்கிறார் திரு.ம.பொ.சி. அவர்கள்.  ஏனென்றால் காந்திய நெறிக்கு விளக்கம் தரும் நூல் இதைவிட வேறு ஒன்றும் இருக்க முடியாது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது என்கிறார்.
 
எல்லாவற்றையும் விட அவரது ஒழுக்கம் ம.பொ.சியின் உள்ளத்தை அவர் பக்கம் திரும்பச் செய்ததாகக் கூறுகிறார்.  திரு.வி.க வைச் சந்தித்து உரையாடும் போதெல்லாம் பழங்கால முனிவருடன் பேசும் அனுபவத்தைத் தந்ததாகவும் தமிழும் தேசியமும் பிணைந்திருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்திற்கு அவர்தான் முன்னோடி என்றும் அதிசயிக்கிறார்.
 
எங்கும் எதிலும் தமிழர் வாழ்வில் தமிழ்தான் முதலிடம் பெற வேண்டும் என்று அவர் (திரு.வி.க) விரும்பினார்.  அவர் காங்கிரசில் இருந்த காலத்தில் அந்த மகாசபையின் தமிழ்நாட்டுக் கிளையை தமிழ் வழிப்படுத்த அவர் பெரிதும் முயன்றதாக ம.பொ.சி நவில்கிறார்.  இந்தி திணிப்பை எதிர்ப்பதிலே எங்கள் இருவருக்கும் கருத்தொற்றுமை நிலவியது.  ஆங்கில ஆதிக்கம் நிலைபெறாத வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேராத முறையிலும் இந்தி திணிப்பு எதிர்க்கப்பட வேண்டும் என்பதிலே அவர்தான் எனக்கு வழிகாட்டி.  அவர் அன்பின் வடிவமாகத் திகழ்ந்தார் என்கிறார்.

5.5.13

சிறப்புலி நாயனார்

அறிவோம் நாயன்மார்களை
சிறப்புலி நாயனார்
காவிரி ஆறு பாய்ந்து வளங்கொழிக்கும் சோழ நாட்டில் திரு ஆக்கூர் என்னும் ஊரில் வேதியர் குலத்தில் அவதரித்தவர் , சிறப்புலி நாயனார்.  அவர் பரமேஸ்வரனாகிய சிவபெருமானிடத்துப் பேரன்பு கொண்டிருந்தவர்.  தம்மை நாடி வந்த சிவனடியார்களுக்கு வேண்டியதை வழங்கி வள்ளலுக்கு வள்ளலாய் விளங்கினார்.  சிவனடியார்களின் திருவடிகளில் வணங்கி அவர்கலுக்கு உணவும் படைத்து வந்தார்.  உள்ள பொருளெல்லாம் சிவன் தந்தது, என்று எண்ணிக் கேளா முன்னரே அடியவர்கட்கு வழங்கியவர், சேக்கிழார் இவரை வள்ளலார் என்றே அழைக்கிறார்.  சிவபக்தியின் முதற்படி ஈவிரக்கமே, என்பதை நன்குணர்ந்தவர்.
 
நாள்தோறும் ஐந்தெழுத்து மந்திரத்தினை ஓதிச் சிவ வேள்விகளையெல்லாம் செய்து சிவபெருமானை உள்ளம் உருக வழிபட்டார்.  இவ்வாறு பல சிவ புண்ணியங்களைச் செய்து, புகழும் சிறப்பும் பெற்றதால், அவர் சிவபெருமானின் அருளைப் பெற்று அவருடன் ஐக்கியமானார்.  இவர்,
 
ஆளும் அங்கிணருக் கன்பர்
     அணைந்தபோ தடியில் தாழ்ந்து
மூளுமா தரவு பொங்க
     முன்பு நின்றினிய கூறி
நாளும்நல் லமுதம் ஊட்டி
     நயந்தன எல்லாம் நல்கி
நீளுமின் பத்துள் தங்கி
    நிதிமழை மாரி போன்றார்!
 
நிமலனாருடைய திருத்தொண்டுகள் பல புரிந்து, வள்ளன்மையே அடியவர்களுடைய உயர்ந்த பண்பு என்பதற்கேற்ப வாழ்நாளைக் கழித்து, வாரி வழங்கும் வள்ளலாக இறை வாசக் கமலம் இதயத்தில் இருத்தலே இணையற்றதாக, கருதி வாழ்ந்து சென்றவர், என்றால் மிகையாகாது.

புகைப்பட நன்றி:
சிவாடெம்பில்ஸ்.காம்

4.5.13

உலகம் சுற்றிய முதல் தமிழ்ப்பேராசிரியர்

டாக்டர் மு.வ வின் பெருவாழ்வு
 

டாக்டர்.மு.வரதராசனார்
 ருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் சீரிய தமிழ்த் தொண்டு முதன்மையான இடம் பெறுவதாகும்.  அவர் ஈடு இணையற்ற பெரும் எழுத்தாளராக விளங்கினார்.  உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த முதல் தமிழராக அவர் திகழ்ந்தார்.  மு.வ என்ற பெயர் ஒலிக்காத இடமில்லை. 
 
குடும்பமும் அவரும்
 
அருமை அன்னை அம்மாக்கண்ணம்மாளுக்கும் அறிவில் சிறந்த தந்தை முனுசாமி அவர்களுக்கும் செல்லப் பிள்ளையாக 25.04.1912 ஆம் ஆண்டு வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் பிறந்தார்.  முதலில் அவருக்கு வழங்கிய பெயர் திருவேங்கடம் என்பதாகும்.  தாத்தாவின் பெயரை இடும் மரபுக் காரணமாக வழங்கிய பெயரே ‘வரதராசன்’ என்னும் பெயர்.
 
1935 இல் மாமன் மகள் இராதாவை மணந்தார்.  அவருக்கு ஆ ண் மக்கள் மூவர் உள்ளனர்.  அவர்கள் முறையே திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகியோர் ஆவர்.  அம்மூவரும் மருத்துவத் துறையில் மாமணிகளாகத் திகழ்கின்றனர்.
 
கல்வி
 
அவர் வேலத்திலும், வாலாசாவிலும் தொடக்கக் கல்வியைக் கற்றார்.  உயர்நிலைப் பள்ளிப் படிப்பை அவர் திருப்பத்தூரில் பயின்றார்.  அவர் முருகைய்ய முதலியாரிடம் தமிழ் கற்றுப் புலவர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.  பின்னர் அவர் 1935 ஆம் ஆண்டு தமிழ்ப் புலவர் தேர்வு எழுதிச் சென்னை மாநிலத்திலேயே முதல்வராகத் தேர்ந்து உரூபாய் ஆயிரம் பரிசு பெற்றார்.  1939 இல் பி.ஓ.எல் பட்டமும் 1944 இல் எம்.ஓ.எல் பட்டமும் பெற்றார்.  1948 இல் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதன் முதலாகத் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றார்.  1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள ஊஸ்டர் கல்லூரி அவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது.  அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் டி.லிட் என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞ்அர் மு.வ அவர்களே ஆவார்.
 
