தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

5.9.12

நூல் அறிமுகம்

திருவள்ளுவர்க்குப் பின் அரசியல் அறம்

நூலின் பெயர்        : திருவள்ளுவருக்குப் பின் அரசியல் அறம்
ஆசிரியர்             : புலவர். சி. பெருந்தேவன் (சி. இராமலிங்கம்)
நூல் வகை           : அற இலக்கியம்
பதிப்பு                : முதற்பதிப்பு 2012; தி.பி. 2043
விலை               : உருபா. 150/-
நூல் வேண்டுவோர்
தொடர்புக்கு          : 0413-2359587 (கம்பன் மறுதோன்றி அச்சகம்)

நூலாசிரியரைப் பற்றி திரு இரா.திருமுருகனாரின் கருத்து:
     சி. இராமலிங்கம் என்ற இயற்பெயர் கொண்ட இப்புலவர் புகழ்பெற்ற தமிழாசிரியர்.  புதுவைப் பாவலர் பண்ணையில் யாப்பிலக்கணம் பயின்று ‘பைந்தமிழ்ப் பாவலர்என்ற பட்டத்தைப் பெற்றவர்.  சந்தம், வண்ணம், சிந்து, உருப்படி ஆகிய இசைப்பாடல் வகைகளுக்கு இலக்கணந்தெரிந்து படைக்கவல்ல பாவலர்கள் மிகச் சிலரே தமிழ் கூறு நல்லுலகத்தில் இன்று காணப்படுகின்றனர்.  அவர்களில் இவரும் ஒருவர்.  தெளிதமிழ் இதழ் நடத்தும் பாவலர் பரிசுத் திட்டத்தில் பாட்டெழுதி முதற்பரிசு பெற்றவர்.  “சித்தானந்த அடிகள் திருவருட்பனுவல் திரட்டு” , அறிவுலகக் காவலர்கள், ஆசிரியர் அறம் முதலிய நூல்களின் ஆசிரியர்.  புதுவை அரசின் நல்லாசிரியர் எனும் சிறப்புப் பட்டம் பெற்றவர்.  ஆசிரியப் பணி, அரசியற்பணி முதலிய எல்லாத்துறைகளிலும் அறத்தை வற்புறுத்துவதில் அடங்காத வேட்கையுடைய ஆன்றவிந்தடங்கிய சான்றோராய்த் திகழ்பவர்.  அவர்தம் உள்ளத்தில் அவ்வப்போது மண்டியெழும் அறக்கருத்துகளின் வெளிப்பாடாக இந்நூல் அமைந்துள்ளது.
     நம் நாட்டில் இன்று பொதுநலம் என்பது உதட்டளவில் பேசப்படுகின்றது.  தன்னலப் பேய்மை எங்கும் தலைவிரித்தாடுகின்றது.  வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் சார்பாக இருக்க வேண்டிய அன்பு அறிவற்றவர்கள் செய்யும் முறைகேடுகளுக்கும் துணை போய் வன்பாக மாறிக் கொண்டிருக்கின்றது.  என்று தன்னுடைய சமூக நோக்கை படரவிட்டிருக்கிறார் ஆசிரியர் திரு. பெருந்தேவன் அவர்கள்.

     திருக்குறளைப் போன்று அமையப்பெற்றுள்ள இப்புத்தகம் படிப்போரின் எண்ணத்தை சற்றே சோதித்துப் பார்க்கச் செய்கிறது.  நாம் ஏன் இவ்வாறு நடக்கிறோம் ஏன் இவ்வாறு நடக்கக்கூடாது என்கிற எண்ணங்களை ஏற்படுத்துகிறது.
  
புத்தகம் படிப்போரை இவ்வாறு சிந்திக்கச் செய்துவிட்டாலே நூலாசிரியன் வெற்றி பெற்றவனாகிறான்.  அவ்வகையில் பெருந்தேவன் பெருவெற்றியை இந்நூலின் மூலம் பெற்றிருக்கிறார் என்று கூறலாம்.

அழிந்து போக வேண்டுமாயின் அறத்தினை கைவிடுக வாழ வேண்டுமெனில் (புகழ் எய்த வேண்டுமெனில்) அறத்தை மேற்கொண்டு வாழ்க என்று வரும் ‘அறத்தின் ஆட்சி’ என்னும் தலைப்பில் அமைந்த பாடல் வரிகள் அறம் இன்று தேய்ந்து போய் கொண்டிருக்கிறது என்பதையும் அதை நிலைநாட்ட நாம் முன்வர வேண்டும் என்பதையும் நினைவூட்டி நிற்கிறது.

``அழிதல் விரும்பின் அறங்கொல்; தொழுதல்
விரும்பின் அதுகாத்தல் மேவ்.”(அறத்தின் அட்சி)

யாம் முன்னம் எண்ணற்ற பெருந்தேவன் நூல்களை அலசி ஆராயப் புகுந்ததுண்டு.  சித்தானந்த ஐயனின் அருள்அமையப் பெற்ற பெருந்தேவனின் எண்ணங்கள் எழுத்துக்களாக உருப்பெற்று எம்மை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்கின்றன.

புலவர் பெருந்தேவனின் எழுத்தாட்சியும் சொல்லாட்சியும் சிறக்க சிலம்புகள் தளம் வாழ்த்துகிறது.  அவருடைய தமிழ்ப் பணி மேன்மேலும் இவ்வுலகுக்குத் தேவை.  இதனை அவர் கருத்தில் கொண்டு இன்னும் எண்ணற்ற பனுவல் படைப்பார் என்று எதிர்பார்க்கிறோம்.

ஐயாவுக்குச் சிறப்பு செய்ய வேண்டி அவருடைய அரசியல் அறம் நூலின் ஒவ்வொரு பாடலையும் வலைப்பூவின் தலைப்பில் வெளியிட எண்ணியுள்ளேன்.

புலவர் திரு.பெருந்தேவனின் சொல்திறன் கண்டு யான் வியந்ததை இவ்வுலகும் கண்டு வியக்க வேண்டி என்னுடைய வலைப்பூவில் இவருக்கு பேரணி செய்துள்ளேன்.  புலவர் அவர்கள் விரைவில் என்னை மற்றொரு நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பார் என்ற ஏங்குதலுடன் முடிக்கிறேன்.

புலவர் பெருந்தேவனின் சில கவின்மிகு பாடல்கள்:

`ஒருமைப்பாடு என்பது அருமைப்பாடு உண்டேல்
பெருமைப்பாடு ஓங்கும் பெரிது’(ஒருமைப்பாட்டு உணர்வு)

ஆளும் நிலம் வலியது ஆக்கும் தொழில்முனைவோர்
மூளும் பொருள்வளத்தின் மூச்சு(வலுவான நல்லரசு)

எல்லா நலமும் இருந்தென் அறமுரைக்கும்
வல்லாரை இல்லாத மன்று.(வழக்குரைஞர் அறம்)

ஏடு தருங்கல்வி இல்லான் அரசியலில்
ஈடுபடல் என்றும் இழிவு(கல்வியறிவுடைமை)

காதலைக் காமமாய்க் கண்டு களிப்படைதல்
மோதல்கட் கெல்லாம் முதல்(ஆண் பெண் உறவு)


No comments:

Post a Comment