தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

9.3.14

பொருள் இலக்கணத்திற்காக எழுந்த நூல்கள்

பொருள் சொல்லிய நூல்கள்
     தமிழ் இலக்கண நூல்கள் பற்றியும் அவற்றின் வரலாறு பற்றியுமே தனி நூல் படைக்கலாம்.  எப்படியாயினும் தொல்காப்பியமே முதனூல் என்னும் பெருமையைப் பெறுகிறது.  எழுத்து, சொல் பற்றிய இலக்கணம் பொதுவான ஒன்றாகக் கருதப்படுகிறது.  பொருளிலக்கணமோ சிறப்பான ஒன்றாகப் போற்றப்படுகிறது.  இத்தகையச் சிறப்புமிக்கப் பொருளிலக்கணஞ்சுட்ட எழுந்த பொருள் நூல்களை இப்பதிவில் பட்டியலிடுகிறேன்.
 
1. இறையனார் களவியல் - இறையனார் - கி.பி.8 ஆம் நூற்றாண்டு - அகப்பொருள் பற்றி கூறுகிறது.
2. பன்னிருபடலம் - கி.பி. 8 ஆம் நூற்றாண்டு - புறப்பொருள் பற்றி கூறுகிறது ( நூல் கிடைக்கவில்லை)
3. புறப்பொருள் வெண்பா மாலை - ஐயனாரிதனார்- கி.பி.10 ஆம் நூற்றாண்டு- புறப்பொருள் பன்னிருபடலம் இதன் முதனூல் என்பர்- புறப்பொருள் பற்றி கூறுகிறது.
4. நம்பியகப்பொருள் - நாற்கவிராச நம்பி - கி.பி.12 ஆம் நூற்றாண்டு - அகப்பொருள் பற்றி கூறுகிறது.
5. தமிழ் நெறிவிளக்கம் - கி.பி.12 ஆம் நூற்றாண்டு - அகப்பொருள் பற்றியது.
6. களவியற் காரிகை - அகப்பொருள் முழுமையாகக் கிடைக்கவில்லை
7. மாறனகப்பொருள் - திருக்குருகைப் பெருமாள் கவிராயர் - கி.பி. 17 - அகப்பொருள்
 

8.3.14

மூவண்ணங்கள் - தமிழ் தமிழர் வரலாறு எழுத நெறி வகுக்கிறது.

வண்ணமும் வரலாறும்
வடமொழிக் கலப்பால் தெலுங்கு, கன்னடம், மலையாளம்  ஆகிய மொழிகள் பெரிதும் வேறுபடுத்தப்பட்டன.  தமிழிலிருந்து பிரிந்த சுவடும் தெரியாமல் இடைவெளி பெருகிப் போனது.  ஆனால் தமிழ் ‘உள்ளீடு மாறாத வண்ணப் பூச்சுப் போலவே’ வடமொழியை ஏற்றுள்ளது.  இவ்வடமொழி வண்ணந்தானும் மூவகையாகப் பகுத்துணர்தலுக்குரியது.  மறைக்காட்டை வேதாரண்யம் எனவும் முதுகுன்றத்தை விருத்தாசலம் எனவும் மாற்றியது போல் நேர்ந்த பெயர் மாற்றங்களும் சொற்கலப்புகளும் வெளிவண்ணமென்றே கருதுதற்குரியன.  புராண, இதிகாசங்களை ஏற்றதும் இலக்கிய, கலைக் கலப்புகளும் உள்வண்ணம் என மதித்தற்குரியன.  தமிழிசை மாறிக் கருநாடக இசையாகியதும் பரதக்கலை தென்னகத்திற்கேயுரிய கலையாக இருந்தும் வடநூல் வழிப்பட்டதும் சமயத்துறையில் ஏற்பட்ட கருத்துக் கலப்பும் பிறவும் உட்கலப்பு வண்ணமெனற்கு உரியன.  இவற்றால் எல்லாம் தமிழும் தமிழர் பண்பாடும் பெரிதும் பாதிக்கப்படாமை கருதியே இவை வண்ணம் அல்லது வெளிப்பூச்சு எனப்பட்டன.  தமிழ்மொழியைப் பொறுத்தவரை “வடமொழிக் கலப்பைப் பெரும்பகுதியோ அல்லது முழுவதுமாகவோ தமிழ்மொழி தவிர்த்துவிடுதல் கூடும்.  அங்ஙனம் தவிர்த்தலின் மூலமாக அது தூய, மிகச் சிறந்த நிலையை எய்துகிறது”. என்ற கால்டுவெல் ஐயர் அவர்களின் கருத்து இங்கு நினைத்தற்குரியது.  மேற்சுட்டிய ஏற்புநிலை, எதிர்நிலை, ஆதிக்க நிலை என்பனவும் இங்குச் சுட்டிய மூவண்ணப் பூச்சு நிலைகளும் தமிழர், தமிழ் வரலாறு எழுதக் கைக்கொள்ள வேண்டிய நெறிமுறைகளாகும்.