தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

31.10.12

என்னை ஈர்த்த முத்துக்கமலம்


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பல்கிப் பெருகி வருபவையே இணைய இதழ்கள்.  இணையப் பரப்பில் பல்சுவை செய்திகளை நமக்கு அளிப்பதற்காக இவை படைக்கப்பட்டுள்ளன.  இணையத்தில் மட்டும் இதழாக மலர்ந்து வெளிவருவனவற்றையே ‘இணைய இதழ்’ எனக் கூறுதல் தகும் என்று பலர் கருத்துரைக்கின்றனர். அவ்வகையில் இணையத்தில் வெளிவந்து,  செம்மையான இலக்கியப் பணியாற்றிவரும் முத்துக்கமலம் இணைய இதழைப் பற்றிய பதிப்பே இஃது.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கும் இணைய இதழ் ‘முத்துக்கமலம்’.  மாதத்தின் முதல் நாளும் பதினைந்தாம் நாளும் புதுப்பிக்கப்படுகிறது.  பல்வேறு எழுத்தாளர்களைத் தன் கைவசம் வைத்துச் செயல்படுகிறது.  தரம் வாய்ந்த படைப்புகளைப் படைக்கும் எவருக்கும் வாய்ப்பை நல்கி வருகிறது.  படைப்புகளைப் படைக்கும் எழுத்தாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் முகமாக அவர்களின் புகைப்படத்துடன் கூடிய முழுவிவரத்தை ஒரு பக்க ஒதுக்கீட்டில் வெளியிடுகிறது.  தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களின் பட்டியல், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் விசித்திர பழக்கவழக்கங்கள், வேதகாலத்தில் சிறந்து விளங்கிய பெண் கவிஞர்கள் முதலியன இவ்விதழைப் பிற இதழ்களினின்று தனித்துக் காட்டும் படைப்புப் புதுமைகள்.

பெரியாரின் சிந்தனைகளையும் அவர் சாடிய மூடநம்பிக்கைகளையும் இதழில் இட்டு பெரியாரின் கொள்கைக்கு வலுச்சேர்த்துக்கொண்டிருக்கின்றனர்.  பெரியார் சொன்ன திராவிடர் திருமணம், எப்போது விழித்துக்கொள்ளப் போகிறார்களோ?,  பெரியார் சொன்ன புதுமொழிகள் எனபனப் போன்ற படைப்புகள் இவ்விதழின் வருகையாளரை அதிகரித்துக் கொடுக்க ஏதுவாகும் என்பதில் திரிபொன்றுமில்லை.

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு - இது தமிழார்வலர்களின் இலக்கியத்துடிப்புஎன்னும் இதழ் விவரிப்பைக் கொண்டுள்ள முத்துக்கமலம், தமிழ் துறைசார் கட்டுரைகள், சிறுகதை, தொடர்கதை முதலியவற்றை வெளியிட்டு வருகிறது.  `அடையாளம் என்ற பகுதியில் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெறுகிறது.

பொன்மொழிகள், குறுந்தகவல்கள், ஆன்மிகம், தன்னம்பிக்கைக் கட்டுரைகள், மகளிர் மட்டும், மருத்துவம் ஆகிய பகுதிகள் பொழுதுபோக்குவோர்க்குக் கிடைக்கக் கூடிய உகந்த செய்திப்பெட்டகங்களாகும்.  வாசகரைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பிறந்தநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து இடம்பெறச் செய்து வாழ்த்துத் தெரிவிக்கிறது.  ‘தினம் ஒரு தளம் - என்னும் பகுதியில் நாள்தோறும் ஒரு இணைய தளத்தைப் பற்றிய அறிமுகமும் அத்தளம் எவ்வகையில் நமக்கும் பயன்படும் என்பதையும் ஆய்ந்து சொல்கிறது.
மொத்தத்தில் முத்துக்கமலம் முத்துக்கு முத்தான இணைய இதழாக நமக்குப் புலப்பட்டு நிற்கிறது.


29.10.12

தமிழமல்லனின் அரும்பணி அறிவோம்

 தமிழமல்லன்:

தனித் தமிழுக்காகத் தன்னை நாளும் அற்பணித்துக் கொண்டு தமிழுக்காக வாழ்ந்து வரும் உயர் பண்பாளர் திரு.க. தமிழமல்லன். அவர்தம் தமிழர், தமிழ் குறித்த பதிவே இஃது.

பாவாணரின் திறன் அறிந்து அவர்தம் வாழ்க்கை வரலாற்றை அடிவரை ஆய்ந்து பன்நூல்களை எழுதியவர் தமிழன்பர் தமிழமல்லன்.  தனித்தமிழின் பல்துறை வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பல்லாண்டுகள் அரும்பணி செய்து வருகிறார்.  பல ஆய்வு நூல்களையும், சிறுகதை நூல்களையும் , சிறுவர் இலக்கியங்களையும் படைத்து இலக்கியத் தொண்டாற்றி வரும் பேரறிவாளர் ‘எல்லார்க்கும் தனித்தமிழ்’ என்னும் முழக்கத்தை வலியுறுத்தியவர்.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூர்த் தமிழ்ச்சங்கம், இலக்கிய அமைப்புகள் போன்றவற்றிலும் வானொலியிலும் ஆய்வுச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.

உலகில் முதன் முதலாகத் தனித்தமிழ் இலக்கிய மாநாட்டைப் புதுச்சேரியில் முழுவெற்றியோடு ஆக்க முறையில் 1984 இல் நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர்.

‘வெல்லும் தூயதமிழ்’ என்னும் மாத இதழை நடத்திவருகிறார்.  இவ்விதழ் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  அன்று முதல் இன்று வரை இதன் தரம் குறைந்ததாக எவருஞ் சொல்லார்.

வெல்லும் தூய தமிழ் இதழ்



தனித்தமிழ் கொள்கையே தமிழ் இனத்தின் எல்லா நனமைகளையும் காக்கும் என உறுதியாக வலியுறுத்தி வருகிறார்.

மல்லனும் அவர் இதழும் ஏற்படுத்திய தமிழ்ப்பற்று:


நான் வகுப்பறையிலே பயின்று கொண்டிருக்கும் போது எனக்குத் தமிழ்ப்பாடம் பயிற்றுவித்த ஆசிரியர்கள் இவரின் இதழை வைத்துக் கொண்டு பெருமையோடுப் பேசுவதைக் கேட்டவன்.  அந்நூல் குறித்து வினவியவன் அப்பொழுது எனக்கு அகவையோ சற்றொப்ப 13 இருக்கும்.  எனக்குள் தமிழ்ப் பற்றை ஊட்டிய ஆசிரியை திருமதி. திலகவதி அவர்கள் தனித்தமிழ் குறித்து அடிக்கடி எங்களுக்குச் சொல்லுவார்.  தமிழிலேயே உரையாடுவார்.  ஆங்கிலம் கலவாமல் பேசும் ஆற்றலைக் கண்டு நான் வியந்ததுண்டு.  அம்மாதிரியே யானும் தமிழில் உரையாட வேண்டும் என்றெல்லாம் நினைத்து என் , முன்மாதிரியாகத் தமிழாசிரியையைக் கொண்டேன்.  என் தமிழாசிரியர்கள்  (சிலர்) தனித்தமிழைக் கைக்கொண்டொழுகி நன்னிலை எய்த தமிழமல்லன் போன்றோரின் இதழ்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.

ஓய்வு நேரங்களில் `உரோமண்ட் உரோலண்ட் ’ நூலகத்தை நான் நாடுவதுண்டு.  அவ்வமயங்களில் சிற்றிதழ்களைப் படிக்காமல் நகருவதில்லை எனச்  சபதமேற்றுக் கொண்டு படித்ததுண்டு.  அப்படிப் படித்த இதழ்களில் அதிக தாக்கத்தையும் தமிழுணர்வையும் எனக்கு ஏற்படுத்தியது தமிழமல்லன் அவர்களின் நேர்மையையும் தமிழ்ப்பற்றையும் அச்சிலேற்றிக் கொண்டு வருகை தந்த தனித்தமிழ் இதழே.

