தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

26.2.13

பிழை நேரும் இடங்கள் அறிவோம்

பிழை தவிர்ப்போம்


 தமிழ் மொழியைப் பிழையின்றி எழுத ஏற்ற பயிற்சியைப் பெற்றிருப்பது இன்றியமையாதது.  ஒரு எழுத்து வர வேண்டிய இடத்தில் மற்றொரு எழுத்து வரப்பெற்றால் அங்கு பொருட்பிழை நேர்வதைக் காண்கிறோம்.  இதைத் தவிர்ப்பதற்கான சிறிய பதிவே இது.

சலி- சலிப்பு                                                                                                                                    
சளி- சளிபிடித்தல்

சூள்-சூளுரைத்த்ல்
சூல்-சூல் கொண்ட மலர்

சுன்னம் - பூஜ்ஜியம்/சுழியம்
சுண்ணம்- சுண்ணாம்பு

சீறடி- சிறிய அடி
சீரடி - புகழ் பெற்ற அடி

துரத்தல் - விரட்டுதல்
துறத்தல் - விடுத்தல்

தினை - உணவுப் பொருள்
திணை - அன்பின் ஐந்திணை/ ஒழுக்கம்

தாலி - கழுத்தில் அணிவது
தாளி - தாளித்தல்

தவலை - பாத்திரம்
தவளை - உயிரினம்

வண்மை- நா வண்மை
வன்மை - கல் வன்மையானது

பாளை - தென்னம் பாளை
பாலை - அன்பின் ஐந்திணைகளில் ஒன்று


கடப்பாரை - குழி தோண்டப் பயன்படுவது
பாறை - மலைப் பகுதி

பரவை - கடல்
பறவை - பறப்பன

நறை - வாசனை
நரை - வெள்ளை முடி

சொறி - காயம்
சொரி - பூச்சொரிதல்

சேணை - கிழங்கு
சேனை - படை

தேநீர் - டீ
தேனீர் -தேனியின் தண்ணீர்

துரவு - ஆழ்கிணறு
துறவு - துறத்தல்

குறவர் - குறிசொல்பவர்
குரவர் - சமயக் குரவர்

திண்- திண் தோள் வலிமை
தின் - உண்பது

பரி - பரிசல்,  குதிரை
பறி- பறித்தல்

25.2.13

இணைய மாநாட்டுப் புகைப்படங்கள்

மென்பொருள் கண்காட்சி

அண்மையில் நடைபெற்ற 11 ஆம் இணைய மாநாட்டில் மென்பொருள் கண்காட்சி மாநாட்டின் ஒரு பகுதியாக இடம்பெற்றிருந்தது. அக்கண்காட்சியைக் காண நான் சென்றிருந்த போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களைப் பகிர்கிறேன்.



இணைய மாநாட்டின் ஒரு பகுதியாக `மென்பொருள் கண்காட்சி ’ அமைக்கப்பட்டிருந்தது.  மக்கள் இணையத்தைப் பயன்படுத்துவது குறித்து அறிந்துகொள்வதற்காக ‘மக்கள் அரங்கம்’ ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 


மென்பொருள் கண்காட்சிக் கூடம்

ஈடுபாட்டுடன் மென்பொருள்களை வாங்கும் மக்கள்

மென்பொருள் கண்காட்சியின் மற்றுமொரு பகுதி

19.2.13

குயிலி இராஜேஸ்வரி

குயிலி இராஜேஸ்வரி 
பெண் நாவலாசிரியர்களுள் ஒருவராக வைத்து போற்றப்படுபவர் எழுத்தாளர் குயிலி இராஜேஸ்வரி ஆவார்.  இவர் சிறந்த சிறுகதை எழுத்தாளர்.  நாவலாசிரியர் கலை விமர்சகர்.  குழந்தைகளுக்காக கதைகளும், நாடகங்களும் பாடல்களும், நாட்டிய நாடகங்களும் எழுதியுள்ளார்.  இவர் குழந்தைகளுக்காக எழுதிய ‘பாரதி ஆத்திசூடி’ என்ற புத்தகம் மிகவும் சிறப்பாக வரவேற்கப்பட்டது.

நேஷனல் புக் டிரஸ்டுக்காக குழந்தைகளுக்கான இரண்டு புத்தகங்களை தமிழாக்கம் செய்திருக்கிறார்.  இவர் அமைத்து நடத்தி வந்த மாதங்கி மகேஸ்வரி பீம்ஸ் என்ற குழந்தைகள் சங்கத்தினர் வானொலியிலும் தொலைக்காட்சியிலும் மேடைகளிலும் கலை நிகழ்ச்சிகளைத் திறம்பட அளித்து வந்தனர்.

குயிலி இராஜேஸ்வரி அவர்களின் புகைப்படம் இருப்பின்
 sadishirisappan@gmail.com என்ற முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்.

குயிலி ராஜேஸ்வரி அவர்கள் பெரியவர்களுக்காக சுமார் இருபத்தைந்து புத்தகங்கள் எழுதியுள்ளார்.  இவரின் எழுத்துக்களை ஆங்கிலத்திலும் பார்க்கலாம்.  தெலுங்கு, மராத்தி, இந்தி போன்ற மொழிகளில் இவருடைய படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

சிங்கப்பூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்தில் ‘அன்பு சுடும்’ என்ற இவரது நாவல் பாடப் புத்தகமாக வைக்கப்பட்டிருந்தது.