தொழில்
 
அவர் 1928 இல் முதல் தாலுகா அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார்.  1935 ஆம் ஆண்டு முதல் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.  1939 முத்ல 1944 ஆம் ஆண்டு வரை டாக்டர் அ.இலட்சுமணசாமி முதலியார் அவர்களின் நல்லுதவியுடன் தமிழ் விரிவுரையாளராகப் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றினார்.  1945 ஆம் ஆண்டு அக்கல்லூரியிலேயே தமிழ்த்துறைத் தலைவர் ஆனார்.  இடையே ஓராண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.  அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறைவுக்குப் பிறகு 1961 முதல் 1971 வரை சென்னைப் பலகலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.  1971 முதல் 1974 வரை மதுரைப் பலகலைக்கழகத்தின் புகழ்மிக்க இணையற்ற துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.
 
பன்மொழிப் புலமை
 
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி முதலிய மொழிகளைக் கற்றுப் பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.
 
உலகை வலம் வந்த முதல் தமிழ்ப் பேராசிரியர்
 
அவர் உருசியா, மலேசியா, சிங்கப்பூர், பாரிஸ், இலங்கை, இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், ஜெர்மனி, கிரேக்கம், எகிப்து, அமெரிக்கா முதலிய உலக நாடுகளை எல்லாம் சுற்றிப் பார்த்த முதல் தமிழ்ப் பேராசிரியராக விளங்கினார்.
 
தனிப் பண்புகள்
 
மனத்தால் கூடப் பிறர்க்குத் தீங்கு எண்ணாமல் சான்றோராக வாழ்ந்தார்.  ஒன்றனை இழந்தாலோ அல்லது தொலைந்தாலோ அதற்காக அவர் கவலைப்பட்டதில்லை.  காரணம் அதனால் பயன் இல்லை என்பது அவரது கருத்து.  வீணாக வருந்தும் நேரத்தை வேறு ஆக்க வேலைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவரது கொள்கை.
(வரும்---------2)

24.3.13

ஞானியுடன் தமிழும் சைவமும்

பழநி என்னும் ஞானியார்
ஞானியார் அடிகளார்
17-05-1873 ஆம் தோன்றியவர் திரு ஞானியார் அடிகள்.  பழநி என்னும் இயற்பெயரைக் கொண்டவர்.  திருப்பாதிரிப்புலியூரில் ஞானியார் மடாலயத்து நான்காம் பட்டத்து சிவசண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாச்சாரியார் தமது உறவினரான பழநியின் தந்தையைத் திருப்பாதிரிப்புலியூருக்கு அழைத்துக் கொண்டார்.  அப்பொழுது பழநிக்கு ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தன.

நான்காம் பட்டத்து சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியார் உடல் தளர்வுறத் தொடங்கியது.  அப்போது பழநி பள்ளிப்படிப்புப் படித்துக் கொண்டிருந்தார்.  பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு துறவு மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.  அதனை பழநி ஏற்றுக்கொண்டார்.  20-11-1889 ஆம் ஆண்டு துறவு தந்து ஞானியார் மடத்தின் அருள் தலைவராகப் பட்டம் சூட்டப்பெற்றார். 

நான்காம் சிவாசாரியாரின் மறைவுக்குப் பின் பழநி தன்னுடைய பதினேழாம் வயதில் ஞானியார் மடத்தின் ஐந்தாம் பட்டத்து அடிகளாரானார்.

ஆதீனத் தலைமையை ஏற்றுக்கொண்ட ஞானியார் அடிகள் தன்னுடையக் கல்வியில் முழு ஈடுபாடு காட்டலானார்.  தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளை ஆசிரியர்களை நியமித்து கற்றறிந்தார்.  ஆழ்ந்த புலமை எய்தினார்.  

நன்கு கற்றுத் தேர்ந்த பின் பெருமழைப் பொழிவது போல சொற்பொழிவாற்றும் தன்மையராய் விளங்கினார்.  நான்கு ஐந்து மணி நேரங்கள் வரை சொற்பொழிவாற்றும் ஆற்றல் பெற்றிருந்தார்.  இவ்வகையில் மக்களும் சோர்ந்து போவதில்லை.  இவர்தம் பேராற்றல் கண்டு வியப்புற்று அவரையே நோக்கியிருப்பர்.  தமிழுக்கும் சைவத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது.  இவரால் தமிழும் சைவமும் தழைத்தோங்கின.

சொற்பொழிவாற்றும் நேரம் ஒழிந்த பொழுதுகளில் மாணாக்கருக்குப் பாடம் புகட்டும் பணியையும் இடையே மேற்கொள்வார்.  பல புலவர் பெருமக்களும் வந்து இவரிடம் ஐயம் களைந்து செல்வர்.  ஞானியாரின் மாணவர்களாய்ப் புகழ் பூத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மு.இராசாக் கண்ணனார், லால்குடி அ.நடேச முதலியார், ந. ஆறுமுக முதலியார் முதலியோராவர்.

தமிழ் வளர்ச்சி பெற தொண்டாற்றியதோடு மதுரைத் தமிழ்ச் சங்கம், சைவசித்தாந்த மகா சமாஜம் முதலியவை உருப்பெறவும் கருத்தாவாக இருந்தார்.  பல பள்ளிகளையும் நிறுவினார்.  

பிறருக்குப் பாடம் புகட்டுவதிலும் சொற்பொழிவிலும் அதிக ஆர்வங்கொண்டிருந்தமையால் பன்னூல்களை எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கப்பெறவில்லை.  திலகவதி அம்மை துதி, ஞான தேசிக மாலை என்பன இவர் இயற்றிய நூல்களாகும்.  

அடிகளாரின் மாணவரான மு.இராசாக்கண்ணனார் அவர்கள் அடிகளார் நிகழ்த்திய சொற்பொழிவைத் தொகுத்து `கந்தர் சஷ்டி சொற்பொழிவுகள்’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

ஞானியாரடிகள் தன்னால் இயன்றவற்றையெல்லாம் அருந்தமிழுக்கும் சைவத்திற்கும் செய்துவிட்டு 1-2-1942 இல் காலமானார்.

பகுத்தறிவுப் பகலவன் ஈ.வே.ராமசாமி அவர்கள் தொடங்கிய `குடியரசு இதழ் ’குறித்து நாம் அறிவோம்.  இவ்விதழின் தொடக்க விழாவிற்கு நம் பெரியார் திரு.ஞானியார் அடிகளாரை அழைத்திருந்தார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

23.3.13

பெரியாருக்குப் பாவேந்தரின் வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்

பாவேந்தர்
பாவேந்தர் அவர்கள் பெரியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.  அவ்வாறு நெருங்கிப் பழகும் வாய்ப்பு 1928 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது.  அவ்வாண்டில் தான் பெரியார் பாவேந்தர் சந்திப்பு நிகழ்ந்தது.  1928 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் பெரியார் பேசிய பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.  அப்பொதுக்கூட்டத்தில் பாவேந்தர் கலந்து கொண்டார்.  பெரியார்தம் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.  பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையை சுயமரியாதைக் கொள்கையை முழங்கும் பீரங்கியாகத் தோற்றம் பெற்றார்.

தொடர்ந்து பெரியாரின் கொள்கைகள் குறித்துத் தன் இதழில் எழுதலானார்.
பெரியார் அவர்கள் 10-2-1929 அன்று புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.  பாவேந்தர், பெரியாருக்கு வரவேற்பு வாழ்த்துமடல் வழங்கினார்.  அவ்வாழ்த்து மடல் வரிகள்........

