தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

27.8.12

இடுகை இடுங்கள்!


இணைய தள இடுகைகள் எப்படி அமையலாம்?


 இணையம் இன்று உலகை மிகவும் சுருங்கச் செய்து விட்டது.  இணைய உலகம் தனி உலகம் என்று சிலர் மகிழ்ச்சிப் பொங்கக் கூறுவர்.  இம்மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தரும் இணையதளங்களின் பங்கு அளவிடற்கரியது.  இலாப நோக்கங்களின்றி எத்தனையோ தளங்கள் இலவயமாக
இடுகைகளை இட்டு வருகின்றன.  பல அரிய தகவல்களைத் தன்னகத்தே கொண்டு விளங்குகின்றன.  தனியாக இதற்கென்று நேரம் ஒதுக்கி அல்லது தொழில் முறையில் அலுவலகம் அமைத்துக் கொண்டு செயல்படும் இணயங்களைப் பாராட்டுவதுத் தகும்.
     பலர் பிளாக்குகளில் தங்களுடையத் திறமையைக் காட்டி வருகின்றனர்.  பிளாக்கின் செயல்பாடு அவரவர் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது மற்றும் நீங்காத நினைவுகளை நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வது என்னும் முறையில் இருந்து மாறி இணைய தளங்களுக்கு இணையாகத் தங்களின் தோற்றத்தை மாற்றிக் கொண்டு சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.
     டெம்ப்ளேட்களை மாற்றிக் கொண்டால் இணையப் பக்கங்களுக்கு இணையாக பிளாக்குகள் தோற்றம் பெற்றுவிடும்.  இதனை பயன்படுத்தாமல் பிளாகர் வழங்கும் தீம்ஸ்களை மட்டுமே பயன்படுத்துபவர்களும் இருக்கின்றனர்.(இவர்கள் தான் அதிகம்).
  சரி தலைப்பை ஒட்டி வருவோம்.  அதாவது இணைய தள இடுகை என்பது எப்படி வேண்டுமானாலும் அமையலாம் என்று சிலர் கூறுவர்.  இருப்பினும் இப்படித் தான் இடுகை அமைய வேண்டும் என்று உங்களுக்குள் சில வரையறைகளை வைத்துக் கொண்டால் உங்களின் தளம்/பிளாக் பலராலும் பின்பற்றப்படும்.
பிற தளங்களைப் பற்றி எழுதுங்கள்:
     உங்களின் இடுகைகளில் ஒன்றாக பிற தளங்களைப் பற்றி விமர்சிப்பதாகவும் அமையலாம்,  விமர்சனம் நல்ல முறையில் அமையுமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.  அத்தளத்திற்கு உங்களால் எளிமையாக டிராபிக் (அதிக வருகையாளர்) கிடைத்துவிடுவர் என்று பயப்பட வேண்டாம்.  உங்கள் தளத்தில் பல சிறப்பான தளங்களைப் பற்றிய விமர்சனம் இருக்கிறது என்றால் தவறாமல் உங்கள் தளத்தை புக் மார்க் செய்து கொண்டு அடிக்கடி வந்து நீங்கள் விமர்சித்திருக்கும் குறிப்பிட்ட தளத்திற்குச் செல்ல வாய்ப்புள்ளது.  இதனை வாரத்திற்கு அல்லது மாதத்திற்கு ஒரு தளம் என்ற முறையில் விமர்சனம் செய்யலாம்,  மீண்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் விமர்சனம் செய்யும் தளத்தின் நல்ல கூறுகளை மட்டும் எடுத்துச் சொல்லி வருகையாளரைப் பயன் அடையச் செய்யுங்கள்.
அரசியல் கட்டுரைகள்:
     சிலர் அரசியல் கட்டுரைகளைத்  தேவையற்ற வேலை என்று நினைத்து இத்தலைப்பில் இடுகை இடுவதை  தவிர்த்து விடுவர்.  அரசியல்  சார் இடுகையும் இரசிகர்களால் 60% வரவேற்கப்படுகிறது.  அரசியல் பிரமுகர்களை நேரடியாகத் தாக்காமல் அரசியலில் காணப்படும் நல்ல செய்திகளை எடுத்துக் கொடுக்கலாம். வேண்டாதவற்றை எடுத்துக்காட்டி ஏற்ற விழிப்புணர்வையும் உங்கள் இடுகையின் மூலம் ஏற்படுத்தலாம்.  நேர்த்தியான நேர்மையான தலையங்கம் எழுதலாம்.  கேலிச் சித்திரம் இடம் பெற வைக்கலாம்.  தினம் ஒரு அரசியல் விமர்சனம் எழுதலாம்.  பலரும் இப்பக்கத்தை படிக்கத் தவறுவதில்லை!
பொதுத் தகவல்கள்:
     பொதுவாகச் சில தகவல்களைத் தரலாம். உ.ம்_ ஒரு குறிப்பிட்ட மாவட்டத்திலுள்ள இலவச ஆம்புலன்சு சேவை எண்கள், அரசு மற்றும் தனியான் மருத்துவமனைகளின் தொலைபேசி எண்கள், ஆட்சியர் அலுவலக முகவரி மற்றும் தொலைபேசி எண்கள்,  அருகிலுள்ள தபால் நிலையம், அருகிலுள்ள பேருந்து நிறுத்தங்கள், அருகிலுள்ள திரையரங்குகள், திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் படங்களின் பெயர்கள், சுற்றுலாத் தளங்கள், சொகுசுப் பேருந்து வசதி மையம் என பல பொதுத் தகவலகளைத் தந்து உதவினால் உங்கள் தளம் அனைவராலும் வரவேற்கப்பட்டு புக் மார்க்கில் பதிவு செய்யப்படும்.
திரைவிமர்சனம் செய்யுங்கள்:
     திரைக்கு வந்த புத்தம் புதிய திரைப்படங்களைப் பார்த்துவிட்டு உண்மையான விமர்சனத்தை எழுத வேண்டும்.  திரிபுக்கு இடம் தராமல் அதீத பாராட்டுதல் இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் வேண்டும்.  திரைவிமர்சனம் எக்காரணம் கொண்டும் குறிப்பிட்ட அப்படத்தின் வசூலைக் குறைக்கும் முகாந்திரத்தோடு அமையக் கூடாது.  திரைப்படத் துறையினருக்கு நாம் எழுதும் விமர்சனம் ஒரு ஊக்கமாக அமைய வேண்டும்.  அவர்களின் வயிற்றில் அடிக்கும் விமர்சனமாக இருக்கக் கூடாது.  தரமான படமாக இல்லை என்று நினைக்கிறீர்களா அப்படத்தைப் பற்றிய விமர்சனத்தைத் தவிர்த்து விடுவது நல்லது.  வேண்டாத விமர்சனம் எழுதி அப்படத்தின் இரசிகக் கூட்டங்களைக் குறைப்பது விரும்பத்தகாத நிகழ்வாகிவிடும். 
இலக்கியம் ஆய்தல்:
     ஒரே மாதிரியான இடுகைகளை இடுவதை ஒழித்து சற்று வித்தியாசமான சாயலை ஏற்படுத்த முற்பட வேண்டும்.  தமிழ் இலக்கியம் தொடர்பான சில ஆய்வுகளை அலசி ஆராயலாம்.  எத்தனையோ புகழ் படைத்த கவிஞர்களின் கவித்திறனை ஆய்வு நோக்கில் இடுகை இடலாம்.  பெருங்காப்பியங்கள் பற்றிய தொன்மை புனைவை அலசி ஆராயலாம்; இலக்கண நூல்களை ஆராய்ந்து இற்றைய மொழி நிலையை இலக்கணத்தோடு பொருத்திக் காட்டி மொழியின் உண்மை உருவை உலகறியச் செய்யலாம்.  இத்தலைப்பு மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தரும் தலைப்பாகும்.  மலேசியா, சிங்கப்பூர் , அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் இது போன்ற இடுகைகள் விரும்பிப் படிக்கப்படுகின்றன.

No comments:

Post a Comment