தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

18.11.12

மதுரகவியாழ்வார்

மதுரகவியாழ்வார் திருக்குருகூர் அருகிலுள்ள திருக்கோளூரிலே சித்திரை மாதத்துச் சித்திரை நட்சத்திரத்திலே அவதரித்தவர்.  நம்மாழ்வாரின் சீடராகத் திகழ்ந்தார்.  அவருடைய பாசுரங்களைப் பரப்புவதில் நாட்டங்கொண்டிருந்தார். 

நம்மாழ்வாரைப் பற்றி “கண்ணிநுண் சிறுத்தாம்பு” எனப் பாடினார்.  திருமாள் மீது இவருக்கிருந்த அன்பைக் காட்டிலும் நம்மாழ்வார் மீது இவருக்கிருந்த அன்பே அதிகம்.

``தேவுமற்று அறியே குருகூர் நம்பி
பாவின் இன்னிசை பாடித் திரிவனே” என்று பாடினார்.  

இளம் வயதிலேயே இனிய கவிதைகளை இயற்றக்கூடிய ஆற்றல் கைவரப் பெற்றவர்.  இதனாலேயே ‘மதுரகவி’ என அழைக்கப்பட்டார்.  இவர் பாடிய `கண்ணிநுண் சிறுத்தாம்பு’ என்னும் பாமாலை பதினொரு பாசுரங்களே அடங்கியது.  இதுவே பின்னாளில் `சடகோபர் அந்தாதி’யைக் கம்பர் இயற்ற வழியாகியது.

செருக்குற்ற தமிழ்ப் புலவர்களுக்குப் பாடங் கற்பிக்க வேண்டி நம்மாழ்வார் இவரின் கனவில் தோன்றி பாடல் ஒன்றை எழுதி ஓலையில் கொடுத்திருக்கிறார்.  அவ்வோலையை மறுநாள் தன்னுடைய வாயிலில் கண்டெடுத்திருக்கிறார் மதுரகவியாழ்வார்.  அவ்வோலையில் நம்மாழ்வார் எழுதிய பாடலைத் தன்னிடம் போட்டியிட்டவர்கள் முன்னிலையில் படித்துக்காட்டி பொருள் கூறுமாறு செய்தார்.  அஃதாவது பாசுரத்தை மட்டும் ஏட்டில் எழுதிச் சங்கப்பலகையில் இட, அப்பலகை புலவர்களைப் பொற்றாமரைக் குளத்தில் வீழ்த்தி, அவ்வேட்டினை மட்டும் தாங்கி மிதந்தது.


16.11.12

கோவை வந்த வரலாறு

தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கோவை இலக்கியமாகும். முறையாகக் கோக்கப்பட்டது தான் கோவை என்னும் இலக்கியம்.   இவை முற்றிலும் அகப்பொருள் தழுவியவையாகும்.  அகப்பொருள் துறைகள் அனைத்தையும் கொண்டு நூல் இயற்றப்பட வேண்டும் என்னும் ஆர்வ மேலீடே இந்நூல் தோற்றத்திற்கு வித்திட்டது எனலாம்.  

தொல்காப்பிய இலக்கண நூலில் இடம்பெற்றிருக்கக் கூடிய பொருளதிகாரக் கருத்துக்களே கோவையிலக்கியத்தின் தோற்றுவாயக இருந்தன.  தொல்காப்பியத்திற்குப் பின்னர்  இறையனார் அகப்பொருள், மாறன் அகப்பொருள், நம்பியகப்பொருள் போன்ற இலக்கண நூல்கள் தோற்றம் பெற்றன.  இந்நூல்களில் இடம்பெறும் செய்திகளுக்குப் புலவர் பலர் எடுத்துக்காட்டுப் பாடல்கள் எழுத முற்பட்டனர்.  இதன் விளைவாகத் தோன்றியதே கோவை இலக்கியம்.  நாற்கவிராச நம்பி எழுதிய நம்பியகப்பொருளுக்கு விளக்கம் கூறும் முகமாக எழுந்த கோவையே தஞ்சைவாணன் கோவை.  எனவே பிற நூல்களுக்குச் சார்பாக விளக்கம் தர முற்பட்ட இலக்கியங்களே கோவை என்னும் சிற்றிலக்கிய வகையாய் நின்றது எனலாம்.

இலக்கண நூல்களுக்கு விளக்கம் பகர எழுந்த கோவை நூல்களுள் குறிப்பிடத்தக்கவை பாண்டிக்கோவை, தஞ்சைவாணன் கோவை.  இறையனார் அகப்பொருளுக்கு உரிய எடுத்துக்காட்டுகளமைய உருப்பெற்ற நூல்தான் பாண்டிக்கோவை என்னும் கோவை நூல்.