வருக உயர் இராமசாமிப் பெயர்கொள்
  அறிஞ, உன்றன் வரவால் இன்பம்
பருக வரும் இந்நாளை வாழ்த்துகின்றோம்
  பனிபறக்கத் தகத்த காயம்
பெருக வரும் செங்கதிர் போல் மடமை வழக்
  கம்பறக்கப் பீடை இங்கு
மருவ வைத்த பார்ப்பனியம் வடு வின்றிப்
  பறக்க உனை வரவேற்போமால்
சுயமரியா தைப் பெயர்கொள் பயிர்செழிக்கத்
  தொண்டு செய்யும் இராமசாமித்தலைவா
புயத்தெதிரே புவிபெயர்ந்து வரும்போது
  புலன் அஞ்சாத் தன்மையுள்ள கர்மவீரா
செயற்கரிய செயப்பிறந்த பெரியோய் இந்தச்
  செகத்துநிலை நன்கறிந்த அறிவுமிக்கோய்
வியப்புறு நின் இயக்கமது நன்றே வெல்க
  மேன்மை யெல்லாம் நீ எய்தி வாழ்க நன்றே!

புகைப்பட நன்றி: புதுத்திண்ணை

22.3.13

ஞானாலயா - ஆய்வு நூலகம்

அரிய முயற்சி

ஞானாலயா ஆய்வு நூலகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிய பொக்கிஷமாகும்.  ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய மனைவி டோரதி கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் அரிய முயற்சியே இப்புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்.  டோரதி கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியராவார்.
புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேயரிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்ட சமஸ்தானம்.  இயல், இசை, நாடகம் என தமிழ் சார்ந்த கலைகளில் சிறப்புற்றிருந்தது புதுக்கோட்டை சமஸ்தானம்.  இத்தகைய சிறப்புமிக்க புதுக்கோட்டைக்கு மற்றொரு சிறப்பாக அமையப்பெற்றிருப்பதே ‘ஞானாலயா ஆய்வு நூலகம்’.

எதற்கெடுத்தாலும் சென்னைக்குச் செல்லும் போக்கு தவிர்க்கப்பட வேண்டி தமிழகத்தின் மையப்பகுதியில் இப்புத்தக நூலகத்தை நிறுவியுள்ளார் திரு.கிருஷ்ணமூர்த்தி.  தன் மனைவி இரு மகள்கள் மருமகன்கள் என குடும்ப அங்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொள்கின்றனர்.

நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய நண்பர்களையும் தன்னைப் போன்றே மாற்றியிருக்கிறார்.  தன்னால் நூலகத்தில் இருக்க முடியாத சமயங்களில் நண்பர்களை இருத்திச் செல்கிறார்.  அவ்வளவிற்கு நண்பர்களும் இந்நூலகத்தில் ஈடுபாடுகொண்டிருக்கின்றனர்.

புதுக்கோட்டை தான் புத்தகப் பதிப்பகங்கள் தோன்றிய தாயகம் என்று கூறும் கிருஷ்ணமூர்த்தி சிறப்பாகச் சொல்லப்படுகின்ற பதிப்பகங்கள் பத்து எனில் அவை புதுக்கோட்டையில் தான் தோன்றின என்கிறார். 

சமய நூல்கள், இலக்கிய நூல்கள், நவீன நூல்கல், வரலாற்று நூல்கள், காந்தி இயக்கம், மறுபதிப்பு வராத புத்தகங்கள், சமகால புத்தகங்கள், தமிழ்நாட்டில் வெளியிடப்படும் தனி இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள், மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆராய்ச்சி இதழ்கள், பெரியார், அண்ணா காலத்தில் வந்த பத்திரிகைகள் என பல அரிய தொகுப்புகள் ஞானாலயாவில் உள்ளடங்கியுள்ளன.

நூலகத்திற்காக ஒரு தனி இல்லம் அமைத்திருக்கிறார்.  தான் வசிக்கும் இல்லத்தின் மாடியிலும் நூலகம் அமைத்திருக்கிறார்.  பற்றாக் குறைக்காக கட்டிடமும் கட்டிக்கொண்டிருக்கிறார்.

புத்தகங்கள் காந்தி வரிசை, விவேகானந்தர் வரிசை, இராம கிருஷ்ணர் வரிசை என பல வரிசைகளால் ஆக்கப்பட்டுள்ளது.  நூலகத்திற்குச் சென்று நூல் பட்டியல் புத்தகத்தைப் பார்த்து நாமே நூலை எடுக்க வேண்டும்,  அவ்வளவிற்கு நமக்கு வேலை தருவதில்லை ஞானாலயா.  வருவோரை வரவேற்று அவர்களுக்குத் தேவையான புத்தகங்களைக் கொடுத்து அப்புத்தகம் தொடர்புடைய பல புத்தகங்களையும் எடுத்துப்படிக்கத் தூண்டுகின்றனர். 

`லாஸ்ட் பேஸ்’ என்னும் புத்தகம் பியாரி லாலால் எழுதப்பட்டது.  இதன் மூன்று தொகுதிகளும் ஞானாலயாவில் உள்ளன.  ஆய்வு மாணவர்களுக்குத் தேவையான அத்தனைப் புத்தகங்களும் இங்குக் காணப்படுகிடைக்கின்றன.  பிரபல அரசியல் பின்னணி உள்ளவர்களும் இந்நூலகத்திற்கு வந்து செல்கின்றனர்.  அவ்வளவிற்கு இன்றியமையாமையைப் பெற்றிருக்கிறது. 

நமக்குத் தேவைப்படும் புத்தகங்களை அங்கேயே நகல் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.  பல ஆதரவற்ற பெண்களைக் கொண்டு (மாத சம்பளத்துடன்) இந்நூலகத்தை நடத்தி வருகிறார். நூலகத்தைப் பராமரிக்கவும் நூல்களை வாங்கவும் ஒரு மாதத்திற்கு இலட்சங்களில் செலவு அமைவதாகத் தெரிய வருகிறது.  இந்நூலகத்திற்குத் தங்களால் இயன்ற உதவிகளை எப்படியும் வழங்கலாம்.
UCO bank,
Saving Bank A/C No.1017047
Branch: Pudukkotai
IFS Code:UCBA0000112


11.3.13

பாவேந்தர் கலந்து கொண்ட சுயமரியாதை மாநாடுகள்

பாவேந்தரும் சுயமரியாதை மாநாடும்

1928 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பெரியார் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவதாக இருந்தது. அப்பொழுதுதான் முதன் முதலாக பாவேந்தர் பெரியார் கூட்டத்தில் கலந்துகொண்டு அவரின் பேச்சைக் கேட்கத் தொடங்கினார். அன்று முதல் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுச் செயல்படத் தொடங்கினார்.பகுத்தறிவுக் கொள்கைகள் குறித்து எழுதலானார். 1929 முதல் தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை குடியரசு, பகுத்தறிவு போன்ற இதழ்களில் எழுதி வந்தார்.

