தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

5.11.12

ஆசிரியர்கள் விரும்பும் தளம்

ஆசிரியர்களுக்கென ஒரு தளம்

டீச்சர்ஸ் ஆஃப் இந்தியா தளத்தின் தோற்றம்

முகவரி:http://www.teachersofindia.org/ta

`அசிம் பிரேம் ஜி' நிறுவனத்தால் நடத்தப்படுகின்ற ‘இந்திய ஆசிரியர்கள்’ என்னும் தளம் பல்வேறு ஆசிரியர்களின் படைப்புகளைக் கொண்டும் மாணாக்கரின்  வகுப்பறைக் கல்வியை மேம்படுத்தும் வழிகளைக் கொண்டும் இயங்கி வருகிறது.

இத்தளமானது ஐந்து மொழிகளில் வடிவமைக்கப்பட்டுள்ளது.  தமிழ், ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகியவை இவ்வைந்தில் அடக்கம்.  இம்மொழிகளில் நமக்குத் தேவையான மொழியைத் தேர்வு செய்தால் அத்தளம் அம்மொழியில் நமக்குக் காட்சியளிக்கத் தொடங்கிவிடும்.   சற்றொப்ப கூகிள் மொழிபெயர்ப்பைப் போன்றதே!

வகுப்பறை வளங்கள்:
 
இப்பகுதியில் கட்டுரை, ஒலி, மின்வலை நூல்கள், விளக்கப் பாடங்கள், ஊடக வகை, செய்முறைத்தாள், பாட விளக்க முறை, பாடப் பயிற்சிகள், படம் முதலியன அமையப்பெற்றுள்ளன.  இவற்றில் நாம் எதைத் தேர்ந்தெடுக்கின்றோமோ அது குறித்து ஆசிரியர்கள் பகிர்ந்துள்ள படைப்புகள் காட்டப்படும்.

பாட வகைகளாகக் கலைகள், சுற்றுச்சூழல் அறிவியல், விளையாட்டுகளும் உடற்பயிற்சிகளும், மொழி, கணிதம் அறிவியலும் தொழில்நுட்பமும், சமூகறிவியல், கருத்துக்கள் - பிரதிபலிப்புகள், பிற பிரிவுகள் இடம்பெற்றுள்ளன.

இதைப் போல வகுப்பும் தர நிலையின் கீழ் பிரிக்கப்பட்டுள்ளது.  அஃதாவது மழலைக் கல்வி, முதல் இரண்டு வகுப்புகள் (1-2), மூன்று மற்றும் ஐந்தாம் (3-5)வகுப்பு வரை ஒரு பிரிவு, ஆறு மற்றும் எட்டு (6-8) வரை ஒரு பிரிவு, ஒன்பது முதல் பத்தாம் (9-10) வகுப்பு வரை ஒரு பிரிவு, பதினொன்று முதல் பன்னிரண்டு வரை என ஆறு வகையாகத் தர நிலை பிரிக்கப்பட்டு வகுப்பறை வளங்கள் வழங்கப்படுகின்றன.

வகுப்பறை வளங்கள் என்றால் என்ன?  என்பது குறித்து ஐயம் எழுந்து நிற்கிறதா?  இதோ உதாரணம் - புயல் எச்சரிக்கை கூண்டு விவரம், அறிவியல் பாடப்பயிற்சித்தாள் - உடல் உறுப்புகள், மகிழ்ச்சி தரும் கணித அளவுகள், இரண்டாம் கட்ட கூட்டல் பயிற்சி, க்யூரியாசிட்டி ரோவர் விண்கலம் அனுப்பிய அபூர்வ பாறைப்படம், சென்னை மாணவ மாணவிகள் அணியாக உருவாக்கிய குருவி அமைப்பு முதலியனவற்றை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஆசிரியர் மேம்பாடு:

நான் சிறந்த கட்டுரைகளைப் படிக்க விரும்புகிறேன்; நான் புதுமையான கற்பிக்கும் வழிகளைப் பற்றி அறிய விரும்புகிறேன்; நான் எப்படிச் சிறப்பாகக் கற்பிக்க முடியும் என்பதைப் பற்றியும் அறிய விரும்புகிறேன் என்கிற எண்ணங்கள் எழுகின்ற ஆசிரியர்களுக்காக உருவாக்கப்பட்டதே `ஆசிரியர்கள் மேம்பாடு’ என்னும் பகுதி.  மேற்கண்ட எண்ணம் எழுகின்ற ஆசிரியர்களுக்குத் தேவையான அனைத்துச் செய்திகளும் இத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ளன.  ஆசிரியரும் தன்னுடையப் பங்களிப்பை வழங்கிச் சிறப்பிக்கலாம்.

சிறப்பியல்பினர்:

சிறப்பியல்பினர் என்ற பகுதியில் ஒவ்வொரு ஆசிரியரைப் பற்றிய முழு செய்தியும் வெளியிடப்படுகிறது.  நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களின் முழு விவரத்தையும் அவர்கள் பணியாற்றிய திறத்தையும் வெளியிட்டு அவர்களைப் பெருமைப்படுத்துகிறது.

அண்மையில் திரு.செல்வகுமார் என்கிற பனித்திட்டு தொடக்கக் கல்வி ஆசிரியரைப் பற்றிய செய்தி இடம்பெற்றிருந்தது  மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

நீங்கள் ஆசிரியராக இருந்தால் இத்தளத்தில் இணைந்து வகுப்பறைக் கற்றல் கற்பித்தலில் தாங்கள் கண்ட அனுபவங்களைவெளிப்படுத்திகாட்டுங்கள், குழு விவாதத்தில் பங்குகொள்ளுங்கள்.  இவற்றை மேற்கொள்ள இத்தளத்தில் உறுப்பினராதல் இன்றியமையா ஒன்று.

05-11-2012 வரை இத்தளத்தில் 3456 உறுப்பினர்கள் தங்கள் பங்களிப்பை அளித்து வருகிறார்கள்.

உரிய கற்றல் அடைவை  முயன்ற அளவில் மாணவர்களுக்குப் பெற்றுத் தந்திட இத்தளத்தின் வழிகாட்டுதல்கள் நமக்குப் பேருதவியாய் இருக்கும் என்று நம்புகிறேன்.

No comments:

Post a Comment