தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

30.11.12

ஈசி தமிழ் எழுத்துரு தந்த புதுவை முத்துக்கருப்பன்

ஆசிரியர் முத்துக்கருப்பன்

நம் தமிழ் குறித்த பதிவுகள் அதிகம் வலம்வரத் தொடங்கிய காலகட்டம் தமிழ் எழுதிகள் அதிகம் வெளிவந்த காலகட்டம் என்றால் அது மிகையல்ல.  கணினி வந்த பின்னர் அதன் ஆதிக்கம் அவ்வளவாக எடுபடாமல் இருந்தது.  அதன் ஆதிக்கம் ஓங்கி வளரத்தொடங்கியபோது ஆங்கிலம்தான் கணினியின் முக்கிய மொழியாக விளங்கிற்று.  பல்லோர் ஆங்கிலத்திலேயே பல தகவல்களைத் தங்களுக்குள் பகிர்ந்துகொள்ளத் தொடங்கினர்.

நாடு கடந்து வாழும் அயலகத் தமிழர்கள் தத்தமது உறவினர்களுடன் உறவாட மொழிக்கருவி (ஆங்கிலம் போன்று) இல்லாதது கண்டு அயர்ந்திருந்தனர்.  ஒரு சில தொழில்நுட்ப அறிவு வாய்க்கப்பெற்றவர்கள் கணினிசார் கல்வியைப் பயின்றவர்கள் அயல்நாடுகளில் வசிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது அவர்கள் தங்கள் குடும்பத்தினரிடம் உறவாட ஏற்ற மொழிக்கருவியை அஃதாவது தமிழ் எழுத்துருவை உருவாக்க எண்ணினர்.  அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் திரு.கு.கல்யாணசுந்தரம் (நிறுவனர்:மதுரைத் தமிழிலக்கிய மின் தொகுப்புத் திட்டம்).  இவரின் மயிலை எழுத்துரு கண்டுபிடிப்பு பலராலும் பாராட்டும் படியாக இருந்தது.

தமிழ் எழுத்துருக்கள் அப்போது ஒருங்குகுறி வடிவத்தில் அமையப்பெற்றவை அல்ல.  குறிப்பிட்ட ஒரு கணினியில் மட்டும் செயல்படக் கூடியவையாக மட்டுமே அவை இருந்தன.  மற்றொரு கணினியில் எழுத்துருவைக் காண அக்குறிப்பிட்ட எழுத்துருவை ஏற்றம் செய்தல் வேண்டும்.  அப்பொழுதுதான் எழுத்துக்களைத் தெளிவாகக் காண இயலும்.  இந்நிலை மாய்ந்து அனைத்துக் கணினியும் எளிதில் எழுத்துருவை அடையாளங் கண்டு தமிழெழுத்தை வெளிப்படுத்திக்காட்ட  வந்ததே ஒருங்குறி வடிவம்.

இன்று பெரும்பாலான தமிழன்பர்களால் தமிழ் இணைய விரும்பிகளால் பயன்படுத்தப்படுகிற எழுத்துரு ஒருங்குகுறி எழுத்துருவே.  அவ்வகையில் ஒருங்குகுறி எழுத்துருவை உருவாக்கியவர்களுக்கு மகுடம் சூட்டிப் பார்க்க வேண்டுவது நம் கடமையல்லவா?!

புதுச்சேரியை இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வரும் அரசு பள்ளி ஆசிரியர் திரு.முத்துக்கருப்பனின் `ஈசி தமிழ்’என்னும் தமிழ் எழுத்துருவைப் பலருக்கு அறிமுகம் செய்வதே இப்பதிவின் இலக்கு.

முத்துக்கருப்பன் அவர்கள் தற்போது புதுச்சேரியிலுள்ள முத்தியாலுப்பேட்டையில் வசித்து வருகிறார்.  அழகுக் குழந்தை ஒன்றுடனும் ஆருயிர் துணைவியாருடனும் பேணிக்காத்த பெற்றோருடனும் உடன் உறவாடிய உடன்பிறப்புக்களுடனும் தான் செய்த சாதனை தெரியாமல் அமைதியாய் வாழ்ந்து வருகிறார்.  