பாவேந்தர் 
பாவேந்தர் 1930-31 ஆண்டுகளில் பல சுயமரியாதை மாநாடுகளில் கலந்து கொண்டு மாநாட்டுக்கு வலுச்சேர்த்துள்ளார்.அம்மாநாடுகளில் கலந்துகொண்டு மாநாடு பற்றிய செய்திகளைத் தன்னுடைய இதழில் வெளியிட்டிருக்கிறார்.குறிப்பாக மாநாட்டுத் தீர்மானங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
  1. ஈரோடு இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாடு
  2. மூன்றாவது விருதுநகர் சுயமரியாதை மாநாடு
  3. சென்னை மாகாணச் சுயமரியாதைத் தொண்டர் இரண்டாவது மாநாடு,
  4. திருநெல்வேலி ஜில்லா (((தூத்துக்குடி) 4-வது சுயமரியாதை மாநாடு
  5. விருதுநகர் இளைஞர் மாநாடு
  6. நாகை சுயமரியாதை மாநாடு
  7. செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மாநாடு
மேற்கண்ட மாநாடுகளில் கொண்டுவரப்பட்டத் தீர்மானங்களைத் தன்னுடைய புதுவை ’முரசு’ இதழில் வெளியிட்டார். இவை கவிதை வடிவிலும் இடம்பெற்றிருந்தன என்பது தான் குறிப்பிட வேண்டிய செய்தி.
புகைப்படத்திற்காக நன்றி: தமிழ்க் களஞ்சியம்.காம்

5.3.13

தமிழர் உணவகம்

மொழியும் இயற்கையும் நம் அரண்
நம் உணவுப் பழக்கத்தை மறுசீரமைவு செய்ய வேண்டும் என்னும் நோக்கத்தில் உடலுக்கு வலுசேர்க்கும், நோய் விரட்டும் சத்தான உணவுப் பழக்கத்திற்கு வித்திடும் வகையில் பாவேந்தன் தமிழர் உணவகம் ஒன்று புதுவை அரியாங்குப்பத்தில் தொடங்கப்பெற்றுள்ளது.  இக்கடைக்கு விளம்பரம் சேர்க்கும் பதிவாக இஃது அமையப்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் நேரடியாகச் சென்று இவ்வுணவுக் கடையில் விலைக்குள்ள உணவுப் பொருள்களை உண்ட மகிழ்வில் இப்பதிவினைப் படைக்கிறேன். 
தமிழர் உணவகத்தின் விளம்பரப் பதாகை
நாம் உண்ணும் உணவே நம் உடல் நலத்தை தீர்மானிக்கிறது.  அண்மைக் காலமாக நம் மக்களிடம் பெருகிவரும் சர்க்கரை, குருதி அழுத்தம், மூட்டுவலி, இருதய நோய் போன்ற நோய்களுக்கு முதன்மையான காரணம் , நம் உணவு வகைகளில் போதிய ஊட்டங்கள் இல்லாததே ஆகும்.

தமிழர் உணவகத்தில் பாவேந்தரின் புகைப்படமும் பெரியாரின் புகைப்படமும் நம்மை ஈர்க்கின்றன

நம் முன்னோர்கள் நீண்டகாலமாக உணவில் கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, குதிரை வாலி, சோளம் போன்ற சிறுதானிய வகைகளையே அன்றாடம் உண்டு வந்ததால் உடல் உரம் பெற்று நோய் எதிர்ப்பு ஆற்றலுடன் வாழ்ந்து வந்தனர்.  ஆனால் இக்காலத்தில் உடல் உழைப்பு குறைந்துவிட்டதாலும் சுற்றுச்சூழல் மாசுபாடுடைய சூழலில் வாழ நேரிடுவதாலும் இன்றைக்கு நாம் மிகவும் ஊட்டமுள்ள உணவைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே, நம்மை நோயின் தொல்லையிலிருந்தும், மருந்து மாத்திரை செலவீனங்களின் பிடியிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இக்கடையானது 17, வீராம்பட்டினம் வீதியில் ‘பாவேந்தன் தமிழர் உணவகம்’ என்னும் பெயரில் அமையப்பெற்றுள்ளது.  

தானியங்களின் அருமை பெருமைகளை விளக்கும் இவர்கள் இத்தானியங்களாலான உணவுப் பொருள்களை வகைவகையாய் செய்து வைத்துள்ளனர்.  அனைத்தும் தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்ற இயற்கை உணவுகள் என்பது தான் குறிப்பிட வேண்டிய ஒன்று.

கேழ்வரகு, வரகு, தினை, சாமை, குதிரை வாலி, கொள்ளு, சோளம் ஆகிய சிறு தானியம் மற்றும் கோதுமை, அரிசி வகையிலான உணவுகள் கிடைக்கின்றன.

கூழ், மோதகம் (கொழுக்கட்டை), புட்டு, இட்லி, முடக்கத்தான் கீரை தோசை வகைகளும் நவதானிய சுண்டல், கீரை, காய்கறி சாறுகளும் கிடைக்கின்றன.

தயிர், எலுமிச்சை, புளி சோறு வகைகளும் ஆவாரம் பூ, சுக்குமல்லி, செம்பருத்தி, பனங்கருப்பட்டி தேநீர், பச்சை(தழை) தேநீர், இஞ்சி தேநீர், பனங்கற்கண்டு பால் முதலியனவும் கிடைக்கின்றன.

பள்ளி முடிந்தவுடன் பல ஆசிரியர்கள் இவ்வுணவகத்திற்கு வருகை புரிந்து தங்களுடைய உடலுக்கு உகந்த அல்லது தேவைப்படுகின்ற உணவுகளை வாங்கிச் சுவத்துவிட்டுச் செல்கின்றனர்.  கூட்டம் நன்றாக வருகிறது.  நான் சென்ற அளவில் எண்ணற்றோர் வந்து சுவை நாடினர்.

நம்மால் செய்ய முடியாத உணவுகளை எல்லாம் இங்குச் சென்று உண்டு நம் உடலின் நலம் பேணலாம்.  

26.2.13

பிழை நேரும் இடங்கள் அறிவோம்

பிழை தவிர்ப்போம்


 தமிழ் மொழியைப் பிழையின்றி எழுத ஏற்ற பயிற்சியைப் பெற்றிருப்பது இன்றியமையாதது.  ஒரு எழுத்து வர வேண்டிய இடத்தில் மற்றொரு எழுத்து வரப்பெற்றால் அங்கு பொருட்பிழை நேர்வதைக் காண்கிறோம்.  இதைத் தவிர்ப்பதற்கான சிறிய பதிவே இது.

சலி- சலிப்பு                                                                                                                                    
சளி- சளிபிடித்தல்

சூள்-சூளுரைத்த்ல்
சூல்-சூல் கொண்ட மலர்

சுன்னம் - பூஜ்ஜியம்/சுழியம்
சுண்ணம்- சுண்ணாம்பு

சீறடி- சிறிய அடி
சீரடி - புகழ் பெற்ற அடி

துரத்தல் - விரட்டுதல்
துறத்தல் - விடுத்தல்

தினை - உணவுப் பொருள்
திணை - அன்பின் ஐந்திணை/ ஒழுக்கம்

தாலி - கழுத்தில் அணிவது
தாளி - தாளித்தல்

தவலை - பாத்திரம்
தவளை - உயிரினம்

வண்மை- நா வண்மை
வன்மை - கல் வன்மையானது

பாளை - தென்னம் பாளை
பாலை - அன்பின் ஐந்திணைகளில் ஒன்று


கடப்பாரை - குழி தோண்டப் பயன்படுவது
பாறை - மலைப் பகுதி

பரவை - கடல்
பறவை - பறப்பன

நறை - வாசனை
நரை - வெள்ளை முடி

சொறி - காயம்
சொரி - பூச்சொரிதல்

சேணை - கிழங்கு
சேனை - படை

தேநீர் - டீ
தேனீர் -தேனியின் தண்ணீர்

துரவு - ஆழ்கிணறு
துறவு - துறத்தல்

குறவர் - குறிசொல்பவர்
குரவர் - சமயக் குரவர்

திண்- திண் தோள் வலிமை
தின் - உண்பது

பரி - பரிசல்,  குதிரை
பறி- பறித்தல்

25.2.13

இணைய மாநாட்டுப் புகைப்படங்கள்

மென்பொருள் கண்காட்சி

அண்மையில் நடைபெற்ற 11 ஆம் இணைய மாநாட்டில் மென்பொருள் கண்காட்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இடம்பெற்றிருந்தது. அக்கண்காட்சியைக் காண நான் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்கிறேன்.



இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக `மென்பொருள் கண்காட்சி ’ அமைக்கப்பட்டிருந்தது.  மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவது குறித்து அறிந்துகொள்வதற்காக ‘மக்கள் அரங்கம்’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


மென்பொருள் கண்காட்சிக் கூடம்

ஈடுபாட்டுடன் மென்பொருள்களை வாங்கும் மக்கள்

மென்பொருள் கண்காட்சியின் மற்றுமொரு பகுதி

19.2.13

குயிலி இராஜேஸ்வரி

குயிலி இராஜேஸ்வரி 
பெண் நாவலாசிரியர்களுள் ஒருவராக வைத்து போற்றப்படுபவர் எழுத்தாளர் குயிலி இராஜேஸ்வரி ஆவார்.  இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர்.  நாவலாசிரியர் கலை விமர்சகர்.  குழந்தைகளுக்காக கதைகளும், நாடகங்களும் பாடல்களும், நாட்டிய நாடகங்களும் எழுதியுள்ளார்.  இவர் குழந்தைகளுக்காக எழுதிய ‘பாரதி ஆத்திசூடி’ என்ற புத்தகம் மிகவும் சிறப்பாக வரவேற்கப்பட்டது.

நேஷனல் புக் டிரஸ்டுக்காக குழந்தைகளுக்கான இரண்டு புத்தகங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்.  இவர் அமைத்து நடத்தி வந்த மாதங்கி மகேஸ்வரி பீம்ஸ் என்ற குழந்தைகள் சங்கத்தினர் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் மேடைகளிலும் கலை நிகழ்ச்சிகளைத் திறம்பட அளித்து வந்தனர்.

குயிலி இராஜேஸ்வரி அவர்களின் புகைப்படம் இருப்பின்
 sadishirisappan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்.

குயிலி ராஜேஸ்வரி அவர்கள் பெரியவர்களுக்காக சுமார் இருபத்தைந்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.  இவரின் எழுத்துக்களை ஆங்கிலத்திலும் பார்க்கலாம்.  தெலுங்கு, மராத்தி, இந்தி போன்ற மொழிகளில் இவருடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் ‘அன்பு சுடும்’ என்ற இவரது நாவல் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது.

நாங்கள் காணும் இந்தியா - தமிழகம், நாங்கள் காணும் இந்தியா - கேரளம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.  இந்நூல்கள் சுற்றுலா செல்வோருக்கு ஏற்ற கையேடாகும்.  மாணவர்களுக்கு மிகுந்த பயனுடையதாய் கருதப்படுகிறது.  புதுச்சேரி பள்ளிகளிலுள்ள நூலகங்களில் இந்நூல்கள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

13.2.13

பத்தும் நூறும்

தொண்ணூறு, தொள்ளாயிரம் 
ஒன்பது என்ற எண்ணின் முன் பத்து, நூறு எவ்வாறு புணரும்?

ஒன்பது  என்ற எண்ணுடன் ‘பத்து’ ,`நூறு’ என்ற இரு எண்களும் வந்து புணரும்போது பத்தினை நூறாகவும், நூற்றை ஆயிரமாகவும் திரித்து, நிலைமொழியில் முதலிலுள்ள ‘ஒ’ என்னும் உயிர் எழுத்துடன் ‘த்’ என்னும் மெய்யைக் கூட்டி, நிறுத்தி, நிலைமொழியில் உள்ள பத்தை நீக்கி, அந்த நிலைமொழியில் முதல் எழுத்துக்குப்பக்கத்து எழுத்தினை முறையே ‘ண்’ என்ற மெய்யாகவும், ‘ள்’ என்ற மெய்யாகவும் மாற்றுவது முறையாகும்.

(உ-ம்)
ஒன்பது+பத்து=தொண்ணூறு
ஒம்பஃது+பத்து=தொண்ணூறு

ஒன்பது+நூறு=தொள்ளாயிரம்
ஒன்பஃது+நூறு=தொள்ளாயிரம்


``ஒன்பா னொடுபத்தும் நூறும் ஒன்றின்
முன்னதின் ஏனைய முரணி, ஒவ்வொடு
தகரம் நிறீஇப் பஃது அகற்றி, ணவ்வை
நிரலே ண, ளவாகத் திரிப்பது நெறியே”. ( நன்னூல் 194)

6.2.13

வசந்தவல்லியின் அழகும் திரிகூடரின் பாத்திறனும்

வசந்தவல்லி 
  தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றான ‘ திருக்குற்றாலக் குறவஞ்சி’ படிக்கப் படிக்க இன்பம் தரும் அற்புத படைப்பாகும்.  இயற்கையழகு கொஞ்சும் மலைகளின் வருணனை இன்றும் நம் கண் முன் அப்படியே வந்து நிற்கும் தன்மையதாய் உள்ளது.  குறக்குடியின் மேன்மை அவர்களின் பழக்கவழக்கம் முதலியவற்றைத் தெற்றென எடுத்தியம்பும் பாத்திறன் இப்பனுவலின் திறனை உலகறியச் செய்யும்.  இந்நூலில் இடம்பெறும்  வசந்தவல்லியின்  அழகினைப் பற்றி திரிகூட ராசப்பர்  சொல்லும் பாங்கு உணர்ந்து இன்புற வேண்டிய ஒன்று.  

இருண்ட மேகங்கள் தம்முள் சுற்றிச் சுருண்டு சுழி கொண்டு எறிந்தாற்போல விளங்கும் மயிரடர்ந்த கொண்டையினாள் அவள்.  காதளவு ஓடிக், காணும் ஆடவர்களது நெஞ்சையெல்லாம் சூறையாடும் கயல்மீன் விழியினாள் அவள்.  திருத்தமான அழகினையுடைய முருக்கம் பூவினது அரும்பினைப் போலச் செக்கச் சிவந்திருக்கும் இதழ்களை  உடையவள் அவள்.  அழகிய வில்லைப் போல வளைந்து, இளம்பிறையின் வடிவினைப் போல விளங்கி, ஒளியுடன் திகழுகின்ற நெற்றியினையும் உடையவள் அவள்.

அரம்பையரின் தேசமாகிய வானுலகத்து வில்லாகிய வானவில்லும், இவள் புருவத்தின் அழகைப் பெறல் வேண்டும் என விருப்பமுற்று ஆசையாகச் சொல்லுமளவுக்கு, அழகாகத் தோன்றும் புருவங்களையுடையவள் அவள்.  ஆடவராகிய பிறரின் அறிவை எல்லாம் மயக்குகின்ற, ஒப்பற்ற ஒரு கர்வமானது குடிகொண்டிருக்கும் மங்கைப் பருவத்தினள் அவள்.  கருப்பஞ்சாறு போல இனித்தும், அமுதம் போல வாழ்வு தந்தும் விளங்கும் சொல்லினை உடையவளும் அவள், ஆரவாரிக்கும் கடலலைகள் கொணர்ந்து குவித்த முத்துக்களை, நிரையாகப் பதித்து வைத்தாற் போன்ற பல்வரிசையினையும் உடையவள் அவள்.


