தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

25.11.12

தன்மானச் செம்மல் திரு.வி.க

திரு.வி.க அவர்கள் எச்சமயத்திலும் தன்மானத்தை இழக்க விரும்பாத பெருந்தகையாளராக வாழ்ந்து காட்டியிருக்கிறார்.  அவர் தன்னுடைய வாழ்நாளில் எப்பொழுதும் பிறருடைய  உதவியை நாடியதேயில்லை.  அப்படி நாடியிருந்தால் அஃது பொருளுதவி குறித்த நாடலாக  இருக்க முடியாது.  

தன்னுடல் வாடி படுக்கையில் இருந்த காலகட்டத்திலும் இக்கொள்கையில் தளர்வுற்றிருந்தவர் அல்லர் அவர்.  வாடகை இல்லத்தில் இருந்தபோது வறுமை வாட்டிய காலம் அது.  திரு.கி.ஆ.பெ. அவர்களும் மு.வ அவர்களும் அவருக்கு உற்ற துணையாய் இருந்தனர்.  வாடகை வீட்டை காலிசெய்து தரும்படி உத்தரவு வந்தது வீட்டின் உரிமையாளரிடமிருந்து.  அப்போது திரு.கி.ஆ.பெ அவர்கள் பல வள்ளல்களுக்கு பொருளுதவி வேண்டி திரு.வி.கவுக்காகக் கடிதம் எழுதினார்.  பலர் அக்கடிதத்திற்குப் பதில் எழுதவில்லை.  இறுதியாக மதுரை கருமுத்து தியாகராச செட்டியார் அவர்களிடமிருந்து கடிதமும் அதனுடன் காசோலையும் வந்திருந்தது.  

திரு.வி.க அக்காசோலையைத் திருப்பி அனுப்பிவிட்டார்.  சிறிது நாட்கள் சென்ற பின்னர் கருமுத்து அவர்கள் கி.ஆ.பெ அவர்களுக்கு திரு.வி.க திருப்பி அனுப்பிய செய்தியைக் கடிதத்தின் வாயிலாகத்  தெரிவித்தார்.  இதனை அறிந்த கி.ஆ.பெ விசுவநாதன் அவர்கள் திரு.வி.கவிடம் இது குறித்து வினவலானார்.  அப்போது திரு.வி.க அவர்கள் இத்தனை நாட்கள் நான் எவ்வாறு இருந்தேனோ அப்படியே இருந்துவிட்டுப் போகிறேன் என்றும் இதுவரை நான் செய்யாத செயலைச் செய்யச் சொல்லாதீர்கள் என்றும் கூறினாராம்.  இந்நிகழ்வே திரு.வி.கவை தன்மானச் செம்மாலாக நமக்குக் காட்டுகிறது.


No comments:

Post a Comment