முனைவர் வா.செ.குழந்தைசாமி
கரூர் மாவட்டத்தில் வாங்கலாம்பாளையம் என்ற
சிற்றூரில் பிறந்தவர். இந்தியா, செர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கல்வி
பயின்றவர். நீர்வளத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர்.
வகித்த பதவிகள்:
நீர்வளத் துறைப் பேராசிரியராகவும், மதுரை
காமராசர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகவும், யூனெசுகோ ஆலோசகராகவும், இந்திராகாந்தி தேசியத்
திறந்த நிலைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகவும் தமிழகத் தொழில்நுட்பக் கல்வி இயக்குநராகவும்
பதவி வகித்தவர்.
நீர்வளத்துறை:
நீர்வளத் துறையில் நன்கு தேர்ந்த அறிவைப்
பெற்றவர். இதனால் எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். பன்னாட்டவரும்
புகழும் படியான ஆய்வுகளை இத்துறையில் மேற்கொண்டதனால் பலரின் பாராட்டையும் ஒருங்கே பெற்றவர்.
அறிவியல் தமிழ்:
அறிவியலில் ஆறாத ஆர்வம் கொண்ட வா.செ.கு அவர்கள்
அறிவியல் தமிழ் குறித்து பல நூல்களைப் படைத்துள்ளார். பல கல்லூரிகளில்
இவரின் நூல்கள் பாடமாக இடம்பெற்றுள்ளன.
பல்கலைக் கழக மானியக் குழு, அனைத்திந்தியத்
தொழில்நுட்பக் கல்விக் கழக, அனைத்திந்தியத் தொழில் பயிற்சிக் கல்விக் குழு, தமிழகத்
திட்டக் குழுமம் போன்ற பல நிறுவனங்களில் உறுப்பினராக இருந்தவர். சர்வ தேசியத்
தொலை நிலைக் கல்விக் கழகத்தில் ஆசியாவின் துணைத் தலைவராகவும், காமன்வெல்த் நாடுகளின்
பல்கலைக் கழகக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியவர்.
விருதுகள்:
இந்திரா காந்தி தேசிய ஒருமைப்பாடு விருது
(1988), மைய வேளாண்மை வாரியத்தின் வைர விழாச் சிறப்பு விருது (1991) மற்றும் இந்திய
பொறியியலாளர் நிறுவனம் இவரை இந்தியாவின் சிறந்த பொறியியல் வல்லுநர்களில் ஒருவராக
1991 இல் பெருமைப்படுத்தியது.
இவர் தமிழ் வளர்ச்சி, தமிழிலக்கியம், தமிழ்
எழுத்து சீரமைப்பு முதலிய துறைகளில் ஆர்வங்கொண்டவர். இவை தொடர்பான நுல்களையும்
படைத்துள்ளார்.
தமிழ் எழுத்துச் சீரமைப்பு குறித்த இவரின்
நூல் ஒரு பார்வை:
இந்நூலில் இந்நூலின் தேவை குறித்தும் எழுத்துகளைக்
குறைப்பதன்று என்பது பற்றியும் புதிய ஒலிகளைப் புகுத்துவது தேவயற்றது என்பனப் போன்ற
தலைப்புகளில் கட்டுரைக்கப்பட்டுள்ளது.
இதற்கு வலுச்சேர்க்கும் முகமாக பேராசிரியர்
தெ.பொ.மீ, பேராசிரியர் மு.வ, தமிழறிஞர் கி.வா.ஜ., பேராசிரியர் வ.சுப.மாணிக்கம், சிலம்புச்
செல்வர், டாக்டர் கலைஞர், தமிழகப் புலவர் குழு முதலியோரின் கருத்துக்களை இடம்பெறச்
செய்துள்ளார்.
புதிய ஒலிகளைப் புகுத்துவது தேவயற்றது:
``தமிழில் 247 ஒலியெழுத்துகள் உள்ளன.
உலகின் பல மொழிகளிலும் உருவாக்கப்படும் கருத்துகளை, தத்துவங்களை, அவற்றோடு தொடர்புடைய
பெயர்களைத் தமிழில் எழுதுவதற்குத் தமிழ் நெடுங்கணக்கில் இருக்கும் ஒலிகள் போதாவென்று
வாதிடுவோர் உளர். இதனடிப்படையில் தான் கிரந்த எழுத்துகள் நமது முன்னோர்களால்
பயன்படுத்தப்பட்டன. இன்றும் பலரால் பயன்படுத்தப்படுகின்றன. இக்கருத்திலேதான்
‘ஃப்’ என்ற சேர்கை பயன்படுத்தப்படுகிறது. இவற்றை எதிர்ப்பாரும் உண்டு; ஏற்பாரும்
உண்டு. இதுவும் ஒரு முக்கியமான பிரச்சினையே எனினும் இது நாம் எடுத்துக்கொண்ட
சீர்மைப்பினின்றும் வேறுபட்டது; தனிப்பட்டது. புதிய ஒலிகளின் தேவை பற்றிய வாதம்,
எதிர்ப்பு ஆகியன எழுத்துச் சீர்திருத்த இயக்கத்தின் ஒரு பகுதியன்று” என்று கூறுகிறார்.
|
No comments:
Post a Comment