கல்லூரியில் பயிலும் காலங்களில் (என்னூர்) - திலசை -  காளிகோயில் தெருவில் அமையப்பெற்றுள்ள ஊர்ப்புற நூலகத்தை நாடியதுண்டு; அப்பொழுதும் இவரின் நூல்களை விட்டு வைக்கமாட்டேன்.  

`பாவாணரின் தமிழ்ப்பணி’ என்னும் தலைப்பில் மல்லன் அவர்கள் எழுதிய நூலானது 1997 ஆம் ஆண்டு வெளிவந்தது.  (அவ்வமயம் நான் 7ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன்) அந்நூலை நான் இளங்கலைத் தமிழ் பயிலும்போது தான் படிக்க நேரிட்டது.  அந்நூலில் பாவாணரைப் பற்றி தமிழமல்லன் குறிப்பிட்டிருக்கும் அத்தனைக் கருத்துக்களும் பாவாணரின் மேல் அவருக்குண்டான ஆறாக் காதலைக் காட்டுவதாய் உள்ளது.  

இதுவரை நேரில் அவருடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு நேரவில்லை.  முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் தமிழ்ப்பணி குறித்து மெய்சிலிர்த்துப் போனதுண்டு.  அவரை நேரில் காண்பதற்கு முன்பு அவரைப் பற்றிய அத்தனைச் செய்திகளையும் விரல்நுனியில் வைத்திருந்தேன்.  இது அவரின் மீது எனக்குண்டான ஆறாக் காதலே.  இப்படியொரு ஆறாக்காதல் தமிழமல்லன் மீது எனக்கு ஏற்பட்டதுண்டு.  இது நிகழ்ந்தது அவர்தம் நூல்களை  ஆய நேர்ந்தபோது.  அப்பொழுது என்னுள் எழுந்த வேட்கை அவரை ஒரு முறை கண்டு பேசிவிட வேண்டும் எனபது.

 இன்று அக்கனவு நிறைவேறியது.


இணைய இணைப்பிற்குண்டான மாதத் தொகையைக் கட்டுவதற்காக அஞ்சல் அலுவலகம் செல்ல நேரிட்டது.  அப்பொழுது அவரின் அறிமுகம் நேர்ந்தது.  ஐந்து நிமிடங்கள் தான் நிகழ்ந்தது அப்படியொருச் சந்திப்பு!  நான்,  என் அறிமுகமுரைத்து உரையாடினேன் உற்றவராய் உறவினர் போல் உரையாடிய அவர்,  தமிழார்வலரை தன்னோடு இரண்டறக் கலந்து கொள்ளும் தகைமையராய் என்னுடன் சொல்லாடல் செய்தார்.  மகிழ்வின் எல்லை வரை சென்றுவிட்டு மீண்டுவந்து இப்பதிவை ஆக்கியுள்ளேன்.  தொடர்க அவரின் (தனித்)தமிழ்ப்பணி.  

28.10.12

மகாயுகம் வரை கண்ட கணிதத் தமிழன்

பெரும்பான்மையான தமிழன்பர்களால் விரும்பிப் படிக்கப்பட்ட பதிவு 

தமிழ் மொழி தான் உலகின் முதல் மொழி என்றும் அம்மொழி பேசிய இனத்தவர் தான் பழந்தமிழர் என்றும் அவர்களே உலகில் முதலில் தோன்றிய இனத்தவர் என்றும் ஆய்ந்து கூறும் கூற்றை மறுக்கின்ற மொழி ஆய்வுநரும் விழிபிதுங்கிப் போய் நிற்கும் அளவிற்கு நந்தமிழ் மக்கள் கணித அறிவில் சிறந்தோங்கினர் என்பதற்கு ஆதாரம் பகரும் பதிவே இப்பதிவு.  

கணிதத்தில்,  ஒன்று, பத்து, நூறு ,ஆயிரம் என்று வரும் எண்ணியல் சார் கணிதக் கூறு அன்றே நந்தமிழ் மொழியில் இடம்பெற்றிருந்தது.  சிலர் தற்போதுள்ள கணிதக் கூறிலும் இம்முறை உள்ளதே என்பர்.  இருப்பினும் தற்போதுள்ள முறையைத் தாண்டிய கணிதக் கூறுகள் நம்முடைய மொழியனரால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.  இன்றைய கணிதக் கூறுகள் தமிழர்கள் கண்ட கணித எழுத்து முறைக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்பதை பின்வரும் சான்றைக் கொண்டு நிறுவலாம்.

தமிழர்கள் கண்ட  எண்ணியல் கணித அமைப்பு:

``ஒன்று, பத்து, நூறு, ஆயிரம், பத்தாயிரம், நூறாயிரம், பத்து நூறாயிரம், கோடி, அற்புதம், நிகற்புதம், கும்பம், கணம், கற்பம், நிகற்பம், பதுமம், சங்கம், வெள்ளம், அந்நியம், அற்டம், பறட்டம், பூறியம், முக்கோடி, மகாயுகம்.

வேறுபடும் நிலை:

மேற்கண்ட எண்ணியல் அமைப்புகள் தமிழர்களால் அன்றே பயன்படுத்தப்பட்ட ஒன்று.  இவற்றில் அந்நியம் என்பது தற்போதுள்ள  எண்ணியல் முறைப் படி `நூறு சில்லியன்’ என அழைக்கப்படுகிறது.  ஆனால் அந்நியத்திற்குப் பிறகு இடம்பெற்றுள்ள அற்டம், பறட்டம், பூறியம், முக்கோடி, மகாயுகம் ஆகியவற்றிற்கு இணையான எண்ணியல் அமைப்பு தற்போது நாம் பயன்படுத்தும் கணித அமைப்பில் இல்லை.

இஃதொன்றே தமிழரின் கணித அறிவைப் பற்றி தற்போதையத் தலைமுறையினர் அறிந்துகொள்ளச் சான்று பகர்ந்து நிற்கிறது.

24.10.12

அசலாம்பிகை அம்மையார் வாழ்க்கைக் குறிப்பு


அசலாம்பிகை அம்மையார்:

திண்டிவனத்திற்கு அருகிலுள்ள `இரட்டணை என்னும் ஊரில்1875 ஆம் ஆண்டு தோன்றியவர் அசலாம்பிகை அம்மையார்.  பெருமாள் ஐயர் இவரின் தந்தை ஆவார்.  பத்து வயது நிரம்பிய போதே அசலாம்பிகைக்குத் திருமணம் செய்விக்கப்பட்டது.  சிறு வயதிலேயே தன்னுடைய கணவனை இழந்து விதவை ஆனார். 
தன்னுடைய தந்தையின் உந்துதலால் கல்வி கற்கத் துணிந்தார்.  அக்காலத்தில் கல்வி கற்க பெண்கள் முன்வருவது கிடையாது.  இதனால் தந்தையார் ஆசிரியர் ஒருவரை வீட்டிற்கு வரவழைத்து தன் மகளுக்குக் கற்பித்தார்.  முறையாக அனைத்து இலக்கிய இலக்கணங்களையும் கற்றுத் தேர்ந்தார் அசலாம்பிகை அம்மையார்.
தன்னுடைய வாழ்நாளில் பாதியைத் திருப்பாதிரிப்புலியூர் என்று அழைக்கப்படுகின்ற கடலூரில் கழித்தார்.  பின்னர் சில காலம் வடலூரில் தங்கி இராமலிங்க அடிகளாரைப் பற்றி எழுதத் தொடங்கினார்.  `இராமலிங்க சுவாமிகள் பதிகம்’ என்னும் நூலை இயற்றி ஆன்மீக உலகத்திற்கு வழங்கினார்.  குழந்த சுவாமி பதிகம் என்னும் நூலையும் பின்னாளில் இயற்றினார்.
தேசியத்தில் தன்னை அதிகம் இணைத்துக்கொள்ள விரும்பிய அம்பிகை விடுதலைப் போராட்டத தலைவர்களின் கொள்கைகளைப் பெரிதும் பின்பற்றினார்.  விடுதலை வேட்கையை மக்களிடம் தன்னுடையப் பாடல்கள் மூலம் தெரிவித்து ஏற்ற விடுதலை எழுச்சியை ஊட்டினார்.
தான் இல்லத்தில் கல்வி கற்றது போலவே தன்னைக் காண வரும் பெண்டிருக்கும் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்.  அவ்வாறு கற்பிக்கும் போது சிலபல பாடல்களை எழுதி அப்பெண்களிடம் கொடுப்பார்.  அப்படிக் கொடுத்த அப்பாடல்கள் அனைத்தும் விடுதலைக் கனலை எழுப்பும் முகமாய் இருந்தது.
அம்பிகையின் பாடல்கள் இதழ்களில் இடம்பெறத் தொடங்கியது.  அவரின் ஆற்றல் கண்டு பலரும் வியந்தனர்.  நாட்டுப்பற்று மிக்க இவர் `காந்திபுராணம், `திலகர் புராணம் என்னும் இரு நூல்களை ஆக்கினார்.  காந்திபுராணத்தில் காந்திமகானின் உணர்வை அப்படியே வெளிப்படுத்தியிருப்பார்.
இவ்வுலகில் துயர் களைந்து நன்மை நடக்க வேண்டுமெனில் அறச்செயல் ஓங்க வேண்டும்.  கலிகாலத்தில் தீமையே எங்கும் ஓங்கி நிற்கும் இருப்பினும் அதனைக் களைய அரும்பாடுபட வேண்டும் என்றும் இதற்காக அவதரித்தவர் தான் மகாத்மா காந்தி என்றும் அவரை இந்நாட்டிற்குத் தந்த பாரதத் தாயின் காலில் விழுந்து வணங்குதல் வேண்டும் என்றும் கூறுகின்றார்.
திரு.வி.க அவர்கள் அம்மையின் அரும்பணியை அறிந்து `இக்கால ஔவையார் என்று புகழ்ந்தார்.
எனக்குத் தெரிந்த அசலாம்பிகை அம்மையார் குறிப்புகளை விக்கியில் எழுதியுள்ளேன் அதையும் காண பின்வரும் இணைப்பைச் சொடுக்கவும்.

