சேர
அரசகுடியில் தோன்றியவன் இரண்டாம் ஆதன். செல்வக்கடுங்கோ
வாழியாதன் என்னும் பட்டப்பெயரைக் கொண்டவன்.
முதலாம் ஆதனையடுத்து அரசிருக்கையை அடைந்தவன். இவன் கரிகாலன் மகள் சோணை என்பவளை மணந்தான். வலிமை மிக்க பேரரசனின் மருமகன் என்னும் நிலையை எய்தினான். இதனால் இவனுடைய ஆட்சி மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நாடும் நல்ல வளமுடன் திகழ்ந்ததாக அறியமுடிகிறது.
இரண்டாம்
ஆதனின் மேலான நட்புக்குரியவராக விளங்கியவர்தான் கபிலர். இவர் பார்ப்பனர். ஒரு நாள் இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போது ஆதன்,
கபிலரின் கரம் பற்றி இவ்வளவு மென்மையாக இருக்கிறதே
உமது கைகள் என வியந்து கேட்க, கபிலர் அதற்குத் தன் தொழில் பாடல் புனைவது என்றும் தங்கள்
போன்றோரின் தொழில் எதிரிகளை வீழ்த்தி வாகை சூடுவதென்றும் கூறி மன்னனைப் பலவாறு புகழ்கிறார். புகழ்வதில் மிகவும் வல்லமை பெற்ற கபிலர் மன்னன்
கையின் வீர வலிமையைப் புகழ்ந்து, அத்தகைய வீரன் ஆதரவில் வாழும் கவிஞர்களின் கைகள் மெல்லியனவாக
இராமல் வேறு எப்படி இருக்க முடியும் என்று கூறினாராம்.
இக்கருத்தை
அவர் பாடிய பாடலின் பொருளால் விளங்கிக்கொள்ளலாம்.
“வீரமிக்க
அரசனே உன் தடந்தோள்கள் அழகு மிக்க அணங்குகளுக்குக் காதல்நோய் ஊட்டுபவை. அதே சமயம் அவை உன் எதிரிகளுக்கும் அச்சம் தருபவை. உன் தடக்கைகளோ, பொன்வேய்ந்த அங்குசத்தால் யானையை
ஊக்கி இருப்புத் தாழிட்ட உன் எதிரிகளின் கோட்டை வாயில்கள் மீது அவற்றை ஏவுபவை. உன் வீரர்களால் சமன் செய்யப்பட்ட கரைகளையுடைய ஆழ்ந்த
அகழிகளைத் தாவும்படி வீறுமிக்க உன் போர்க்குதிரையை நாத்திச் செல்லும்வண்ணம் கடிவாளங்களைப்
பிடித்திழுப்பவையும் அவையே. தவிர நீ தேரில்
செல்லும்போது உன் தோள் மீதுதொங்கும் அம்புத் தூணிலிருந்து அம்புகளை எடுத்து அவற்றை
எய்யும்படி வில்லைவாங்கி விறல்பட வளைப்பவையும் அவையே. இத்தகைய ஆற்றல் வாய்ந்த செயல்களைச் செய்வதனால்,
உன் தோள்கள் நீண்டு திரண்டும், கைகள் துவன்றும்
வலிமை பெற்று உள்ளன” என்று விளங்கிடும்படி பாடினாராம்.
மற்றொரு
சமயத்தில்,
கதிரவனையும்
இரண்டாம் ஆதனையும் ஒப்பாக வைத்துப் பாடிய கபிலர் கதிரவனைத் தாழ்த்தியும் ஆதனை உயர்த்தியும்
புகழ்பாடியிருக்கிறார்.
``வையங் காவலர் வழிமொழிந் தொழுகப்
போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறாஅது
இடஞ்சிறி தென்னும் ஊக்கம் துரப்ப
ஒடுங்கா உள்ளத் தோம்பா ஈகைக்
கடந்தடு தானைச் சேரல் ஆதனை
யாங்கனம் ஒத்தியோ, வீங்குசெலல் மண்டிலம்?
பொழுதொடு வரைதி, புறக்கொடுத் திறத்தி;
மாறிவருதி, மலைமறைந் தொளித்தி;
அகலிரு விசும்பினானும்
பகல்விளங் குதியால், பல்கதிர் விரித்தே!”
என்ற
பாடல் வரிகளில் கட்டாயம் இரண்டாம் ஆதன் புகழ்மயக்கம் எய்தியிருக்க வேண்டும். ஏனெனில் இப்பாடல் கேட்ட ஆதன் கபிலருக்கு எண்ணற்ற
ஊர்களைப் பரிசாகக் கொடுத்தானாம்.
இரண்டாம்
ஆதனின் இரு புதல்வர்களே செங்குட்டுவனும், சிலப்பதிகாரம் தந்த இளங்கோவடிகளும் என்பதைக்
குறித்தாக வேண்டும்.
அறிவன்
ஒருவன் அரசனான இரண்டாம் ஆதன் அரியணையில் வீற்றிருக்கும் போது அவனைக் காண வந்தான்
. அப்போது ஆதனின் அருகே இரு செல்வப்புதல்வர்களும்
வீற்றிருந்தனர். ஆதனையும் அவன் புதல்வர்களையும்
கண்ணுற்ற அவ்வறிவன் இரண்டாம் புதல்வந்தான் (இளங்கோவடிகள்) உமக்குப் பின் இந்நாட்டை
ஆளப்போகிறான் என்றுரைத்தான். மேலும் நீ விரைவில்
மாண்டுவிடுவாய் என்றும் கட்டியம் கூறினான்.
அவன் சொல்லை மறுத்துத் தன் அண்ணன் மேல் ஆறாக்காதல் கொண்ட இளங்கோவடிகள் அரச துறவு
பூண்டொழுகினார். தன் அண்ணனை தன் தந்தைக்குப்
பிறகு அரசு ஆளச்செய்தார். அறிவன் கூறியதுபோல்
இரண்டாம் ஆதனும் சிக்கற்பள்ளி என்னுமிடத்தில் உயிர்நீத்தான். இதனால்
சிக்கற்பள்ளித் துஞ்சிய செல்வக்கடுங்கோ வாழியாதன் என்று அழைக்கப்பட்டான்.
No comments:
Post a Comment