தமிழில் எழுத வேண்டும் தமிழ் இணையத்தைப் பயன்படுத்த வேண்டும் தமிழில் மின்னஞ்சல் செய்ய வேண்டும் என்னுந்தாகமுடையவர்களுக்குத் தான் முத்துக்கருப்பன் தந்த ஈசி தமிழ் மென்பொருளின் அருமை புரியும்.

இவரின் தந்தை திரு.பரமசிவம், தாயார் திருமதி.சந்திரா அம்மையார்.  தந்தை நேருவீதியில் இயங்கிவரும் கடையொன்றில் முக்கியப் பொறுப்பில் இருந்துவருகிறார்.  ஆசிரியர் முத்துக்கருப்பன் சிறுவனாக இருந்தபோதிலே இவர் இப்பொறுப்பில் இருந்திருக்கிறார்.  தாயார் இல்லத்தைக் கட்டிக் காக்கும் குடும்பத் தலைவியாய் தன்கடன் ஆற்றியவர்.  இப்பொழுதும் அப்படித்தான்.

ஆசிரியர் முத்துக்கருப்பன் தன்னுடைய மேனிலைக்கல்வியை வ.உ.சி மேனிலைப் பள்ளியில் பெற்றிருக்கிறார்.  சாதாரண மாணவரோ அல்லது கடைநிலையான மாணவரோ என்று இவரை நினைக்க வேண்டாம்.  தன்னுடைய பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் 1200 மதிப்பெண்ணுக்கு 1039 மதிப்பெண்கள் பெற்றவர்.  மேனிலையில் (+2) கணினித் துறையை தன்னுடைய விருப்பப்பாடமாகப் பயின்றார்.  ஆசிரியை திருமதி.அமராவதி அவர்களின் அரும்பெரும் ஊக்கமே இவரை நன்கு சிந்திக்கக் கூடிய மாணவராக ஆக்கியதாகச் சொல்கிறார்.

ஆசிரியை அவர்கள் கொடுத்த ஊக்கத்தின் விளைவாக புதுவை உரோமண்ட் உரோலண்ட் நூலகத்தை ஆசிரியர் முத்துக்கருப்பன் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறார்.  `ஜி.டபிள்யூ. பேசிக்'  என்னும் நூலை ஆய்ந்திருக்கிறார்.  அந்நூலே இவருக்கு சுயமாகக் கணினி செயல்பாடுகளை  உருவாக்கும் வித்தையை மனதில் விதைத்திருக்கிறது.  இதன் விளைவாக மேனிலைக் கல்வி இரண்டாமாண்டில் கணினி அறிவியல் தேர்வில் 200க்கு 196 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்.

தன்னுடைய மேனிலைக் கல்வியை முடித்த பின்னர் கணினி குறித்தத் தேடல்களில் ஈடுபடலானார்.  `தமிழ் கம்ப்யூட்டர்'  என்னும் 2 வாரத்திற்கு ஒருமுறை வரும் இதழை வாங்கிப் படிக்கத் தொடங்கியிருக்கிறார்.  இதன் அப்போதைய விலை பத்து உரூபாய்.  மாதத்தின் முதல் நாளும் பதினைந்தாம் நாளும் வரும் இவ்விதழ் முற்றிலும் கணினி சார்ந்ததோடல்லாமல் தமிழிலும் அமையப்பெற்றிருக்கும். `டிஜிட்’ என்னும் இதழும் இவரின் தேடலிலிருந்துத் தப்ப முடியவில்லை.   இவற்றை நன்கு பயன்படுத்திக்கொண்டு ஆசிரியர் முத்துக்கருப்பன் தன்னுடைய கணினி குறித்த அறிவை மேம்படுத்தியிருக்கிறார்.

பல கணினி சார் கட்டளைகள்,  செயல்பாடுகள் குறித்து அறிவதற்காக பன்முறை பல இணைய வழங்கி நிலையங்களை நாடினார்.  அப்பொழுது அங்கு ஒரு மணி நேரத்திற்கு முப்பது உரூபாய் வசூலித்திருக்கிறார்கள்.  இது அப்போதைக்கு அதிக தொகை என்றாலும் இணையம் அதிகம் வலுவடையாத காலம் அது.

