தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

20.12.12

முடியரசன் பார்வையில் உண்மைக் கவிஞன் யார்?

கவிஞர் கவியரசு முடியரசன்
இவரின் பெற்றோர் சுப்பராயலு- சீதாலட்சுமி ஆவர்.  பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் துரைராசு என்பதாகும்.  தேனி மாவட்டத்திலுள்ள பெரியகுளத்தில் 07-10-1920 அன்று பிறந்தார்.  காரைக்குடியிலுள்ள மீனாட்சிசுந்தரனார் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.

முடியரசன், பாரதிதாசன் பரம்பரைத் தலைமுறைக் கவிஞர்களுள் மூத்தவர் என அழைக்கப்படுகிறார்.  தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா முதலியோரிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.

பறம்பு மலையில் நடைபெற்ற விழாவில் ‘கவியரசு’ என்னும் பட்டத்தை, குன்றக்குடி அடிகளார் இவருக்கு வழங்கிச் சிறப்பித்தார்.  1996 ஆம் ஆண்டு இவரின் பூங்கொடி காவியத்திற்காகத் தமிழக அரசு பரிசு வழங்கிப் பாராட்டியது.

வீரகாவியம், முடியரசன் கவிதைகள், பூங்கொடி முதலிய காவியங்களை இவர் படைத்துள்ளார்.  தமிழ் மொழி வளர தமிழை வாழ்த்தி இவர் பாடும் பாடல் நம்மை தமிழ்ப்பற்றுக்கு இலக்காக்கி ஈர்த்துச் சென்றுவிடும்.

தாயே உயிரே தமிழே நினைவணங்கும்
சேயேன் பெறற்கரிய செல்வமே - நீயே
தலைனின்றாய் இவ்வுலகில் தாள்பணிந்தேன் நீ இங்கு
இலை என்றால் இன்பம் எனக்கு ஏது?

உண்மைக் கவிஞன் யார் என்பதைப் பின்வரும் பாடலில் உறுதி செய்கிறார்.

‘ஆட்சிக்கும் அஞ்சாமல் யாவரேனும்
     ஆள்க எனத் துஞ்சாமல், தனது நாட்டின்
மீட்சிக்குப் பாடுபடுவன் கவிஞன் ஆவன்
    மேலோங்கு கொடுமைகளைக் காணும் போது 
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்
     காட்சிக்குப் புலியாகிக் கொடுமை மாளக்
கவிதைகளைப் பாய்ச்சுபவன் கவிஞன் ஆவன்
    தாழ்ச்சிசொலும் அடிமையலன் மக்கட் கெல்லாம்
தலைவனெனப் பாடுபவன் கவிஞன், வீரன்’

அன்புள்ள பாண்டியனுக்கு, நெஞ்சு பொறுக்குவில்லையே, பாடுங்குயில், ஞாயிறும் திங்களும், தமிழ் முழக்கம், வள்ளுவர் கோட்டம், தாய்மொழி காப்போம், எக்கோவின் காதல், எப்படி வளரும் தமிழ், மனிதரைக் கண்டுகொண்டேன், நெஞ்சிற்பூத்தவை, புதியதொரு விதி செய்வோம் முதலிய படைப்புகளோடு காவியப் பாவை, முடியரசன் கவிதைகள், கவியரங்கில் முடியரசன் ஆகிய காவியங்களையும் படைத்துள்ளார்.

முடியரசன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு கலைஞர் விருதும் 1987 ஆம் ஆண்டு பாவேந்தர் விருதும் 1998 ஆம் ஆண்டு கலைமாமணி விருதும் 1993 இல் அரசர் முத்தையாவேள் அவர்களின் நினைவுப் பரிசும் பெற்றார்.

இவரின் படைப்புகள் சாகித்திய அகாதெமியினால் இந்தி மற்றும் ஆங்கில மொழியில் பெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரிகளில் இவருடைய படைப்புகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளதோடு படைப்புகள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

திரைப்படங்களுக்குப் பாடல் மற்றும் கதை வசனம் எழுதி திரைத்துறைக்கு அரும்பணியாற்றினார்.  சில காலம் மதுரை காமராசர் பலகலைக்கழகத்தின் தமிழியற் துறையில் பணியாற்றியுள்ளார்.

2 comments:

  1. தெரியாத மனிதர் அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி

    ReplyDelete
  2. முடியரசன் கவிதைகள் காப்பிய நூலன்று. பூங்கொடி, வீரகாவியம், ஊன்றுகோல், இளம்பெருவழுதி ஆகியன வீறுகவியரசர் முடியரசனாரின் காப்பிய நூல்கள்.

    ReplyDelete