வசந்த வல்லியின் அழகு

இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு
    சுழி எறியும் கொண்டையாள்
ஏறி யாடி நெஞ்சைச் சூறையாடும்
    விழிக் கெண்டையாள்.
திருந்து பூமுருக்கின் அரும்புபோ
    லிருக்கும் இதழினாள்
                               சிலையைப் போல் வளைந்து பிறையைப் போல்
    இலங்கும்  நுதலினாள்.

அரம்பை தேசவில்லும் விரும்பி
                                                    ஆசை சொல்லும் புருவத்தாள்
                  அறிவை மயக்குமொரு கருவம் இருக்கும்
    மங்கைப் பருவத்தாள்.
     கரும்பு போலினித்து மருந்துபோல்
    வடித்த சொல்லினாள்
கத்துந் திரைகொழித்த முத்து
    நிரை பதித்து பல்லினாள்

31.1.13

அகல்விளக்கு.காம்

அகல்விளக்கு இணைய இதழ் 

அகல்விளக்கின் முகப்புத் தோற்றம்
பல்சுவை இணைய இதழாக இணையத்தில் வலம் வந்துகொண்டிருப்பது ‘அகல்விளக்கு.காம்’ ஆகும்.  இவ்விதழ 2011 அக்டோபர் 4 ஆம் தேதி அன்று பதிவு செய்யப்பட்டு அதே ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.  மாதம் இரு முறை என்னும் கால வரையறையுடன் வெளிவரும் அகல்விளக்கு 2013 பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் கால வரையறையின்றி புதிய பரிணாமத்தில் வர உள்ளது.  திரு. கோ.சந்திரசேகரன் என்பவர் இவ்விதழைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கிறார்.


அகல்விளக்கு இணைய இதழில் இடம்பெறும் படைப்புகள் பல வாசகர்களால் படைக்கப்படுபவை.  எவரும் படைப்புகளை எழுதி அனுப்பலாம்.  இதுவரை எவ்விதழிலும் வெளிவராத படைப்புகள் வரவேற்கப்படுகின்றன.

கால வரையறையை நீக்கியிருப்பதன் மூலம் படைப்பாளிகள் அனுப்பும் படைப்புகள அனைத்தும் உடனுக்குடன் வெளியிடப்படும் வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கௌதம் பதிப்பகத்தின் முக்கிய அறிவிப்புகள் இதழில் காணப்படுகின்றன.  அதுமட்டுமின்றி இப்பதிப்பகத்தாரால் நடத்தப்படுகின்ற இன்ன பிற தளங்களின் பெயர்களோடு கூடிய இணைப்புகளும் தரப்பட்டுள்ளன.

`வரலாறு’ என்னும் பகுதியில் ‘டுரோஜன் சண்டை மற்றும் டுரோஜன் குதிரை’ என்னும் தொடர் கட்டுரை இடம்பெறுகிறது. ‘இடங்கள்’ என்னும் பகுதியில் கவின் மிகு இடங்களைப் பற்றிய கட்டுரை இடம்பெற்று நம்மை ஈர்க்கிறது.  ‘சில்பரி மலை, ஆவ்பரி கல் வட்டங்கள் மற்றும் ஸ்டோன் ஹெஞ்ச்’ போன்றவை பற்றி கட்டுரைக்கப்பட்டுள்ளன.

`செய்திகள்’ என்னும் பகுதியில் நாட்டு நடப்பு செய்திகள இடம்பெறுகின்றன.  

படைப்புகளை வாசகர்கள் தங்கள் கைவசம் வைத்திருப்பின்,

கோ.சந்திரசேகரன்,
அகல் விளக்கு இணைய இதழ்,
எண் 2, சத்தியவதி நகர் முதல் தெரு,
பாடி, சென்னை 600 050
மின்ன்ஞ்சல் :admin@agalvilakku.com
என்ற முகவரிக்கு அனுப்பி படைப்புகளை இடம்பெறச் செய்யலாம்.

26.1.13

அறிவோம் முனைவர் க.துரையரசன் அவர்களை

முனைவர் க.துரையரசன், பேராசிரியர் 


கும்பகோணம் கல்லூரியில் உரையாற்றும் போது
கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரியில் தமிழ்த்துறையில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார்.
 
1991 ஆம் ஆண்டு கல்வியியலில் பட்டம் பெற்றார்.  பட்டம் பெற்ற பின்னர் ஆக்ஸ்போர்டு மேனிலைப் பள்ளியிலும் அதனைத் தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. மெட்ரிக் மேனிலைப் பள்ளியிலும் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 
 
ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலமாகப் போட்டித் தேர்வு நடத்திக் கல்லூரி ஆசிரியர்களைப் பணியமர்த்துகின்ற புதிய முறையைத் தமிழக அரசு நடைமுறைப்படுத்தியது.  முதல் முறையாக நடைபெற்ற இத்தேர்வில் திரு.துரையரசன் அவர்கள் வெற்றி பெற்று 1996 முதல் அரசு கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பண்யாற்றி வருகிறார்.
 
கணினி பற்றிய ஓரளவு புரிதலுடன் பணியாற்றி வந்த இவர் 2004 ஆம் ஆண்டு தமிழ் இணையப் பலகலைக்கழகத்தின் உதவி இயக்குநராகப் பணியாற்றும் அரிய வாய்ப்பினைப் பெற்றார்.  இங்குதான் கணினியில் ஆளுமைத் திறமும் இணையப் பயன்பாட்டுத் திறமும் பெற்றார்.
 
தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பணியைப் பரவலாக்கப் பரிந்துரைத்தவர்.  இவருடைய ஆலோசனையை ஏற்று வா.செ.குழந்தைசாமி அவர்களிடத்தில் ஒப்புதல் பெறப்பட்டு தமிழகத்தில் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் தமிழ் த.இ.ப.க பணிகளைப் பரவலாக்கும் அரங்குகள் நடத்தப்பட்டன.
 
2002-06 இல் மட்டுமே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் த.இ.ப.வின் பணிப்பரவலாகும் அரங்குகள் நடத்தப்பட்டன.  இங்ஙனம் நடத்தப்பெற்ற அரங்குகளில் எல்லாம் திரு.துரையரசன் அவர்கள் கலந்துகொண்டு செயல் விளக்கம் வழங்கியிருக்கிறார். 
 
இங்ஙனம் நடத்தப்பெற்ற அரங்குகளில் எல்லாம் இவர் கலந்துகொண்டு பயிற்சி அளித்த போது பெரும்பாலான மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் த.இ.ப பணிகள் பற்றிப் பெரிதும் தெரியவில்லை என்பதை அறிந்துள்ளார். 
 
இவை இவரின் மனதைப் பெரிதும் பாதித்தன.  உலகு தழுவி வாழும் தமிழர்களுக்கும் தமிழ் ஆர்வலர்களுக்கும் தமிழ் கற்பிக்கும் நோக்கத்திற்காகத் த.இ.ப. தொடங்கப்பெற்றது என்றாலும் அதன் பணிகள் தாய்த்தமிழ் நாட்டார்க்குத் தெரியாமல் இருக்கிறதே என்று கவலையுற்றிருக்கிறார்.
 
