தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

14.1.13

பதிப்புத் துறையின் முன்னோடி

சி.வை.தாமோதரம் பிள்ளை 

பதிப்புத் துறையின் முன்னோடி என்னும் பெருமைக்கு இலக்கானவர் திரு.சி.வை.தாமோதரம் பிள்ளை ஆவார்.  தமிழ் நூல்கள் பலவற்றைப் பதிப்பித்து அரும்பணியாற்றியவர்.  இதனாலேயே `பதிப்பாசிரியர்’ என்று அடைமொழியிட்டு இவரைக் குறிப்பர்.

தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாத ஐயர் அவர்களின் தமிழ்ப்பணி எத்தன்மையதோ அத்தனமயதே இவரின் (சி.வை.தா) பணியும்.  திரு.உ.வே.சா அவர்களின் சுயசரிதையான ‘என் சரித்திரம்’ என்னும் நூலைப் படித்தால் தமிழ் நூல்களைப் பதிப்பிக்க அவர் சந்தித்த அறைகூவல்களை நாம் அறியலாம்.  யாழ்ப்பாணம் தந்த ஆறுமுக நாவலரின் அரும்பணியும் இத்தன்மையதே.

காலப்பகுப்பின் அடிப்படையில் பார்த்தால் ஆறுமுக நாவலருக்குப் பின் சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்களும் , இவருக்குப் பின் உ.வே.சா அவர்களும் தமிழ் நிலைக்கத் தம் பணியைச் செவ்வனே செய்துள்ளது தெரிய வருகிறது.

வைரவநாத பிள்ளை, பெருந்தேவி ஆகியோர்க்கு அருமைப் புதல்வனாகத் தோன்றியவரே தாமோதரம் பிள்ளை.  செப்டர்மர் 12 ஆம் நாள் 1832 ஆம் ஆண்டு இலங்கை யாழ்ப்பாண்த்திலுள்ள சிறுப்பிட்டி என்னும் இடத்தில் பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் எழுவர் ஆவர்.  இவரே மூத்தவர்.  தன் தந்தையின் மூலம் கல்விப் படிகளைக் கடக்க முயன்றார்.  பல நூல்களைத் தந்தையின் உதவியோடு கற்றிருக்கிறார்.  சுன்னாகம் முத்துக்குமர நாவலர் அவர்களும் சி.வை.தா வின் ஆசிரியராகத் திகழ்ந்திருக்கிறார்.  ஆங்கிலக் கல்வியைக் கைவரப் பெற்றிருக்கிறார் யாழ்ப்பாணத்திலுள்ள கல்லூரிகளில்.  சட்டம் (1871) பயின்று உயர் நீதிமன்ற நீதிபதியாகவும் வழக்கறிஞராகவும் பணியாற்றியவர்.  தமிழ் இலக்கியங்களின் மீது ஆறாக் காதல் கொண்டொழுகியவர்.  இதனால் இலக்கண இலக்கிய நூல்களைப் படித்துத் தெளிந்தார்.

இவர் இந்திய நாட்டிற்கு 1853 ஆம் ஆண்டு வருகை புரிந்தார்.  சென்னைக்கு வந்து தங்கி தன் பணிகளை மேற்கொண்டார்.  1858 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலையால் நடத்தப்பட்ட பி.ஏ தேர்வில் சிறப்பான வெற்றி பெற்றார்.  கள்ளிக்கோட்டை அரசினர் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றியதோடு அரசின் கணக்கராகவும் பணியாற்றினார்.

புதுக்கோட்டை நீதிமன்றத் தலைவராய் இருந்தவர்.  தமிழின் மீது இருந்த பற்றுதல் காரணமாகத் தன்னுடைய பணிகளுக்கிடையே பதிப்புப் பணியையும் மேற்கொண்டார்.  பழைய ஏடுகளைத் தூசு தட்டி அவற்றைப் பதிப்பிப்பது அருஞ்செயலாகும்.  இப்பணியில் தன்னை மிகுந்த ஈடுபாட்டுடன் ஈடுபடுத்திக் கொண்டார். 

தொல்காப்பியச் சொல்லதிகாரத்தின் சேனாவரையர் உரை, பொருளதிகாரத்திற்குரிய நச்சினார்க்கினியர் உரை, இறையனார் அகப்பொருள், வீரசோழியம், கலித்தொகை, இலக்கண விளக்கம், சூளாமணி, திருத்தணிகை புராணம் ஆகியவற்றை அச்சிலேற்றியவர்.

உ.வே.சா அவர்களின் நட்பு இவருக்குக் கிடைக்கபெற்றது.  உ.வே.சா அவர்களுக்கு முன்னரே பதிப்புப் பணியில் ஈடுபட்டவர் திரு.சி.வை.தாமோதரம் பிள்ளை.  பதிப்புப் பணி குறித்த பல செய்திகளை சி.வை.தா அவர்களிடமிருந்து உ.வே.சா அறிந்திருக்கிறார்.  தன்னுடைய 33 ஆம் அகவையில் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சந்தித்திருக்கிறார் திரு.உ.வே.சா. அச்சந்திப்புக்குப் பின் தான் சீவகசிந்தாமணியைப்  பதிப்பிக்க மிகுந்த ஆர்வம் கொண்டார். சி.வை.தாமோதரம் பிள்ளை அவர்கள் வழங்கிய தூண்டுதல் தான் உ.வே.சா அவர்களை சீவக சிந்தாமணி பதிப்பு வெளிவரத் தூண்டியது.  இதனை உ.வே. சா வே அப்பதிப்பின் முன்னுரையில் வெளிப்படுத்தியுள்ளார்.(சான்று : தினமணி நாளிதழ் கட்டுரை- `பதிப்புச் செம்மல் சி.வை.தாமோதரம் பிள்ளை’)

இலக்கண நூல்களைப் பதிப்பித்த பெருமை இவரையேச் சாரும்.  இலக்கியங்களைப் பதிப்பித்தவர் உ.வே.சா எனில் இலக்கணத்திற்கு சி.வை.தாமோதரம் பிள்ளை.

கட்டளைக் கலித்துறை, வசன சூளாமணி, சைவ மகத்துவம், நட்சத்திர மாலை உள்ளிட்ட நூல்களைத் தாமே முயன்று (எழுதி)  வெளியிட்டார்.

1875 ஆம் ஆண்டு இராவ் பகதூர் விருது இவரைத் தேடி வந்தது.  தமிழக அரசு இவ்விருது வழங்கி இவரைச் சிறப்பித்தது.


No comments:

Post a Comment