 விக்கியில் அசலாம்பிகை
அசலாம்பிகை அம்மையாரின் புகைப்படம் கிடைக்கப் பெறவில்லை.  தமிழன்பர்கள் எவரேனும் வைத்திருந்தால் என் முகவரிக்கு அனுப்புமாறு வேண்டுகிறேன்.

மின்னஞ்சல் முகவரி: sadishirisappan@gmail.com

23.10.12

செம்மொழி வரிகள்

ஏ.ஆர்.இரகுமான்

செம்மொழி மாநாட்டையொட்டு உருப்பெற்ற செம்மொழிப்பாடல் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.  காரணம் ஏ.ஆர்.இரகுமானின் இசையில் கலைஞர் அவர்களின் வரிகள் நம்மை மெய்மறக்கச் செய்தன.  சிலர் அவ்வரிகள் எழுத்துருவில் கிடைக்கப் பெற்றால் பாடல் இசைக்கும் போது நாமும் சேர்ந்து பாடலாமல்லவா என்று கூட அப்பொழுது ஏங்கச் செய்தனர்.  தமிழார்வலர்களுக்காக அவ்வரிகளைப் பதிவு செய்வதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.

கலைஞர் மு.கருணாநிதி


பிறப்பொக்கும் எல்ல உயிர்க்கும்
பிறந்த பின்னர் யாதும் ஊரே யாவரும் கேளிர்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
உறைவிடம் என்பது ஒன்றேயென
உரைத்து வாழ்ந்தோம்
உழைத்து வாழ்வோம்

தீதும் நன்றும் பிறர் தர வாரா எனும்
நன்மொழியே நம் பொன்மொழியாம்!
போஐப் புறம் தள்ளிப்
பொருளைப் பொதுவாக்கவே
அமைதி வழிகாட்டும்
அன்புமொழி
அய்யன் வள்ளுவரின் வாய்மொழியாம்!

ஓரறிவு முதல் ஆறறிவு உயிரினம் வரையிலே
உணர்ந்திடும் உடலமைப்பைப் பகுத்துக் கூறும்
ஒல்காப்புகழ் தொல்காப்பியமும்
ஒப்பற்ற குறள் கூறும் உயர் பண்பாடும்
ஒலிக்கின்ற மேகலைஉடனே வளையாபதி குண்டலகேசியும்
செம்மொழியான நம் தமிழ் மொழியாம்!

அகமென்றும் புறமென்றும் வாழ்வை
அழகாக வகுத்தளித்து
அதி அந்தமிலாது இருக்கின்ற இனிய மொழி
ஓதி வளரும் உயிரான உலகமொழி

கம்ப நாட்டாழ்வாரும்
கவியரசி அவ்வை நல்லாளும்
எம்மதமும் ஏற்றுப் புகழ்கின்ற
எத்தனையோ ஆயிரம் கவிதை நெய்வோர் - தரும்
புத்தாடை அனைத்துக்கும்
வித்தாக விளங்கும் மொழி!

நம்மொழி-நம்மொழி-அதுவே
செம்மொழி-செம்மொழி-நம் தமிழ் மொழியாம்!
வாழிய வாழியவே! வாழிய வாழியவே! வாழிய வாழியவே!
                                                             
                                                                                         - கலைஞர் மு.கருணாநிதி

22.10.12

பாவாணர் வாழ்க்கைக் குறிப்புகள்


தேவநேயப்பாவாணர்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரநயினார் கோயில் என்னுமிடத்தில் ஆங்கில ஆண்டு 07.02.1902 அன்று பிறந்தார்.  ஞானமுத்தர் – பரிபூரணம் தம்பதியருக்கு மகனாய்த் தோன்றியவர்.  தந்தை கிறித்துவ மதத்தைத் தழுவினார்.  இதன் விளைவாகத் தன் பெயரின் இறுதியில் தோக்கசு என்னும் பின்னொட்டைச் சேர்த்துக்கொண்டார்.  அஃதாவது `ஞானமுத்து தோக்கசு என்று அழைக்கப்பட்டார்.  தோக்கசு அவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியராகச் சில காலம் பணிபுரிந்தார்.  முதல் மனைவி ஈழத்துக்குப் பிரிந்து சென்றுவிட்டார்.  இதனால்  தன்னுடைய முதல் மனைவியை பிரிய நேரிட்டது. இரண்டாவதாக மணக்கப்பெற்றவர் தான் பரிபூரணம் அம்மையார்.  அம்மையார் அவர்கள் கோயில்பட்டிக்கு அருகிலுள்ள பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்தவர்.
பத்துப் பிள்ளைகள் இத்தமபதியருக்குப் பிறந்தனர்.  பத்தாவது மகனாகத் தோன்றியவரே பாவாணர்.

இளமைப் பருவம்:

பாவாணரின் இளம் பருவம் மகிழ்வூட்டுவதாய் இல்லை.  ஐந்து அகவையை எட்டும் பொழுது தந்தை இறக்க நேரிட்டது.  பின்னாளில் தாயும் மறைந்தார்.  எவர் வளர்ப்பர் என்று ஏங்கிய பாவாணரை அவருடைய தமக்கையார் வளர்க்கத் தொடங்கினார்.  இருப்பினும் சில காலமே தன் தமக்கையாரிடம் இருந்தார்.  கல்வி கற்க வேண்டி அவரிடமிருந்து பிரிந்து சென்றார். 
இவர் கல்வி கற்க `யங் என்பவர் பொருளுதவி செய்தார்.  இப்பொருளுதவியைப் பாவாணர் கடனாகவே பெற்றார்.  ஆம்பூரில் எட்டாம் நிலை வரை பயின்ற பின்னர் யங் அவர்களின் உதவியுடன் பாளையங்கோட்டைக்குச் சென்று ஒன்பதாம் நிலை முதல் பதினோராம் நிலை வரை கல்வி பயின்றார். 
பாவாணருக்கு ஆங்கில மொழியின் பால் அதிக ஈடுபாடு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  இதற்குச் சான்றாக அவர்கள் கூறுவது யாதெனின்.  ``பாவாணர் அப்பொழுதே ஆங்கில மன்றங்களில் உறுப்பினராகிச் செயலாளராகச் செயல்பட்டார்’’ என்பது தான். 

