தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

15.5.13

திரு.வி.க தேசபக்தனிலிருந்து ஏன் விலகினார்?

வ.வே.சு ஐயர் ஆசிரியரானார்
சுமார் இரண்டாண்டுகளுக்கு மேலாக மிகத் திறம்பட நடத்தி வந்த ‘தேசபக்தனை’ விட்டு வெளியேறும் நிலை திரு.வி.க.விற்கு ஏற்பட்டது.  தேசபக்தனில் காணப்படும் திரு.வி.கவின் எழுத்துக்களில் கொதிப்பு அதிகம் என்றும், அதை குறைத்துக் கொள்ளாவிடில் அரசு நடவடிக்கை எடுக்க நேரும் என்றும் லார்டு வில்லிஸ்டன் திரு.வி.கவை அழைத்துக் கூறினார்.
 
மேலும் அப்போது சில விளம்பரங்களை வெளியிடுதல் கூடாது என்று காங்கிரஸ் கட்டளை பிறப்பித்திருந்தது.  சென்னைப் பத்திரிகைகளில் பல அக்கட்டளைகளை மீறி நடந்தன.  ‘தேசபக்தனும்’ அக்கட்டளைகளை மீற வேண்டும் என பலர் திரு.வி.க வை வற்புறுத்தினர்.  ஆனால் திரு.வி.க அதற்கு இணங்கவில்லை.  அதனால் இவரின் பத்திரிக்கைக்குச் சிறிது நட்டம் ஏற்பட்டாலும் செல்வாக்கு அதிகரித்தது.  ‘தேசபக்தன்’ மக்களிடம் நல்ல செல்வாக்கு பெற்றிருந்த நிலையில் திரு.வி.கவிற்கு ஒரு தகவல் எட்டியது.  பிரிட்டிஷ் இந்தியா அச்சுக்கூடம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற தகவலே அது.
 
திரு.வி.க விடம் அதன் பதிவுப் பொறுப்பு இருந்தும், இவரைக் கேட்காமல் அச்சுக் கூடம் ஒத்திவைக்கப்பட்ட செயலை இவரால் பொறுத்துக்கொள்ள இயலவில்லை.  ஆகவேதான் அதிலிருந்து விலகும் எண்ணத்தை ஒரு தலையங்கத்தில் வெளியிட்டார்.  அதைக் கண்டு காமத் கண் கலங்கினார்.  சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியார் உள்ளிட்ட பலர் சமாதானம் செய்து பார்த்தும் திரு.வி.க அவர்கள் தன் நிலையை மாற்றிக்கொள்ளவில்லை.  பின் வ.வே.சு ஐயர் அவரவழைக்கப்பட்டார்.
 
அவர் ‘தேசபக்தன்’ ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  வ.வே.சு. ஐயர் ஆசிரியர் பொறுப்பேற்றுக் கொண்டதும் அவரால் ‘தேசபக்தனில் புதிய ‘பத்திரிகாசிரியன்’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட கட்டுரை அவர் திரு.வி.கவிடம் எவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்பது புலனாகும்.

12.5.13

அறிவோம் கணினி கலைச்சொற்களை

கணினி உலகம்
  1. abacus-மணிச்சட்டம்
  2. abbreviated address-சுருங்கிய முகவரி முறை
  3. abondon-கைவிடு
  4. abort-கைவிடல்
  5. abstract-கருத்தியல்
  6. accelerated graphics port-முடுக்கு வரைகலைத் துறை
  7. access-அணுக்கம்
  8. access code-அணுகுக் குறி
  9. accumulation-திரட்சி
  10. activation-இயக்குவிப்பு
  11. active window-இயங்கும் சாளரம்
  12. adapter-தகவி
  13. adapter cardsதகவி அட்டைகள்
  14. add-in-கூடுதல் இணைப்பு
  15. add-on-திறனேற்றி
  16. address bar-முகவரிப்பட்டை
  17. address book-முகவரிப் புத்தகம்
  18. address buffer-முகவெண் தாங்கி
  19. alert-விழிப்பூட்டு
  20. alert box - எச்சரிக்கும் பெட்டி
     

