தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

16.11.12

கோவை வந்த வரலாறு

தொண்ணூற்றாறு வகை சிற்றிலக்கியங்களுள் ஒன்றாகத் திகழ்வது கோவை இலக்கியமாகும். முறையாகக் கோக்கப்பட்டது தான் கோவை என்னும் இலக்கியம்.   இவை முற்றிலும் அகப்பொருள் தழுவியவையாகும்.  அகப்பொருள் துறைகள் அனைத்தையும் கொண்டு நூல் இயற்றப்பட வேண்டும் என்னும் ஆர்வ மேலீடே இந்நூல் தோற்றத்திற்கு வித்திட்டது எனலாம்.  

தொல்காப்பிய இலக்கண நூலில் இடம்பெற்றிருக்கக் கூடிய பொருளதிகாரக் கருத்துக்களே கோவையிலக்கியத்தின் தோற்றுவாயக இருந்தன.  தொல்காப்பியத்திற்குப் பின்னர்  இறையனார் அகப்பொருள், மாறன் அகப்பொருள், நம்பியகப்பொருள் போன்ற இலக்கண நூல்கள் தோற்றம் பெற்றன.  இந்நூல்களில் இடம்பெறும் செய்திகளுக்குப் புலவர் பலர் எடுத்துக்காட்டுப் பாடல்கள் எழுத முற்பட்டனர்.  இதன் விளைவாகத் தோன்றியதே கோவை இலக்கியம்.  நாற்கவிராச நம்பி எழுதிய நம்பியகப்பொருளுக்கு விளக்கம் கூறும் முகமாக எழுந்த கோவையே தஞ்சைவாணன் கோவை.  எனவே பிற நூல்களுக்குச் சார்பாக விளக்கம் தர முற்பட்ட இலக்கியங்களே கோவை என்னும் சிற்றிலக்கிய வகையாய் நின்றது எனலாம்.

இலக்கண நூல்களுக்கு விளக்கம் பகர எழுந்த கோவை நூல்களுள் குறிப்பிடத்தக்கவை பாண்டிக்கோவை, தஞ்சைவாணன் கோவை.  இறையனார் அகப்பொருளுக்கு உரிய எடுத்துக்காட்டுகளமைய உருப்பெற்ற நூல்தான் பாண்டிக்கோவை என்னும் கோவை நூல்.


பாட்டுடைத் தலைவன், கிளவித் தலைவன் என்ற இருவர் பற்றி அதிகம் குறிக்கப்பட்டுள்ளது.  அகத்துறைகளை எடுத்துக்கொண்டு அத்துறை குறித்த பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன.  இலக்கண நூல்களைக் கொண்டு, அகத்துறை ஒவ்வொன்றுக்கும் எடுத்துக்காட்டுப் பாடல்கள் அமையுமாறு பாடல்களை எழுதுவது மரபு.ஐந்திணைகளிலிருந்து மாறுபடாது 400 கட்டளைக் கலித்துறையால் பாடல் இயற்றப்படுவதாகும்.

ஒரு துறையையே எடுத்துக்கொண்டு 400 பாடல்களையும் எழுதியவரும் உண்டு.  இந்நூல் ‘ஒரு துறைக் கோவை’ என்று பெயர் பெற்றிருக்கிறது.  கோவை நூல்கள் பெரும்பாலும் கட்டளைக் கலித்துறை என்னும் யாப்பை அடியொட்டியே பாடப்பெறும்.

மாதங்கீரனார், வெறிபாடிய காமக் கண்ணியார் போன்றவர்கள் ஒரு துறையைப் பற்றி பாடல்கள் பாடியுள்ளனர்.  முதலில் தோன்றிய கோவை இலக்கியமாகத் திகழ்வது திருக்கோவையார் ஆகும்.  இதனை மாணிக்கவாசகர் எழுதினார்.

`நாணிக்கண் புதைத்தல்’ என்னும் ஒரு துறையைக் கொண்டே ஒருதுறைக்கோவை நூல் உருப்பெற்றது.  முடிப்பாக,  பிற நூல்களுக்கு விளக்கச் செய்யுள்கள் எழுத முற்படும் போதுத் தோன்றியவையே கோவை இலக்கியம் எனலாம்.


No comments:

Post a Comment