தமிழமல்லன்:
தனித் தமிழுக்காகத் தன்னை நாளும் அற்பணித்துக் கொண்டு தமிழுக்காக வாழ்ந்து வரும் உயர் பண்பாளர் திரு.க. தமிழமல்லன். அவர்தம் தமிழர், தமிழ் குறித்த பதிவே இஃது.
பாவாணரின் திறன் அறிந்து அவர்தம் வாழ்க்கை வரலாற்றை அடிவரை ஆய்ந்து பன்நூல்களை எழுதியவர் தமிழன்பர் தமிழமல்லன். தனித்தமிழின் பல்துறை வளர்ச்சிக்காகத் தொடர்ந்து பல்லாண்டுகள் அரும்பணி செய்து வருகிறார். பல ஆய்வு நூல்களையும், சிறுகதை நூல்களையும் , சிறுவர் இலக்கியங்களையும் படைத்து இலக்கியத் தொண்டாற்றி வரும் பேரறிவாளர் ‘எல்லார்க்கும் தனித்தமிழ்’ என்னும் முழக்கத்தை வலியுறுத்தியவர்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், புதுவைப் பல்கலைக் கழகம், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், பெங்களூர்த் தமிழ்ச்சங்கம், இலக்கிய அமைப்புகள் போன்றவற்றிலும் வானொலியிலும் ஆய்வுச் சொற்பொழிவுகள் நிகழ்த்தியுள்ளார்.
உலகில் முதன் முதலாகத் தனித்தமிழ் இலக்கிய மாநாட்டைப் புதுச்சேரியில் முழுவெற்றியோடு ஆக்க முறையில் 1984 இல் நடத்திக் காட்டிய பெருமைக்குரியவர்.
‘வெல்லும் தூயதமிழ்’ என்னும் மாத இதழை நடத்திவருகிறார். இவ்விதழ் 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இதன் தரம் குறைந்ததாக எவருஞ் சொல்லார்.
வெல்லும் தூய தமிழ் இதழ் |
தனித்தமிழ் கொள்கையே தமிழ் இனத்தின் எல்லா நனமைகளையும் காக்கும் என உறுதியாக வலியுறுத்தி வருகிறார்.
மல்லனும் அவர் இதழும் ஏற்படுத்திய தமிழ்ப்பற்று:
நான் வகுப்பறையிலே பயின்று கொண்டிருக்கும் போது எனக்குத் தமிழ்ப்பாடம் பயிற்றுவித்த ஆசிரியர்கள் இவரின் இதழை வைத்துக் கொண்டு பெருமையோடுப் பேசுவதைக் கேட்டவன். அந்நூல் குறித்து வினவியவன் அப்பொழுது எனக்கு அகவையோ சற்றொப்ப 13 இருக்கும். எனக்குள் தமிழ்ப் பற்றை ஊட்டிய ஆசிரியை திருமதி. திலகவதி அவர்கள் தனித்தமிழ் குறித்து அடிக்கடி எங்களுக்குச் சொல்லுவார். தமிழிலேயே உரையாடுவார். ஆங்கிலம் கலவாமல் பேசும் ஆற்றலைக் கண்டு நான் வியந்ததுண்டு. அம்மாதிரியே யானும் தமிழில் உரையாட வேண்டும் என்றெல்லாம் நினைத்து என் , முன்மாதிரியாகத் தமிழாசிரியையைக் கொண்டேன். என் தமிழாசிரியர்கள் (சிலர்) தனித்தமிழைக் கைக்கொண்டொழுகி நன்னிலை எய்த தமிழமல்லன் போன்றோரின் இதழ்தான் காரணம் என்பதை மறுக்க முடியாது.
ஓய்வு நேரங்களில் `உரோமண்ட் உரோலண்ட் ’ நூலகத்தை நான் நாடுவதுண்டு. அவ்வமயங்களில் சிற்றிதழ்களைப் படிக்காமல் நகருவதில்லை எனச் சபதமேற்றுக் கொண்டு படித்ததுண்டு. அப்படிப் படித்த இதழ்களில் அதிக தாக்கத்தையும் தமிழுணர்வையும் எனக்கு ஏற்படுத்தியது தமிழமல்லன் அவர்களின் நேர்மையையும் தமிழ்ப்பற்றையும் அச்சிலேற்றிக் கொண்டு வருகை தந்த தனித்தமிழ் இதழே.
கல்லூரியில் பயிலும் காலங்களில் (என்னூர்) - திலசை - காளிகோயில் தெருவில் அமையப்பெற்றுள்ள ஊர்ப்புற நூலகத்தை நாடியதுண்டு; அப்பொழுதும் இவரின் நூல்களை விட்டு வைக்கமாட்டேன்.
`பாவாணரின் தமிழ்ப்பணி’ என்னும் தலைப்பில் மல்லன் அவர்கள் எழுதிய நூலானது 1997 ஆம் ஆண்டு வெளிவந்தது. (அவ்வமயம் நான் 7ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தேன்) அந்நூலை நான் இளங்கலைத் தமிழ் பயிலும்போது தான் படிக்க நேரிட்டது. அந்நூலில் பாவாணரைப் பற்றி தமிழமல்லன் குறிப்பிட்டிருக்கும் அத்தனைக் கருத்துக்களும் பாவாணரின் மேல் அவருக்குண்டான ஆறாக் காதலைக் காட்டுவதாய் உள்ளது.
இதுவரை நேரில் அவருடன் உரையாடும் வாய்ப்பு எனக்கு நேரவில்லை. முனைவர் மு. இளங்கோவன் அவர்களின் தமிழ்ப்பணி குறித்து மெய்சிலிர்த்துப் போனதுண்டு. அவரை நேரில் காண்பதற்கு முன்பு அவரைப் பற்றிய அத்தனைச் செய்திகளையும் விரல்நுனியில் வைத்திருந்தேன். இது அவரின் மீது எனக்குண்டான ஆறாக் காதலே. இப்படியொரு ஆறாக்காதல் தமிழமல்லன் மீது எனக்கு ஏற்பட்டதுண்டு. இது நிகழ்ந்தது அவர்தம் நூல்களை ஆய நேர்ந்தபோது. அப்பொழுது என்னுள் எழுந்த வேட்கை அவரை ஒரு முறை கண்டு பேசிவிட வேண்டும் எனபது.
இன்று அக்கனவு நிறைவேறியது.
இணைய இணைப்பிற்குண்டான மாதத் தொகையைக் கட்டுவதற்காக அஞ்சல் அலுவலகம் செல்ல நேரிட்டது. அப்பொழுது அவரின் அறிமுகம் நேர்ந்தது. ஐந்து நிமிடங்கள் தான் நிகழ்ந்தது அப்படியொருச் சந்திப்பு! நான், என் அறிமுகமுரைத்து உரையாடினேன் உற்றவராய் உறவினர் போல் உரையாடிய அவர், தமிழார்வலரை தன்னோடு இரண்டறக் கலந்து கொள்ளும் தகைமையராய் என்னுடன் சொல்லாடல் செய்தார். மகிழ்வின் எல்லை வரை சென்றுவிட்டு மீண்டுவந்து இப்பதிவை ஆக்கியுள்ளேன். தொடர்க அவரின் (தனித்)தமிழ்ப்பணி.
No comments:
Post a Comment