பாட்டுடைத் தலைவன், கிளவித் தலைவன் என்ற இருவர் பற்றி அதிகம் குறிக்கப்பட்டுள்ளது.  அகத்துறைகளை எடுத்துக்கொண்டு அத்துறை குறித்த பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.  இலக்கண நூல்களைக் கொண்டு, அகத்துறை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டுப் பாடல்கள் அமையுமாறு பாடல்களை எழுதுவது மரபு.ஐந்திணைகளிலிருந்து மாறுபடாது 400 கட்டளைக் கலித்துறையால் பாடல் இயற்றப்படுவதாகும்.

ஒரு துறையையே எடுத்துக்கொண்டு 400 பாடல்களையும் எழுதியவரும் உண்டு.  இந்நூல் ‘ஒரு துறைக் கோவை’ என்று பெயர் பெற்றிருக்கிறது.  கோவை நூல்கள் பெரும்பாலும் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பை அடியொட்டியே பாடப்பெறும்.

மாதங்கீரனார், வெறிபாடிய காமக் கண்ணியார் போன்றவர்கள் ஒரு துறையைப் பற்றி பாடல்கள் பாடியுள்ளனர்.  முதலில் தோன்றிய கோவை இலக்கியமாகத் திகழ்வது திருக்கோவையார் ஆகும்.  இதனை மாணிக்கவாசகர் எழுதினார்.

`நாணிக்கண் புதைத்தல்’ என்னும் ஒரு துறையைக் கொண்டே ஒருதுறைக்கோவை நூல் உருப்பெற்றது.  முடிப்பாக,  பிற நூல்களுக்கு விளக்கச் செய்யுள்கள் எழுத முற்படும் போதுத் தோன்றியவையே கோவை இலக்கியம் எனலாம்.


15.11.12

`சொல்லும் ஓசையும்’ சொல்லும் நன்னூல்

`தமிழ்10 இல் அதிக ஓட்டுகளைப் பெற்ற பதிவு’
`சொல்’, `ஓசை’ என்னும் இரு சொல்லுக்கு இலக்கண நூலான நன்னூல் உரியியலில் பகரும் சொற்கள் குறித்த செய்தி இங்கே பதிவாகக் கட்டுரைக்கப்படுகிறது.

நன்னூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர்.  இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.  இவரின் தந்தை சன்மதி ஆவார். சீயகங்கன் என்னும் மன்னன் இவரை ஆதரித்தவன்.  இம்மன்னன் கேட்டுக்கொண்டதற்கு இயைய இந்நன்னூல் உருப்பெற்றது.

இதனைச் சிறப்புப் பாயிரம் பின்வருமாறு புகல்கிறது:

“இருந்தமிழ்க் கடலுள் அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத் தொகைவகை விரியின் தருக’ என, ‘சீயகங்கன் மொழிந்தனனாக’ பொன்மதில் சனகை சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பின் பவணந்தி, என்னும் நாமத்து இருந்துவந்தோன், முன்னோர் நூலின் வழியே, நன்னூல் பெயரில் வகுத்தனன்.’ என்பது சிறப்புப் பாயிரம்.

இந்நூல் இயற்றப்பெற்ற பின் பலர் பல இலக்கண நூல்களைப் புறந்தள்ளி விட்டு இதனையேப் பயிலத் தொடங்கினர்.

ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் என்ற பகுதியானது 458 ஆம் சூத்திரத்தில் இடம்பெறுகிறது.

மாற்றம், நுவற்சி, செப்பு, உரை, கரை, நொடி, இசை, கூற்று, புகறல், மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி, இயம்பல் ஆகிய பதினாறும் ‘சொல்’ என்ற ஒரு குணத்தை உணர்த்துகின்ற உரிச்சொற்களாகும்.

சூத்திரம்:
``மாற்றம் நுவற்சிசெப்பு உரைகரை நொடியிசை
கூற்றுப் புகறல் மொழிகிளவி விளம்புஅறை
பாட்டுப் பகர்ச்சி இயம்பல் சொல்லே”

இதைப் போலவே ஓசை என்ற பொருள் குறித்து வரும் சொற்களும் நயம் மிக்கனவாக உள்ளன.

முழக்கு, இரட்டு, ஒலி, கலி, இசை, துவை, பிளிறு, இரை, இரங்கு, அழுங்கு, இயம்பல், இமிழ், குளிறு, அதிர், குரை, கனை, சிலை, சும்மை, கௌவை, கம்பலை, அரவம், ஆர்ப்பு ஆகிய இருபத்திரண்டும் இவற்றைப் போன்ற மற்றவையும் ஓசை என்ற ஒரு குணத்தை உணர்த்தி வரும் உரிச்சொற்களாகும்.