இக்கவலையுடன் பணியாற்றிய இவர் 2006 ஆம் ஆண்டில் `இணையமும் தமிழும்’ என்னும் தலைப்பில் பாடம் நடத்தும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார். இதன் மூலம் மாணவர்களிடம் இணையம் குறித்த செய்திகளையும் தமிழ் இணையம் குறித்த செய்திகளையும் கற்பிக்கத் தொடங்கியிருக்கிறார்.
 
இவ்வாறு கற்பித்ததன் விளைவாகத் தனக்குத் தெரிந்த அத்தனை விடயங்களையும் ஒன்றிணைக்க விரும்பி ‘இணையமும் இனிய தமிழும் ’என்னும் நூலை ஆக்கினார்.  இந்நூலைப் பற்றிய விமர்சனம் அடுத்த பதிவில் இடம்பெறுகிறது.

23.1.13

எல்லாரும், எல்லீரும்

எல்லாரும் எல்லீரும் புணரும் நிலை 
அத்து என்னும் சாரியைக் குறித்து நன்னூலார் என்ன சொல்கிறார்?

`த்து’ என்னும் சாரியையின் முதலில் ‘அ’ என்னும் உயிர் வரின் இயல்பினும் விதியினும் கெட்டுப் புணரும் என்கிறார்.

(உ.ம்)
மக+அத்து=மகத்து  ‘அ’ கெட்டது
மர+அத்து =மரத்து  ‘அ’ கெட்டது

”அத்தின் அகரம் அகரமுனை இல்லை” (252-நன்னூல்)

உருபுகள் புணரும் போதுஆய்தம் கெட்டுப் புணரும் நிலை:

அஃது, இஃது, உஃது என்னும் சுட்டுப் பெயர்கள் மொழி முதல் சுட்டெழுத்தின் முன் நிற்கும் ஆய்த எழுத்தானது, உருபுகள் புணரும்போது ‘அன்’ சாரியை வரின் கெடும்.  வராமலும் இருக்கும்.

(உ.ம்)
அஃது+ஐ=அதனை, அஃதை
இஃது+ஐ=இதனை, இஃதை
உஃது+ஐ=உதனை, உஃதை

“சுட்டின் முன் ஆய்தம் அன்வரின் கெடுமே” (251-நன்னூல்)

எல்லாரும், எல்லீரும் என்பவற்றுடன் உருபு புணரும் விதம்:
எல்லாரும், எல்லீரும் என்னும் சொற்களோடு ஆறு உருபுகளும் புணரும் போது ‘உம்’ நீங்கி ‘எல்லார்’ என்றாகும்.  பின்னர் எல்லாருடன் தம் சாரியைச் சேர்ந்து `எல்லார்தம்’ என்றாகும்.  எல்லார்தம் என்பதுடன் வேற்றுமை உருபு சேர்ந்து பின் `உம்’ என்பதும் சேரும்.

எல்லார்+தம்+ஐ_உம்=எல்லார் தம்மையும்

`எல்லீர் ’ என்ற சொல் புணர ‘நும்’ என்பதைச் சேர்க்க வேண்டும்.

எல்லீர்+நும்+ஐ+உம்=எல்லீர் நும்மையும்

“எல்லாரும் எல்லீரும் என்பவற்று உம்மை
தள்ளி, நிரலே தம், நும் சாரப்
புல்லும் உருபின் பின்னர் உம்மே” (246-நன்னூல்)

20.1.13

தமிழ் மென்பொருள் வளர்ச்சிக்கு வித்திட்ட அறிஞர்

ந. தெய்வ சுந்தரம் 
அறிவோம் திரு. ந. தெய்வ சுந்தரம் அவர்களை:

தமிழ்மொழி ஆய்வில் ஈடுபட்டு வருபவர் திரு.ந.தெய்வ சுந்தரம் ஆவார்.  சென்னைப் பலகலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் பேராசிரியராகவும் ஆய்வாளராகவும் இருந்து ஓய்வு பெற்றவர்.  தமிழ் மொழி குறித்த ஆய்வின் விளைவாகவும் மொழியியல் திறத்தினாலும் பல தமிழ் மென்பொருள்கள் உருப்பெற ஏதுவாக இருந்தவர்.  பல் திறத்த மென்பொருள் கட்டுநர்களையும் மொழியியல் வல்லுநர்களையும் ஒருங்கு கூட்டி தமிழ் மென்பொருள் உருவாகச் சிறப்பாகப் பணியாற்றியவர்.

கணினி மொழியியல் ஆய்வு, தமிழ் மென்பொருள் உருவாக்கம் முதலியவற்றில் தன்னுடைய ஈடுபாட்டை மேலிடச் செய்து தமிழ் இணைய வளர்ச்சிக்கு வித்திட்டு வருகிறார்.

அண்மையில் வெளிவந்த மெந்தமிழ்ச் சொல்லாளர் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு இவரின் முயற்சியில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

இவரின் `தமிழ் வளர்ச்சியில் கணினித் தமிழ்’ குறித்த கட்டுரையை இங்குக் காணலாம்.

14.1.13

பதிப்புத் துறையின் முன்னோடி

சி.வை.தாமோதரம் பிள்ளை 

பதிப்புத் துறையின் முன்னோடி என்னும் பெருமைக்கு இலக்கானவர் திரு.சி.வை.தாமோதரம் பிள்ளை ஆவார்.  தமிழ் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்து அரும்பணியாற்றியவர்.  இதனாலேயே `பதிப்பாசிரியர்’ என்று அடைமொழியிட்டு இவரைக் குறிப்பர்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் தமிழ்ப்பணி எத்தன்மையதோ அத்தனமயதே இவரின் (சி.வை.தா) பணியும்.  திரு.உ.வே.சா அவர்களின் சுயசரிதையான ‘என் சரித்திரம்’ என்னும் நூலைப் படித்தால் தமிழ் நூல்களைப் பதிப்பிக்க அவர் சந்தித்த அறைகூவல்களை நாம் அறியலாம்.  யாழ்ப்பாணம் தந்த ஆறுமுக நாவலரின் அரும்பணியும் இத்தன்மையதே.

காலப்பகுப்பின் அடிப்படையில் பார்த்தால் ஆறுமுக நாவலருக்குப் பின் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும் , இவருக்குப் பின் உ.வே.சா அவர்களும் தமிழ் நிலைக்கத் தம் பணியைச் செவ்வனே செய்துள்ளது தெரிய வருகிறது.

வைரவநாத பிள்ளை, பெருந்தேவி ஆகியோர்க்கு அருமைப் புதல்வனாகத் தோன்றியவரே தாமோதரம் பிள்ளை.  செப்டர்மர் 12 ஆம் நாள் 1832 ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாண்த்திலுள்ள சிறுப்பிட்டி என்னும் இடத்தில் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் எழுவர் ஆவர்.  இவரே மூத்தவர்.  தன் தந்தையின் மூலம் கல்விப் படிகளைக் கடக்க முயன்றார்.  பல நூல்களைத் தந்தையின் உதவியோடு கற்றிருக்கிறார்.  சுன்னாகம் முத்துக்குமர நாவலர் அவர்களும் சி.வை.தா வின் ஆசிரியராகத் திகழ்ந்திருக்கிறார்.  ஆங்கிலக் கல்வியைக் கைவரப் பெற்றிருக்கிறார் யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரிகளில்.  சட்டம் (1871) பயின்று உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர்.  தமிழ் இலக்கியங்களின் மீது ஆறாக் காதல் கொண்டொழுகியவர்.  இதனால் இலக்கண இலக்கிய நூல்களைப் படித்துத் தெளிந்தார்.