கல்வி:

சீயோன் மலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.  தம் அறிவை மேன்மேலும் விசாலப்படுத்திக்கொள்ள விழைந்து தமிழ்ப்புலமைக்கான கல்வியைக் கற்றார்.  1942ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் பட்டமும் 1926 ஆம் ஆண்டு திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கப்புலவர் பட்டமும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் பட்டமும் பெற்றார்.

பாவாணர் தன்னுடைய வாழ்நாளில் தமிழுக்காக அளவிறந்த நேரங்களைச் செலவிட்டிருக்கிறார்.  எவர் தமிழுக்காக நேரத்தைச் செலவிடத் துணிகிறாரோ அவரை நன்னிலையடையச் செய்துவிடுகிறாள் நந்தமிழ் மகள். அவ்வகையில் பாவாணர் அவர்களின் `செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி முயற்சி இங்கு நினைவுகூரத்தக்க ஒன்று.  பிற மொழிகளின் துணையின்றி தமிழ் தனித்து வழங்கப்பெறும் என்னும் கூற்றை நிறுவுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிக்குப் பல தடைக் கற்கள் சவால்விட்டு எதிர்நின்றன.

ஆய்வு:

``குமரிநாடே திராவிட மரபு தோன்றிய இடம் என அவர் வரையறுத்துச் சொன்னார்.  ஆனால் அப்போது அது மறுக்கப்பட்டது.  ஆம் பாவாணர் அவர்கள் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக ஆய்ந்து சொன்ன உண்மை இது.  திராவிடர்கள் வேறு நாட்டிலிருந்து இங்கு வந்து நிலைத்தனர் என்னும் கருத்தை அவ்வேட்டில் அவர் மறுத்துத் தெள்ளிதின் விளக்கியிருந்தார்.  அப்பொழுது அதிகாரத்தில் இருந்த ஆதிக்கச் சக்திகள் பாவாணரின் கொள்கையை ஆய்வை ஏற்க மறுத்தன.  இதனால் பாவாணர்க்கு முனைவர் பட்டம் கை நழுவிப் போயிற்று.  எத்தனையோ மாணவர்கள் இன்று  அவருடைய கொள்கைகளை எடுத்தாய்ந்து முனைவர் பட்டம் பெறுகின்றனர்.  அனால் அவரோ அப்பட்டத்தை அன்று அடைய முடியவில்லை.  இது முனைவர் தமிழமல்லன் அவர்களின் பாவாணர் குறித்த அன்பு மேலீட்டு வரிகளாகும்.  இதற்குக் காரணம் தமிழ் மறுப்பு, தமிழ் மொழி நிலைக்கக் கூடாது,  அதன் உண்மை நிலை மறைக்கப்பட்டு வடமொழி வளம் பெற வேண்டும் என்னும் எண்ணங்கள் தான்.

மொழி குறித்து அவர் செய்த ஆய்வுகள் இன்றும் பலரால் வியந்து போற்றத்தக்கதாய் உள்ளன.  ஆம் அப்படித் தான் போற்ற வேண்டும் ஏனெனில் 23 மொழிகளைக் கற்றுத் தேர்ந்த மொழி வல்லாளரின் ஆய்வு பிரமிக்கத்தானே வைக்கும்.  பன்மொழி அறிவு வாய்க்கப்பெற்றதாலேயே பாவாணரின் மொழியாய்வு சாத்தியமாயிற்று.

21.10.12

துணிவு மிக்க நா.இளங்கோ


முனைவர்.நா.இளங்கோ

`காலடியில் தலை எனும் கவிதை நூலானது 1985ஆம் ஆண்டு முனைவர் நா.இளங்கோ அவர்களால் எழுதி வெளியிடப்பட்டது.  இக்கவிதை நூலில் பிரபஞ்சனின் அணிந்துரை இடம்பெற்றிருந்தது.  அவ்வணிந்துரையில் இந்நூலைப் பற்றி அணிந்துரைக்கும் போது ‘வசனத்தை ஒடித்துப் போட்டுஎன்று பிரபஞ்சன் குறிப்பிட்டிருந்தார்.  இதைப் படித்தவுடன் எனக்கு மிகுந்த வருத்தம் மேலிட்டது.  ஒரு எழுத்தாளரின் முதல் நூல் அறிமுகம் நன்முறையில் அமைதல் வேண்டும்.  அப்படி இருக்கையில் முதல் நூலிலேயே இப்படியொரு அணிந்துரை வழங்கியிருக்கிறார் பிரபஞ்சன்.  இதை எப்படி முனைவர் நா.இளங்கோ ஏற்றுக்கொண்டு அப்படியே வெளியிட்டார் என்று எனக்குள் ஆயிரம் தேடுதல்கள்.  இது குறித்து முனைவர் இளங்கோவிடம் அவருடைய மாணவன் என்கிற உரிமையில் கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தேன்.  அதற்கு அவர்,

“அன்பு மாணவ நண்பர் சதிஷ் அவர்களுக்கு,

1985 இல் நான் எழுதி வெளியிட்ட காலடியில் தலை என்ற கவிதை நூலை 2011 இல் வாசிக்க வாய்ப்பு ஏற்பட்டமை குறித்து மகிழ்ச்சி.

பிரபஞ்சன் எழுதிய கருத்துக்களை நேர்மையோடு அப்படியே வெளியிட்டேன். அதுவே அந்த நூலுக்கு மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தந்தது. மற்றவர்கள் அந்நூலைப்பாராட்டவே செய்தனர்.” என்று தெரிவித்தார்.  இஃது அவருக்கிருந்த மனத் துணிவை வெளிப்படுத்திக்காட்டும் வாய்ப்பாக  நினைக்கிறேன்.

`காலடியில் தலை’ என்னும் அக்கவிதை நூலினை வாசிக்க நேரும் பொழுதெல்லம் இளங்கோவின் உள்ளத் தெளிவும் துணிவும் ஒருங்கே வந்து என் கண் முன் நின்று துணிவைத் தந்து செல்கின்றன.
 

20.10.12

தமிழ் செம்மொழி மாநாட்டு நினைவுகள் 2


செம்மொழி மாநாட்டு மீள் கண்ணோட்டம் - 2



  • செம்மொழி மாநாட்டோடு இணைந்து ஒன்பதாவது உலகத் தமிழ் இணைய மாநாடும் நடத்தப்பட்டது.  இதற்காக 124 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.
  • தகவல் தொழில் நுட்பத்தை எவ்வாறெல்லாம் பயன்படுத்தி நந்தமிழை வளப்படுத்தலாம் என ஆராயப்பட்டு முடிவும் எடுக்கப்பட்டது.


பல்வேறு கண்காட்சிகள்:



சிற்பக்காட்சி, ஓலைச்சுவடி, செப்பேடு, கல்வெட்டு, அகழ்வாராய்ச்சியில் எடுக்கப்பட்டவை, வனம் சார் பொருள்கள் என எழுநூற்றுக்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன.
கபிலர் குறிப்பிடும் தொண்ணூற்று ஒன்பது மலர்களைப் பற்றிய படக்காட்சித் தொகுப்பு மாநாட்டுக்கு வந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

விருது:

  • அஸ்கோ பார்ப்போலா என்ற பின்லாந்து நாட்டைச் சார்ந்தவருக்குக் ‘கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருதுவழங்கப்பட்டது.  இந்த விருது 10 இலட்ச ரூபாய் மதிப்புடையது.  இதோடு ஐம்பொன்னாலான திருவள்ளுவர் உருவச் சிலையும் வழங்கப்பட்டது.
  • சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்கிய சென்னைப் பனேசியா மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் திரு.விசயனுக்கு வழங்கப்பட்டது.  இவ்விருது ஒரு இலட்சத்துடன் பாராட்டுச் சான்றிதழ் அடங்கியது.

  • செம்மொழித் தமிழ் மாநாட்டையொட்டி ‘செம்மொழி மாநாட்டுக்கான அஞ்சல் தலைவெளியிடப்பட்டது.  இது திருவள்ளுவர் நிற்பது போன்ற தோற்றத்துடன் உருவாக்கப்பட்டது.  இதோடு ‘குமரகுருபரர் சுவாமிகள்அஞ்சல் தலை, மொழியறிஞர் ‘இராபர்ட் கால்டுவெல்அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டன.

