தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

6.12.12

சிறு பத்திரிகைகள் சந்தித்த சவால்கள்


www.silambukal.blogspot.com
தமிழில் வெளிவந்த சிறுபத்திரிகைகள் பல காலப்போக்கில் மறைந்து போனதன் ஆழ்காரணம் என்னவாக இருக்கும் என்பதே இப்பதிவின் ஆராய்வு.

தமிழில் பல பத்திரிகைகள் இன்று நாளேடுகளாக வந்துகொண்டிருக்கின்றன.  இவை பல வாசகர்களைக் கொண்டிருக்கின்றன.  ஊடகங்களின்  வழியாகப் பல நாளிதழ்கள் விளம்பரப்படுத்தப்பட்டும் குறிப்பிட்ட நாளிதழ்கள் தத்தமது இதழிலேயே தம் இதழ் குறித்து விளம்பரப்படுத்தியும் வருகின்றன.

சிறு பத்திரிகைகள் வளர்வதற்கு நிதி ஒரு முக்கியப் பங்காற்றியது.  நிதியுதவி பெற்றே பல சிற்றிதழ்கள் வெளிவந்தன.  பெரும்பணக்காரர்கள் (தமிழார்வம்  கொண்டவர்) என்ற வகையினரும் தமிழுக்காக உதவும் மனப்பான்மை கொண்டோருமே இச்சிறு பத்திரிகைகளுக்கு நிதியளித்து வெளிவர ஏதுவாகினர்.

சில தமிழார்வலர்கள் நான் பத்திரிக்கை தொடங்குகிறேன் பேர்வழி என்று வெகுண்டெழுந்து ஆறு மாதம் கூட தாக்குப்பிடிக்காமல் மூட்டைக்கட்டிய நிகழ்வுகளும் நடந்தேறியிருக்கிறது.  பத்திரிக்கை வரலாற்றுலகில் தொடர்ந்து வெளிவந்த சிறுபத்திரிகைகள் மிகவும் சொற்பமே!

திரு.புதுமைப்பித்தன், திரு.கு.ப.ராஜகோபாலன்,திரு.ந.ச்சமூர்த்தி போன்றோர் 1930 வாக்குகளில் சிறு பத்திரிகைகளில் எழுதிக்கொண்டிருந்தனர்.  சொக்கலிங்கம் என்பவரை ஆசிரியராகக் கொண்டு `ஊழியன்’ என்னும் பத்திரிகை வெளிவந்தது.  

இக்காலகட்டத்தில் வெளிவந்த மற்றுமொரு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த பத்திரிகை மணிக்கொடியாகும்.  இப்பத்திரிகை தான் பலரின் கலை தாகத்தைப் போக்கியது.  இப்பத்திரிகைக்குச் சிறுகதை தான் பிரதானம்.  மக்களிடையே நன் வரவேற்பைப் பெற்றிருந்த போதிலும்  மாதம் இரு முறை வெளிவந்த மணிக்கொடியின் பொருளாதார நிலை சொல்லுமளவிற்கு ஏற்றம் பெறவில்லை.  இதனால் நான்கு ஐந்து ஆண்டுகளில் நின்று போய்விட்டது.

கி.ரா, எம்.வி.வெங்கட்ராமன், லா.ச. ராமாமிர்தம், ஆர்.சண்முகசுந்தரம் போன்றோர்களை வெளியுலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது மணிக்கொடியே.

தொடக்க காலத்தில் மணிக்கொடி பல அரசியல் மற்றும் சமூக பிரச்சினைகளைச் சாடி வெளிவந்தது; பிந்தைய காலத்தில் தான் சிறுகதை வளர்ச்சிக்கு வழிசெய்து நின்றது.

இப்படிப்பட்ட மணிக்கொடியின் ஏடுகள் கூட ஆயிரக்கணக்கிலும் இலட்சக்கணக்கிலும் வெளிவரவில்லை.  ஏனெனில் சில நூறு ஏடுகள் வெளியிட்டாலும் அதை வாங்கிப்படிப்போரின் எண்ணிக்கை மிகவும் குறைவே.  இச்சூழல் தான் பல பத்திரிகைகளை தவிடுபொடியாக்கியது.  நிதியைப் போட்டு பத்திரிகை நடத்துவோர் இலாபத்தை எதிர்பார்க்கவே கூடாது என்னும் நிலை ஏற்பட்டது.  எத்தனை முறை முதலீடு செய்தாலும் பத்திரிகையின் ஓட்டம் முன்பு இருந்த நிலையைவிட குறைந்தேயிருந்தது.  இவ்வாறான பத்திரிகை தொழில் பலரது வாழ்வில் ஏற்றத்தை மிகுவிப்பதற்குப் பதில் தப்பித்தோம் பிழைத்தோம் என்னும் நிலைமையையே ஏற்படுத்தியது.

 "பத்திரிகைகள் நடத்தி இலாபம் கண்டோர்,  பேப்பர் கடை காரரும் பிரஸ் வைத்திருப்போருமே தவிர பத்திரிகை நடத்துவோரல்ல" என்பார் திரு.வல்லிக்கண்ணன்.

முடிப்பாகச் சொல்ல வேண்டுமாயின் நிதி ஒன்று மட்டும் சிறு பத்திரிகைகள் நலிந்து போகக் காரணம் இல்லை.  வாசகர் வட்டம் குறைவாக இருந்ததும் தமிழ் மீது ஆர்வங்கொண்டோர் குறைவாக இருந்ததும் அப்படித் தமிழார்வம் இருந்தாலும் வாங்கும் எண்ணமிலார் இருந்ததும் காரணமாக இருந்துள்ளன.

தொடருவோம் ............. (2)








No comments:

Post a Comment