இவர் இந்திய நாட்டிற்கு 1853 ஆம் ஆண்டு வருகை புரிந்தார்.  சென்னைக்கு வந்து தங்கி தன் பணிகளை மேற்கொண்டார்.  1858 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலையால் நடத்தப்பட்ட பி.ஏ தேர்வில் சிறப்பான வெற்றி பெற்றார்.  கள்ளிக்கோட்டை அரசினர் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியதோடு அரசின் கணக்கராகவும் பணியாற்றினார்.

புதுக்கோட்டை நீதிமன்றத் தலைவராய் இருந்தவர்.  தமிழின் மீது இருந்த பற்றுதல் காரணமாகத் தன்னுடைய பணிகளுக்கிடையே பதிப்புப் பணியையும் மேற்கொண்டார்.  பழைய ஏடுகளைத் தூசு தட்டி அவற்றைப் பதிப்பிப்பது அருஞ்செயலாகும்.  இப்பணியில் தன்னை மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபடுத்திக் கொண்டார். 

தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் சேனாவரையர் உரை, பொருளதிகாரத்திற்குரிய நச்சினார்க்கினியர் உரை, இறையனார் அகப்பொருள், வீரசோழியம், கலித்தொகை, இலக்கண விளக்கம், சூளாமணி, திருத்தணிகை புராணம் ஆகியவற்றை அச்சிலேற்றியவர்.

உ.வே.சா அவர்களின் நட்பு இவருக்குக் கிடைக்கபெற்றது.  உ.வே.சா அவர்களுக்கு முன்னரே பதிப்புப் பணியில் ஈடுபட்டவர் திரு.சி.வை.தாமோதரம் பிள்ளை.  பதிப்புப் பணி குறித்த பல செய்திகளை சி.வை.தா அவர்களிடமிருந்து உ.வே.சா அறிந்திருக்கிறார்.  தன்னுடைய 33 ஆம் அகவையில் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சந்தித்திருக்கிறார் திரு.உ.வே.சா. அச்சந்திப்புக்குப் பின் தான் சீவகசிந்தாமணியைப்  பதிப்பிக்க மிகுந்த ஆர்வம் கொண்டார். சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள் வழங்கிய தூண்டுதல் தான் உ.வே.சா அவர்களை சீவக சிந்தாமணி பதிப்பு வெளிவரத் தூண்டியது.  இதனை உ.வே. சா வே அப்பதிப்பின் முன்னுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.(சான்று : தினமணி நாளிதழ் கட்டுரை- `பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை’)

இலக்கண நூல்களைப் பதிப்பித்த பெருமை இவரையேச் சாரும்.  இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா எனில் இலக்கணத்திற்கு சி.வை.தாமோதரம் பிள்ளை.

கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திர மாலை உள்ளிட்ட நூல்களைத் தாமே முயன்று (எழுதி)  வெளியிட்டார்.

1875 ஆம் ஆண்டு இராவ் பகதூர் விருது இவரைத் தேடி வந்தது.  தமிழக அரசு இவ்விருது வழங்கி இவரைச் சிறப்பித்தது.


10.1.13

தமிழ் இணைய மாநாடுகளும் கட்டுரைகளும்

மாநாடுகளும் கட்டுரைகளும் 
மிழ் இணைய வளர்ச்சியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இணைய மாநாடுகள் கருதப்படுகின்றன.  இம்மாநாடுகள் தான் தமிழை இணையத்தில் பயன்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு வித்திட்டது.  பன்னாடுகளில் நடைபெற்றுள்ள இவ்விணைய மாநாடு இதுவரை பதினோரு முறை நடத்தப்பட்டுள்ளது.  அண்மையில் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் பதினொன்றாவது தமிழ் இணைய மாநாடு நடைபெற்றது நினைவிருக்கலாம்.  
தமிழ் இணைய மாநாடுகள் எந்த நாட்டில் நடத்தப்படுகிறதோ அந்நாட்டின் முக்கியப் பல்கலைக் கழகங்களுடன் `உத்தமம்’  என்கிற அமைப்பும்  இணைந்து மாநாட்டை நடத்துகிறது.  

முதல் மாநாடானது 1997 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்றது.  

இரண்டாம் உலகத் தமிழ் இணைய மாநாடு 1999 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது.

மூன்றாம் உலகத் தமிழ் இணைய மாநாடு சிங்கப்பூரில் 2000 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

நான்காம் இணைய மாநாடு 2001 இல் மலேசியாவில் நடைபெற்றது.

ஐந்தாம் மாநாடு அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியாவில் 2002 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது.

ஆறாம் உலகத் தமிழ் இணைய மாநாடு 2003ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்றது.

ஏழாம் மாநாடு 2004 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்றது.

எட்டாம் மாநாடு 2009 ஆம் ஆண்டு செர்மனியில் நடைபெற்றது.

ஒன்பதாம் இணைய மாநாடு 2010 ஆம் ஆண்டு கோவை மாநகரில் செம்மொழி மாநாட்டுடன் இணைத்து நடத்தப்பட்டது.

பத்தாம் இணைய மாநாடு 2011 ஆம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள பென்சில்வேனியாவில் நடைபெற்றது.

பதினொன்றாம் மாநாடு சிதம்பரம் அண்ணாமலைப் பலகலையில் நடத்தப்பட்டது.

இதுவரை நடைபெற்ற மாநாடுகளில் பல கட்டுரைகள் படிக்கப்பட்டு விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன.  அக்கட்டுரைத் தலைப்புகள்ளுள் சில :

1. தமிழ் வரிவடிவச் சீரமைப்பு

2.தமிழில் சொல் திருத்தம்

3. கலைச்சொல்லாக்க உத்திகள்

4. யாப்பறிஞன்

5.இளங்சிங்கையரின் மின் கலை அனுபவமும் மனித நேய உலாவும்

6. கணினி வழியாக இலக்கண இலக்கிய மொழிப் பணிகள்

7. உலகத் தமிழ் மின்வெளி சமுதாயம்

8.கலைச்சொல்லாக்கமும் சில சிக்கல்களும்

9.ஆய்வு நோக்கில் கணினி உதவியுடன் அகராதி உருவாக்கமும் அகரவரிசைப்படுத்தமும்

10.தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்

11. கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல்

12. தமிழ்த் தரவுத்தளங்கள்

13. திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள்

14. தமிழ் இணைய அகராதி

15. இணையத்தில் கற்றல் - இராபிள்ஸ் கல்வி நிலையம்

16. தமிழ் முதுசொம் காப்பகம் - தோற்றம், வளர்ச்சி, நீட்சி

17. தகவல் தொழில்நுட்பத் தமிழ்க்கலை சொற்களைத் தரப்படுத்துதல்

18. தமிழக மாணவர்களுக்குக் கணினிக் கல்வி

19. தமிழகக் கல்வித் திட்டத்தில் டிஜிட்டல் கிராமப் பள்ளி முறை

20. இணையத்தில் தமிழ் முதல் நூல்