தீர்மானங்கள்:
  • தமிழ் வளர்ச்சிக்காக நூறு கோடி நிதியுதவி வழங்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டது.
  • மதுரையில் தொல்காப்பியர் உலகத் தமிழ் செம்மொழிச் சங்கம் அமைத்தல்.
  • பள்ளி, கல்லூரிகளில் செம்மொழி பற்றிய பாடம் இணைத்தல்.
  • தமிழ் வழியில் கல்வி கற்பவர்களுக்கு அரசுப் பணி வாய்ப்பில் முன்னுரிமை வழங்குதல்.
  • நடுவணரசில் தமிழை ஆட்சிமொழியாக்கல்
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்கல்.
  • தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஆய்வுக்கும் தேவையான அரசுக் கொடை வழங்கல்.
  • தேசியக் கல்வெட்டியல் நிறுவனத்தைத் தமிழகத்தில் அமைத்தல்.
  • பூம்புகார், குமரிக்கண்டம் ஆழ்கடல் அகழ்வாராய்ச்சிச் செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
  • தமிழகத்தின் அட்சிமொழி மாநாட்டை நினைவு கூரும் வகையில் நூறு கோடி செலவில் செம்மொழிப் பூங்காவும் மேம்பாலம் அமைத்தல்.
  • தமிழ் இலக்கியப் படைப்புகளைப் பிற மொழியிலும், பிற மொழி இலக்கியங்களைத் தமிழிலும் மொழி பெயர்க்கச் செய்தல்.



19.10.12

செம்மொழி மாநாட்டு மீள் கண்ணோட்டம்


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டு நினைவுகள் 1


உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு

  • நம் தமிழ் மொழியை நடுவணரசு 12.10.2004 ஆம் நாளன்று செம்மொழியாக அறிவித்தது.
  • கொங்கு தமிழ் கொஞ்சி விளையாடும் கோவை மாநகரில் உலகத் தமிழ்ச் செம்மொழி முதல் மாநாடு 23.06.2010 முதல் 27.06.2010 வரை சிறப்புடன் நடைபெற்றது.
  • ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்னும் மையக்கருத்தினை வெளிப்படுத்தி நிற்கும் வகையில் வள்ளுவரின் திருவுருவச் சிலை தாங்கிய சின்னம் உருவாக்கப்பட்டது.
  • கலைஞர் மு. கருணாநிதி அவர்களால் இதே மையக் கருத்தை அடியொட்டி செம்மொழிப் பாடல் ஒன்று உருப்பெற்று இசைக்கப்பட்டது.
  • இப்பாடல் தொலைக்காட்சிகளில் மாநாடு நடைபெறுவதற்கு முன்பாகப் பன்முறை ஒளிபரப்பப்பட்டது.  இப்பாடலுக்கு ஏ.ஆர். இரகுமான் இசையமைத்திருந்தார்.
  • மாநாட்டிற்காக கொடிசியா வளாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
  • கவியரங்கம், ஆய்வரங்கம், பட்டிமன்றம், கலைநிகழ்ச்சி என ஒவ்வொரு நாளும் கோலாகலப்பட்டது மாநாடு.
  • புத்தகக் கண்காட்சி, இணையத் தளக்கண்காட்சி, பொதுக்கண்காட்சி, ஊடக அரங்குகள் முதலியவற்றிற்கு ஏற்பாடாகியிருந்தது.
  • மாநாட்டின் முதல் நாள் எழிலார் பவனி நடைபெற்றது.  ‘இனியவை நாற்பதுஎனும் பெயரில் அழகு ஊர்திகள் அணிவகுத்து வந்தன.  கலைக்குழுவினர் ஒவ்வொரு ஊர்திக்கும் முன்பு நடனம் புரிந்தனர்.
  • கொடிசியா வளாகத்தில் ஆயிரம் அடி நீளமும், நானூற்று நாற்பது அடி அகலமும் கொண்டு மாபெரும் பந்தல் அமைக்கப் பெற்றிருந்தது.  இதுவரை அசியாவிலேயே இம்மாதிரியான பந்தல் அமைக்கப்படவில்லை எனக் கூறுமாறு அப்பந்தல் காட்சியளித்தது.
  • 80 அடி உயர ராசகோபுரம் விண்ணை முட்டி நிற்குமாறு அமைக்கப்பட்டது.  ஐம்பதினாயிரம் பேர் அமர்ந்து காணும் வகையில் இருக்கைகள் ஏற்பாடாகியிருந்தன.
  • மாநாட்டுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தின் அளவு எட்டு ஏக்கர் முப்பத்தைந்தாயிரம் சதுர அடி ஆகும்.
  • தமிழைச் சிறப்பிக்க இருபத்து மூன்று ஆய்வரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.  இவை ஒவ்வொன்றும் பண்டைத் தமிழறிஞர்களின் பெயரைத் தாங்கி நின்றன.
  • ஆய்வரங்குகளில் 53 தலைப்புகள் எடுத்துக்கொள்ளப்பட்டு 239 நிகழ்வுகள் தயாரிக்கப்பட்டு 913 ஆய்வுக்கட்டுரைகள் படிக்கப்பட்டன.
  • 913 ஆய்வுக்கட்டுரையில் 152 கட்டுரைகள் வெளிநாட்டுத் தமிழறிஞர்களால் படிக்கப்பெற்றவை.
  • ஐம்பது நாடுகளிலிருந்து 840 பேர் உட்பட 2605 தமிழறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.(பாகம் 2 வரும்)

18.10.12

வாழ்க்கைத் திறனும் மதிப்புக் கல்வியும்

சமச்சீர் புத்தகத்தின் வாழ்க்கைத் திறன் கல்வி ஓர் ஆய்வு:
தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தின் படி உருவாக்கப்பட்ட பாட நூல்களில் வாழ்க்கைத் திறன் கல்வியும் மதிப்புக் கல்வியும் இடம்பெற்றுள்ளன.  இவ்விரு முடிவெடுத்தல் பயிற்சியும் மாணாக்கருக்கு நன்கு பயனளிக்கும் வகையில் உள்ளன என்று தோன்றுகிறது.  சூழ்நிலைகளை எடுத்துக்கூறி அச்சூழ்நிலைக்கு எவ்வாறு நீ முடிவெடுப்பாய் என்பது போன்ற வடிவில் கேட்கப்பட்டிருக்கும் வினாக்கள் மாணவரை நன்கு சிந்திக்கச் செய்திருக்கிறது.

நடந்து முடிந்த முதல் பருவத்தேர்வு (2012)  தமிழ் வினாத்தாளில் இவ்வாழ்க்கைத் திறன் பயிற்சி வினாவாக அமையப்பெற்றிருந்தது.  அப்படி இடம்பெற்ற ஒரு வினாவுக்கு மாணவன் ஒருவன் பதிலளித்த விதம் சிந்தனை வளர்ச்சியையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தி இருந்ததாக உணர்ந்தேன்.

அஃதாவது தாயை இழந்த ஒரு  மாணவனைக் காணச் செல்லும் மற்றொரு சக மாணவன் அம்மாணவனுக்கு எந்த வகையில் உதவுவான் என்பது தான் அவ்வினா.  இதற்குப் பல மாணவர்கள் “என்னுடைய இல்லத்திற்கு அவனை அழைத்துச் சென்று தங்க வைத்துக்கொள்வேன்” என்றும் “எங்கள் தந்தையிடம் அனுமதி பெற்று அவனை அழைத்து வந்து ஆடை, புத்தகம், உணவு ஆகிய அனைத்தையும் கொடுத்து எங்கள் குடும்பத்தில் ஒருவனாக பாவித்து நடத்துவோம் ” என்றும் எழுதியிருந்தனர்.

``தான் அவனுக்கு உதவுவது சாத்தியம் இல்லை ஏனென்றால் எங்கள் இல்லத்தின் நிலையே வறுமையின் பாற்பட்டது” என்று மற்றொரு மாணவன் எதார்த்தத்தை எழுதியிருந்தான். 

