தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

30.12.12

திரு.வி.கவின் இளமைத் தொண்டு


திருவிகவும் இளம்பருவத் தொண்டும்

திரு.வி.க என்றால் அன்பென்பர்; தொண்டென்பர்; பெண்ணியவாதியென்பர்; ஆன்மிகர் என்பர்; பண்பாளர் என்பர்; பெருமாள் பக்தர் என்பர்; தொழிற்சங்கவாதி என்பர்.  எவரெவர் எப்படி திரு.வி.க வை நோக்கினரோ அவ்வண்ணமே காணப்படுவார் நம் திருவாரூரார்.  தன்னில் விலங்கியல்பு அதிகமாகக் காணப்பட்டதாக அடிக்கடி கூறி வருந்தும் அவர் ஒரு தருணத்தில் விலங்கியல்பை தெய்வ இயல்பு மறிக்கச் செய்தது என்கிறார்.  தெய்வத்தின்பால் அன்பு எழுந்த போது ஆறாக்காதல் கொண்டவராய் மாறினார்.  நித்தமும் மாலை வேளையில் பார்த்தசாரதியைத் தொழாமல் இல்லமடையமாட்டார்.

மாந்தனானவன் விலங்கியல்புகளை விடுத்து மனித இயல்புகளைக் கைவரப்பெற்றாலே சமுதாயம் நன்னிலையை எய்திவிடும்; சென்னிலையை அடையும் என்ற எண்ணங்கொண்டிருந்தார்.
தெய்வ இயல்பைச் சுட்டும்போது அறச்செயலையும் ஒருங்கே சுட்டுதல் தகும்.  ஏனெனில் தெய்வ இயல்பெல்லாமே அறத்தை அடியொட்டியதே.  திரு.வி.கவும் அறச்செயல்களை சிறு பிராயத்திலிருந்தே செய்யத் தொடங்கியிருக்கிறார்; துணிந்திருக்கிறார்.  மற்றவர் அஞ்சி செய்ய இயலாதவற்றை பிறருக்காக என எண்ணி செய்யத் துணிந்தார்.

தன்னுடைய சிறு அகவையில் அவர் செய்யாத குறும்புகளில்லை; அறமுமில்லை.  பின்னாளில் அவர் உதிர்த்த முத்துக்கள் எல்லாம் சிறுவயதில் அவர் மேற்கொண்ட அறவித்துக்களே!
இராயப்பேட்டையில் வசித்தபோது தன்னுடைய இளம்பட்டாளங்களுடன் செய்யாத குறும்புகளில்லை.  அக்குறும்புகள் அனைத்தும் அவர் செய்த அருஞ்செயல்களால் பிறர் அகங்குளிரச் செய்தன. 

சுந்தரேசர் ஆலயத்திற்கென கொட்டப்பட்டிருந்த கட்டுமானத்திற்குண்டான மணல், கோயிலின் முன் கொட்டப்பட்டிருந்தது.  அம்மணலை எடுத்துவந்து கோயிலில் கொட்டுவார் வரவில்லை.  மன்னாத முதலியார் அவர்கள் தாமே அம்மணலை வாரி கோயிலினுள் கொட்டத் தொடங்கினார்.  இதைக் கண்ணுற்றார் திரு.வி.க தன்னுடைய படைகளுடன் கோயிலின் முன் ஒன்று திரண்டார்.  மணல் முழுவதும் கோயிலினுள் சென்றது.  மன்னாத முதலியார் மனமகிழ்வோடு திரு.வி.க வை வாழ்த்தலானார்.  பிறர் தன்னை இவ்வாறு சொல்ல வேண்டும் இவ்வாறு புகழ வேண்டும் என்னும் எண்ணங்கொண்டிருந்திலர் அவர்.  எளியர்; அன்பர்; நட்பாளர்; சிறந்த தொண்டர்; பிரதிபலன் பாராதவர்.

பகட்டு வாழ்க்கையை அவர் ஒருபோதும் விரும்பியதில்லை.  நண்பர்களுடன் ஏற்றத்தாழ்வு பார்த்ததில்லை.  பெரிய பாளையத்தம்மன் கோயிலின் முன் எண்ணற்ற பிச்சை ஏற்பவர்கள் இருப்பர்.  அவர்களுள் கூனரும், குருடரும், முடவரும் அடக்கம்.  தம்முடைய அன்றைய நாளை போக்குவதற்காக ஆழ்ந்த அல்லல்களுக்கு ஆட்படும் மானிடராய் வாழ்ந்திருந்தனர்.  இவர்களுக்காகவும் திரு.வி.க தன் தொண்டுள்ளத்தை விரித்துக்காட்டியிருக்கிறார்; அன்பினால் தழுவியிருக்கிறார்; தராதரம் விலக்கியிருக்கிறார்; ஒன்றென்றிரு எனப் புகலச்செய்திருக்கிறார்.

பிச்சை ஏற்பவர்களுக்கெனத் தான் பலரிடம் சென்று அறச்சோறு ஏற்றிருக்கிறார்.  தன்னுடைய இளம்பருவத்தோழர்களுடன் பல்வீதிகளில் அறச்சோறு வேண்டி பிச்சை ஏற்றிருக்கிறார்.  பிறரிடம் தர்மம் பெற பலர் அஞ்சும் போக்கு திரு.வி.கவையும் விட்டுவைக்கவில்லை. இச்செயலை  இழுக்காக எண்ணினார்.  தோற்றுவாயில்தான் அவர் எண்ணம் இப்படிச் சுருங்கியிருந்தது.  பின்னர் பிறருக்காக அறச்சோறு பெறுவதில் இழுக்கில்லை எனத் துணியலானார்; சோற்றுப் பிச்சையேற்றார்; அறச்சோறு பெற்றார். குருடு நிரம்பியும் முடம்பட்டும் அல்லல் பட்டிருந்தோருக்கு அறப்பிச்சை எடுத்து வழங்கினார்.  தெய்வ இயல்பை சிறிதுசிறிதாகக் கைவரப்பெற்றார்.  விலங்கியல்பு மாண்டுபோகத் தொடங்கியது.

No comments:

Post a Comment