தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

29.12.12

தமிழ் இணையப் புத்தகங்கள் இல்லையே!


புதுச்சேரி புத்தகக் கண்காட்சி

புதுச்சேரி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி குறித்த பதிவு இது.


கடந்த 24 ஆம் தேதி அன்று தொடங்கப்பெற்ற இக்கண்காட்சி வருகிற 2 ஆம் தேதி சனவரி 2013 வரை நடைபெறவிருக்கிறது.  இக்கண்காட்சியில் 25 விழுக்காடு கழிவு வழங்கப்படுவது மகிழ்தலுக்குரிய செய்தியாகும்.  இந்நல்வாய்ப்பினைப் பலரும் பயன்படுத்திப் பனுவல்கள் வாங்கி வருகின்றனர்.  

புத்தகக் கண்காட்சி குறித்த அறிவிப்பு அவ்வரங்கில் ஒலிபெருக்கி மூலம் அவ்வப்போது அறிவிக்கப்படுகிறது.  நாள்தோறும் அரங்கு தொடங்கும் நேரம் முடியும் நேரம் புத்தகப் பயனர்கள் எவ்வாறு புத்தகம் வாங்குதல் எவ்வழியாக வருதல் என்பனப் போன்ற அறிவிப்புகள் ஏராளமாய் எடுத்தியம்பப்படுகின்றன.

எண்ணற்ற புத்தகப் பதிப்பகங்கள் தத்தமது புத்தகங்களை அடுக்கி வைத்து விற்பனைக்குக் கொடுத்திருக்கின்றன.  பல இலட்சக்கணக்கான பனுவல்கள் விற்பனைக்கு இலக்காகக் காத்திருக்கின்றன.  இன்முகத்துடன் வரவேற்கும் முகமாய் காத்திருக்கின்றனர் அரங்குகளின் பொறுப்பாளர்கள்.  

நூல் வகை

கலை, இலக்கியம், பொருளாதாரம், அழகுக்குறிப்பு, பொது அறிவு, கணினி, ஆன்மிகம், தத்துவம், பொறியியல், வரலாறு, சுயமுன்னேற்றம், தன்னம்பிக்கை, சமையல், பிறப்பியம், கவிதை, ஒருவரி செய்திகள், கடந்த நிகழ்வுகள், நகைச்சுவை, சுயசரிதை, நீதிக்கதைகள் போன்ற வகைத்தான புத்தகங்கள் ஒருங்கே அடுக்கப்பட்டுள்ளன.

போட்டித் தேர்வு

அழகுக்குறிப்பும்,  சமையல் குறிப்பும் குறித்த நூல்கள் பயனர்களிடையே முக்கிய இடத்தைப் பெற்றுள்ளன.  இதனினும் சிறந்த இடத்தை மாணாக்கர்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள வினா விடை மற்றும் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் புத்தகங்கள் பிடித்துள்ளன.  இம்முறை ஆசிரியர் தகுதித் தேர்வுக்குத் தயாராகும் புத்தகங்கள் பெரிதும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. 

கணினி நூல்கள்

கணிப்பொறி கற்கும் விதமாக கணினியின் அடிப்படை செயல்பாடுகளான எம்.எஸ்.வேர்டு, எம்.எஸ்.எக்சல், இணையம், பேஜ்மேக்கர், ஃபோட்டோசாப் போன்றவற்றின் குறுந்தகடுகள் விற்பனைக்கு உள்ளன.  அரங்கினுள் நுழைந்தாலே இவை குறித்த ஒலியைக் கேட்காமல் இருக்க முடியாது.  பலர் ஐந்து நிமிடங்கள் செலவு செய்து இது குறித்த காணொளியைக் கண்டு செல்கின்றனர்.