இன்னுமொருவன் ``என் தாய் உயிரோடு இருக்கும் போது அவன் எந்த அளவு துயர் அடைந்திருக்கிறான் என்பதை என்னால் எப்படி அறிய முடியும்” என்று எழுதியிருந்தான்.

இத்தகைய எதார்த்தச் சிந்தனைகளைத் தட்டி எழுப்பியிருக்கிறது சமச்சீர் கல்வியினூடே அமையப்பெற்ற வாழ்க்கைத்திறன் மற்றும் மதிப்புக் கல்வி.  சென்ற ஆண்டு இவ்வாழ்க்கைத் திறனும் மதிப்புக் கல்வியும் வினாத்தாளில் இடம் பெறாமல் இருந்தது.  பருவமுறை அறிமுகம் செய்யப்பட்டதும் இவ்விரு பயிற்சிகளும் வினாத்தாளில் இடம்பெற்றிருக்கின்றன.

உண்மையான கல்வியின் நோக்கம் மனிதனைச் சிந்திக்கச் செய்து வெற்றியடைய வைப்பதே என்பது உண்மையாகியுள்ளது!

17.10.12

அறிவோம் ஞானியாரை


ஞானியார் அடிகள்

தமிழ் அன்பர்களே இன்று நாம் அறிய இருக்கும் தமிழறிஞர் சிறந்த உரையாசிரியர்களுள் ஒருவராகத் திகழ்ந்த ஞானியார் அடிகள் ஆவார். 1873 ஆம் ஆண்டு மே திங்கள்  17 ஆம் நாள் பிறந்தவர்.  சைவம் தழைக்க அரும்பாடுபட்டவர்.  மதுரைத் தமிழ்ச் சங்கம் தோற்றம் பெறுவதற்குக் காரணமாக இருந்தார்.
தஞ்சாவூரில் உள்ள கும்பகோணத்தில் திருநாகேசுவரம் என்னும் ஊரில்
அண்ணாமலை – பார்வதி தம்பதியருக்குப் பிறந்தவர்.

தமிழையும் சைவத்தையும் ஒருமித்த ஒன்றாகவே பாவித்தவர்.  சைவசித்தாந்த மன்றங்கள் பல நிறுவியதோடு வாணிவிலாச சபை, பெருமன்றம் முதலியவற்றையும் ஏற்படுத்தினார்.  தமிழ் தழைப்பதற்கு ஏதுவாக இருந்தார்.  திருக்கோவிலூர் மடம் இவரின் தலைமையின் கீழ் செயல்பட்டது.

மறைமலையடிகளுக்கும் திரு.வி.கவுக்கும் நட்புறவு ஏற்படுவதற்குப் பாலமாக இருந்தவர்.  திருப்பாதிரிப்புலியூரில் சைவ மாநாடு ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார்.  அம்மாநாடே திரு.வி.கவைப் பற்றி மறைமலையடிகள் அறிந்துகொள்வதற்கு வாய்ப்பாக அமைந்தது.  மாநாட்டின் இறுதியாக திரு.வி.க அவர்கள் உரையாற்றினார்.  இவரின் உரையை செவியுற்ற மறைமலையடிகள் இப்படி ஒரு அற்புத ஆன்மீக சொற்பொழிவை நிகழ்த்தும் இவர் யார் என்று கேட்டறிந்து திரு.வி.க வை போற்றிப் பேசினார்.  அன்று முதல் மறைமலை அடிகளை திரு.வி.க பின்பற்றத் தொடங்கினார்.  இந்நட்புக்கு திரு.ஞானியார் அடிகளே அடித்தளமிட்டார்.
69 அகவை வரை வாழ்ந்த ஞானியார் பிப்ரவரி திங்கள் 1942 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.


அசலாம்பிகை அம்மையார் வாழ்க்கைக் குறிப்பு

16.10.12

காஞ்சி இராமசாமியார்

காஞ்சி இராமசாமியார்:
காஞ்சி இராமசாமியார்
                                             

தமிழ் நல்லுலகில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் தமிழ் நல்லறிஞர்களை அறிந்துகொள்ள வேண்டியதைக் கடமைகளுள் ஒன்றெனக் கொளல் வேண்டும்.  

அவ்வகையில் இன்று நாம் அறிய இருக்கின்ற தமிழறிஞர் திரு.காஞ்சி இராமசாமியார் ஆவார்.  இவர் 1735 ஆம் ஆண்டு பிறந்தார்.  தமிழ் மீது அன்பு கொண்ட இவர் தமிழ் நூல்களைப் பதிப்பிக்க முயன்றார்.  தன்னால் இயன்றவரை தமிழ் நூல்களைப் பதிப்பித்து வெளியிட்டார்.

1817 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
இணையத்தில் இவரைப் பற்றிய செய்தி கிடைப்பது அரிதாக உள்ளது.  இணையத்தில் கிடைக்காத செய்திகளே இல்லை என்று சொல்வர்.  ஆனால் காஞ்சி இராமசாமியாரைப் பற்றிய தேடலில் கிடைக்கக் கூடிய தகவல் மிகவும் குறைவே.  எனவே தான் அவரைப் பற்றிய பதிவினை பதித்துள்ளேன்.

இப்பதிவினைப் படிப்பவர்கள் காஞ்சி இராமசாமியாரைப் பற்றி மேலும் தெரிந்திருப்பின் தெரியப்படுத்துமாறு வேண்டுகிறேன்.


செம்மொழி மாநாட்டு மீள் கண்ணோட்டம் 1


செம்மொழி மாநாட்டு மீள் கண்ணோட்டம் - 2






14.10.12

இலக்கியத்திற்காக

இலக்கியத்திற்கா நோபல் பரிசினை வென்றவர்கள்:
ஆல்பர்ட் நோபல் என்பவரின் அறக்கட்டளை வழங்கி வரும் நோபல் பரிசு தான் உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுகிறது.  இது இலக்கியம், இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, பொருளியில் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவர்களுக்காக வழங்கப்பட்டு வருகிறது.

செர்கே அரோழ்சி , டேவிட் ஜெ.வைண்லெண்ட் ஆகிய இருவர் 2012 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.

இராபர்ட் லேகோவிட்சு , பிரை கெ.கோபில்கா ஆகிய இருவர் 2012 ஆம் வேதியியல் துறைக்கான நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.

சான்.பி.குர்தோன், சின்யா யாமானாகா ஆகிய இருவரும் மருத்துவத்திற்கான( 2012 ஆம் ஆண்டு ) நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.
மேயான் என்பவர் 2012 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.















13.10.12

முன்றாம் உலகப்போர்


நேற்று (12-10-12) புதுவை கம்பன் கலையரங்கில் கவிப்பேரரசு வைரமுத்துவின் ‘முன்றாம் உலகப்போர்’ கவிதை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.

சப்தகிரி அறக்கட்டளை மற்றும் வெற்றித் தமிழர் பேரைவை இணைப்பாக இவ்விழாவினை நடத்தின.  கவிஞர் வைரமுத்து இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

தொழில் புரட்சிக்கு வித்திட்டது கார்க்கியின் தாய்காவியம் , முழுமையான உண்மையான வேளாண்புரட்சிக்கு வித்திடப்போவதாக அமையப்பெற்றது தான் ‘முன்றாம் உலகப்போர்’ என்னும் காவியம்.
கவிப்பேரரசு வைரமுத்து

உழவர்களின் துன்ப நிலையைப் எடுத்துக்காட்டியிருக்கின்றாராம் கவிஞர் வைரமுத்து.

நீலாம்பிகை அம்மையார்



நீலாம்பிகை அம்மையார் அவர்கள் 1903 ஆம் ஆண்டு பிறந்தவர்.  மறைமலையடிகளின் மகளாகப் பிறந்தார்.  மறைமலையடிகளைப் போன்றே தமிழ்ப்பணி ஆற்றியவர்.  தமிழ் மொழியின் நிலை திரியாது அதன் இயல்பினின்று மாறாமல் இருக்க தனித்தமிழை வலியுறுத்தினார்.  முப்பெண்மணிகளின் வரலாறு, `பட்டினத்தார் பாராட்டிய மூவர்’, `வடசொல் தமிழ் அகரவரிசை, வடசொல் தமிழ் அகர வரிசைச் சுருக்கம்என்கிற நூல்களை எழுதி வெளியிட்டார்.