நாங்கள் காணும் இந்தியா - தமிழகம், நாங்கள் காணும் இந்தியா - கேரளம் முதலிய நூல்களை எழுதியுள்ளார்.  இந்நூல்கள் சுற்றுலா செல்வோருக்கு ஏற்ற கையேடாகும்.  மாணவர்களுக்கு மிகுந்த பயனுடையதாய் கருதப்படுகிறது.  புதுச்சேரி பள்ளிகளிலுள்ள நூலகங்களில் இந்நூல்கள் மாணவர்களின் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

13.2.13

பத்தும் நூறும்

தொண்ணூறு, தொள்ளாயிரம் 
ஒன்பது என்ற எண்ணின் முன் பத்து, நூறு எவ்வாறு புணரும்?

ஒன்பது  என்ற எண்ணுடன் ‘பத்து’ ,`நூறு’ என்ற இரு எண்களும் வந்து புணரும்போது பத்தினை நூறாகவும், நூற்றை ஆயிரமாகவும் திரித்து, நிலைமொழியில் முதலிலுள்ள ‘ஒ’ என்னும் உயிர் எழுத்துடன் ‘த்’ என்னும் மெய்யைக் கூட்டி, நிறுத்தி, நிலைமொழியில் உள்ள பத்தை நீக்கி, அந்த நிலைமொழியில் முதல் எழுத்துக்குப்பக்கத்து எழுத்தினை முறையே ‘ண்’ என்ற மெய்யாகவும், ‘ள்’ என்ற மெய்யாகவும் மாற்றுவது முறையாகும்.

(உ-ம்)
ஒன்பது+பத்து=தொண்ணூறு
ஒம்பஃது+பத்து=தொண்ணூறு

ஒன்பது+நூறு=தொள்ளாயிரம்
ஒன்பஃது+நூறு=தொள்ளாயிரம்


``ஒன்பா னொடுபத்தும் நூறும் ஒன்றின்
முன்னதின் ஏனைய முரணி, ஒவ்வொடு
தகரம் நிறீஇப் பஃது அகற்றி, ணவ்வை
நிரலே ண, ளவாகத் திரிப்பது நெறியே”. ( நன்னூல் 194)

6.2.13

வசந்தவல்லியின் அழகும் திரிகூடரின் பாத்திறனும்

வசந்தவல்லி 
  தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றான ‘ திருக்குற்றாலக் குறவஞ்சி’ படிக்கப் படிக்க இன்பம் தரும் அற்புத படைப்பாகும்.  இயற்கையழகு கொஞ்சும் மலைகளின் வருணனை இன்றும் நம் கண் முன் அப்படியே வந்து நிற்கும் தன்மையதாய் உள்ளது.  குறக்குடியின் மேன்மை அவர்களின் பழக்கவழக்கம் முதலியவற்றைத் தெற்றென எடுத்தியம்பும் பாத்திறன் இப்பனுவலின் திறனை உலகறியச் செய்யும்.  இந்நூலில் இடம்பெறும்  வசந்தவல்லியின்  அழகினைப் பற்றி திரிகூட ராசப்பர்  சொல்லும் பாங்கு உணர்ந்து இன்புற வேண்டிய ஒன்று.  

இருண்ட மேகங்கள் தம்முள் சுற்றிச் சுருண்டு சுழி கொண்டு எறிந்தாற்போல விளங்கும் மயிரடர்ந்த கொண்டையினாள் அவள்.  காதளவு ஓடிக், காணும் ஆடவர்களது நெஞ்சையெல்லாம் சூறையாடும் கயல்மீன் விழியினாள் அவள்.  திருத்தமான அழகினையுடைய முருக்கம் பூவினது அரும்பினைப் போலச் செக்கச் சிவந்திருக்கும் இதழ்களை  உடையவள் அவள்.  அழகிய வில்லைப் போல வளைந்து, இளம்பிறையின் வடிவினைப் போல விளங்கி, ஒளியுடன் திகழுகின்ற நெற்றியினையும் உடையவள் அவள்.

அரம்பையரின் தேசமாகிய வானுலகத்து வில்லாகிய வானவில்லும், இவள் புருவத்தின் அழகைப் பெறல் வேண்டும் என விருப்பமுற்று ஆசையாகச் சொல்லுமளவுக்கு, அழகாகத் தோன்றும் புருவங்களையுடையவள் அவள்.  ஆடவராகிய பிறரின் அறிவை எல்லாம் மயக்குகின்ற, ஒப்பற்ற ஒரு கர்வமானது குடிகொண்டிருக்கும் மங்கைப் பருவத்தினள் அவள்.  கருப்பஞ்சாறு போல இனித்தும், அமுதம் போல வாழ்வு தந்தும் விளங்கும் சொல்லினை உடையவளும் அவள், ஆரவாரிக்கும் கடலலைகள் கொணர்ந்து குவித்த முத்துக்களை, நிரையாகப் பதித்து வைத்தாற் போன்ற பல்வரிசையினையும் உடையவள் அவள்.


வசந்த வல்லியின் அழகு

இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு
    சுழி எறியும் கொண்டையாள்
ஏறி யாடி நெஞ்சைச் சூறையாடும்
    விழிக் கெண்டையாள்.
திருந்து பூமுருக்கின் அரும்புபோ
    லிருக்கும் இதழினாள்
                               சிலையைப் போல் வளைந்து பிறையைப் போல்
    இலங்கும்  நுதலினாள்.

அரம்பை தேசவில்லும் விரும்பி
                                                    ஆசை சொல்லும் புருவத்தாள்
                  அறிவை மயக்குமொரு கருவம் இருக்கும்
    மங்கைப் பருவத்தாள்.
     கரும்பு போலினித்து மருந்துபோல்
    வடித்த சொல்லினாள்
கத்துந் திரைகொழித்த முத்து
    நிரை பதித்து பல்லினாள்