இதனிடையே மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் நடத்தப்பெறும் பல தேர்வுகளை எழுதி வெற்றியும் கண்டுள்ளார்.  புதுச்சேரியிலுள்ள ஒரு கணினி பயிற்சி மையத்தில் சில காலம் ‘சி’ ,  `வன்பொருள் மற்றும் இணையம்'  சார்ந்த பயிற்சியையும் ஒருங்கே பயின்றார்.  இதன் விளைவாகத்தான் மைக்ரோசாப்ட்  நிறுவனத் தேர்வை எதிர்கொள்ளத் துணிந்தார்.  இத்தேர்வு அப்போது புதுச்சேரியில் நடத்தப்பெறவில்லை.  சென்னைக்குச் சென்றுதான் எழுதுதல் வேண்டும்.  சென்னையிலும் இணையத்தின் வழியாகவே எழுதுதல் வேண்டும்.  இதற்காகச் சென்னை வரை சென்று ஒரு மையத்தைத் தேர்ந்தெடுத்து தனிமைப்படுத்தப்பட்ட (முறைகேடுகளைத் தவிர்க்க வேண்டி) அறையில் தேர்வெழுதியிருக்கிறார்.

இதுவரை இவர்  மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் நடத்தப்பட்ட பின்வரும் தேர்வுகளில் தோன்றி வெற்றிக் கனியைப் பறித்துள்ளார்.  இத்தேர்வுக்கு இவர் ஆயத்தமான செய்திகளை நமக்குச் சொல்லும் போது கேட்க மிகவும் மலைப்பாக உள்ளது.

1.எம்.சி.பி
2.எம்.சி.எஸ்.ஏ  (மைக்ரோசாப்ட் சர்டிபைடு சிஸ்டம் அட்மினிஸ்ட்ரேடர்)
3. 2003 சர்வர் இல் எம்.சி.எஸ்.ஏ
4.எம்.சி.ஐ.டி.பி
5.எம்.சி.எஸ்.இ
என்னும் சான்றிதழ்களைப் பெற்றிருக்கிறார்.

அடுத்த பதிவில். . . . . . .  . . . . . . . .(2)

(இன்னும் வரும்)

அனைத்துத் தேர்வுகளிலும் வெற்றி பெற்ற திரு.முத்துக்கருப்பன், பின்னாளில் ஈசி தமிழ் என்னும் தமிழ் எழுதியை அறிமுகம் செய்தது எப்படி?

28.11.12

தொகையறிவோம்


தொகைகள் சிலவற்றை அறிவோம்:
அகராதிகள் சொல்லுக்குப் பொருள் வழங்க படைக்கப்பட்டவை.  அவ்வகராதிகளுள் சிறப்புமிக்க ஒன்றாக விளங்குவது தொகையகராதியாகும். தொகைச்சொற்களுக்கு உரிய விரியைக் கொண்டு இவை காணப்படுகின்றன.  இவ்வகையில் சில தொகைச் சொற்களுக்குண்டான விரியை இப்பதிவில் காணலாம்.

1. ஏழிசை:
தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை

2. உபாயம்:
சாமம், பேதம், தானம், தண்டம்

3. ஆசிரியர்:
உரையாசிரியர், நூலாசிரியர், போதகாசிரியர்

4. ஆதாரம்:
மூலாதாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி(ஐயம்), ஆஞ்ஞை (ஆணை)

5. ஐங்கணை:
தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை, 

6. அறப்பகுதி:
இல்லறம், துறவறம்

7. அரசர் தொழில்:
ஈதல், உலகுபுரத்தல், ஓதல், படை பயிறல், பொருதல், வேட்டல்

8. காடுபடுதிரவியம்:
அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி (கத்தூரி)

9. சிவசின்னம்:
உருத்திராக்கம், திருநீறு

10. தாயார்:
பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்


11. நிறம்:
வெண்மை, கருமை, செம்மை, பொன்மை, பசுமை

12. தோற்றம்:
சரம், அசரம்

13. பாயிரம்:
பொது, சிறப்பு

14. பா:
வெண்பா, ஆசிரியப்பா, கலிப்பா, வஞ்சிப்பா

15. பாதகம்:
கொலை, பொய், களவு, கள், குருநிந்தை

16. பொருள்:
கல்விப் பொருள், செல்வப்பொருள்

17. பொழுது:
மாலை, யாமம், வைகறை, விடியல், நண்பகல், எற்பாடு,
கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில்

