தமிழன்பர்களே வணக்கம், தமிழ்ப்பசி ஆறிட வருகை தந்தமைக்கு நன்றி!சிலம்புகள் வலை தங்களை இனிதே வரவேற்று மகிழ்கிறது

18.10.12

வாழ்க்கைத் திறனும் மதிப்புக் கல்வியும்

சமச்சீர் புத்தகத்தின் வாழ்க்கைத் திறன் கல்வி ஓர் ஆய்வு:
தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தின் படி உருவாக்கப்பட்ட பாட நூல்களில் வாழ்க்கைத் திறன் கல்வியும் மதிப்புக் கல்வியும் இடம்பெற்றுள்ளன.  இவ்விரு முடிவெடுத்தல் பயிற்சியும் மாணாக்கருக்கு நன்கு பயனளிக்கும் வகையில் உள்ளன என்று தோன்றுகிறது.  சூழ்நிலைகளை எடுத்துக்கூறி அச்சூழ்நிலைக்கு எவ்வாறு நீ முடிவெடுப்பாய் என்பது போன்ற வடிவில் கேட்கப்பட்டிருக்கும் வினாக்கள் மாணவரை நன்கு சிந்திக்கச் செய்திருக்கிறது.

நடந்து முடிந்த முதல் பருவத்தேர்வு (2012)  தமிழ் வினாத்தாளில் இவ்வாழ்க்கைத் திறன் பயிற்சி வினாவாக அமையப்பெற்றிருந்தது.  அப்படி இடம்பெற்ற ஒரு வினாவுக்கு மாணவன் ஒருவன் பதிலளித்த விதம் சிந்தனை வளர்ச்சியையும் எதார்த்தத்தையும் வெளிப்படுத்தி இருந்ததாக உணர்ந்தேன்.

அஃதாவது தாயை இழந்த ஒரு  மாணவனைக் காணச் செல்லும் மற்றொரு சக மாணவன் அம்மாணவனுக்கு எந்த வகையில் உதவுவான் என்பது தான் அவ்வினா.  இதற்குப் பல மாணவர்கள் “என்னுடைய இல்லத்திற்கு அவனை அழைத்துச் சென்று தங்க வைத்துக்கொள்வேன்” என்றும் “எங்கள் தந்தையிடம் அனுமதி பெற்று அவனை அழைத்து வந்து ஆடை, புத்தகம், உணவு ஆகிய அனைத்தையும் கொடுத்து எங்கள் குடும்பத்தில் ஒருவனாக பாவித்து நடத்துவோம் ” என்றும் எழுதியிருந்தனர்.

``தான் அவனுக்கு உதவுவது சாத்தியம் இல்லை ஏனென்றால் எங்கள் இல்லத்தின் நிலையே வறுமையின் பாற்பட்டது” என்று மற்றொரு மாணவன் எதார்த்தத்தை எழுதியிருந்தான். 

இன்னுமொருவன் ``என் தாய் உயிரோடு இருக்கும் போது அவன் எந்த அளவு துயர் அடைந்திருக்கிறான் என்பதை என்னால் எப்படி அறிய முடியும்” என்று எழுதியிருந்தான்.

இத்தகைய எதார்த்தச் சிந்தனைகளைத் தட்டி எழுப்பியிருக்கிறது சமச்சீர் கல்வியினூடே அமையப்பெற்ற வாழ்க்கைத்திறன் மற்றும் மதிப்புக் கல்வி.  சென்ற ஆண்டு இவ்வாழ்க்கைத் திறனும் மதிப்புக் கல்வியும் வினாத்தாளில் இடம் பெறாமல் இருந்தது.  பருவமுறை அறிமுகம் செய்யப்பட்டதும் இவ்விரு பயிற்சிகளும் வினாத்தாளில் இடம்பெற்றிருக்கின்றன.

உண்மையான கல்வியின் நோக்கம் மனிதனைச் சிந்திக்கச் செய்து வெற்றியடைய வைப்பதே என்பது உண்மையாகியுள்ளது!

2 comments: