தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

10.9.12

மறைமலையடிகளைப் பின்பற்றிய திரு.வி.க

திரு.வி.கவும் மறைமலையடிகளும்:

திரு.வி.க மறைமலையடிகளிடத்தும் அவருடைய குடும்ப உறுப்பினர்களிடத்தும் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.  முதலில் மறைமலையடிகளை நெருங்கத் தயக்கங்காட்டினார்.  அதற்கு, தங்குரு கதிரைவேலருக்கும் அடிகளாருக்கும் நிகழ்ந்த சொற்போரே காரணமாகும். 
1910 ஆம் ஆண்டு சிந்தாதிரிப்பேட்டையில் மறைமலையடிகளார் ஓர் சொற்பொழிவை நிகழ்த்தினார்.  அதனை திரு.வி.க கேட்க நேர்ந்தது; அன்று முதல் அடிகளாரின் பெருந்தொண்டரானார்.  அவரை பின்பற்றத் தொடங்கினார்.  மறைமலையடிகள் எங்கெல்லாம் சொற்பொழிவாற்றச் செல்கிறாரோ அங்கெல்லாம் சென்று அவரின் சொற்பொழிவினைக் கேட்டார்.
1929 ஆம் ஆண்டு சைவர் மாநாடு ஒன்று திருப்பாதிரிப்புலியூரில் நடைபெறவிருந்தது.  அதற்கு அடிகளார் தான் தலைமை ஏற்றார்.  சொற்பொழிவையும்
நிகழ்த்தினார்.  இம்மாநாட்டுக்கு ஞானியார் அடிகளார் ஏற்பாடு செய்திருந்தார்.  மாநாட்டின் இறுதி நாளில் திரு.வி.க வின் சொற்பொழிவு நிகழ்வதாயிருந்தது.  அவ்வாறே திரு.வி.க சொற்பொழிவாற்றினார்.  திருஞானசம்பந்தரைப் பற்றி அவர் ஆற்றிய உரையை மறைமலையடிகள் கேட்டு நெஞ்சுருகினார்.  தன்னையே மறந்து நின்றார்.  அன்று முதல் திரு.வி.க, மறைமலையடிகளால் போற்றப்படத் தொடங்கினார்.  ஈர்ப்பும் அதிகமாயிற்று.
“அறிவும் ஆற்றலும் உண்மையும் செறிந்த விரிவுரை கேட்ட அடிகளே மெய்ம்மறந்து, நமது ஆண்டவன் ஆளுடைய பிள்ளையாயுன் மூலமாகவே இறைவனைக் காணல் வேண்டுமென்ற உண்மையை அறிவானும், அனுபவத்தானும், மிகத் திறம்பட அழகமையப் பொருந்திக்காட்டி நம்மனைவர் நெஞ்சையெல்லாம் நீராயுருக்கிய திருவாளர் திரு.விக வுக்கு நாம் இப்பிறவியில் அல்லாது எப்பிறவியிலும் கடப்பாடுடையோமாயிருத்தல் வேண்டும்.  திருஞான சம்பந்தர் வாயிலாக உண்மைக் கடவுட் காட்சியைக் காண்டல் வேண்டுமென எடுத்துரைத்த இவரை நாம் தெய்வமாகக் கொள்வோமாக என்று உரைத்தாரென்றால் ஏழையேங்கள் தங்களை எம்மொழியில் போற்றிப் புகழ்ந்துரைப்போம்என்று ஞானியார் சங்கம் பாராட்டுத் தெரிவித்தது.

No comments:

Post a Comment