தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

31.7.13

காந்திஜியை காந்தியடிகள் என்றாக்கியவர் யார்?

தேசப்பிதா ‘காந்திஜியை’ ‘காந்தியடிகள்’ என்று குறிப்பிட்டு
பத்திரிகைகளில் எழுதியவர் திரு.வி.க அவர்கள் தான்.  சிலப்பதிகாரத்தில் வரும் கவுந்தி அடிகளைப் பற்றி படித்த போது காந்தியை ‘காந்தியடிகள்’ என்று குறிப்பிட வேண்டும் என்று தனக்குத் தோன்றியதாக திரு.வி.க ‘்நவசக்தி’ பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளார்.

அன்னிபெசண்ட் அவர்களை ‘அன்னை வசந்தை’ என்றே திரு.வி.க எழுதுவார்.  ‘வல்லரசு’ என்ற புதிய அரசியல் பதத்தை முதன்முதலில் உருவாக்கியவரும் திரு.வி.க அவர்கள் தான்.  

21.7.13

திரு.வி.க வின் பொன்மொழிகள் - 1

பொன்மொழிகள்
திரு.வி.க அவர்கள் தன் வாழ்நாளில் உதிர்த்தவை எல்லாமே பொன்னேடுகளில் பொறிக்கத்தக்கவை.  அவைகளுள் முத்தென விளங்கும் பொன்மொழிகள் இங்கு அடுக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவர வேண்டுமாயின் தமிழ் மக்கள் முதலாவது தங்கள் மொழியினிடத்துப் பற்றுக்கொள்ளல் வேண்டும்.  தமிழ் மக்கள் எம்மதத்தைப் பற்றி ஒழுகினும் ஒழுகுக அவர்கள் மொழிப்பற்றை மட்டும் விடுதலாகாது.
 
பெற்ற தாயின் அன்புக்கும் பிறந்த நாட்டின் பற்றுக்கும் ஊற்றாயிருப்பது பேசும் மொழியே ஆகும்.  பேசுந் தாய்மொழியின் மாட்டு அன்பில்லா ஒருவன் , தாயையும் நாட்டையும் பழித்தவனாவான்.
 
தமிழ் மகனே! விடுதலை விடுதலை என்று வெறுங் கூச்சலிடுவதால் பயன் என்ன?  விடுதலை முயற்சி விடுதலை தருவதாயிருத்தல் வேண்டும்.  விடுதலை விடுதலை என்று சிறைக்கூடத்தில் நோய்வாய்பட்டுள்ள தமிழ்த் தாயைச் சுற்றிலும் தீயிட்டு எரிப்பது அவர் நோய் போக்கும் மருந்தாகுமா என்பதை கவனிக்க.
 
தமிழ்மக்களே உங்களைத் தமிழ் மக்கள் என்று அழைக்கச் செய்திருப்பது எது?  அதை நினையுங்கள்.  அதை மறந்து ஆற்றப்படுந் தொண்டுகள் கடைக்காலில்லாமல் எழுப்பப்படும் கட்டடம் போன்றவையாகும்.  நீங்கள் எத்தொண்டு செய்யினும் அத்தொண்டின் அடிப்படையில் தமிழ் வேட்கை எழுச்சி இருத்தல் வேண்டும்.  அவ்வேட்கையால் உங்களைப் பலவாறு பிரித்துப் பிளக்க உங்கள் பால் இடைநாளில் தோன்றிய சாதிமதப் பூசல்கள் உங்களை விடுத்து இரிந்து ஓடும் அவ்வாற்றல் அமிழ்தினும் இனிய தமிழ் வேட்கைக்கு உண்டு என்பவை மறவாதேயுங்கள்.

17.7.13

சமச்சீர் கல்வி குறித்து புலவர் பெருந்தேவன் கூறுவது என்ன?

சமச்சீர் கல்வி


புலவர் பெருந்தேவன்
சமச்சீர் கல்வி குறித்து புதுச்சேரி புலவர் திரு.பெருந்தேவன் (இராமலிங்கம்) அவர்கள் நுட்பமான கருத்துக்களைத் தன்னுடைய ‘அரசியல் அறம்’ என்னும் நூலில் வெளிப்படுத்தியுள்ளார்.  அவர்தம் ஆழ்ந்த சிந்தனையை இங்குப் படித்து இன்புறுவோம்.