தமிழ் நூல்கள்

தமிழிலக்கியங்கள் குறித்த நூல்கள் பல அளவிறந்த எண்ணிக்கையில் காணக் கிடைக்கின்றன.  புகழ்பெற்ற ஆசிரியர்களின் புதினங்கள், சிறுகதைகள், கவிதைகள் விற்பனைக்குள்ளன.  கவிப்பேரரசு வைரமுத்துவின் மூன்றாம் உலகப்போர் புதுவரவுக் கவிதைப் புத்தகமாக அரங்குகளில் முளைத்திருக்கிறது.  வைரமுத்துக் கவிதைகளுக்கென ஓரிடம் ஒதுக்கி அவர்தம் கவிதையாக்கங்களைத் தாங்கி நிற்கும் புத்தகங்கள் ஒருங்கே அடுக்கப்பட்டுள்ளன.

புதுவை எழுத்தாளர்கள்

புதுச்சேரி எழுத்தாளர்களுக்கென ஒரு அரங்கத்திற்கு ஏற்பாடாகியுள்ளது.  இவ்வரங்கில் நம் புதுவை எழுத்தாளர்களின் படைப்புகள் விற்பனைக்கு உள்ளன.  புலவர் பெருந்தேவனின் `திருவள்ளுவருக்குப் பின் அரசியல் அறம்’, திரு.உசேன் அவர்களின் எண்ணற்ற புத்தகங்கள், புதுவை சிவத்தின் புத்தகங்கள்,  புலவர் சீனு இராமச்சந்திரனின் நாடகப் படைப்புகள் முதலியன இடம்பெற்றுள்ளன.

பரிசு

பல வியாபார நிறுவனங்கள் புத்தகம் வாங்குவதை ஊக்குவிக்கும் முகமாக பரிசுகளை வழங்குகின்றன.  புத்தகம் வாங்கிவிட்டு வெளியே வரும்போது நம் கையில் கொடுக்கப்படும் கூப்பனை நிரப்பி பெட்டியில் போடும்படி அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.  இதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரொக்கமும் புத்தகமும் பரிசாக வழங்கப்படுகிறது.  புதுச்சேரியின் பல முன்னணி நிறுவனங்கள் இப்பரிசினை இலவயமாகப் பயனர்களுக்கு வழங்குகின்றன.

ஏமாற்றம்

தமிழ் இணையம் குறித்த புத்தகங்கள் குறைவாகக் காணப்படுகின்றன.  இணையத்தில் ஏற்றம்பெற்றிருக்கக் கூடிய நம் அருந்தமிழ் இணையத்தில் எவ்வாறு வெற்றிநடை போடுகிறது என்பது குறித்தும் தமிழ் இணையத்தின் எல்லைகள் விரிந்திருப்பது குறித்தும் எண்ணற்ற புத்தகங்கள் பல்லோராலும் படைக்கப்பட்டுள்ளன.  ஆயினும் இது குறித்த புத்தகங்கள் மிக மிகக் குறைவே.  கணிப்பொறியில் தமிழ், கம்ப்யூட்டரில் தமிழில் தட்டச்சு செய்வது எப்படி என்கிற இரண்டு நூல்கள் தான் விற்பனைக்கு இருந்தன.  மற்றபடி கணினியைக் கற்றுக்கொள்வது குறித்த புத்தகங்கள் தான் இடம்பெற்றிருந்தன.

எந்த அரங்கில் சென்று தேடினாலும் வினவினாலும் தமிழிணையம் குறித்த புத்தகங்கள் இருப்பதில்லை.  ஒரு சிலர் தாங்கள் நடத்தும் சொந்தக் கடைகளில் இருந்தாலும் வைத்துவிட்டு வந்ததாகச் சொல்கிறார்கள்.  இவ்வளவு தான் தமிழ் இணையம் குறித்த விழிப்புணர்வு,  ஆர்வம் என்று எண்ணத் தோன்றுகிறது.  வேல்சொக்கநாதன் திருமண நிலையத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சியிலும் சரி ஆனந்தா திருமண நிலையத்தில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியிலும் சரி பெருத்த ஏமாற்றமே!

இணையத்தில் ஆர்வமுடையவர்கள் தமிழில் ஆர்வமுள்ளவர்கள் இனியாவது தமிழ் இணையம் குறித்த புத்தகங்கள் அதிகம் இடம்பெற உரிய முயற்சி எடுக்க வேண்டும்.

No comments:

Post a Comment