தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

24.3.13

ஞானியுடன் தமிழும் சைவமும்

பழநி என்னும் ஞானியார்
ஞானியார் அடிகளார்
17-05-1873 ஆம் தோன்றியவர் திரு ஞானியார் அடிகள்.  பழநி என்னும் இயற்பெயரைக் கொண்டவர்.  திருப்பாதிரிப்புலியூரில் ஞானியார் மடாலயத்து நான்காம் பட்டத்து சிவசண்முக பரமசிவ மெய்ஞ்ஞான சிவாச்சாரியார் தமது உறவினரான பழநியின் தந்தையைத் திருப்பாதிரிப்புலியூருக்கு அழைத்துக் கொண்டார்.  அப்பொழுது பழநிக்கு ஆறு மாதங்கள் தான் ஆகியிருந்தன.

நான்காம் பட்டத்து சிவசண்முக மெய்ஞ்ஞான சிவாச்சாரியார் உடல் தளர்வுறத் தொடங்கியது.  அப்போது பழநி பள்ளிப்படிப்புப் படித்துக் கொண்டிருந்தார்.  பள்ளிப்படிப்பைப் பாதியில் நிறுத்தி விட்டு துறவு மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.  அதனை பழநி ஏற்றுக்கொண்டார்.  20-11-1889 ஆம் ஆண்டு துறவு தந்து ஞானியார் மடத்தின் அருள் தலைவராகப் பட்டம் சூட்டப்பெற்றார். 

நான்காம் சிவாசாரியாரின் மறைவுக்குப் பின் பழநி தன்னுடைய பதினேழாம் வயதில் ஞானியார் மடத்தின் ஐந்தாம் பட்டத்து அடிகளாரானார்.

ஆதீனத் தலைமையை ஏற்றுக்கொண்ட ஞானியார் அடிகள் தன்னுடையக் கல்வியில் முழு ஈடுபாடு காட்டலானார்.  தமிழ், ஆங்கிலம் என பன்மொழிகளை ஆசிரியர்களை நியமித்து கற்றறிந்தார்.  ஆழ்ந்த புலமை எய்தினார்.  

நன்கு கற்றுத் தேர்ந்த பின் பெருமழைப் பொழிவது போல சொற்பொழிவாற்றும் தன்மையராய் விளங்கினார்.  நான்கு ஐந்து மணி நேரங்கள் வரை சொற்பொழிவாற்றும் ஆற்றல் பெற்றிருந்தார்.  இவ்வகையில் மக்களும் சோர்ந்து போவதில்லை.  இவர்தம் பேராற்றல் கண்டு வியப்புற்று அவரையே நோக்கியிருப்பர்.  தமிழுக்கும் சைவத்திற்கும் இவர் ஆற்றிய தொண்டுகள் அளப்பரியது.  இவரால் தமிழும் சைவமும் தழைத்தோங்கின.

சொற்பொழிவாற்றும் நேரம் ஒழிந்த பொழுதுகளில் மாணாக்கருக்குப் பாடம் புகட்டும் பணியையும் இடையே மேற்கொள்வார்.  பல புலவர் பெருமக்களும் வந்து இவரிடம் ஐயம் களைந்து செல்வர்.  ஞானியாரின் மாணவர்களாய்ப் புகழ் பூத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் மு.இராசாக் கண்ணனார், லால்குடி அ.நடேச முதலியார், ந. ஆறுமுக முதலியார் முதலியோராவர்.

தமிழ் வளர்ச்சி பெற தொண்டாற்றியதோடு மதுரைத் தமிழ்ச் சங்கம், சைவசித்தாந்த மகா சமாஜம் முதலியவை உருப்பெறவும் கருத்தாவாக இருந்தார்.  பல பள்ளிகளையும் நிறுவினார்.  

பிறருக்குப் பாடம் புகட்டுவதிலும் சொற்பொழிவிலும் அதிக ஆர்வங்கொண்டிருந்தமையால் பன்னூல்களை எழுதும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கப்பெறவில்லை.  திலகவதி அம்மை துதி, ஞான தேசிக மாலை என்பன இவர் இயற்றிய நூல்களாகும்.  

அடிகளாரின் மாணவரான மு.இராசாக்கண்ணனார் அவர்கள் அடிகளார் நிகழ்த்திய சொற்பொழிவைத் தொகுத்து `கந்தர் சஷ்டி சொற்பொழிவுகள்’ என்னும் தலைப்பில் நூலாக வெளியிட்டார்.

ஞானியாரடிகள் தன்னால் இயன்றவற்றையெல்லாம் அருந்தமிழுக்கும் சைவத்திற்கும் செய்துவிட்டு 1-2-1942 இல் காலமானார்.

பகுத்தறிவுப் பகலவன் ஈ.வே.ராமசாமி அவர்கள் தொடங்கிய `குடியரசு இதழ் ’குறித்து நாம் அறிவோம்.  இவ்விதழின் தொடக்க விழாவிற்கு நம் பெரியார் திரு.ஞானியார் அடிகளாரை அழைத்திருந்தார் என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?

23.3.13

பெரியாருக்குப் பாவேந்தரின் வாழ்த்து மடல்

வாழ்த்து மடல்

பாவேந்தர்
பாவேந்தர் அவர்கள் பெரியாருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பைப் பெற்றவர்.  அவ்வாறு நெருங்கிப் பழகும் வாய்ப்பு 1928 ஆம் ஆண்டு தோற்றம் பெற்றது.  அவ்வாண்டில் தான் பெரியார் பாவேந்தர் சந்திப்பு நிகழ்ந்தது.  1928 ஆம் ஆண்டில் புதுச்சேரியில் பெரியார் பேசிய பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது.  அப்பொதுக்கூட்டத்தில் பாவேந்தர் கலந்து கொண்டார்.  பெரியார்தம் கொள்கைகளில் மிகுந்த ஈடுபாடு கொண்டார்.  பெரியாரின் பகுத்தறிவுக் கொள்கையை சுயமரியாதைக் கொள்கையை முழங்கும் பீரங்கியாகத் தோற்றம் பெற்றார்.

தொடர்ந்து பெரியாரின் கொள்கைகள் குறித்துத் தன் இதழில் எழுதலானார்.
பெரியார் அவர்கள் 10-2-1929 அன்று புதுச்சேரி பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்.  பாவேந்தர், பெரியாருக்கு வரவேற்பு வாழ்த்துமடல் வழங்கினார்.  அவ்வாழ்த்து மடல் வரிகள்........

வருக உயர் இராமசாமிப் பெயர்கொள்
  அறிஞ, உன்றன் வரவால் இன்பம்
பருக வரும் இந்நாளை வாழ்த்துகின்றோம்
  பனிபறக்கத் தகத்த காயம்
பெருக வரும் செங்கதிர் போல் மடமை வழக்
  கம்பறக்கப் பீடை இங்கு
மருவ வைத்த பார்ப்பனியம் வடு வின்றிப்
  பறக்க உனை வரவேற்போமால்
சுயமரியா தைப் பெயர்கொள் பயிர்செழிக்கத்
  தொண்டு செய்யும் இராமசாமித்தலைவா
புயத்தெதிரே புவிபெயர்ந்து வரும்போது
  புலன் அஞ்சாத் தன்மையுள்ள கர்மவீரா
செயற்கரிய செயப்பிறந்த பெரியோய் இந்தச்
  செகத்துநிலை நன்கறிந்த அறிவுமிக்கோய்
வியப்புறு நின் இயக்கமது நன்றே வெல்க
  மேன்மை யெல்லாம் நீ எய்தி வாழ்க நன்றே!

புகைப்பட நன்றி: புதுத்திண்ணை

22.3.13

ஞானாலயா - ஆய்வு நூலகம்

அரிய முயற்சி

ஞானாலயா ஆய்வு நூலகம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரிய பொக்கிஷமாகும்.  ஓய்வு பெற்ற ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவருடைய மனைவி டோரதி கிருஷ்ண மூர்த்தி ஆகியோரின் அரிய முயற்சியே இப்புதுக்கோட்டை ஞானாலயா ஆய்வு நூலகம்.  டோரதி கிருஷ்ணமூர்த்தி ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியராவார்.
புதுக்கோட்டை சமஸ்தானம் ஆங்கிலேயரிடம் அதிக உரிமை எடுத்துக்கொண்ட சமஸ்தானம்.  இயல், இசை, நாடகம் என தமிழ் சார்ந்த கலைகளில் சிறப்புற்றிருந்தது புதுக்கோட்டை சமஸ்தானம்.  இத்தகைய சிறப்புமிக்க புதுக்கோட்டைக்கு மற்றொரு சிறப்பாக அமையப்பெற்றிருப்பதே ‘ஞானாலயா ஆய்வு நூலகம்’.

