திரு.வி.கனகசபையார் |
தமிழ்
ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்தவர் திரு.வி.கனகசபை ஆவார். தமிழ் இலக்கியத்தில் பேரார்வம் மிக்கவராய்த் திகழ்ந்தார். பல இலக்கியங்களைப் பயின்றவர். அவ்விலக்கியங்களைப் பயின்று பல்லோரும் அவ்வின்பத்தை
அடைய ஏதுவாகப் பல கட்டுரைகளை யாத்தளித்தார்.
இவரது தந்தை விசுவநாதம்பிள்ளை. இவர்
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பிறந்தவர். கனகசபையாரோ
சென்னையில் பிறந்து வளர்ந்தவர். பி.ஏ.,பி.எல்
பட்டம்பெற்று வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
இவரின் இளங்கலைக் கல்வி சென்னைப் பல்கலைக்கழகத்தில் நிறைவேறியது.
தமிழர்
வரலாறு குறித்து பல்லாய்வுகளை மேற்கொண்டு அவற்றை கட்டுரைகளாக எழுதினார். ‘ஆயிரத்தெண்னூறு ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்’ என்னும் நூல் தமிழில் வெளிவர இவரே கருத்தாவாக இருந்தார். இவர் ஆங்கிலத்தில் அவ்வப்பொழுது தமிழர் வரலாறு குறித்து
எழுதிவந்த கட்டுரைகள் அனைத்தையும் ஒன்றாகத் தொகுத்து ஆங்கிலத்தில் `The Tamils 1800
Years Ago’ என்னும்
நுலாக வெளியிட்டார். பின்னர் பன்மொழிப்புலவர்
திரு.கா. அப்பாத்துரை, எம்.ஏ., ஏல்.டி அவர்கள் இவ்வாங்கில நூலைத் தமிழில் `ஆயிரத்தெண்ணூறு
ஆண்டுகட்கு முற்பட்ட தமிழகம்’
என்னும்
நூலாகப் பெயர்த்து வெளியிட்டார்.
இந்நூலில்
ஆங்கில நூலாசிரியர் திரு.வி.கனகசபை என்று கனகசபையாரின் பெயரை முதலில் இட்டுப் பின்னரே
தன்பெயரை அச்சிட்டார் அப்பாதுரையார். திருநெல்வேலித்
தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தால் 1962ஆம் ஆண்டு இந்நூல் வெளியிடப்பட்டது.
இந்நூலில்
தமிழகத்தின் நிலஇயல் பிரிவுகள், வெளிநாட்டு வாணிகம், தமிழ்க் கிளை இனங்களும் கிளைகளும்,
சோழர், பாண்டியர், சேரர், வேளிரும் குடிமன்னரும், சமூக வாழ்வு, திருவள்ளுவர் குறள்,
சிலப்பதிகாரக் கதை, மணிமேகலைக் கதை, தமிழ்க் கவிஞர்களும் கவிதைகளும், அறுவகை மெய்விளக்கக்
கோட்பாடுகள், சமய வாழ்வு ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
திரு.வி.கனகசபை 1855 முதல் 1906 வரை 51 ஆண்டுகள் வாழ்ந்து தமிழுக்குப் பணி செய்தார். இவரின் பதிப்புத் தொகுப்புகள் பலவும் உ.வே.சா அவர்களின்
அச்சுப்பணிக்கு உதவியாய் இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment