தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

10.11.12

திரு.வி.க வும் சைவமும்:

திரு.வி.க வின் அரும்பதவுரை முயற்சி


திரு.வி.கலியாணசுந்தரனார் அவர்கள் சைவத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவராகத் திகழ்ந்தார்.  மற்ற சமயங்களின் மீதும் மிகுந்த மதிப்புக் கொண்டிருந்தார்.  தன்னுடைய முதல் முயற்சியான பெரியபுராண அரும்பதவுரை எழுதிய போது சைவத்தின் மீது ஆறாக்காதல் உடையவராகக் காணப்பட்டார்.  பெரியபுராணத்திற்கு இவர் எழுதிய செம்பதவுரை இன்றும் தமிழறிஞர்களால் போற்றப்படுகிறது.

பெரியபுராணத்திற்கு பதவுரை கண்ட பொழுது அனைத்து சமயங்களையும் அவர் ஒருங்கே வைத்து எண்ணும் மனப்பக்குவம் பெற்றிருக்கவில்லை என்பது பலரின் கூற்று.  இக்கூற்று உண்மையே.  

அவர் தன்னுடைய 51ஆம் அகவையில் பெற்றிருந்த சமயப்பக்குவம் 24 ஆம் அகவையில் பெற்றிருக்கவில்லை என்று மா.ரா.போ குருசாமி அவர்கள் தன்னுடைய திரு.வி.க பற்றிய நூலில் குறிப்பிடடுகிறார்.

பெரியபுராணத்திற்கு அவர் எழுதிய அரும்பதவுரை மிகவும் தேற்றத்தோடு காணப்பட்டது.  பலரது அரும்பதவுரைகள் புரிதல் போக்கிலிருந்து மாறுபட்டுக் காணப்பட்ட அக்காலத்தில் பிறரது துணையின்றி அரும்பதவுரையைக் கொண்டே நாயன்மார்களின் திறன் அறியும்படி,  உரை தந்திருந்தார்.

இவ்வுரையைப் படித்தோர் பலரும் மிகவும் எளிய நடையைக் கையாண்டிருக்கும் திறனைக் கண்டு பாராட்டச் செய்தனர்.  பெரியபுராணத்தில்   குறிப்பிடப்படுகின்ற நாயன்மார்களின் வரலாறு குறித்துப் பலர் பல திறனாய்வுகளை வெளிப்படுத்தியிருந்த அக்காலத்தில் நாயன்மார்களின் திறனை சைவநோக்கில் ஆய்ந்து தகுந்த விளக்கங்களைத் திறனாய்வாளர்களுக்குத் தன்னூலில் அளித்திருந்தார்.

கண்ணப்ப நாயனார் அப்பொழுதே கண் தானத்திற்கு வித்திட்ட முறைமையும் இயற்பகை நாயனார்தன் தவத்திற்காக மனைவியைத் தானமாகக் கொடுத்த முறைமையும் பலரால் ஏற்றுக்கொள்ளத்தக்கதாக இல்லை.  இவற்றைப் பலரும் ஏற்கும் வகையில் தகுந்த அரும்பதவுரை கண்டிருந்தார் திரு.வி.க.

திரு.வி.கவின் இப்பதவுரை முயற்சி இரண்டாம் முறையாகச் செம்பதிப்பைப் பெற்றபோது எண்ணற்ற மாற்றங்களோடு வெளிவந்தது.  காரணம் சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்களில் தேர்ந்த சமரசக் கொள்கை அறிவைப் பெற்றிருந்தார்.  அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்ற நெறி ஒன்றே எனத் தேர்ந்தார்.  சமரச வழியைக் கைக்கொண்டார்.  

திரு.வி.கவின் முதல் நூல் முயற்சி இது என்பர் சிலர்.  ஆயினும் இம்முயற்சிக்கு முன்பே தன்னாசிரியர் கதிரைவேற்பிள்ளையவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை எழுதிவெளியிட்டிருந்தார் திரு.வி.க.  இந்நூல் மிகுந்த வரவேற்பைப் பெறவில்லை என்பர் பலர்.

நன்றி:-
` திரு.வி.க’  - மா.ரா.போ.குருசாமி (பார்வை நூல்)


No comments:

Post a Comment