7.5.13

பிற மொழிகளில் வெளிவந்துள்ள மு.வ வின் நூல்கள்

மு.வ.வின் புகழ்பெற்ற பனுவல்கள்
பல உயிர்ப்புள்ள நூல்கள் தெலுங்கு, கன்னடம், சிங்களம், இந்தி, மலையாளம் முதலிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளன.
  1. பெற்ற மனம்
  2. அகல் விளக்கு
  3. விடுதலையா?
  4. மனச்சான்று
  5. கயமை
  6. குறட்டை ஒலி
  7. காதல் எங்கே?
  8. அகல் விளக்கு, குறட்டை ஒலி - ரஷ்ய மொழி
  9. கள்ளோ? காவியமோ? - சிங்கள மொழி
  10. கரித்துண்டு - இந்தி மொழி
  11. சிறுகதைகள் சில, மராத்தி, மலையாளம் முதலிய இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.
  12. இளங்கோவடிகள்- தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

6.5.13

திரு.வி.க பற்றி மா.பொ.சி

திருவிகவின் பெருவாழ்வு
ம.பொ.சி
அரசியலில் சேர்ந்து நான் திரு.வி.க வுடன் பணியாற்றாவிட்டாலும் அவர் எழுதிய “மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்” என்னும் நூல்தான் என்னை காந்தியவாதி ஆக்கியது என்கிறார் திரு.ம.பொ.சி. அவர்கள்.  ஏனென்றால் காந்திய நெறிக்கு விளக்கம் தரும் நூல் இதைவிட வேறு ஒன்றும் இருக்க முடியாது என்பதில் இருவேறு கருத்து இருக்க முடியாது என்கிறார்.
 
எல்லாவற்றையும் விட அவரது ஒழுக்கம் ம.பொ.சியின் உள்ளத்தை அவர் பக்கம் திரும்பச் செய்ததாகக் கூறுகிறார்.  திரு.வி.க வைச் சந்தித்து உரையாடும் போதெல்லாம் பழங்கால முனிவருடன் பேசும் அனுபவத்தைத் தந்ததாகவும் தமிழும் தேசியமும் பிணைந்திருக்க வேண்டும் என்ற சித்தாந்தத்திற்கு அவர்தான் முன்னோடி என்றும் அதிசயிக்கிறார்.
 
எங்கும் எதிலும் தமிழர் வாழ்வில் தமிழ்தான் முதலிடம் பெற வேண்டும் என்று அவர் (திரு.வி.க) விரும்பினார்.  அவர் காங்கிரசில் இருந்த காலத்தில் அந்த மகாசபையின் தமிழ்நாட்டுக் கிளையை தமிழ் வழிப்படுத்த அவர் பெரிதும் முயன்றதாக ம.பொ.சி நவில்கிறார்.  இந்தி திணிப்பை எதிர்ப்பதிலே எங்கள் இருவருக்கும் கருத்தொற்றுமை நிலவியது.  ஆங்கில ஆதிக்கம் நிலைபெறாத வகையிலும், தேசிய ஒருமைப்பாட்டுக்கு ஊறு நேராத முறையிலும் இந்தி திணிப்பு எதிர்க்கப்பட வேண்டும் என்பதிலே அவர்தான் எனக்கு வழிகாட்டி.  அவர் அன்பின் வடிவமாகத் திகழ்ந்தார் என்கிறார்.