நீலாம்பிகை அம்மையாருக்கு ஆசானாக இருந்து தமிழ் போதித்தவர் தந்தை மறைமலையடிகளே.  அம்மையாரும் தன்னுடைய நூல்களில் தன் தந்தையின் நூற்களிலிருந்து சில மேற்கோள்களை எடுத்துக் கூறியுள்ளார்.  தன்னுடைய நூல்களில் பெண்களின் நிலையை திறம்பட எழுதியுள்ளார்.

8.10.12

திரு.வி.க வின் மண வாழ்வு


திருவிக வின் மண வாழ்வு இனித்த ஒன்று என்றாலும், அவ்வாழ்வு நீண்டிருக்க வேண்டும்.  ஏனோ அவரின் மண வாழ்வு மட்டும் சிற்சில ஆண்டுகளில் மறைந்து போனது என்று அடிக்கடி நினைக்கத் தோன்றுகிறது.  எத்தனைத் திறமைகளை ஒருங்கே பெற்றவர் எத்தனை இயக்கங்களுக்குத் தலைமையாற்றிச் செயல்பட்டவர்; தமிழுக்காக எத்தனைத் தொண்டாற்றினார் என்பதையெல்லாம் நினையும் போது அவர் தங்குடும்பத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

``திரு.வி.க வின் பிள்ளைகள்,  தன் தந்தையின் பெயர் நிலைக்கச் செய்துவிட்டனர்’’ என்று பிறர் பேசும் வாய்ப்பை நல்கவில்லை.  என்செய்வது இறைவன் அவரின் பிள்ளைகளுக்கு நீளாயுளை வழங்கவில்லை.  பிறர்க்கும் தமிழுக்கும் நற்றொண்டாற்றிய உண்மையின் மாற்றுருவுக்கு குடும்பம் என்னும் உன்னத சமுதாய அங்கமைப்பு நிலைத்து நிற்கவில்லை.
திரு.வி.க வின் துணைவியராய் வந்தவர் கமலாம்பிகை அம்மையார்.  இவர் தன்னுடையப் பெற்றோரை இழந்தவர்.  தன்னுடைய பெரியப்பாவால் வளர்த்தெடுக்கப்பட்டவர்.  1912 செப்டம்பர் 12 ஆம் நாள் திருவிக மணவாழ்க்கையில் விளக்கேற்ற வந்தவர்.  ஆம் அன்று தான் திரு.வி.க வுக்கு மணம் முடிக்கப்பட்டது.

இதற்கு முன்னர்,  திரு.வி.க மணம் செய்து கொள்ளமாட்டார் என்றும் ‘இராயப்பேட்டை முனிவர்என்றும் சிலர் கூறி வந்தனர்.  இதுமட்டுமா சாதுமுனிவர் என்று கூட அழைத்தனர்.  இருப்பினும் திரு.வி.க மணவாழ்க்கையில் சேர்ந்து கொள்ள மறுப்புத் தெரிவிக்கவில்லை.  நான் ஏழ்மையின் பாற்பட்டவன் இதனால் ஏழ்மையானவளைத் தான் மணப்பேன் என்று கூறியிருந்தார்.
திருமணத்திற்குப் பின்னர் அவருடைய மண வாழ்க்கை மிகவும் இனித்தது.  கமலாம்பிகை அம்மையார் திருவிகவுக்கு யாதுமாய்த் திகழ்ந்தார்.  இவ்விருவருடைய மண வாழ்க்கைக்கு அடையாளமாய் ஆண் மகவை முதலில் ஈன்றனர்.  ஆனால் அம்மகவு பிறந்த முதல் வாரத்திலேயே உயிர்நீத்தது.  பெண் மகவை அடுத்ததாக ஈன்றனர்.  அம்மகவோ ஓராண்டுகள் இப்புவியில் வாழ்ந்தது.  திலகவதி என்று கூட பெயரிட்டு வளர்த்தனர்.  ஆனால் இப்பிள்ளையும் அவர்களை விட்டுச் சென்றது.

இதைவிட பெருத்த துயரம் 1918 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.  அவ்வாண்டு தான் திரு.வி.க வின் வாழ்க்கைத் துணைவியார் கமலாம்பிகை மறைந்தார். எலும்புருக்கி நோய் கமலாம்பிகையைக் கொண்டு சென்றது.  1912 முதல் 1918 வரையே திரு.வி.கவின்  மண வாழ்வு நிலைத்தது.
ஆறே ஆண்டுகள் தான் கமலாம்பிகை வாழ்ந்திருந்தார் என்றாலும் அவர் திறம் கண்டு நாம் வியக்கத்தான் வேண்டும்.  திரு.வி.கவுக்கு வலிமையும், உலகியல் பற்றிய நாட்டமும் பெண்ணியச் சிந்தனையும் ஏற்பட வழிவகுத்தார்.  முரட்டுத்தனம் மிகுந்திருந்த திரு.வி.கவை சாந்தமூர்த்தியாகச் செய்தவர்.  கமலாம்பிகையை உண்மையாக நேசித்தவர் என்பதால் இரண்டாம் மணம் செய்யும் படி வற்புறுத்தியும் மறுத்துத் தள்ளினார். இச்செய்திகள் அனைத்தும் திரு.வி.கவின் மணவாழ்வு கனித்த பின் காய்த்தது என்று எண்ணத் தோன்றுகிறது.

5.10.12

திரு.வி.க வின் குறிப்புரைகள்

திரு.வி.க வின் செய்யுள் நூல்கள்
உரிமை வேட்கை அல்லது நாட்டுப் பாடல்
முருகன் அருள்வேட்டல்
திருமால் அருள்வேட்டல்
பொதுமை வேட்டல்
கிறிஸ்துவின் அருள்வேட்டல்
புதுமை வேட்டல்
சிவனருள் வேட்டல்
கிறிஸ்து மொழிக்குறள்
இருளில் ஒளி
இருமையும் ஒருமையும்
அருகன் அருகே அல்லது விடுதலை வழி
பொருளும் அருளும் அல்லது வாழ்க்கை வழி
சித்தம் திருந்தல் அல்லது செத்துப் பிறத்தல்
முதுமை உளறல்
வளர்ச்சியும் வாழ்வும் அல்லது படுக்கைப் பிதற்றல்
திரு.வி.க வின் குறிப்புரைகள்:
பெரிய புராணம் (குறிப்புரையும் வசனமும்)
திருமந்திரம்
அருணாசல புராணம்
குசேலோபாக்கியானம்
திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம்
பட்டினத்துப் பிள்ளையார் திருப்பாடற்றிரட்டும் பத்திரகிரியார் புலம்பலும்
மகாபாரதம்
காரைக்காலம்மையார் திருமுறை
திருக்குறள் விரிவுரை முதல் பகுதி (பாயிரம்)
திருக்குறள் விரிவுரை இரண்டாம் பகுதி (இல்வாழ்க்கை இயல்)


4.10.12

நம் மொழியின் திறன் கண்டீரோ!