சூத்திரம்:
``முழக்குஇரட்டு, ஒலிகலி இசைதுவை பிளிறுஇரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை”

14.11.12

விரித்துப் பார்ப்போம்

தொகைகள் சிலவற்றை அறிவோம்:
அகராதிகள் சொல்லுக்குப் பொருள் வழங்க படைக்கப்பட்டவை.  அவ்வகராதிகளுள் சிறப்புமிக்க ஒன்றாக விளங்குவது தொகையகராதியாகும். தொகைச்சொற்களுக்கு உரிய விரியைக் கொண்டு இவை காணப்படுகின்றன.  இவ்வகையில் சில தொகைச் சொற்களுக்குண்டான விரியை இப்பகுதியில் காணலாம்.

ஏழிசை:
தாரம், உழை, குரல், இளி, துத்தம், விளரி, கைக்கிளை

உபாயம்:
சாமம், பேதம், தானம், தண்டம்

ஆசிரியர்:
உரையாசிரியர், நூலாசிரியர், போதகாசிரியர்

ஆதாரம்:
மூலாதாரம், சுவாதிட்டானம், மணி பூரகம், அனாகதம், விசுத்தி(ஐயம்), ஆஞ்ஞை (ஆணை)

ஐங்கணை:
தாமரை, அசோகு, மா, முல்லை, கருங்குவளை, 

அறப்பகுதி:
இல்லறம், துறவறம்

அரசர் தொழில்:
ஈதல், உலகுபுரத்தல், ஓதல், படை பயிறல், பொருதல், வேட்டல்

காடுபடுதிரவியம்:
அரக்கு, இறால், தேன், மயிற்பீலி, நாவி (கத்தூரி)

சிவசின்னம்:
உருத்திராக்கம், திருநீறு

தாயார்:
பாராட்டுந்தாய், ஊட்டுந்தாய், முலைத்தாய், கைத்தாய், செவிலித்தாய்


12.11.12

குறள்பீட விருது

தமிழ்10 இல் அதிக ஓட்டுகளைப் பெற்ற பதிவு’

தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரம் வழங்கப்பட்ட பின் பல விருதுகள் தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.  அவ்விருதுகளுள் குறிப்பிடத்தக்கது `குறள்பீட விருது’.

தமிழ் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட பின்னர் முதன்முறையாகக் கடந்த ஆண்டு (2011) மே மாதம் தமிழறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.  இவ்விருதுகளை முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு பிரதீபா பாட்டீல் அவர்கள் வழங்கியிருந்தார்கள்.

குறள்பீட விருது:

ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுள் குறிப்பிடத்தக்கது குறள்பீட விருது.  கடந்த ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்த தமிழறிஞர் பேராசிரியர் ஜார்ஜ் எல்.ஹார்ட் அவர்கள் குறள்பீட விருது பெற்றார். இவ்விருது உரூபாய் ஐந்து இலட்சம் மதிப்புடையதாகும்.

இந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் குறள்பீட விருது( 2008-09) பிரெஞ்சு நாட்டு அறிஞர் பிரான்சிவா குரோ அவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. 2012, திசம்பர் 21 இல் தலைநகர் புதுதில்லியில் இந்தியக் குடியரசுத்தலைவர் திரு.பிரணாப் முகர்ஜி அவர்கள் இந்த விருதினை வழங்கிச் சிறப்பிக்க உள்ளார்.

இதுவரை சமற்கிருதம், பிராகிருதம், பாலி, அராபிக், பாரசீகம் ஆகிய மொழிகளுக்கே இவ்வகையான விருதுகள் வழங்கப்பட்டுவந்தன.  கடந்த ஆண்டு முதல் தமிழ் மொழிக்கும் வழங்கப்படுகிறது.

குறள்பிட விருதுடன் தொல்காப்பியர் விருதும், இளம் அறிஞர் விருதும் வழங்கப்படுகின்றன.  தொல்காப்பியர் விருது உரூபாய் ஐந்து இலட்சம் பணமுடிப்பையும் இளமறிஞர் விருது உரூபாய் ஒருஇலட்சம் பணமுடிப்பையும் கொண்டதாகும்.

கடந்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பேராசிரியர் அடிகளாசிரியருக்குத் தொல்காப்பியர் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.  

இளமறிஞர் விருதினை ஆர்.அரவிந்தன் (விழுப்புரம்), மணிகண்டன் (தஞ்சை), கலைமகள் (தஞ்சை), வா.மு.சே.முத்துராமலிங்க ஆண்டவர் (இராமநாதபுரம்), கே.பழனிவேலு (புதுவை), சந்திரா (மதுரை), அரங்க.பாரி (அரியலூர்), மு.இளங்கோவன் (அரியலூர்), பவானி (திருவாரூர்), கலைவாணி(நாகை), செல்வராசு, வேல்முருகன், மணவழகன், சந்திரசேகரன், சிமோன் சான் ஆகிய பதினைவர் பெற்றனர்.