அறிவுக்கே கல்வி அறியார் பொருள்செய்
பெருவிருப்பம் கொள்ளல் பிழை.

கல்வி என்பது அறிவு வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு கற்கப்படுவதாகும்.  இதை அறியாதவர்களே பணம் சம்பாதிக்கும் பேராசை கொண்டு கற்று வருகின்றனர்.  இது பிழையானதாகும்.

அனைவர்க்கும் கல்வி அளிக்க; வளமை
தனக்கேற்ப நல்கல் தவிர்.

எவ்வகை வேறுபாடும் கருதாமல் அனைவர்க்கும் தரமான கல்விதருதல் வேண்டும்.  ஒரு சிலரின் வசதிக்கேற்ப உயர்கல்வி தருவதனை முற்றாகத் தவிர்த்தல் வேண்டும்.

உரமும் சமநிலையும் உள்ளன்பும் ஊட்டும்
தர்முடைய கல்வியினைத் தா.

குன்றாத வலிமை, சமமான நிலை, ஆழமான அன்பு ஆகியவற்றை நிலைபெறச் செய்யும் தகுதி வாய்ந்த கல்வியை அரசு அனைவர்க்கும் அளித்தல் வேண்டும்.

எந்தமுறை கற்பித்தற்கு ஏற்றமுறை அந்தமுறை
எல்லார்க்கும் ஈதல் இனிது

‘மெட்ரிக்’ முதலான நால்வகைக் கல்வி முறைகளில் இசைவான முறையைக் கண்டறிந்து அந்த முறையிலேயே அனைவர்க்கும் கற்பிக்க வேண்டும்.

 

15.7.13

சட்டசபையில் முதலில் தமிழில் பேசியவர்

சட்டசபையில் தமிழ்
 
சட்டசபையில் ஆங்கிலமே பேசப்பட்டு வந்த சமயத்தில் சேலத்தைச் சேர்ந்த பி.வி. நரசிம்மய்யர் என்பவர்தான் முதன் முதலாக சட்டசபையில் தமிழில் பேசினார்.  அவர் தமிழில் சட்டசபையில் பேசியது பற்றி எந்தப் பத்திரிகையும் குறிப்பு எழுதவில்லை. 
 
திரு.வி.க அவர்கள் மட்டும் தான் நடத்தி வந்த ‘தேசபக்தன்’ என்ற பத்திரிகையில் பி.வி. நரசிம்மய்யர் தமிழ் மொழியில் சட்டசபையில் பேசியதைப் பற்றிபாராட்டி எழுதினார்.

13.7.13

திரு.வி.கவும் மறைமலையடிகளும் வேறுபட்டு நின்ற இடங்கள்

திரு.வி.க - மறைமலையடிகள் கருத்து வேறுபாடுகள்
திரு.வி.க மறைமலையடிகள் பால் ஒரு சிறிது கருத்து வேறுபாடு உடையவராய் இருப்பினும் அதனைப் பெரிதாகக் கருதாமல் சிறந்த தொண்டராகவே அன்புநிலை மாறாமல் இருந்தார்.  ஆயினும் அரசியல் துறையில் அடிகள் போக்கு வேறு திரு.வி.க வின் போக்கு வேறு.

``அடிகள் எழுத்தில் ஆசிரியர்.....
தமிழர் என்ற பிரிவை வளர்க்கும்
கருவிகளிருக்கின்றன, அவை மக்களின்
ஒருமைப்பாட்டையும் வளர்ச்சியையும் குலைக்கும்”
என்பது திரு.வி.கவின் உட்கிடக்கையாக இருந்தது.

மறைமலையடிகள் சமய நூல்களிலும், மெய்யறிவு நூல்களிலும் புகுந்து ஆய்வு செய்து வெளியிடுங் கருத்துகளைத் திரு.வி.க மனம் ஏற்பதில்லை.  ச்மயம், மெய்யறிவு ஆகியவை ஆய்வுக்கு எட்டாதன என்பதும் இவ்வாய்வால் மக்கள் வாழ்க்கை நலம் பெறாது என்பதும், இவை முரட்டுக்கும் மூர்க்கத்துக்கும் இரையாகும் என்பதும் திரு.வி.க வின் எண்ணமாகும்.  திரு.வி.க எம்மதமும் ஒன்றே எனுங் கொள்கையர்.  அடிகளாரோ சைவசமயமே சமயம் எனும் கொள்கையர்.

திரு.வி.க மறைமலையடிகள் ஆகியோரிடை மொழி, சமயம், அரசியல் நிலைகளில் கருத்து வேறுபாடுகள் இருப்பினும், தமிழ்மொழி, தமிழினம், தமிழ்நாடு என்ற அளவில் முன்னேற இருவரும் அயராது பாடுபட்டனர்.  இவ்விருபெரும் அறிஞர்களால் தமிழகத்தில் ஒரு பெரும் மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பதில் யார்க்கும் ஐயமில்லை.  இவ்வறிஞர் வழிநின்று புதியதொரு தமிழுலகைப் படைத்தல் வேண்டும்.

12.7.13

அறிவோம் நாயன்மாரை: மூர்த்தி நாயனார்

அறிவோம் நாயன்மார்களை
 புகைப்படத்திற்கு நன்றி: சிவம் தளம்

மூர்த்தி நாயனார்
புகழ்பெற்று விளங்கும் பாண்டிய நாட்டின் தலைநகரான மதுரை மாநகரில் வணிகர் குலத்தில் அவதரித்தவர், மூர்த்தி நாயனார்.  அவர் எப்பொழுதும் சிவபெருமானது திருவடியையே சிந்தித்துக் கொண்டிருப்பார்.   நாள்தோறும் மதுரை சோம சுந்தரப் பெருமானுக்குச் சந்தனக் காப்பு வழங்குவதையே பெருந்தொண்டாகக் கருதி வந்தார்.
அந்நாளில் வடுக சாதியைச் சேர்ந்த கன்னட தேசத்து அரசன் ஒருவன் மதுரை மீது போர் தொடுத்து வெற்றி கொண்டான்.  அவன் சமண சமயத்தை ஆதரித்து வந்ததால் சைவர்களும் சிவனடியார்களும் துன்புற்றனர்.  மேலும் அவன் மூர்த்தி நாயனாருக்குச் சந்தனக் கட்டை கிடைக்காமல் இருக்கத் தடை செய்தான்.
இந்நிலையில் ஒரு நாள் சந்தனக் கட்டையை எங்கு தேடியும் கிடைக்காமல் போனதால் வருத்தமுற்ற மூர்த்தியார் இறைவனது திருக்கோயிலை வந்தடைந்தார்.  ஏதேதோ சிந்தித்து இறுதியில் தனது முழங்கையைச் சந்தனக் கல்லில் தேய்த்தார் அதனால் நரம்பும் எலும்பும் தேய்ந்தன.  இரத்தம் பெருகியது.  அதைக் கண்ட சோமசுந்தரக் கடவுள் அசரீரி மூலம் பின்வருமாறு ஆறுதல் கூறினார்.
``அன்பனே! என் மீது கொண்ட பக்தியினால் சந்தனக்கட்டை கிடைக்கவில்லையே என்று ஏங்கி, உன்கையைத் தேய்த்து இரத்தம் பீறிடச் செய்தாய்.  உன் பக்தியை நாம் மெச்சினோம்.  சிவனடியார்களுக்குத் துன்பம் செய்யும் அரசன் இன்றிரவே இறந்துவிடுவான்.  அவன் இறந்தபின் நீரே இந்த நாட்டின் சிம்மாசனத்தில் அமரப் போகிறீர்.  உன்னால் இங்கே சைவ சமயமும், சிவனடியார்களும் சிறப்பு அடையப் போகிறார்கள்!”
இந்த அசரீரி வாக்கைச் சோமசுந்தரரே கூறியபடியால், மூர்த்தி நாயனார் மிகவும் மனமகிழ்ந்து சோமசுந்தரக் கடவுளைப் பக்தியுடன் தோத்திரம் செய்தார்.
சோம சுந்தரக் கடவுளின் அருளால் எழுந்த அசரீரி வாக்கின்படியே அன்று இரவே கருநாடக தேசத்து அரசன் இறந்து நரகத்துக்குச் சென்றான்.  மன்னன் இறந்துவிடவே மதுரை மாநகரே இன்புற்றது.