5.5.13

சிறப்புலி நாயனார்

அறிவோம் நாயன்மார்களை
சிறப்புலி நாயனார்
காவிரி ஆறு பாய்ந்து வளங்கொழிக்கும் சோழ நாட்டில் திரு ஆக்கூர் என்னும் ஊரில் வேதியர் குலத்தில் அவதரித்தவர் , சிறப்புலி நாயனார்.  அவர் பரமேஸ்வரனாகிய சிவபெருமானிடத்துப் பேரன்பு கொண்டிருந்தவர்.  தம்மை நாடி வந்த சிவனடியார்களுக்கு வேண்டியதை வழங்கி வள்ளலுக்கு வள்ளலாய் விளங்கினார்.  சிவனடியார்களின் திருவடிகளில் வணங்கி அவர்கலுக்கு உணவும் படைத்து வந்தார்.  உள்ள பொருளெல்லாம் சிவன் தந்தது, என்று எண்ணிக் கேளா முன்னரே அடியவர்கட்கு வழங்கியவர், சேக்கிழார் இவரை வள்ளலார் என்றே அழைக்கிறார்.  சிவபக்தியின் முதற்படி ஈவிரக்கமே, என்பதை நன்குணர்ந்தவர்.
 
நாள்தோறும் ஐந்தெழுத்து மந்திரத்தினை ஓதிச் சிவ வேள்விகளையெல்லாம் செய்து சிவபெருமானை உள்ளம் உருக வழிபட்டார்.  இவ்வாறு பல சிவ புண்ணியங்களைச் செய்து, புகழும் சிறப்பும் பெற்றதால், அவர் சிவபெருமானின் அருளைப் பெற்று அவருடன் ஐக்கியமானார்.  இவர்,
 
ஆளும் அங்கிணருக் கன்பர்
     அணைந்தபோ தடியில் தாழ்ந்து
மூளுமா தரவு பொங்க
     முன்பு நின்றினிய கூறி
நாளும்நல் லமுதம் ஊட்டி
     நயந்தன எல்லாம் நல்கி
நீளுமின் பத்துள் தங்கி
    நிதிமழை மாரி போன்றார்!
 
நிமலனாருடைய திருத்தொண்டுகள் பல புரிந்து, வள்ளன்மையே அடியவர்களுடைய உயர்ந்த பண்பு என்பதற்கேற்ப வாழ்நாளைக் கழித்து, வாரி வழங்கும் வள்ளலாக இறை வாசக் கமலம் இதயத்தில் இருத்தலே இணையற்றதாக, கருதி வாழ்ந்து சென்றவர், என்றால் மிகையாகாது.

புகைப்பட நன்றி:
சிவாடெம்பில்ஸ்.காம்

4.5.13

உலகம் சுற்றிய முதல் தமிழ்ப்பேராசிரியர்

டாக்டர் மு.வ வின் பெருவாழ்வு
 

டாக்டர்.மு.வரதராசனார்
 ருபதாம் நூற்றாண்டின் தமிழக வரலாற்றிலும், தமிழ் இலக்கிய வரலாற்றிலும் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் சீரிய தமிழ்த் தொண்டு முதன்மையான இடம் பெறுவதாகும்.  அவர் ஈடு இணையற்ற பெரும் எழுத்தாளராக விளங்கினார்.  உலகத் தமிழர்களின் உள்ளங்களைக் கவர்ந்த முதல் தமிழராக அவர் திகழ்ந்தார்.  மு.வ என்ற பெயர் ஒலிக்காத இடமில்லை. 
 
குடும்பமும் அவரும்
 
அருமை அன்னை அம்மாக்கண்ணம்மாளுக்கும் அறிவில் சிறந்த தந்தை முனுசாமி அவர்களுக்கும் செல்லப் பிள்ளையாக 25.04.1912 ஆம் ஆண்டு வட ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள திருப்பத்தூரில் பிறந்தார்.  முதலில் அவருக்கு வழங்கிய பெயர் திருவேங்கடம் என்பதாகும்.  தாத்தாவின் பெயரை இடும் மரபுக் காரணமாக வழங்கிய பெயரே ‘வரதராசன்’ என்னும் பெயர்.
 
