மதுரை தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டம்
காலப்போக்கில் தமிழ் நூல்கள் தடம் தெரியாமல் மாய்ந்துவிடப்போகிறது
என்னும் அச்ச மேலீட்டிற்கு முடிவுகட்டும் முகத்தான் அமையப்பெற்ற தளம் தான் மதுரை தமிழ்
இலக்கிய மின்பதிப்புத் திட்டம். உலகளாவிய தமிழர்களை
ஒன்றினைக்கும் களமாகத் திகழ்ந்து வருகிறது.
எந்த ஒரு இனத்தின் கலாச்சாரத்தினையும் அறிந்துகொள்வதற்கு வித்தாக அமைவது இலக்கியங்கள். அவ்விலக்கியங்களைத்
தொகுத்துத் தமிழர்கள் வாழ்வினையும்
தமிழர்தம் கலாச்சாரத்தினையும் உலகறியச் செய்யும் முயற்சி தான் மதுரை தமிழ் இலக்கிய
மின் தொகுப்புத் திட்டம்.
இத்திட்டம் திறந்த ஒரு அமைப்பு முறைமையைப் பின்பற்றி
நிறைவேற்றப்பட்டு வருகின்றது. பல நூறு தன்னார்வ
தமிழர்கள் இதற்காக அரும்பாடுபட்டு வருகின்றனர்.
இத்திட்டமானது 1998 ஆம் ஆண்டு தொடங்கப் பெற்றது. இதன் நிறுவனராக ஸ்விட்சர்லாந்தில் வாழும் தமிழர்
கு.கல்யாணசுந்தரம் திகழ்கின்றார். துணைத்தலைவர்
பதவியை குமார் மல்லிகார்ஜுனன் என்பவர் வகிக்கின்றார். எவ்வித இலாப மற்றும் வியாபார நோக்கமுமின்றி இன்றளவும்
செயல்பட்டு வரும் பயன்மிக்க தளமாகத் திகழ்ந்து வருகிறது.
இத்திட்டத்தின்
நோக்கம்:
பழம்பெரும் இலக்கியங்களையும்
புது இலக்கியங்களையும் ஒருங்கே இனையம் வழி வெளியிட வேண்டும் என்ற எண்ணம் பல தமிழறிஞர்களின்
எண்ணத்தில் இருந்தது. இவ்வெண்ணக் கூறுகளின்
வெளிப்பாடாகத்தான் இத்திட்டம் தொடங்கப்பெற்றது.
பல மொழிகளில் பல திட்டங்கள் இவ்வாறு நிறைவேற்றப்பட்டு வருவதை ஒருங்கே சிந்தனைக்கு
இலக்காக்கி தொடங்கப்பெற்றது தான் ‘மதுரை தமிழிலக்கிய மின்பதிப்புத் திட்டம்’.
தமிழ் நூல்கள் அனைத்தையும் மின்னூல்களாக மாற்றம்
பெறச் செய்து உலகிற்கு வழங்குவது என்பது தான் இதன் திட்டம். 2007 ஆம் ஆண்டில் ஏறக்குறைய 270 தமிழ் நூல்கள் மின்னூல்களாக
மாற்றம் செய்யப்பட்டு இணைய வழி பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. தற்போது (2011 அக்டோபர் 10) 382 நூல்கள் ஏற்றம்
செய்யப்பட்டுள்ளன.
எழுத்துருக்கள்:
எழுத்துரு என்பது ஒரு மொழியின் அச்சுவடிவத்தினைக்
குறிக்கும். அச்சுவடிவத்தினைப் பின்பற்றி ஒரு
மொழியின் சொற்கள் எழுத்துருக்களாகச் செய்யப்படும் முறைமையை ’எழுத்துருக்கள்’ எனலாம். கணிப்பொறியின் அச்சுப்பொறிகளின் வழியே அச்சிடுவதற்கு
ஏதுவாக தயாரிக்கப்பட்ட மென்பொருட்களை இவ்வாறு அழைக்கலாம்.
மின்னூல்கள்
முதலில் சில குறிப்பிட்ட எழுத்து வகைகளைக் (இணைமதி, மயிலை ) கொண்டு மட்டும் தான் எழுதி
வெளியிடப்பட்டு வந்தன. பின்னாளில் ’தகவல் பரிமாற்றத்திற்கான தமிழ் நியமக்
குறியீட்டு முறை’யைப் (TSCII) (Tamil
Standard Code for Information Interchange) பின்பற்றி வெளியிடப்பட்டன. இந்நியமக் குறியீட்டை ’திஸ்கி’ என்றும் ’தகுதரம்’ என்றும் வழங்கினர்.
புரோமேட்: (ProMad)
’ புரோமேட்’ என்பது
இத்திட்டத்தில் பங்குகொண்டிருப்பவர்கள் பயன்படுத்தக்கூடிய சுருக்கச் சொல்லாகும். புராஜெக்ட் மதுரை என்பதைச் சுருக்கியே ’புரோமேட்’ என்று அழைக்கின்றனர்.
இயங்கும் விதம்:
பல தன்னார்வலர்களைக் கொண்டு இத்தளம் இச்சேவையை
வழங்கி வருகிறது. உங்களுக்கும் இதில் பங்கெடுத்துக்கொள்ள
விழைவு ஏற்பட்டால் நீங்களும் இதில் பங்கெடுத்துத் தமிழ் நூல்களை மின்னூல்களாக ஏற்றம்
பெறச் செய்யலாம். அவர்கள் வழங்கும் எழுத்துப்
பணியை நாம் தன்னார்வ முகத்தான் எடுத்துச் செய்யலாம். பிழைதிருத்தும் பணியையோ அல்லது நூலை மின்னூலாகத்
தட்டச்சு செய்யும் பணியையோ மேற்கொள்ளலாம்.
ஒரு திட்டத்தினை நீங்கள் எடுத்து முடிக்க முடியவில்லை என்று அஞ்சத் தேவையில்லை
இத்திட்டமும் அதற்கு உங்களை நிர்பந்திப்பதில்லை.
உங்களுடைய ஓய்வு நேரங்களை மட்டுமே பயன்படுத்தினால் போதுமானது என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment