தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

6.9.12

இலக்கியமும் இலக்கணமும்


இலக்கியம் இலக்கணம் அறிவது மனிதனை பண்படுத்துமா?


     இலக்கியங்கள் என்பவை ஒரு நாட்டின் கலாச்சாரத்தையும் நாகரீகத்தையும் தெரிவித்து நிற்கின்றன.  எந்த எந்த மொழிகளில் செறிவான இலக்கியங்கள் இல்லையோ அந்த மொழிகள் நன்னிலையை அடைவது சற்று குறைவு தான்.  மொழியானது தன்னை இலக்கியத்தோடு இணைத்துக் கொண்டு புதிய பரிணாமம் எடுக்கும் போது தான் அதன் அடைவு சரியான நோக்கை நோக்கிச் செல்லும்.  மற்றபடி மொழிக்கு ஒரு கட்டுக்கோப்பை ஏற்படுத்தித் தருவது இலக்கணத்தின் பாற்பட்டது.
இலக்கணமும் இலக்கியமும்:
     மொழி தன்னுடைய உன்னத இயல்பை தொன்மையான கட்டுக்கோப்பை இழக்காமல் இருக்க இலக்கண அமைப்பு வேண்டப்படுகிறது.  அதனால் தான் பெரும்பான்மையான தமிழறிஞர்கள் இலக்கணத்தை அதிகம் வலியுறுத்தியிருக்கின்றனர்.  ஆனால் கல்வி என்று வரும் போது மாணாக்கர் இதனை மிகக் கடினமானதென்று கருதுகின்றனர்.  இவ்வெண்ணம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும். 
     மொழி இலக்கணம் இலக்கியத்தை அடியொட்டியதாக இருக்கிறது.  ஒவ்வொரு மொழியும் இலக்கண அமைப்பை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும்.  அதோடு நில்லாமல் செம்மையான இலக்கிய வளங்களையும் கொண்டு இலங்க வேண்டும். 
உண்மையில் மனித மனத்தை இவை பண்படுத்துகின்றனவா?
     ஆம் என்று தான் சொல்லத் துணிய வேண்டும்.  இலக்கியங்கள் ஏராளமான விழுமியங்களைக் கொண்டிருக்கின்றன.  நடத்தை முறைமைகள், நாகரிகக் கூறுகள், பண்பாட்டு விளக்கங்கள் போன்ற வாழ்க்கை அத்தியாவசியக் கூறுகள் இலக்கியத்தில் தான் உள்ளன.  பக்தி சார் இலக்கியங்கள் இவற்றுள் சிறப்பான பெயர் பெறுகின்றன.  இறைவனைச் சென்றடையும் வழி இன்னது என்று சொல்லும் முகத்தான் மனிதனை ஆற்றுப்படுத்தும் தன்மையைக் கொண்டிருக்கிறது.  புறப்பொருள் வெண்பாமாலை போன்ற புற நூல்களை ஆயும்போது மனிதனின் வீரம் நிறைந்த வாழ்வு எப்படி இருக்க வேண்டும் என்பதைச் சுட்டுகிறது.  அன்பையும் அரவணைப்பையும் பல சங்க இலக்கியங்கள் எடுத்துச் சொல்லியிருக்கின்றன.  குறுந்தொகை, நற்றிணை போன்ற சங்க இலக்கியங்கள் காதல் வாழ்வுக்கும் கற்பு வாழ்வுக்கும் எடுத்துக்காட்டுகளை நிர்மாணம் செய்து நிற்கின்றன.  அகத்திணையைப் பற்றிய செய்தியைச் சொல்லும் அகப்பொருள் வெண்பாமாலையை எழுதிய நாற்கவிராச நம்பி களவு கற்பு பற்றி தெற்றென விளக்கிச் செல்கிறார்.  அரிச்சந்திர புராணம் சொல்லும் உண்மையினூடே நிற்றல் என்ற உறுதிப்பாடு மானிட வாழ்வியலின் அடியைத் தொட்டு நிற்கிறது.  இப்படி இலக்கியங்களும் இலக்கணங்களும் மனிதனின் மனதைப் பண்படுத்தி நிற்கும் போது அவற்றை பண்படுத்தும் ஆற்றல் இல்லை என்று ஒதுக்கி வைக்கலாமா.  எவர் இலக்கணத்தையும் இலக்கியத்தையும் படிக்க முன்வருகிறார்.  அப்படி முன் வந்தால் மட்டும் தான் மானிட குமுதாயம்(சமுதாயம்) மனிதத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் சீர் தூக்கிப் பார்த்து பண்பட்டுச் சிறக்கும்.

No comments:

Post a Comment