தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

9.11.12

குழந்தைக் கவிஞர்களுக்கு மகுடம் சூட்டுவோம் - 1

தணிகை உலகநாதன்:

குழந்தைகளுக்காக வேண்டி எண்ணற்ற பாடல்கள் பலரால் படைக்கப்பட்டுள்ளன.  இருந்தபோதிலும் இக்குழந்தை இலக்கியத்திற்கு வித்திட்டவர்களில் மூத்தோராக நம் எட்டயபுரத்துக் கவி பாரதியைக் கொள்ளல் வேண்டும்.  அனைவரும் புரிந்துபடிக்கும் வண்ணம் கவிதை யாத்தது குழந்தைகளையும் ஈர்த்து நின்றது.  
“வெள்ளை நிறத்தொரு பூனை எங்கள் வீட்டில் வளருது கண்டீர், பிள்ளைகள் பெற்றதப் பூனை அவை பேருக்கொரு நிறமாகும்”என்னும் பாடலின் மூலம் வேற்றுமை மாய்ந்து நாம் ஒன்றுபட வேண்டும் என்னும் கருத்தை வலியுறுத்தினார்.

அழ.வள்ளியப்பாவின் எழுத்துப் பணி குழந்தைகளை நடுவமாகக் கொண்டிருந்தது.  “கண்ணன் எங்கள் கண்ணனாம், கார்மேக வண்ணனாம், வெண்ணெய் உண்ட கண்ணனாம் மண்ணை உண்ட கண்ணனாம்” என்பனப் போன்ற வரிகள் அவரின் குழந்தை எளிமை வரிகளை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

இவ்வரிசையில் இப்பதிவில் பதியப்படுகின்ற குழந்தைக் கவிஞர் திரு. தணிகை உலகநாதன் ஆவார். இவர்  வேலூர் மாவட்டத்திலுள்ள  திருவத்திபுரம் என்னும் ஊரில் 01-10-1921 அன்று பிறந்தவர்.  தா.தணிகாசலம், சுந்தரம் அம்மையார் ஆகியோர் இவரின் பெற்றோராவர்.

குழந்தைக் கவிஞர்களின் வரிசையில் ஒருவராக வைத்துப் போற்றப்படுகிறார். `வீரத்துறவி விவேகானந்தர்'  இவர் எழுதிய நூல்களுள் ஒன்று.  பூஞ்சோலை, தேன்சுவைக் கதைகள், பாடும் பாப்பா, மாணவர் தமிழ் விருந்து, சிறுவர் நாடக விருந்து முதலிய பல நூல்களை எழுதியுள்ளார்.
தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்ற இவர் பல நூல்களுக்கு அணிந்துரை வழங்கியுள்ளார்.  அழ.வள்ளியப்பாவின் பாடல்கள் பல வெளிவருவதற்கு அவருக்கு உற்ற துணையாகத் திகழ்ந்திருக்கிறார்.


``சிறந்த கவிஞர்களில் புலவரும், வானொலி சிறுவர் சங்கப் பேரவையின் தலைவருமாகிய திரு.தணிகை உலகநாதன் அவர்கள் குறிப்பிடத்தக்கவர். 1954க்குப் பிறகு நான் எழுதிய கவிதை நூல்கள் அனைத்தும் அவர் பார்வையிட்ட பின்னரே வெளிவந்துள்ளன” என்று வள்ளியப்பா அவர்கள் கூறியுள்ளார்.

நம் சிறார்கள் அழகாகப் பாடும் `பொம்மை பொம்மை பொம்மை பார்’ என்னும் பாடலுக்கு ஆசிரியர் இவரே. 


“பொம்மை பொம்மை பொம்மை பார்

“பொம்மை பொம்மை பொம்மை பார்

புதிய புதிய பொம்மை பார்

கையை வீசும் பொம்மை பார்

கண்ணைச் சிமிட்டும் பொம்மை பார்

தலையை ஆட்டும் பொம்மை பார்

தாளம் போடும் பொம்மை பார்

எனக்கு கிடைத்த பொம்மை போல்

ஏதும் இல்லை உலகிலே”

நமக்கு இவ்வுலகில் எவரும் எதிரிகள் அல்லர் என்பதைக் குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டி, 


நான் எல்லோருக்கும் நல்லவனே

எலிக்குப் பகைதான் பூனை என
எவரும் அறிவர் உலகினிலே

பூனைக்குப் பகை நாயாகும்
போடும் சண்டை தெருவினிலே

புலியைக் கண்டால் மான் ஓடிப்
புதரில் புகுந்து மறைந்துவிடுமே

நண்டுக்குப் பகை நரியாகும்
நானும் நீயும் இதையறிவோம்

பழைய நாய்க்குப் புது நாய்தான்
பகையாம் இதனை அறியார் யார்?

பாம்புக்குப் பகை கீரி எனப்
பலரும் அறிவார் பாரினிலே

எனக்குப் பகையே இல்லை, நான்
எல்லோருக்கும் நல்லவனே.

 என்னும் பாடலை யாத்தளித்தார்.  
தமிழ் நாடு முழுவதும் மாணவர்மன்றத் தமிழ்த் தேர்வை நடத்துபவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.




No comments:

Post a Comment