18.பஞ்சமூலம்:
செவ்வியம், சித்திர மூலம், கண்டுபரங்கி, பேரரத்தை, சுக்கு

19.பருவம்:
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்

20. பிணி:
வாதம், பித்தம், சிலேத்துமம்

25.11.12

தன்மானச் செம்மல் திரு.வி.க

திரு.வி.க அவர்கள் எச்சமயத்திலும் தன்மானத்தை இழக்க விரும்பாத பெருந்தகையாளராக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.  அவர் தன்னுடைய வாழ்நாளில் எப்பொழுதும் பிறருடைய  உதவியை நாடியதேயில்லை.  அப்படி நாடியிருந்தால் அஃது பொருளுதவி குறித்த நாடலாக  இருக்க முடியாது.  

தன்னுடல் வாடி படுக்கையில் இருந்த காலகட்டத்திலும் இக்கொள்கையில் தளர்வுற்றிருந்தவர் அல்லர் அவர்.  வாடகை இல்லத்தில் இருந்தபோது வறுமை வாட்டிய காலம் அது.  திரு.கி.ஆ.பெ. அவர்களும் மு.வ அவர்களும் அவருக்கு உற்ற துணையாய் இருந்தனர்.  வாடகை வீட்டை காலிசெய்து தரும்படி உத்தரவு வந்தது வீட்டின் உரிமையாளரிடமிருந்து.  அப்போது திரு.கி.ஆ.பெ அவர்கள் பல வள்ளல்களுக்கு பொருளுதவி வேண்டி திரு.வி.கவுக்காகக் கடிதம் எழுதினார்.  பலர் அக்கடிதத்திற்குப் பதில் எழுதவில்லை.  இறுதியாக மதுரை கருமுத்து தியாகராச செட்டியார் அவர்களிடமிருந்து கடிதமும் அதனுடன் காசோலையும் வந்திருந்தது.  

திரு.வி.க அக்காசோலையைத் திருப்பி அனுப்பிவிட்டார்.  சிறிது நாட்கள் சென்ற பின்னர் கருமுத்து அவர்கள் கி.ஆ.பெ அவர்களுக்கு திரு.வி.க திருப்பி அனுப்பிய செய்தியைக் கடிதத்தின் வாயிலாகத்  தெரிவித்தார்.  இதனை அறிந்த கி.ஆ.பெ விசுவநாதன் அவர்கள் திரு.வி.கவிடம் இது குறித்து வினவலானார்.  அப்போது திரு.வி.க அவர்கள் இத்தனை நாட்கள் நான் எவ்வாறு இருந்தேனோ அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன் என்றும் இதுவரை நான் செய்யாத செயலைச் செய்யச் சொல்லாதீர்கள் என்றும் கூறினாராம்.  இந்நிகழ்வே திரு.வி.கவை தன்மானச் செம்மாலாக நமக்குக் காட்டுகிறது.


24.11.12

சிலம்பைப் பின்பற்றிய 2000 வாசகர்கள்

என்னுடைய சிலம்புகள் வலைப்பூ 2010ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  இருப்பினும் அப்பொழுது வலைப்பூவைத் தொடங்கியது மட்டும் தான் நான் செய்த செயல்.  சிலம்புகள்.காம் என்ற (வணிக மற்றும் வியாபார நோக்கமற்ற) தளத்தை நிர்வகித்துக் கொண்டிருந்ததால் வலைப்பூவில் எழுதுவதைத் தவிர்த்தேன்.  தற்போது தான் (செப்டம்பர் 2012)வலைப்பூவில் என்னுடைய தடத்தினைப் பதியத் தொடங்கினேன்.  மூன்று மாதங்கள் தொடர்ந்து எழுதிய என்னுடைய பற்பல பதிவுகளை சற்றொப்ப இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாசகர்கள் தொடர்ந்து படித்து வருகின்றனர். குறுகிய காலமான மூன்று மாதத்தில் என்னுடைய வலைப்பூவை இவ்வளவு வாசகர்கள் பின்பற்றியிருப்பது என் தமிழுக்கு நான் ஆற்றிய பணியின் சிறப்பே என நினைக்கிறேன்.

