உலகத் தமிழ் இணைய மாநாடு - 2012
வரும் 28-12-2012 அன்று சிதம்பரம் அண்ணாமலைப்
பலகலைக்கழகத்தில் 11 வது இணைய மாநாடு நடைபெற உள்ளது. மாநாடானது 28, 29, 30
ஆகிய முன்று நாட்களுக்குச் சீர்மையுடன் நடைபெறுகிறது. தமிழும் இணையமும்
குறித்த மைய நோக்குரை பல்லோராலும் அவ்வமயம் தருவிக்கப்படும்.
உத்தமமும் அண்ணாமலைப் பல்கலைக் கழகமும்
ஒன்றிணைந்து இம்மாநாட்டை நடத்தத் திட்டமிட்டுச் செயலாக்கத்தில் இறங்கியுள்ளன.
உத்தமமானது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில்
பதிவு செய்யப்பட்ட தன்னார்வ பன்னாட்டு நிறுவனாமாகத் திகழ்ந்து வருவது
குறிப்பிடத்தக்கது. இதுவரையில் பல நாடுகளின் பேராதரவுடன் ஏழு இணைய மாநாடுகளை
நடத்தியிருக்கிறது. தமிழக அரசு இந்நிறுவனத்திற்கு நல்லாதரவு நல்கி
தன்பணியாற்றியிருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் மூன்று முறை இஃது
நடத்தப்பட்டுள்ளது.
தமிழார்வலர்கள் தமிழ் இணைய விரும்பிகள்
முதலானோர்களிடமிருந்து பல் தலைப்புகளில் கட்டுரைகள் வரவேற்கப்பட்டு தேர்வு செய்து
மாநாட்டு நாளன்று படிக்கப்படவுள்ளன.
கருத்தரங்குகள் மற்றும் ஆய்வுக்கட்டுரை தொடர்பான நிகழ்வுகளில் முன்கூட்டியே பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். மற்றபடித்தான கண்காட்சி முதலியவற்றை பொதுமக்கள் அனைவரும் பார்த்துப் பயன்பெறலாம்.
“செல்பேசி மற்றும் பலகைக் கணினிகளில் தமிழ்க் கணிமை” என்ற தலைப்பிலமைந்த கட்டுரைகளை வரவேற்று அது தொடர்பாக ஆய முடிவு செய்யப்பட்டுள்ளது. இணையத் தமிழில் ஆர்வமுள்ள பலரிடமிருந்து இக்கட்டுரைகள் கிடைக்கப்பெற்றிருப்பதாகத் தெரியவருகிறது. திசம்பர் 20 ஆம் தேதி இக்கட்டுரைகளை ஒப்படைக்க இறுதி நாள் என எல்லையிடப்பட்டுள்ளது.
இணைய மாநாடுகள், ஆய்வாளர்களின் கருத்துப் பரிமாற்றத்துக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், மக்கள் கூடத்தின் மூலம் கணித்தமிழ் நுட்பங்களைப் பரப்புதல், கணித்தமிழ் மென்பொருட்கள் மற்றும் கருவிகளைக் கண்காட்சிகள் மூலம் பொதுமக்களுக்கு அறிமுகம் செய்தல் போன்ற பல்வேறு செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சிதம்பரத்தில் இம்மாநாட்டை நடத்துவதால் கண்காட்சி, மற்றும் மக்கள் கூடம் மூலம் கணித்தமிழ் வளர்ச்சி பற்றிய செய்திகளை சுற்றுப்புற மக்களிடையே எடுத்துச்செல்ல இது ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என ஊகிக்கப்பட்டுள்ளது.
கீழ்க்கண்ட தலைப்புகளில் மாநாட்டின்
அரங்குகள் நடைபெற உள்ளன:
- செல்பேசிகள் மற்றும் பலகைக் கணினிகளில், முக்கியமாக ஐ.ஓ.எஸ், ஆண்டிராய்டு தளங்களில் தமிழைப் படித்தல், தமிழில் எழுதுதல்.
- மின் புத்தகங்கள், மின் இதழ்கள் ஆகியவற்றைக் கைக் கருவிகளில் கொண்டுவர உதவும் செயலிகள் மற்றும் தொழில்நுட்பம்.
- திறவூற்றுத் தமிழ் மென்பொருள்கள், தன்மொழியாக்கல்.
- இயன்மொழிப் பகுப்பாய்வு: பிழைதிருத்தி, தமிழ் எழுத்துரு பகுப்பி, ஒலி உணர்தல், தேடுபொறிகள், இயந்திர மொழிமாற்றம், தகவல் அகழ்தல் போன்றவை.
- தமிழ் இணையத்தின் தற்போதைய நிலை: வலைப்பதிவு, சமூக வலைத்தளங்கள், விக்கிப்பீடியா, குரல் வலை போன்றவை.
- தமிழ் தரவுத்தளங்கள்.
- கணினி வழி தமிழ் கற்றல் மற்றும் கற்பித்தல் குறித்தான ஆய்வுகள்
- தமிழ்க் கணினி சொல்லாக்க ஆய்வுகள்
- கணினி வழி தமிழ்மொழி பகுப்பாய்தல் மற்றும் கணினிக்கு தமிழ் மொழியறிவு ஊட்டல் பற்றிய ஆய்வுகள்
No comments:
Post a Comment