தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

22.10.12

பாவாணர் வாழ்க்கைக் குறிப்புகள்


தேவநேயப்பாவாணர்

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரநயினார் கோயில் என்னுமிடத்தில் ஆங்கில ஆண்டு 07.02.1902 அன்று பிறந்தார்.  ஞானமுத்தர் – பரிபூரணம் தம்பதியருக்கு மகனாய்த் தோன்றியவர்.  தந்தை கிறித்துவ மதத்தைத் தழுவினார்.  இதன் விளைவாகத் தன் பெயரின் இறுதியில் தோக்கசு என்னும் பின்னொட்டைச் சேர்த்துக்கொண்டார்.  அஃதாவது `ஞானமுத்து தோக்கசு என்று அழைக்கப்பட்டார்.  தோக்கசு அவர்கள் தொடக்கப் பள்ளி ஆசிரியராகச் சில காலம் பணிபுரிந்தார்.  முதல் மனைவி ஈழத்துக்குப் பிரிந்து சென்றுவிட்டார்.  இதனால்  தன்னுடைய முதல் மனைவியை பிரிய நேரிட்டது. இரண்டாவதாக மணக்கப்பெற்றவர் தான் பரிபூரணம் அம்மையார்.  அம்மையார் அவர்கள் கோயில்பட்டிக்கு அருகிலுள்ள பாண்டவர் மங்கலத்தைச் சேர்ந்தவர்.
பத்துப் பிள்ளைகள் இத்தமபதியருக்குப் பிறந்தனர்.  பத்தாவது மகனாகத் தோன்றியவரே பாவாணர்.

இளமைப் பருவம்:

பாவாணரின் இளம் பருவம் மகிழ்வூட்டுவதாய் இல்லை.  ஐந்து அகவையை எட்டும் பொழுது தந்தை இறக்க நேரிட்டது.  பின்னாளில் தாயும் மறைந்தார்.  எவர் வளர்ப்பர் என்று ஏங்கிய பாவாணரை அவருடைய தமக்கையார் வளர்க்கத் தொடங்கினார்.  இருப்பினும் சில காலமே தன் தமக்கையாரிடம் இருந்தார்.  கல்வி கற்க வேண்டி அவரிடமிருந்து பிரிந்து சென்றார். 
இவர் கல்வி கற்க `யங் என்பவர் பொருளுதவி செய்தார்.  இப்பொருளுதவியைப் பாவாணர் கடனாகவே பெற்றார்.  ஆம்பூரில் எட்டாம் நிலை வரை பயின்ற பின்னர் யங் அவர்களின் உதவியுடன் பாளையங்கோட்டைக்குச் சென்று ஒன்பதாம் நிலை முதல் பதினோராம் நிலை வரை கல்வி பயின்றார். 
பாவாணருக்கு ஆங்கில மொழியின் பால் அதிக ஈடுபாடு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.  இதற்குச் சான்றாக அவர்கள் கூறுவது யாதெனின்.  ``பாவாணர் அப்பொழுதே ஆங்கில மன்றங்களில் உறுப்பினராகிச் செயலாளராகச் செயல்பட்டார்’’ என்பது தான். 

கல்வி:

சீயோன் மலையில் ஆசிரியராகப் பணியாற்றினார்.  தம் அறிவை மேன்மேலும் விசாலப்படுத்திக்கொள்ள விழைந்து தமிழ்ப்புலமைக்கான கல்வியைக் கற்றார்.  1942ஆம் ஆண்டு மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் பண்டிதர் பட்டமும் 1926 ஆம் ஆண்டு திருநெல்வேலித் தென்னிந்தியத் தமிழ்ச் சங்கப்புலவர் பட்டமும் பின்னர் சென்னைப் பல்கலைக்கழக வித்துவான் பட்டமும் பெற்றார்.

பாவாணர் தன்னுடைய வாழ்நாளில் தமிழுக்காக அளவிறந்த நேரங்களைச் செலவிட்டிருக்கிறார்.  எவர் தமிழுக்காக நேரத்தைச் செலவிடத் துணிகிறாரோ அவரை நன்னிலையடையச் செய்துவிடுகிறாள் நந்தமிழ் மகள். அவ்வகையில் பாவாணர் அவர்களின் `செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலி முயற்சி இங்கு நினைவுகூரத்தக்க ஒன்று.  பிற மொழிகளின் துணையின்றி தமிழ் தனித்து வழங்கப்பெறும் என்னும் கூற்றை நிறுவுவதற்கு அவர் மேற்கொண்ட முயற்சிக்குப் பல தடைக் கற்கள் சவால்விட்டு எதிர்நின்றன.

ஆய்வு:

``குமரிநாடே திராவிட மரபு தோன்றிய இடம் என அவர் வரையறுத்துச் சொன்னார்.  ஆனால் அப்போது அது மறுக்கப்பட்டது.  ஆம் பாவாணர் அவர்கள் தன்னுடைய முனைவர் பட்ட ஆய்வுக்காக ஆய்ந்து சொன்ன உண்மை இது.  திராவிடர்கள் வேறு நாட்டிலிருந்து இங்கு வந்து நிலைத்தனர் என்னும் கருத்தை அவ்வேட்டில் அவர் மறுத்துத் தெள்ளிதின் விளக்கியிருந்தார்.  அப்பொழுது அதிகாரத்தில் இருந்த ஆதிக்கச் சக்திகள் பாவாணரின் கொள்கையை ஆய்வை ஏற்க மறுத்தன.  இதனால் பாவாணர்க்கு முனைவர் பட்டம் கை நழுவிப் போயிற்று.  எத்தனையோ மாணவர்கள் இன்று  அவருடைய கொள்கைகளை எடுத்தாய்ந்து முனைவர் பட்டம் பெறுகின்றனர்.  அனால் அவரோ அப்பட்டத்தை அன்று அடைய முடியவில்லை.  இது முனைவர் தமிழமல்லன் அவர்களின் பாவாணர் குறித்த அன்பு மேலீட்டு வரிகளாகும்.  இதற்குக் காரணம் தமிழ் மறுப்பு, தமிழ் மொழி நிலைக்கக் கூடாது,  அதன் உண்மை நிலை மறைக்கப்பட்டு வடமொழி வளம் பெற வேண்டும் என்னும் எண்ணங்கள் தான்.

மொழி குறித்து அவர் செய்த ஆய்வுகள் இன்றும் பலரால் வியந்து போற்றத்தக்கதாய் உள்ளன.  ஆம் அப்படித் தான் போற்ற வேண்டும் ஏனெனில் 23 மொழிகளைக் கற்றுத் தேர்ந்த மொழி வல்லாளரின் ஆய்வு பிரமிக்கத்தானே வைக்கும்.  பன்மொழி அறிவு வாய்க்கப்பெற்றதாலேயே பாவாணரின் மொழியாய்வு சாத்தியமாயிற்று.

No comments:

Post a Comment