தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

20.8.12

மு.வா வின் அன்னைக்கு

டாக்டர் மு.வரதராசனார் அவர்களின் ‘அன்னைக்கு’ என்கிற கடித உரைநடையின் முதல் பகுதி.
டாக்டர் மு.வரதராசனார்
அன்புள்ள அம்மா,
   
     விடுமுறையில் இரண்டு வாரம் வீட்டில் இருந்துவிட்டு வரலாம் என்று மகிழ்ச்சியோடு புறப்பட்டு வந்தேன்.  ஆனால் நீயும் அப்பாவும் எனக்கு இல்லாத கவலையை எல்லாம் ஏற்படுத்தி ஆயிரம் உபதேசம் செய்து திரும்பச் செய்திருக்கின்றீர்கள்.  இப்படி உண்மையை ஒளிக்காமல் எழுதியதற்காக என்னை மன்னிக்க வேண்டும்.  உங்கள் மேல் உள்ள அன்பாலும் நம்பிக்கையாலும் இவ்வாறு எழுதுகிறேன்;
இல்லையானால் வெறுங்கதையை எழுதி உள்ளத்தை மறைத்து வைக்க எனால் முடியாதா?  அதனால் எனக்குப் பயனில்லை; உங்களுக்கும் பயனில்லை;  தபால் நிலையத்திற்கு வருவாய் கிடைத்திருக்கும்.  அது தான் பயனாக இருந்திருக்கும்.
     நான் ஊரில் இருந்தபோது வெறும் பள்ளிக்கூடத்துப் பையனாக இருந்தேன் . அரசியல், சமுதாயம், சமயம் இவற்றைப் பற்றி எண்ணவே தெரியாத நிலையில் இருந்தேன்.  ஆனால் இங்கே வந்த பிறகு அப்படி இருக்க முடியவில்லை.  “போன வேலையை மறந்து விடாதே; கடமையை மறந்து கவலையற்றுத் திரியாதே; உன்னைச் சென்னைக்கு அனுப்பியது எதற்காக?  கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று வருவதற்காக.  அதை மறக்காதே” என்று அப்பா அவ்வளவு வற்புறுத்திச் சொல்லி அனுப்பினார்.
     அவர் ஏன் இவ்வாறு வற்புறுத்திச் சொன்னார் என்பதை நீ சொன்னபோதுதான் தெரிந்து கொண்டேன்.  சென்னையில் நான் தங்கிப் பழகியது மூன்று மாத காலமே.  அதற்குள் நான் அரசியலில் மிகுதியாகக் கலந்து கொண்டதாக அவர் தெரிந்துகொண்டிருக்கிறார் என்றும், என் பேச்சில் அடிக்கடி அரசியல் வந்தது என்றும் நீ எடுத்துச் சொன்னது நல்லதே.  கல்லூரியிலும் ஆசிரியர்கள் பலரும் அரசியலில் கலந்துவிட வேண்டா என்றுதான் அறிவுரை புகட்டுகின்றார்கள்.  ஆனால் கல்லூரிச் சங்கங்களில் வந்து பேசும் அறிஞர்கள் மட்டும் அவ்வாறு சொல்வதே இல்லை.  அந்த அறிஞர்கள் பேசுவதெல்லாம் அரசியல் தவிர வேறு ஒன்றும் இல்லை.    (தொடரும்)



No comments:

Post a Comment