பேராற்றல் வழங்கும் தமிழ்மொழி குறித்து நான் யாத்த பல பதிவுகளைக் காண வருகை தந்த அனைத்து தமிழன்பர்களுக்கும் என்னுடைய நன்றியை இத்தருணத்திலே உரித்தாக்குகிறேன்.

அருகில் உள்ள கட்டுரை தொகுப்பு (இடது பக்கம்) என்னும் பகுதியைப் பார்த்தால் சிலம்பு வலைப்பூவில் கட்டுரை எழுதத் தொடங்கிய காலப்பகுதியை அறியலாம்.

23.11.12

கடலூர் அஞ்சலையம்மாள்




***கடலூர் அஞ்சலையம்மாள்*** கருத்து எழுத sadishirisappan@yandex.com

நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் வரலாறுகளை அவ்வப்பொழுது தொகுத்து வெளியிட்டு வருகிறேன்.    என்னால் அவர்களுக்குக் கொடுக்கக்கூடிய மரியாதையே  இச்சிறு பணி!  அவ்வகையில் கடலூர் அஞ்சலையம்மாளைப் பற்றி நான் கேள்விப்பட்ட படித்தறிந்த செய்திகளை இக்கட்டுரையில் பதிவிடுகிறேன்.

1890ஆம் ஆண்டு கடலூரில் உள்ள முதுநகர் என்னுமிடத்தில் பிறந்தவர்.  மிகவும் எளிமையான குடும்பத்தில் பிறந்தார்.  இவர்தம் வாழ்க்கையை சுயநலமின்றி அமைத்துக்கொண்டவர்.  காந்திய வழியைப் பின்பற்றத் தொடங்கியவர்.  1921ஆம் ஆண்டு காந்தியடிகள் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கிய தருணத்தில் தம்முடைய பொது வாழ்க்கையைத் தொடங்கினார் அஞ்சலையம்மாள்.


நீலன் சிலையை அகற்றும் போராட்டம், உப்புக்காய்ச்சும் போராட்டம், மறியல் போராட்டம், தனியாள் அறப்போராட்டம்,  வெள்ளையனே வெளியேறு போராட்டம் ஆகிய அனைத்துப் போராட்டங்களிலும் கலந்துகொண்டு வெள்ளையர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்.


மிகச்சிறந்த பேச்சாளராக விளங்கிய இவரின் பேச்சைக் கேட்பதற்காகவே பல்லோர் திரள்வர்.  வெள்ளையனே வெளியேறு இயக்கம் நாடுமுழுவதும் நடைபெற்றபோது அதற்கு வலுச்சேர்க்கும் முகத்தான் பல மேடைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

கருவுற்ற நிலையிலும் பல போராட்டங்களில் கலந்துகொண்டவர்.  சிறாஇக்குச் சென்றாவர்.  பிரசவத்தின்போது குழந்தையைப் பெற்றெடுக்க மருத்துவமனைக்குச் சென்று பின்னர் மீண்டும் சிறையிலேயே அடைக்கப்பட்டார்.

தன்னுடைய சொத்துக்கள் பலவற்றையும் விற்று போராட்டத்திற்காகச் செலவு செய்தார்.   நீலன் சிலையை அகற்றும் போராட்டம் நடைபெற்றபோது தனது 9 வயது மகளை ஈடுபடுத்தினார்.  இவருடைய மகள் லீலாவதி என்னும் பெயரைக் கொண்டவராவார்.

தமிழ்நாடு அரசு  கடலூர் அஞ்சலையம்மாளைப் பற்றிய பாடப்பகுதியை மாணவர்கள் பாடநூலில் அமைத்து, பல்வேறு செய்திகளை அறியச் செய்துள்ளது குறிப்பிடத்தக்க ஒன்று.

தென்னாற்காடு மாவட்டத்தின் தெய்வத்தாய் என்றும் வேலுநாச்சியார் என்றும் போற்றப்பட்டார்.  இவரின் கணவர் முருகப்படையாச்சியாவார்.  மகன்கள்: காந்தி மற்றும் ஜெயவீரன் . மகள் அம்மாக்கண்ணு (லீலாவதி)

அஞ்சலையம்மாள் அவர்கள் பின்னாளில் தமிழக சட்டமன்றத்தில் அங்கம் வகித்தார்கள்.

புகைப்படத்திற்காக நன்றி:காமத்.காம்