1935 இல் மாமன் மகள் இராதாவை மணந்தார்.  அவருக்கு ஆ ண் மக்கள் மூவர் உள்ளனர்.  அவர்கள் முறையே திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகியோர் ஆவர்.  அம்மூவரும் மருத்துவத் துறையில் மாமணிகளாகத் திகழ்கின்றனர்.
 
கல்வி
 
அவர் வேலத்திலும், வாலாசாவிலும் தொடக்கக் கல்வியைக் கற்றார்.  உயர்நிலைப் பள்ளிப் படிப்பை அவர் திருப்பத்தூரில் பயின்றார்.  அவர் முருகைய்ய முதலியாரிடம் தமிழ் கற்றுப் புலவர் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார்.  பின்னர் அவர் 1935 ஆம் ஆண்டு தமிழ்ப் புலவர் தேர்வு எழுதிச் சென்னை மாநிலத்திலேயே முதல்வராகத் தேர்ந்து உரூபாய் ஆயிரம் பரிசு பெற்றார்.  1939 இல் பி.ஓ.எல் பட்டமும் 1944 இல் எம்.ஓ.எல் பட்டமும் பெற்றார்.  1948 இல் சென்னைப் பல்கலைக்கழகத்திலேயே முதன் முதலாகத் தமிழில் டாக்டர் பட்டம் பெற்றார்.  1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவிலுள்ள ஊஸ்டர் கல்லூரி அவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது.  அமெரிக்கப் பல்கலைக் கழகம் ஒன்றில் டி.லிட் என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞ்அர் மு.வ அவர்களே ஆவார்.
 
தொழில்
 
அவர் 1928 இல் முதல் தாலுகா அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார்.  1935 ஆம் ஆண்டு முதல் நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்.  1939 முத்ல 1944 ஆம் ஆண்டு வரை டாக்டர் அ.இலட்சுமணசாமி முதலியார் அவர்களின் நல்லுதவியுடன் தமிழ் விரிவுரையாளராகப் பச்சையப்பன் கல்லூரியில் பணியாற்றினார்.  1945 ஆம் ஆண்டு அக்கல்லூரியிலேயே தமிழ்த்துறைத் தலைவர் ஆனார்.  இடையே ஓராண்டு சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்தார்.  அறிஞர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களின் மறைவுக்குப் பிறகு 1961 முதல் 1971 வரை சென்னைப் பலகலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகப் பணியாற்றினார்.  1971 முதல் 1974 வரை மதுரைப் பலகலைக்கழகத்தின் புகழ்மிக்க இணையற்ற துணைவேந்தராகப் பணிபுரிந்தார்.
 
பன்மொழிப் புலமை
 
தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி முதலிய மொழிகளைக் கற்றுப் பன்மொழிப் புலவராகத் திகழ்ந்தார்.
 
உலகை வலம் வந்த முதல் தமிழ்ப் பேராசிரியர்
 
அவர் உருசியா, மலேசியா, சிங்கப்பூர், பாரிஸ், இலங்கை, இங்கிலாந்து, பிரான்சு, ஜப்பான், ஜெர்மனி, கிரேக்கம், எகிப்து, அமெரிக்கா முதலிய உலக நாடுகளை எல்லாம் சுற்றிப் பார்த்த முதல் தமிழ்ப் பேராசிரியராக விளங்கினார்.
 
தனிப் பண்புகள்
 
மனத்தால் கூடப் பிறர்க்குத் தீங்கு எண்ணாமல் சான்றோராக வாழ்ந்தார்.  ஒன்றனை இழந்தாலோ அல்லது தொலைந்தாலோ அதற்காக அவர் கவலைப்பட்டதில்லை.  காரணம் அதனால் பயன் இல்லை என்பது அவரது கருத்து.  வீணாக வருந்தும் நேரத்தை வேறு ஆக்க வேலைக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதே அவரது கொள்கை.
(வரும்---------2)