எதற்கெடுத்தாலும் சென்னைக்குச் செல்லும் போக்கு தவிர்க்கப்பட வேண்டி தமிழகத்தின் மையப்பகுதியில் இப்புத்தக நூலகத்தை நிறுவியுள்ளார் திரு.கிருஷ்ணமூர்த்தி.  தன் மனைவி இரு மகள்கள் மருமகன்கள் என குடும்ப அங்கத்தினர் அனைவரும் ஒன்றிணைந்து இப்பணியை மேற்கொள்கின்றனர்.

நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய நண்பர்களையும் தன்னைப் போன்றே மாற்றியிருக்கிறார்.  தன்னால் நூலகத்தில் இருக்க முடியாத சமயங்களில் நண்பர்களை இருத்திச் செல்கிறார்.  அவ்வளவிற்கு நண்பர்களும் இந்நூலகத்தில் ஈடுபாடுகொண்டிருக்கின்றனர்.

புதுக்கோட்டை தான் புத்தகப் பதிப்பகங்கள் தோன்றிய தாயகம் என்று கூறும் கிருஷ்ணமூர்த்தி சிறப்பாகச் சொல்லப்படுகின்ற பதிப்பகங்கள் பத்து எனில் அவை புதுக்கோட்டையில் தான் தோன்றின என்கிறார். 

சமய நூல்கள், இலக்கிய நூல்கள், நவீன நூல்கல், வரலாற்று நூல்கள், காந்தி இயக்கம், மறுபதிப்பு வராத புத்தகங்கள், சமகால புத்தகங்கள், தமிழ்நாட்டில் வெளியிடப்படும் தனி இதழ்கள், வெளிநாட்டு இதழ்கள், மாணவர்களுக்குத் தேவைப்படும் ஆராய்ச்சி இதழ்கள், பெரியார், அண்ணா காலத்தில் வந்த பத்திரிகைகள் என பல அரிய தொகுப்புகள் ஞானாலயாவில் உள்ளடங்கியுள்ளன.

நூலகத்திற்காக ஒரு தனி இல்லம் அமைத்திருக்கிறார்.  தான் வசிக்கும் இல்லத்தின் மாடியிலும் நூலகம் அமைத்திருக்கிறார்.  பற்றாக் குறைக்காக கட்டிடமும் கட்டிக்கொண்டிருக்கிறார்.

புத்தகங்கள் காந்தி வரிசை, விவேகானந்தர் வரிசை, இராம கிருஷ்ணர் வரிசை என பல வரிசைகளால் ஆக்கப்பட்டுள்ளது.  நூலகத்திற்குச் சென்று நூல் பட்டியல் புத்தகத்தைப் பார்த்து நாமே நூலை எடுக்க வேண்டும்,  அவ்வளவிற்கு நமக்கு வேலை தருவதில்லை ஞானாலயா.  வருவோரை வரவேற்று அவர்களுக்குத் தேவையான புத்தகங்களைக் கொடுத்து அப்புத்தகம் தொடர்புடைய பல புத்தகங்களையும் எடுத்துப்படிக்கத் தூண்டுகின்றனர். 

`லாஸ்ட் பேஸ்’ என்னும் புத்தகம் பியாரி லாலால் எழுதப்பட்டது.  இதன் மூன்று தொகுதிகளும் ஞானாலயாவில் உள்ளன.  ஆய்வு மாணவர்களுக்குத் தேவையான அத்தனைப் புத்தகங்களும் இங்குக் காணப்படுகிடைக்கின்றன.  பிரபல அரசியல் பின்னணி உள்ளவர்களும் இந்நூலகத்திற்கு வந்து செல்கின்றனர்.  அவ்வளவிற்கு இன்றியமையாமையைப் பெற்றிருக்கிறது. 

