தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

15.11.12

`சொல்லும் ஓசையும்’ சொல்லும் நன்னூல்

`தமிழ்10 இல் அதிக ஓட்டுகளைப் பெற்ற பதிவு’
`சொல்’, `ஓசை’ என்னும் இரு சொல்லுக்கு இலக்கண நூலான நன்னூல் உரியியலில் பகரும் சொற்கள் குறித்த செய்தி இங்கே பதிவாகக் கட்டுரைக்கப்படுகிறது.

நன்னூலின் ஆசிரியர் பவணந்தி முனிவர்.  இவர் சமண சமயத்தைச் சார்ந்தவர்.  இவரின் தந்தை சன்மதி ஆவார். சீயகங்கன் என்னும் மன்னன் இவரை ஆதரித்தவன்.  இம்மன்னன் கேட்டுக்கொண்டதற்கு இயைய இந்நன்னூல் உருப்பெற்றது.

இதனைச் சிறப்புப் பாயிரம் பின்வருமாறு புகல்கிறது:

“இருந்தமிழ்க் கடலுள் அரும்பொருள் ஐந்தையும் யாவரும் உணரத் தொகைவகை விரியின் தருக’ என, ‘சீயகங்கன் மொழிந்தனனாக’ பொன்மதில் சனகை சன்மதி முனியருள் பன்னருஞ் சிறப்பின் பவணந்தி, என்னும் நாமத்து இருந்துவந்தோன், முன்னோர் நூலின் வழியே, நன்னூல் பெயரில் வகுத்தனன்.’ என்பது சிறப்புப் பாயிரம்.

இந்நூல் இயற்றப்பெற்ற பின் பலர் பல இலக்கண நூல்களைப் புறந்தள்ளி விட்டு இதனையேப் பயிலத் தொடங்கினர்.

ஒரு குணம் தழுவிய பல உரிச்சொற்கள் என்ற பகுதியானது 458 ஆம் சூத்திரத்தில் இடம்பெறுகிறது.

மாற்றம், நுவற்சி, செப்பு, உரை, கரை, நொடி, இசை, கூற்று, புகறல், மொழி, கிளவி, விளம்பு, அறை, பாட்டு, பகர்ச்சி, இயம்பல் ஆகிய பதினாறும் ‘சொல்’ என்ற ஒரு குணத்தை உணர்த்துகின்ற உரிச்சொற்களாகும்.

சூத்திரம்:
``மாற்றம் நுவற்சிசெப்பு உரைகரை நொடியிசை
கூற்றுப் புகறல் மொழிகிளவி விளம்புஅறை
பாட்டுப் பகர்ச்சி இயம்பல் சொல்லே”

இதைப் போலவே ஓசை என்ற பொருள் குறித்து வரும் சொற்களும் நயம் மிக்கனவாக உள்ளன.

முழக்கு, இரட்டு, ஒலி, கலி, இசை, துவை, பிளிறு, இரை, இரங்கு, அழுங்கு, இயம்பல், இமிழ், குளிறு, அதிர், குரை, கனை, சிலை, சும்மை, கௌவை, கம்பலை, அரவம், ஆர்ப்பு ஆகிய இருபத்திரண்டும் இவற்றைப் போன்ற மற்றவையும் ஓசை என்ற ஒரு குணத்தை உணர்த்தி வரும் உரிச்சொற்களாகும்.

சூத்திரம்:
``முழக்குஇரட்டு, ஒலிகலி இசைதுவை பிளிறுஇரை
இரக்கு அழுங்கு இயம்பல் இமிழ்குளிறு அதிர்குரை
கனைசிலை சும்மை கௌவை கம்பலை
அரவம் ஆர்ப்போடு இன்னன ஓசை”

No comments:

Post a Comment