தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

31.10.12

என்னை ஈர்த்த முத்துக்கமலம்


நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாகப் பல்கிப் பெருகி வருபவையே இணைய இதழ்கள்.  இணையப் பரப்பில் பல்சுவை செய்திகளை நமக்கு அளிப்பதற்காக இவை படைக்கப்பட்டுள்ளன.  இணையத்தில் மட்டும் இதழாக மலர்ந்து வெளிவருவனவற்றையே ‘இணைய இதழ்’ எனக் கூறுதல் தகும் என்று பலர் கருத்துரைக்கின்றனர். அவ்வகையில் இணையத்தில் வெளிவந்து,  செம்மையான இலக்கியப் பணியாற்றிவரும் முத்துக்கமலம் இணைய இதழைப் பற்றிய பதிப்பே இஃது.

மாதமிருமுறை புதுப்பிக்கப்பட்டு வெளிவந்துகொண்டிருக்கும் இணைய இதழ் ‘முத்துக்கமலம்’.  மாதத்தின் முதல் நாளும் பதினைந்தாம் நாளும் புதுப்பிக்கப்படுகிறது.  பல்வேறு எழுத்தாளர்களைத் தன் கைவசம் வைத்துச் செயல்படுகிறது.  தரம் வாய்ந்த படைப்புகளைப் படைக்கும் எவருக்கும் வாய்ப்பை நல்கி வருகிறது.  படைப்புகளைப் படைக்கும் எழுத்தாளர்களுக்குப் பெருமை சேர்க்கும் முகமாக அவர்களின் புகைப்படத்துடன் கூடிய முழுவிவரத்தை ஒரு பக்க ஒதுக்கீட்டில் வெளியிடுகிறது.  தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றவர்களின் பட்டியல், புகழ்பெற்ற எழுத்தாளர்களின் விசித்திர பழக்கவழக்கங்கள், வேதகாலத்தில் சிறந்து விளங்கிய பெண் கவிஞர்கள் முதலியன இவ்விதழைப் பிற இதழ்களினின்று தனித்துக் காட்டும் படைப்புப் புதுமைகள்.

பெரியாரின் சிந்தனைகளையும் அவர் சாடிய மூடநம்பிக்கைகளையும் இதழில் இட்டு பெரியாரின் கொள்கைக்கு வலுச்சேர்த்துக்கொண்டிருக்கின்றனர்.  பெரியார் சொன்ன திராவிடர் திருமணம், எப்போது விழித்துக்கொள்ளப் போகிறார்களோ?,  பெரியார் சொன்ன புதுமொழிகள் எனபனப் போன்ற படைப்புகள் இவ்விதழின் வருகையாளரை அதிகரித்துக் கொடுக்க ஏதுவாகும் என்பதில் திரிபொன்றுமில்லை.

இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு - இது தமிழார்வலர்களின் இலக்கியத்துடிப்புஎன்னும் இதழ் விவரிப்பைக் கொண்டுள்ள முத்துக்கமலம், தமிழ் துறைசார் கட்டுரைகள், சிறுகதை, தொடர்கதை முதலியவற்றை வெளியிட்டு வருகிறது.  `அடையாளம் என்ற பகுதியில் புகழ் பெற்றவர்களின் வாழ்க்கை வரலாறு இடம்பெறுகிறது.

பொன்மொழிகள், குறுந்தகவல்கள், ஆன்மிகம், தன்னம்பிக்கைக் கட்டுரைகள், மகளிர் மட்டும், மருத்துவம் ஆகிய பகுதிகள் பொழுதுபோக்குவோர்க்குக் கிடைக்கக் கூடிய உகந்த செய்திப்பெட்டகங்களாகும்.  வாசகரைத் தக்க வைத்துக்கொள்ளும் வகையில் பிறந்தநாள் வாழ்த்து, திருமண வாழ்த்து இடம்பெறச் செய்து வாழ்த்துத் தெரிவிக்கிறது.  ‘தினம் ஒரு தளம் - என்னும் பகுதியில் நாள்தோறும் ஒரு இணைய தளத்தைப் பற்றிய அறிமுகமும் அத்தளம் எவ்வகையில் நமக்கும் பயன்படும் என்பதையும் ஆய்ந்து சொல்கிறது.
மொத்தத்தில் முத்துக்கமலம் முத்துக்கு முத்தான இணைய இதழாக நமக்குப் புலப்பட்டு நிற்கிறது.


No comments:

Post a Comment