நமக்குத் தேவைப்படும் புத்தகங்களை அங்கேயே நகல் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது.  பல ஆதரவற்ற பெண்களைக் கொண்டு (மாத சம்பளத்துடன்) இந்நூலகத்தை நடத்தி வருகிறார். நூலகத்தைப் பராமரிக்கவும் நூல்களை வாங்கவும் ஒரு மாதத்திற்கு இலட்சங்களில் செலவு அமைவதாகத் தெரிய வருகிறது.  இந்நூலகத்திற்குத் தங்களால் இயன்ற உதவிகளை எப்படியும் வழங்கலாம்.
UCO bank,
Saving Bank A/C No.1017047
Branch: Pudukkotai
IFS Code:UCBA0000112


11.3.13

பாவேந்தர் கலந்து கொண்ட சுயமரியாதை மாநாடுகள்

பாவேந்தரும் சுயமரியாதை மாநாடும்

1928 ஆம் ஆண்டு புதுச்சேரியில் பெரியார் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசுவதாக இருந்தது. அப்பொழுதுதான் முதன் முதலாக பாவேந்தர் பெரியார் கூட்டத்தில் கலந்துகொண்டு அவரின் பேச்சைக் கேட்கத் தொடங்கினார். அன்று முதல் பெரியாரின் கொள்கைகளை ஏற்றுச் செயல்படத் தொடங்கினார்.பகுத்தறிவுக் கொள்கைகள் குறித்து எழுதலானார். 1929 முதல் தொடர்ந்து கவிதைகள், கட்டுரைகள் போன்றவற்றை குடியரசு, பகுத்தறிவு போன்ற இதழ்களில் எழுதி வந்தார்.

பாவேந்தர் 
பாவேந்தர் 1930-31 ஆண்டுகளில் பல சுயமரியாதை மாநாடுகளில் கலந்து கொண்டு மாநாட்டுக்கு வலுச்சேர்த்துள்ளார்.அம்மாநாடுகளில் கலந்துகொண்டு மாநாடு பற்றிய செய்திகளைத் தன்னுடைய இதழில் வெளியிட்டிருக்கிறார்.குறிப்பாக மாநாட்டுத் தீர்மானங்களை எழுதி வெளியிட்டுள்ளார்.
  1. ஈரோடு இரண்டாவது சுயமரியாதை இயக்க மாநாடு
  2. மூன்றாவது விருதுநகர் சுயமரியாதை மாநாடு
  3. சென்னை மாகாணச் சுயமரியாதைத் தொண்டர் இரண்டாவது மாநாடு,
  4. திருநெல்வேலி ஜில்லா (((தூத்துக்குடி) 4-வது சுயமரியாதை மாநாடு
  5. விருதுநகர் இளைஞர் மாநாடு
  6. நாகை சுயமரியாதை மாநாடு
  7. செட்டிமார் நாட்டு முதலாவது சுயமரியாதை மாநாடு
மேற்கண்ட மாநாடுகளில் கொண்டுவரப்பட்டத் தீர்மானங்களைத் தன்னுடைய புதுவை ’முரசு’ இதழில் வெளியிட்டார். இவை கவிதை வடிவிலும் இடம்பெற்றிருந்தன என்பது தான் குறிப்பிட வேண்டிய செய்தி.
புகைப்படத்திற்காக நன்றி: தமிழ்க் களஞ்சியம்.காம்

5.3.13

தமிழர் உணவகம்

மொழியும் இயற்கையும் நம் அரண்
நம் உணவுப் பழக்கத்தை மறுசீரமைவு செய்ய வேண்டும் என்னும் நோக்கத்தில் உடலுக்கு வலுசேர்க்கும், நோய் விரட்டும் சத்தான உணவுப் பழக்கத்திற்கு வித்திடும் வகையில் பாவேந்தன் தமிழர் உணவகம் ஒன்று புதுவை அரியாங்குப்பத்தில் தொடங்கப்பெற்றுள்ளது.  இக்கடைக்கு விளம்பரம் சேர்க்கும் பதிவாக இஃது அமையப்பெறவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  நான் நேரடியாகச் சென்று இவ்வுணவுக் கடையில் விலைக்குள்ள உணவுப் பொருள்களை உண்ட மகிழ்வில் இப்பதிவினைப் படைக்கிறேன். 
தமிழர் உணவகத்தின் விளம்பரப் பதாகை
நாம் உண்ணும் உணவே நம் உடல் நலத்தை தீர்மானிக்கிறது.  அண்மைக் காலமாக நம் மக்களிடம் பெருகிவரும் சர்க்கரை, குருதி அழுத்தம், மூட்டுவலி, இருதய நோய் போன்ற நோய்களுக்கு முதன்மையான காரணம் , நம் உணவு வகைகளில் போதிய ஊட்டங்கள் இல்லாததே ஆகும்.

தமிழர் உணவகத்தில் பாவேந்தரின் புகைப்படமும் பெரியாரின் புகைப்படமும் நம்மை ஈர்க்கின்றன

நம் முன்னோர்கள் நீண்டகாலமாக உணவில் கேழ்வரகு, கம்பு, வரகு, தினை, குதிரை வாலி, சோளம் போன்ற சிறுதானிய வகைகளையே அன்றாடம் உண்டு வந்ததால் உடல் உரம் பெற்று நோய் எதிர்ப்பு ஆற்றலுடன் வாழ்ந்து வந்தனர்.  ஆனால் இக்காலத்தில் உடல் உழைப்பு குறைந்துவிட்டதாலும் சுற்றுச்சூழல் மாசுபாடுடைய சூழலில் வாழ நேரிடுவதாலும் இன்றைக்கு நாம் மிகவும் ஊட்டமுள்ள உணவைத் தேர்ந்தெடுத்தால் மட்டுமே, நம்மை நோயின் தொல்லையிலிருந்தும், மருந்து மாத்திரை செலவீனங்களின் பிடியிலிருந்தும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

இக்கடையானது 17, வீராம்பட்டினம் வீதியில் ‘பாவேந்தன் தமிழர் உணவகம்’ என்னும் பெயரில் அமையப்பெற்றுள்ளது.  

தானியங்களின் அருமை பெருமைகளை விளக்கும் இவர்கள் இத்தானியங்களாலான உணவுப் பொருள்களை வகைவகையாய் செய்து வைத்துள்ளனர்.  அனைத்தும் தமிழ் மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்ற இயற்கை உணவுகள் என்பது தான் குறிப்பிட வேண்டிய ஒன்று.

கேழ்வரகு, வரகு, தினை, சாமை, குதிரை வாலி, கொள்ளு, சோளம் ஆகிய சிறு தானியம் மற்றும் கோதுமை, அரிசி வகையிலான உணவுகள் கிடைக்கின்றன.

கூழ், மோதகம் (கொழுக்கட்டை), புட்டு, இட்லி, முடக்கத்தான் கீரை தோசை வகைகளும் நவதானிய சுண்டல், கீரை, காய்கறி சாறுகளும் கிடைக்கின்றன.

தயிர், எலுமிச்சை, புளி சோறு வகைகளும் ஆவாரம் பூ, சுக்குமல்லி, செம்பருத்தி, பனங்கருப்பட்டி தேநீர், பச்சை(தழை) தேநீர், இஞ்சி தேநீர், பனங்கற்கண்டு பால் முதலியனவும் கிடைக்கின்றன.

பள்ளி முடிந்தவுடன் பல ஆசிரியர்கள் இவ்வுணவகத்திற்கு வருகை புரிந்து தங்களுடைய உடலுக்கு உகந்த அல்லது தேவைப்படுகின்ற உணவுகளை வாங்கிச் சுவத்துவிட்டுச் செல்கின்றனர்.  கூட்டம் நன்றாக வருகிறது.  நான் சென்ற அளவில் எண்ணற்றோர் வந்து சுவை நாடினர்.

நம்மால் செய்ய முடியாத உணவுகளை எல்லாம் இங்குச் சென்று உண்டு நம் உடலின் நலம் பேணலாம்.