தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

8.10.12

திரு.வி.க வின் மண வாழ்வு


திருவிக வின் மண வாழ்வு இனித்த ஒன்று என்றாலும், அவ்வாழ்வு நீண்டிருக்க வேண்டும்.  ஏனோ அவரின் மண வாழ்வு மட்டும் சிற்சில ஆண்டுகளில் மறைந்து போனது என்று அடிக்கடி நினைக்கத் தோன்றுகிறது.  எத்தனைத் திறமைகளை ஒருங்கே பெற்றவர் எத்தனை இயக்கங்களுக்குத் தலைமையாற்றிச் செயல்பட்டவர்; தமிழுக்காக எத்தனைத் தொண்டாற்றினார் என்பதையெல்லாம் நினையும் போது அவர் தங்குடும்பத்துடன் வாழ்வாங்கு வாழ்ந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகிறது.

``திரு.வி.க வின் பிள்ளைகள்,  தன் தந்தையின் பெயர் நிலைக்கச் செய்துவிட்டனர்’’ என்று பிறர் பேசும் வாய்ப்பை நல்கவில்லை.  என்செய்வது இறைவன் அவரின் பிள்ளைகளுக்கு நீளாயுளை வழங்கவில்லை.  பிறர்க்கும் தமிழுக்கும் நற்றொண்டாற்றிய உண்மையின் மாற்றுருவுக்கு குடும்பம் என்னும் உன்னத சமுதாய அங்கமைப்பு நிலைத்து நிற்கவில்லை.
திரு.வி.க வின் துணைவியராய் வந்தவர் கமலாம்பிகை அம்மையார்.  இவர் தன்னுடையப் பெற்றோரை இழந்தவர்.  தன்னுடைய பெரியப்பாவால் வளர்த்தெடுக்கப்பட்டவர்.  1912 செப்டம்பர் 12 ஆம் நாள் திருவிக மணவாழ்க்கையில் விளக்கேற்ற வந்தவர்.  ஆம் அன்று தான் திரு.வி.க வுக்கு மணம் முடிக்கப்பட்டது.

இதற்கு முன்னர்,  திரு.வி.க மணம் செய்து கொள்ளமாட்டார் என்றும் ‘இராயப்பேட்டை முனிவர்என்றும் சிலர் கூறி வந்தனர்.  இதுமட்டுமா சாதுமுனிவர் என்று கூட அழைத்தனர்.  இருப்பினும் திரு.வி.க மணவாழ்க்கையில் சேர்ந்து கொள்ள மறுப்புத் தெரிவிக்கவில்லை.  நான் ஏழ்மையின் பாற்பட்டவன் இதனால் ஏழ்மையானவளைத் தான் மணப்பேன் என்று கூறியிருந்தார்.
திருமணத்திற்குப் பின்னர் அவருடைய மண வாழ்க்கை மிகவும் இனித்தது.  கமலாம்பிகை அம்மையார் திருவிகவுக்கு யாதுமாய்த் திகழ்ந்தார்.  இவ்விருவருடைய மண வாழ்க்கைக்கு அடையாளமாய் ஆண் மகவை முதலில் ஈன்றனர்.  ஆனால் அம்மகவு பிறந்த முதல் வாரத்திலேயே உயிர்நீத்தது.  பெண் மகவை அடுத்ததாக ஈன்றனர்.  அம்மகவோ ஓராண்டுகள் இப்புவியில் வாழ்ந்தது.  திலகவதி என்று கூட பெயரிட்டு வளர்த்தனர்.  ஆனால் இப்பிள்ளையும் அவர்களை விட்டுச் சென்றது.

இதைவிட பெருத்த துயரம் 1918 ஆம் ஆண்டு நிகழ்ந்தது.  அவ்வாண்டு தான் திரு.வி.க வின் வாழ்க்கைத் துணைவியார் கமலாம்பிகை மறைந்தார். எலும்புருக்கி நோய் கமலாம்பிகையைக் கொண்டு சென்றது.  1912 முதல் 1918 வரையே திரு.வி.கவின்  மண வாழ்வு நிலைத்தது.
ஆறே ஆண்டுகள் தான் கமலாம்பிகை வாழ்ந்திருந்தார் என்றாலும் அவர் திறம் கண்டு நாம் வியக்கத்தான் வேண்டும்.  திரு.வி.கவுக்கு வலிமையும், உலகியல் பற்றிய நாட்டமும் பெண்ணியச் சிந்தனையும் ஏற்பட வழிவகுத்தார்.  முரட்டுத்தனம் மிகுந்திருந்த திரு.வி.கவை சாந்தமூர்த்தியாகச் செய்தவர்.  கமலாம்பிகையை உண்மையாக நேசித்தவர் என்பதால் இரண்டாம் மணம் செய்யும் படி வற்புறுத்தியும் மறுத்துத் தள்ளினார். இச்செய்திகள் அனைத்தும் திரு.வி.கவின் மணவாழ்வு கனித்த பின் காய்த்தது என்று எண்ணத் தோன்றுகிறது.

No comments:

Post a Comment