தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

14.12.12

இணையம் குறித்த பெருந்தேவன் குறட்பாக்கள் - நல்ல சாட்டையடி!

புலவர் பெருந்தேவன் -  புதுச்சேரி
 சி. இராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இப்புலவர் புகழ்பெற்ற தமிழாசிரியர்.  புதுவைப் பாவலர் பண்ணையில் யாப்பிலக்கணம் பயின்று ‘பைந்தமிழ்ப் பாவலர்’ என்ற பட்டத்தைப் பெற்றவர்.  சந்தம், வண்ணம், சிந்து, உருப்படி ஆகிய இசைப்பாடல் வகைகளுக்கு இலக்கணந்தெரிந்து படைக்கவல்ல பாவலர்கள் மிகச் சிலரே தமிழ் கூறு நல்லுலகத்தில் இன்று காணப்படுகின்றனர்.  அவர்களில் இவரும் ஒருவர்.  தெளிதமிழ் இதழ் நடத்தும் பாவலர் பரிசுத் திட்டத்தில் பாட்டெழுதி முதற்பரிசு பெற்றவர்.  “சித்தானந்த அடிகள் திருவருட்பனுவல் திரட்டு” , அறிவுலகக் காவலர்கள், ஆசிரியர் அறம் முதலிய நூல்களின் ஆசிரியர்.  புதுவை அரசின் நல்லாசிரியர் எனும் சிறப்புப் பட்டம் பெற்றவர்.  ஆசிரியப் பணி, அரசியற்பணி முதலிய எல்லாத்துறைகளிலும் அறத்தை வற்புறுத்துவதில் அடங்காத வேட்கையுடைய ஆன்றவிந்தடங்கிய சான்றோராய்த் திகழ்பவர்.  அவர்தம் உள்ளத்தில் அவ்வப்போது மண்டியெழும் அறக்கருத்துகளின் வெளிப்பாடாக இந்நூல் அமைந்துள்ளது.

குறள் வடிவத்தை அடியொட்டி புலவர் பெருந்தேவன் அவர்கள் `அரசியல் அறம்’ என்கிற நூலை யாத்துள்ளார். இந்நூலில் இணைய மேம்பாடு குறித்து அவர் நுட்பமான கருத்துக்களை முன் வைக்கிறார்.  அக்கருத்துக்களைப் பாடல் வரிகளோடு இங்கே அடுக்கலாம்.

அங்கைக் கனிபோல் அறிதல் எளிதாகும்
இங்கிணையத் தாலுலகம் என்

இணையதள மேம்பாட்டால் இவ்வுலகத்தை உள்ளங்கைக் கனியைப் போல் எளிதாக அறிந்துகொள்ள முடியும்.

ஆடலாம் பேசி அரட்டை அடிக்கலாம்
தேடலாம் இங்கிணையத் தில்

விளையாடலாம், பேசலாம், அரட்டை அடிக்கலாம், பாடத்திட்டக் கட்டண விவரம், மருத்துவக் குறிப்பு, வேலைக்கான கல்வித் தகுதி, ஆய்வுக் கட்டுரை முதலியவற்றை இருந்த இடத்தில் இருந்தபடியே இணையத்தின் மூலம்  தேடிக் கண்டறியலாம்.

இணையத் தொழில்நுட்பம் இல்லாயின் இல்லை
துணைவே றுலகோர்க்குச் சொல்

இணையதளத் தொழில்நுட்பம் இல்லாம்ல் போகுமானால் இவ்வுலகத்தவர்க்கு அவ்விணையத்திற்கிணையான துணை வேறு இல்லையாகும்.

இணையம் கணினி எனுமிவ் விரண்டின்
துணைகொண் டறிவைத் துலக்கு

இணையம், கணினி ஆகிய இரண்டு தொழில் நுட்பங்களின் துணையை நன்முறையில் பயன்ப்டுத்திக் கொண்டு அனைவரும் தமது அறிவை விரிவு செய்து கொள்ள வேண்டும்.

இணையம் தீதும் நன்றும்
இணைய வழிப்பயன்கள் எய்தார் எய்தார் 
அணிசேர் அறிவினொளி ஆம்

இணைய தளத்தின் மூலம் சிறந்த பயனை அடையாதவர்கள் அழகு மிகுந்த அறிவின் ஒளியைப் பெறமாட்டாதவராவார்கள்.

இணையிங்கிலாத திணையம் அதனின்
துணையால் பெருகும் தொழில்

ஈடுஇணையற்றது இணையம், அதன் துணையால் உலகில் பலவகத் தொழில்களும் பெருவளர்ச்சி காணமுடியும்.

குமுக வலைத்தளத்தின் கோணல் குறும்பால்
அமிழும் மணங்கள் அறுந்து.

நட்பினைத் தேடுவோர் கூடும் சமூக வலைத்தளத்தில் நம்பகத்தன்மை இருப்பதில்லை.  எச்சரிக்கை உணர்வு இன்மையால் மோசடிகளுக்காளாகித் திருமண உறவே அறுந்து போதலும் உண்டு.

தங்கு தடையின்றித் தகவல் பரிமாற 
இங்குதவும் நல்லிணையம் என்.

இவ்வுலக மக்களின் தங்குதடையற்ற செய்திப் பரிமாற்றத்திற்கு உதவக்கூடியது நலம்சார்ந்த இணையமே ஆகும்.

நட்பினைத் தேடுவோர் நாடும் வலைத்தளத்தால்
ஒட்பம் கெடலுண் டுணர்.

தமது நட்பு வட்டத்தை விரிவுபடுத்திக் கொள்ளவேண்டும் என்று விரும்புபவர் சமூக வலைத்தளங்களில் மனந்திறந்து பேசுவதும் புகைப்படம் வெளியிடுவதும் ஆகியவற்றால் நல்லறிவு கெட்டுப்போதலும் உண்டு.

வலைத்தளக் கண்கணிப்பால் வாழ்வை இழந்திங்(கு)
அலைபடுவார் உள்ளார் அறி

மணமகன் மணமகள் இருவரும் சமூக வலைத்தளத்தில் மேற்கொண்டுள்ள நட்புவட்டம் கண்காணிக்கப்படுவதால் அவர் தமக்குள் பிணக்கு ஏற்பட்டுப் பிரிந்து துன்பப்படுபவர்களும் இங்குச் சிலர் உள்ளனர்.

No comments:

Post a Comment