6.7.13

12 வது தமிழ் இணைய மாநாடு

12ஆவது உலகத் தமிழ் இணைய மாநாடு
 (உத்தமம் தளத்தின் செய்தி)
முழு கட்டுரைகளை அனுப்புதல் கடைசி நள் 10 ஜுலை 2013
முழு கட்டுரைகளை அனுப்பவேண்டிய கடைசி நாள் 10 ஜுலை 2013 ஆகும். மாநாட்டுக் குழு ஆய்வுச் சுருக்கங்களைப் பரிசீலித்து மாநாட்டில் சமர்ப்பிக்கப்படும் கட்டுரைகளைத் தேர்ந்தெடுக்கும்.
பேரா. மு. அனந்த கிருஷ்ணன் ஆய்வுக் கட்டுரைப் போட்டி:
மாநாட்டில் கலந்து கொள்ளும் ஆய்வாளர்களில் நான்கு (4) சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்கு பே.ரா. மு. அனந்த கிருஷ்ணன் விருது வழங்கப்படும்.
கீழ்க்கண்ட தலைப்புகளில் கட்டுரைகளை வரவேற்கிறோம்:
  • செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில் முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு மற்றும் விண்டோஸ் தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
  • மின் நூல்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
  • ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு, விண்டோஸ் மற்றும் எச்.டி.எம்.எல் 5 குறுஞ்செயலிகள் (Apps).
  • திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
  • இயன்மொழிப் பகுப்பாய்வு பிழைதிருத்தி,  தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடல்பொறிகள் , இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
  • தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
  • தமிழ் தரவுத்தளங்கள்.
  • கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
  • தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்.
  • கணினி வழி தமிழ்மொழி  பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்.
கட்டுரைகள் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே அனுப்பப்படவேண்டும். ஆய்வுச் சுருக்கங்களும் இறுதிக் கட்டுரையும் திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் வடிவில், மைக்ரோசாஃப்ட் வேர்ட் அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம். பி.டி.எஃப் அல்லது அதுபோன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படா. கட்டுரைகள் ஆங்கிலத்திலோ, தமிழிலோ அல்லது இரு மொழிகளும் கலந்த வகையிலோ இருக்கலாம். தமிழில் அல்லது இருமொழியில் இருந்தால், யூனிகோட் குறியீட்டில் மட்டுமே இருக்கலாம். பிற குறியீடுகளைக் கொண்டு அனுப்பப்படும் கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டா.
மாநாட்டு இதழ் ஒன்று அச்சு வடிவிலும் மின் வடிவிலும் வெளியிடப்படும். ஏற்றுக்கொள்ளப்பட்டு, மாநாட்டில் நேராகப் படிக்கப்படும் ஆய்வுக் கட்டுரைகள் மட்டுமே மாநாட்டு இதழில் சேர்த்துக்கொள்ளப்படும். கட்டுரைகள் அனுப்புவோர் நேராக மாநாட்டுக்கு வந்து கட்டுரைகளைப் படிக்க ஒப்புக்கொள்கிறார் என்று புரிந்துகொள்ளப்படும்.
(ஏ4 அளவில்) இரு பக்கங்களுக்கு மிகாது கட்டுரைச் சுருக்கங்களை நிகழ்ச்சிகள் குழுவுக்கு cpc@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவையுங்கள். கட்டுரை வந்து சேர்ந்தது குறித்து உடனடியாக உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்படும். மேலும் கட்டுரைச் சுருக்கங்களை ti2013.infitt.org என்ற இணைய தளம் மூலமும் சமர்ப்பிக்கலாம். முழு கட்டுரைகளை  அனுப்பக் கடைசி தேதி ஜுலை 10, 2013 ஆகும்.
ஆய்வு இறுதிக் கட்டுரை திருத்தக்கூடிய வடிவத்தில் மட்டுமே அனுப்பப்படவேண்டும். இவை உரைக் கோப்புகளாக, எச்.டி.எம்.எல் வடிவில், மைக்ரோசாஃப்டு வேர்டு அல்லது ஓப்பன் ஆஃபீஸ் கோப்புகளாக இருக்கலாம்.
பி.டி.எஃப் போன்ற திருத்தமுடியாத வடிவங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.