தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

6.2.13

வசந்தவல்லியின் அழகும் திரிகூடரின் பாத்திறனும்

வசந்தவல்லி 
  தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றான ‘ திருக்குற்றாலக் குறவஞ்சி’ படிக்கப் படிக்க இன்பம் தரும் அற்புத படைப்பாகும்.  இயற்கையழகு கொஞ்சும் மலைகளின் வருணனை இன்றும் நம் கண் முன் அப்படியே வந்து நிற்கும் தன்மையதாய் உள்ளது.  குறக்குடியின் மேன்மை அவர்களின் பழக்கவழக்கம் முதலியவற்றைத் தெற்றென எடுத்தியம்பும் பாத்திறன் இப்பனுவலின் திறனை உலகறியச் செய்யும்.  இந்நூலில் இடம்பெறும்  வசந்தவல்லியின்  அழகினைப் பற்றி திரிகூட ராசப்பர்  சொல்லும் பாங்கு உணர்ந்து இன்புற வேண்டிய ஒன்று.  

இருண்ட மேகங்கள் தம்முள் சுற்றிச் சுருண்டு சுழி கொண்டு எறிந்தாற்போல விளங்கும் மயிரடர்ந்த கொண்டையினாள் அவள்.  காதளவு ஓடிக், காணும் ஆடவர்களது நெஞ்சையெல்லாம் சூறையாடும் கயல்மீன் விழியினாள் அவள்.  திருத்தமான அழகினையுடைய முருக்கம் பூவினது அரும்பினைப் போலச் செக்கச் சிவந்திருக்கும் இதழ்களை  உடையவள் அவள்.  அழகிய வில்லைப் போல வளைந்து, இளம்பிறையின் வடிவினைப் போல விளங்கி, ஒளியுடன் திகழுகின்ற நெற்றியினையும் உடையவள் அவள்.

அரம்பையரின் தேசமாகிய வானுலகத்து வில்லாகிய வானவில்லும், இவள் புருவத்தின் அழகைப் பெறல் வேண்டும் என விருப்பமுற்று ஆசையாகச் சொல்லுமளவுக்கு, அழகாகத் தோன்றும் புருவங்களையுடையவள் அவள்.  ஆடவராகிய பிறரின் அறிவை எல்லாம் மயக்குகின்ற, ஒப்பற்ற ஒரு கர்வமானது குடிகொண்டிருக்கும் மங்கைப் பருவத்தினள் அவள்.  கருப்பஞ்சாறு போல இனித்தும், அமுதம் போல வாழ்வு தந்தும் விளங்கும் சொல்லினை உடையவளும் அவள், ஆரவாரிக்கும் கடலலைகள் கொணர்ந்து குவித்த முத்துக்களை, நிரையாகப் பதித்து வைத்தாற் போன்ற பல்வரிசையினையும் உடையவள் அவள்.


வசந்த வல்லியின் அழகு

இருண்ட மேகஞ்சுற்றிச் சுருண்டு
    சுழி எறியும் கொண்டையாள்
ஏறி யாடி நெஞ்சைச் சூறையாடும்
    விழிக் கெண்டையாள்.
திருந்து பூமுருக்கின் அரும்புபோ
    லிருக்கும் இதழினாள்
                               சிலையைப் போல் வளைந்து பிறையைப் போல்
    இலங்கும்  நுதலினாள்.

அரம்பை தேசவில்லும் விரும்பி
                                                    ஆசை சொல்லும் புருவத்தாள்
                  அறிவை மயக்குமொரு கருவம் இருக்கும்
    மங்கைப் பருவத்தாள்.
     கரும்பு போலினித்து மருந்துபோல்
    வடித்த சொல்லினாள்
கத்துந் திரைகொழித்த முத்து
    நிரை பதித்து பல்லினாள்

No comments:

Post a Comment