 உயிர் வகைப்பாடு 


ஐந்திலக்கணங்களை ஒருங்கே எடுத்துக்கூறும் முகத்தான் அமையப்பெற்ற ஓர் இலக்கண நூல் தான் ‘நன்னூல்’. இதனை சீயகங்கன் என்னும் மன்னன் வேண்ட பவணந்தி என்னும் முனிவர் இயற்றினார்.
இக்கால அறிவியல் அறிஞர்கள் ஆய்ந்து கூறிய பலவற்றை இம்முனிவர் அன்றே சொல்லிச் சென்றுள்ளார்.  அறிவுகளின் அடிப்படையைக் கொண்டு உயிரினங்கள் சில பாகுபாடுகளுக்கு ஆளாயின.  ஊர்வன, நடப்பன என்பவை இவற்றுள் சிலவகையின.
“மெய்ந்நா மூக்கு நாட்டம் செவிகளின்
ஒன்றுமுதலாக் கீழ்க்கொண்டு மேல் உணர்தலின்
ஓர் அறிவு ஆதியா உயிர் ஐந்தாகும்”(நன்னூல்-444) என்று சுட்டுகிறார் பவணந்தி முனிவர்.
உடல், நாக்கு, மூக்கு, கண், காது என்னும் ஐந்து பொறிகளாலும், மெய்யினால் உணரும் உணர்ச்சி ஒன்று முதலாகக் கீழ்ச் சொன்ன உணர்ச்சியும் கொண்டு சுவை, நாற்றம், ஒளி, ஓசை என வரும் புலன்கள ஒவ்வொன்றாக அறிதலால், ஓர் அறிவு முதலாக ஐந்து வகையாகும் என்கிறார்.
            புல், மரம் முதலியன மெய்யினால் தொட்டுத் தொடுதல் உணர்வை அறியும் ஓர் அறிவு பெற்றவையாம்.
           சிப்பி, சங்கு முதலியன மெய் அறிவு+சுவை அறியும் அறிவுடன் ஈரறிவுயிராம்
   செல், எறும்பு முதலியன மெய் அறிவு+சுவை அறிவு+ நாற்றம் (மணம்) அறியும் அறிவைப் பெறுகின்றன.  ஆதலால் இவை மூவறிவுயிர்களாயின.
           தும்பி, வண்டு முதலியன மெய் அறிவு+சுவை அறிவு+ நாற்றம் (மணம்)+ கண் அறிவு(கண்ணால் பார்த்து அறிதல்) என்னும் நான்கு அறிவு பெற்றவை நாலறிவு ஜீவிகளாயின.
           தேவர், மனிதர், நரகர், விலக்குகள், பறவைகள் முதலானோர்-முதலியன மேற்சொல்லப்பட்ட நான்கறிவுடன் காதால் கேட்கும் அறிவையும் பெற்று ஐயறிவுயிர்களாயினர்.
மனிதன் ஆறு அறிவு படைத்தவன் என்றும்,  ஆறாவது அறிவாக பகுத்தறிவைக் குறிப்பிடுகிறோம்.  இது நாமாக வருவித்துக் கொண்டது.(மாற்றுக் கருத்துக்கும் இடம் உண்டு)
ஏன் அவ்வாறு நாம் மற்ற உயிர்களினின்று தனித்து நின்றோம்?  மற்ற விலங்குகள், பறவைகளின் ஒழுக்கத்தை விட உயர்ந்த ஒழுக்கத்தை நாம் பெற்றிருத்தலே இதற்குக் காரணம்.

3.10.12

பெரியாழ்வாரை அறிவோம்

பெரியாழ்வார் வரலாறு
பாண்டிய நாட்டின் ஸ்ரீவில்லிபுத்தூரிலே தோன்றியவர்.  பெரியாழ்வார் திருமொழி, திருப்பல்லாண்டு ஆகிய நூல்களை உலகுக்குத் தந்தவர்.  விஷ்னு சித்தன் , பட்டர் பிரான் என்ற சிறப்புப் பெயர்களைக் கொண்டவர்.  ஆண்டாளை வளர்த்தவர்.
இறைவனுக்குப் பூ மாலை சூட்டுவதை வழக்கமாகக் கொண்ட இவர் பாமாலையும் சூட்டி மகிழ்ந்தார்.
கண்ணனின் அழகினை அழகாக வருணித்துப் பாடியுள்ளார். 
“சீதக் கடலுள் அமுதன்ன தேவகி
கோதைக் குழலாள் யசோதைக்குப் போத்தந்த
பேதைக் குழவி பிடித்துச் சுவைத்துண்ணும்
பாத கமலங்கள் காணீரோ
பவள வாயீர் வந்து காணீரோ!
என்ற பாடல் மூலம் கண்ணனின் பாதங்களை, அதன் அழகைக் கண்டு மயங்குமாறு வேண்டுகிறார்.
கண்ணனின் பிறப்புக்காக அகமகிழ்ந்து பத்துப் பாடல்கள் இயற்றியுள்ளார்.  அப்பாடல்களில் கண்ணனுடைய புருவங்கள், நெற்றி, மார்பு, வயிறு, கழுத்து, முடி, குழை, துடை, கைகள் என அவனுடைய அங்கங்களை,  மகிழ்ந்து பாடுகிறார்.
கண்ணனை உறங்கச் செய்வதற்காக வேண்டி பாடலையும் பாடியிருக்கிறார்.  இவர் பாடிய இப்பாடல் தான் தற்போது பாடப்படும் தாலாட்டுக்கு வழிவகுத்தது என்பர்.  குழந்தைகளை வர்ணிப்பதில் இவருக்கு நிகர் இவரே.
கண்ணனும் யசோதையும்:
கண்ணனைப் பற்றி புனைந்துரைத்த பெரியாழ்வார், கண்ணனின் தாய் யசோதை கொள்ளும் பெருமிதத்தை எடுத்துரைக்கிறார்.  கண்ணன் ஆநிரை மேய்த்துத் திரும்பும் போது அவனைத் தாயானவள் மிகவும் பெருமிதத்துடன் வரவேற்கிறாள்.  இருந்த போதிலும் இச்சிறு வயதில் இவ்வாறு உன்னை அனுப்புவதற்கு எனக்கு மனமில்லை என்று வருந்தி நாளை முதல் நீ இல்லிலேயே இருந்துவிடு என்று அன்போடு கூறுகிறாள்.  பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனைப் பற்றிய பல பாடல்களைப் பாடியுள்ளார்.

இவ்வாறு பெரியாழ்வார் படைத்த கண்ணன் பற்றிய பாடல்கள் இன்றளவும் அனைவராலும் உய்த்துணரத்தக்கதாக உள்ளது.  பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதியாத்த இப்பாடல்கள் இன்றும்  நம்மை மெய்மறக்கச் செய்து நிற்கின்றன.

தமிழ் இணையப் பல்கலைக் கழகம்


தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் ஓலைச் சுவடி பாதுகாப்பு முயற்சிக்குப் பாராட்டுக்கள்.



2.10.12

உறுதி ஏற்போம்


மகாத்மா காந்தியின் பிறந்த நாளான இன்று நாம் ஏற்க வேண்டிய உறுதி என்ன?
காந்தியடிகள்
``அவரை அவருடைய கொள்கைகளைப் பின்பற்றி ஒழுக வேண்டும்’’ என்னும் உறுதி மட்டும் தான் நம்முடைய உறுதியெனில் சாதாரணமானது என்று சொல்லிக்கொள்ள வேண்டும்.
நம்மால் என்ன முடியும் என்று அவர் அன்று இருந்திருந்தால் இன்று நாம் சுதந்திர பூமியில் சுகமாய் வாழ்ந்திருக்க முடியாது.  அப்படிப்பட்ட மகா உன்னதம் புரிந்தவரின் பிறந்த நாளான இப்பொன்னாள் அனைவரது வாழ்விலும் ஏதாவதொரு உறுதியை ஏற்கும் நாளாக இருக்க வேண்டும்.
ஒவ்வொரு அக்டோபர் 2 அன்று மட்டும் அவரை நினைத்துப் பாடி, மனம் உருகி,  மாலை அணிவித்துவிட்டால் போதுமா? 

விப்ரநாரண ஆழ்வார்


தொண்டரடிப் பொடியாழ்வார்


தொண்டரடிப் பொடியாழ்வாருக்கு விப்ரநாரணர் என்ற மற்றொரு பெயரும் உண்டு.  திருவரங்க நாதனுக்கு தினந்தோறும் மாலை சாத்த, ஆலயத்தில் தோட்டம் அமைத்து மலர்ச் செடிகளை வளர்த்து வந்தார்.  அங்கு தேவ தேவி என்ற விலைமாதின் வயப்பட்டுத் தம் வாழ்நாளைக் கழித்தார்.  பின்னர், அக்கள்ளம் கரைய உருகிப் பாடிய பாக்கள் திருமாலை, திருப்பள்ளியெழுச்சி நூல்களாகும்.  இவர் இயற்றிய திருப்பள்ளியெழுச்சி நூல்,