ஆ, மா, மியா ஆகிய எதிர்மறை பலவின்பால் வினைமுற்று புணர்வதை அறிந்துகொண்டால் தேவையுள்ள இடங்களில் வல்லினத்தை மிகுத்தும் தேவையற்ற இடத்தில் வல்லினத்தை மிகுக்காமலும் எழுதக் கற்கலாம்.
அல்வழிப் புணர்ச்சியில் ஆ, மா, மியா என்பதை இறுதியில் கொண்ட அஃறிணைப் பன்மை வினைமுற்று முன் (இங்கு பின் ) வல்லினம் வரின் மிகாது; இயல்பானதே ஆகும்.
அஃறிணைப் பன்மை என்பதனால் ஒன்றன்பாலை ஒழித்து பலவின் பாலையே இங்குக்கொள்ளுதல் வேண்டும். ஏனெனில் அஃறிணையில் ஒன்றன் பாலும் பலவின் பாலுமே வரப்பெறும். ஒன்றன் பால் ஒருமைக்கும் பலவின் பால் பன்மைக்கும் உரியன.
நன்னூல் இயற்றிய பவணந்தியின் கூற்று - ஆ, மா, மியா என்னும் எதிர்மறை வினைமுற்றுகள் வரும்போது வல்லினத்தை மிகுத்தல் கூடாது என்பதாகும்.
சான்று:
ஆ+குறிது = ஆ குறிது (சரி),ஆக்குறிது (தவறு)
மா+பெரிது=மா பெரிது (சரி), மாப்பெரிது (தவறு)
கேண்மியா+தேவா=கேண்மியாதேவா (சரி), கேண்மியாத்தேவா(தவறு)
சூத்திரம்:
``அல்வழி ஆ மா மியா முற்று முன்மிகா”
அன்றி இன்றி என்னும் குறிப்பு வினையெச்சங்கள் வரும்போது வல்லினம் மிகாமல் இயல்பாகவே வரும். அன்றியும் இன்றியும் உகரம் ஏறப்பெற்று வரும் போதே இம்மாற்றம் நிகழ்ந்து வல்லினம் மிகாது வரப்பெறும்.
சான்று:
அன்றி+போகி=அன்று போகி
இன்றி+புற்கை=இன்று புற்கை
அன்றி, என்பது அன்று என உகரமேற்கும் போது வல்லினம் மிகாது ‘அன்று போகி’ என இயல்பாய் வந்தது. இது போலவே இன்றி என்பதும் புணர்ந்தது.
நன்னூல் இதற்கும் சூத்திரம் வகுத்துள்ளது.
சூத்திரம்:
``அன்றி இன்றி என்னும் வினஎஞ்சு இகரம்
தொடர்பினுள் உகரமாய்வரின் இயல்பே”
No comments:
Post a Comment